Advertisement

கேளாய் பூ மனமே 1

“கந்தா கடம்பா கதிர்வேலா எங்க குலம் தழைக்க, வளம் பெறுக, முன்னேற்றம் காண அருள் புரியப்பா..” காமாட்சி அம்மா தன் முன் உயர்ந்து நின்றிருந்த முருகனுக்கும், இன்ன பிற தெய்வங்களுக்கும் கற்பூராதனை காட்டி வெளியே வர, அவரின் கணவரும், பெரிய மகனும் பக்தியுடன் ஆராதனையை கண்ணில் ஒத்தி கொண்டனர்

பிரசாதம் கொடுத்த காமாட்சி, “பெரிய பிரச்சனை ஆகாம பார்த்துக்கோங்க..” என்றார் கணவர் அருணாச்சலத்திடம்

நாம என்ன பிரச்சனை பண்ணவா போறோம்..? அவங்க தான் வம்புக்கு நிக்கிறானுங்க..” அருணாச்சலம் சொல்லி பெரிய மகன் கேசவனுடன் வாசலுக்கு நடந்தார்

பேரன் இன்னும் காணோம்..” காமாட்சி வழியனுப்ப வந்தவர் சொல்ல

வந்துடுவான்.. நாங்க கிளம்பறோம், லேட் ஆனா அதுக்கும் ஏகப்பட்ட நக்கல் பேச்சு பேசுவானுங்க..” அருணாச்சலம் காரில் ஏற

நான் பார்த்துகிறேன்ம்மா..” என்று அம்மா கை பிடித்து ஆறுதல் சொல்லி காரை எடுத்தார் கேசவன்

நம்ம ஆளுங்க எல்லாம் கிளம்பிட்டாங்களான்னு விசாரிக்குறேன்..” என்று போன் எடுத்து  பேசிய அருணாச்சலம், “அங்க தான் இருக்காங்களாம்..” என்றார் பேசி வைத்து மகனிடம் தகவலாக

கேசவன் தலை மட்டும் ஆட்டி கொண்டவர், மகனை தான் அதிகம் எதிர்பார்த்தார். ‘தோப்புக்கு போயிருப்பானா..? நேரம் சொல்லிட்டேனே, கூட்டம் ஆரம்பிக்க முன்னாடி வந்திட்டா நல்லா இருக்கும்..’ யோசித்து கொண்டே காரை பஞ்சாயத்து ஆபிஸ் முன் நிறுத்தினார்

ஐந்து கிராமங்களுக்கும் சேர்த்து இன்று பஞ்சாயத்து என்பதால், ஆட்களின் தலைகள் அதிகம். கூட்டத்தை விலக்கி அருணாச்சலம் முன்னால் செல்ல, கேசவன் போன் எடுத்து மகனுக்கு அழைத்தபடி தந்தை பின் சென்றார்

ம்ப்ச் எடுக்கலை..’ கேசவன் திரும்ப போன் செய்ய முடியாமல், தந்தை பக்கத்தில் நின்றார். இவர்களுக்கு எதிரில் உள்ள சேரில் ஐந்து கிராமத்தின் ஊர் கவுண்டர்களும், ப்ரெசிடெண்டும் அமர்ந்திருந்தனர்

அதில், ஒருவர் மட்டும் அருணாச்சலம் வரவும் எழுந்து நின்று, தலையசைக்க, அருணாச்சலமும் மரியாதையுடன் தலையசைத்து அமர்ந்தார்

எல்லாம் வந்தாச்சு இல்லை.. கூட்டத்தை ஆரம்பிக்கலாமா..?” ப்ரசிடென்ட் சத்தமாக கேட்க, ஊர் மக்களின் பேச்சு சத்தம் அடங்கியது. அந்த அமைதியை கிழித்து கொண்டு, பைக் ஒன்று வந்து நின்றது. எல்லார் பார்வையும் அந்த பக்கம் திரும்ப, கட்டியிருந்த வேஷ்டியை இறக்கிவிட்டபடி வந்தான் அவன்

வாப்பா யுவராஜ்..” ப்ரசிடெண்ட் அவனை அழைக்க, தலையசைத்து, அருணாச்சலத்தின் பின் கை கட்டி நின்றான்

என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..?” ப்ரெசிடெண்ட் எல்லோரையும் பார்த்து பொதுவாக கேட்க

முன்னாடி சொன்ன முடிவு தான்..” என்றான் ரமேஷ்

அது தான் சரிப்பட்டு வரலையே ரமேஷ்.. மத்தவங்களையும் பார்க்கணும் இல்லை..” ப்ரசிடெண்ட் சொல்ல

அது அவங்க பாடு, நாங்க ஒரு மணி நேரம் தான் மடை திறந்து விடுவோம்..” என்றான் அவன் கறாராக

