அதை ரேணுகா கவனித்தாரோ இல்லையோ ஆதி கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
கழுத்தில் அவள் ஏற்கனவே அணிந்திருந்த நகைகளே போதுமானதாய் இருக்க, சிவாவை தலைமுதல் பாதம் வரை ஒரு பார்வை பார்த்த ரேணுகா, மனதிருப்தி அடைந்தவராய், அவளுக்கு திருஷ்டி கழித்தார்.
“ராசாத்தி கணக்கா இருக்கடா” என்றவர்,
“உள்ளங்காலை காட்டுமா” என்று சொல்ல அவளோ புரியாமல் முழித்தபடி காலைக் காட்ட, அதில் கருப்பு மையிட்டவர்,
“கண்ணுப்பட்டுரும்ல, அதான் கால்ல மை வச்சு விட்டேன்” என்று எதார்த்தமாய் கூறியபடி, ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று விட்டார்.
அவர் எதார்த்தமாய் செய்த செயல்கள் அனைத்தும் அவளின் மன உணர்வுகளைத் தூண்டி விட்டிருந்தது.
‘அம்மான்னா இதையெல்லாம் பண்ணுவாங்களோ?’ என்று எண்ணியவளுக்கு கிருஷ்ணன் நினைவுக்கு வந்தார். அவரும் மகளை இப்படித்தானே பார்த்துக் கொண்டார். தாயன்பிற்கு ஏங்கிவிடாதபடி.
ஆதி யோசனையுடன் நிற்பது அவளுக்குப் புரிந்தது. தன்னை கீழே அழைத்துச் செல்லத்தான் தயங்கிக் கொண்டு நிற்கிறான் என்று. அத்தனை பேரிடமும் ஆணித்தரமாய் பேசிவிட்டு வந்திருந்தவனை ஏனோ அவர்கள் முன் விட்டுக் கொடுப்பது சரியாய் இருக்காது என்று தோன்றியது அவளுக்கு.
வெளியே வந்தவள், அவனுக்கு அருகில் சென்று நிற்க, தன்னருகில் வந்தவளைக் கண்டவனின் புருவம் உயர்ந்தது. அவள் பார்வையோ கீழே செல்லும் படியைத் தான் பார்த்திருந்தது.
அவள் பார்வையே அவள் முடிவைச் சொல்ல, உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவன், முன்னே நடக்க அவளும் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள். அவனிடம் இதுவரை அவள் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் மௌனமாகவே அனைத்தும் நடந்தேறிக் கொண்டிருந்தது.
அங்கே கூடத்தில் இருந்த கூட்டம் முழுவதும் ஜோடியாக வரும் அவர்கள் இருவரையும் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்த விசாகன், சட்டென்று தலையை குனிந்து கொண்டான். ஏனோ சிவாவை நேருக்கு நேர் எதிர்நோக்கும் சக்தி அவனிடம் அப்போதைக்கு இல்லை.
அதுவரை பேசிக் கொண்டிருந்த வாயெல்லாம் சிவ தீர்த்தாவை பார்த்தவுடன் அடங்கிவிட்டது.
“ஜோடிப் பொருத்தம் பிரம்மாதம். அது சரி விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்” என்ற சிலர் சுபத்ராவை பார்த்து வைக்க, அவரின் முகத்தில் ஒரு சன்னமான புன்னகை கீற்று மட்டுமே.
ரேணுகாவின் தாய் தந்தையர் இருவரும் இருக்க, ஆதி அவர்களிடம் அவளை அழைத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான். தங்கள் பேத்தியை பேரனுக்கு முடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், ஆதியின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டனர்.
ரேணுகாவின் தாய், தன் கழுத்தில் இருந்த காசு மாலையை கழட்டி சிவாவின் கழுத்தில் போட்டுவிட,
“இல்ல வேண்டாம் பாட்டி” என்று பதறினாள் சிவா.
“என் பேரன் பொண்டாடிக்கு நான் போடுறது. வேண்டாம்னு சொல்லக் கூடாது” என்று ஒரே அதட்டாய் அவர் அதட்