திருப்பத்தூர் மாவட்டத்தின் தென் கோடியில் நடைபெறும் ஐந்து கிராமத்திற்கான பஞ்சாயத்து அது. மிகப்பெரிய ஏரி ஒன்று இந்த ஐந்து கிராமத்திற்கும் பொதுவாக இருக்க, இந்த வருட பெருமழையில், ஏரி நிரம்பி கோடி போனது. அதில் ஐந்து கிராமத்திற்கும் பங்கு இருக்க, ஒரு ஊர் மட்டும் பழமையான ஊர் கட்டுப்பாட்டை உடைக்க, மற்ற கிராமங்கள் அதை எதிர்க்க, பஞ்சாயத்து தலைவர் மூலம் பஞ்சாயத்து நடைபெற்று கொண்டிருந்தது

“இது தப்பு தம்பி.. ஒரு மணி நேரத்துல எங்க நாலு கிராமத்துக்கு தண்ணீர் பாயுமா..? இதுக்கு ஒத்துக்க முடியாது..” ஐந்தில் ஒரு கிராமத்தின் ஊர்கவுண்டர் சொன்னார்

எங்களோட முடிவு இது தான்.. ஒரு மணி நேரம் தான், அதுக்கு மேல முடியாது..” ரமேஷ் சொல்ல, அருணாச்சலத்தின் கோவம் அவர் முகத்திலே தெரிந்தது

நீங்க முடிவு எடுத்துட்டா நடந்திடுமா..? இது ஒன்னும் உங்களுக்கு மட்டுமே பட்டா போட்டு கொடுத்த ஏரி இல்லை, நம்ம அஞ்சு கிராமத்துக்கும் பொதுவானதுஅதுக்கு கோடி போற தண்ணீர் எல்லோருக்கும் தான் சொந்தம், எங்களுக்கு நேரம் சொல்ல நீ ஆள் கிடையாது..” இன்னொரு ஊர்கவுண்டர் கோவமாக சொல்ல,   

பின்ன நாங்க சொல்லாம, எங்க ஊர் வழியா தானே ஏரி கோடி போகுது, நாங்க தான் சொல்லுவோம்..” என்றான் ரமேஷின் ஊர்க்காரன் மற்றவன்

இந்த நோணாவட்ட பேச்சு பேச எங்களுக்கும் தெரியும் தம்பி, நீங்க எல்லாம் தலையெடுத்து தான் நியாய, அநியாயம் தெரியாம தரிகெட்டு ஆடி, ஊர் பிரச்சனையை கிளப்பி விடுறீங்க..” மற்றவர் பேசினார்.

“இந்தா  பெருசு என்ன ரொம்ப பேசுற, இருக்கிற பத்து வீட்டுக்கு கோடி போற தண்ணீர் வேணுமா உனக்கு..? கால்வாய்ல வர தண்ணியே உங்களுக்கு அதிகம், மொத்த ஊருக்கும் சேர்த்து இருபது ஏக்கர் கூட தேறாது, சத்தத்தை பாரு..” என்று ரமேஷின்ன் ஊர்க்காரர்கள் குரல் உயர்த்த ஆரம்பிக்க

பேசத்தான் வந்திருக்கோம்.. பிரச்சனை பண்ண இல்லை..” ப்ரெசிடெண்ட் இடையிட்டு சொன்னவர், “நீங்க எல்லாம் அமைதியா இருங்க, உங்க ஊர் கவுண்டர் தயாநிதி பேசட்டும்..” என்றார்

அருணாச்சலத்தை பார்த்து எழுந்து நின்றிருந்த தயாநிதி, “எங்க பசங்க பேசுன விதம் தப்பா இருந்தாலும், சொன்ன விஷயம் ரொம்ப சரி, இந்த அஞ்சு கிராமத்துல எங்க ஊர் தான் பெரிய ஊர்ன்னு உங்க எல்லோருக்கும் தெரியும்நாலு கிராமத்தை சேர்த்தா கூட எங்க ஊர் அளவுக்கு வர முடியாது, ஏக்கர் கணக்கு வச்சாலும் நாலு மடங்குக்கு ஒரு மடங்கு தான் நாலு கிராமமும், அப்படி இருக்குறப்போ கோடி தண்ணீர் உங்களுக்கு சரிக்கு சமமா வேணுங்கிறது ஏத்துக்க கூடியது இல்லை, நேரக்கணக்கு வச்சுதான் மடையை திறந்துவிட முடியும், அதுவும் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ தண்ணீர் வேகத்தை பொறுத்து முடிவு பண்ணிக்கலாம்..” என்றார் தயாநிதி

நீங்க என்ன சொல்றீங்க..?” ப்ரெசிடெண்ட் பாக்கி நான்கு ஊர் கவுண்டர்களிடம் கேட்க

தயாநிதி இப்படி பேசுவார்ன்னு நாங்க எதிர்பார்க்கலை, இளந்தாரி பசங்க தான் புதுசு புதுசா பேசுறாங்கன்னு  பார்த்தா, தயாநிதியும் இப்படியா..?” ஒருவர் சொல்ல

அவங்க இஷ்டத்துக்கு நடைமுறையை மாத்திக்க இது ஒன்னும் சின்ன பசங்க விளையாட்டு இல்லை, காலம் காலமா நம்ம பாட்டன், பூட்டன் போட்டு வச்ச சட்டத்தை, இவங்க இஷ்டத்துக்கு உடைக்க இதென்ன சாதாரணா விஷயமா, விவசாயம்யா, எல்லோருக்கும் சோறு போடுற பூமியில, எங்களுக்கு ஏரி தண்ணீர் இல்லன்னா, ம்ஹூம்.. இதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம்..” என்றார் மற்றவர் உறுதியாக

மீதம் இருந்தவரும் இதையே சொல்ல, “நீங்க என்ன சொல்றீங்க..?” நாலாவது ஊர்கவுண்டரை கேட்க, அவர் அருணாச்சலத்தை பார்த்தார். எல்லோர் பார்வையும் இப்போதும் அவர் மேல் பதிய, தொண்டையை செருமி கொண்ட அருணாச்சலம்

கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு அப்புறம், இப்போ, இந்த வருஷம் தான் ஏரி கோடி போகுது, கிணத்துல, போர்ல தண்ணீர் இல்லாதவன் எல்லாம் இத்தனை வருஷம் நிலத்தை தர்சா தான் போட்டு வச்சிருந்து, இப்போதான் வெள்ளாமை விதைக்க போறான். அதுக்கு முட்டுக்கட்டை போடுறது சரியில்லை, அவங்க ஊர் பெருசுங்கிறதுக்காகவோ, கோடி தண்ணீர் அவங்க ஊரை தாண்டி தான் பாக்கி ஊருக்கு பாயுங்கிறதுக்காகவோ அவங்க முடிவு எடுக்க முடியாது, அஞ்சு கிராமமும் கலந்து தான் முடிவு எடுக்கணும், இங்க அதிகாரம் சரிவராது, ஆலோசனை தான் வேணும்..” என்றார் திட்டவட்டமாக

சரி உங்க ஆலோசனையை சொல்லுங்க ஐய்யா..” ப்ரெசிடெண்ட் கேட்க

முன்ன பஞ்சாயத்துலே சொன்னது தான், நீங்க இரண்டு மடங்கு, நாங்க நாலு கிராமும் சேர்ந்து இரண்டு மடங்கு..” என்றார் கேசவன்

அதுக்கு முடியாதுனு நாங்களும் போன பஞ்சாயத்திலே சொல்லிட்டோம், ஒரு மடங்குன்னா பேசலாம், இல்லை உங்களால முடிஞ்சதை நீங்க பாருங்க, எங்களால முடிஞ்சதை நாங்க பார்த்துகிறோம்..” என்றான் ரமேஷ்

என்னடா மிரட்டுறியா..? அப்படியென்னடா பண்ணிடுவ..? பொறுத்து போனா   ஓவரா போறீங்க, வேற மாதிரி ஆகிடும்..” ஒருவன் எழுந்து நின்று பேச

என்ன வேற மாதிரி ஆகிடும், பண்ணி காட்டுடாநாங்க பத்து பேர் சேர்ந்தா உன் ஊரே இல்லாம போயிடும், நீங்க எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளுங்களா..? *** பசங்களா..” தயாநிதியின் பங்காளி பேசிவிட, அவ்வளவு தான் மற்ற ஊர்கார்கள் பாய்ந்துவிட்டனர்.  

தயாநிதியின் ஆட்களும் இதற்காகவே காத்திருந்தது போல, அடிதடியில் இறங்க, அந்த இடம் கலவரமானது. அருணாச்சலம் திரும்பி பேரனை பார்க்க, அவன் இடத்தை விட்டு அசையாமல் கை கட்டி நின்றிருந்தாலும் தாத்தா, அப்பா, தாயாநிதியை தன் கண் பார்வையில் வைத்திருந்தான்

நிறுத்துங்கப்பா..” என்று ப்ரெசிடெண்ட் கத்த, பலன் தான் இல்லை. “போன பஞ்சாயத்திலேயும் இதை தான் பண்ணாங்க, இப்போவும் இது தானா..?” அவர் கோவத்தில் பேச, காது கொடுத்து கேட்க தான் ஆட்கள் இல்லை

Advertisement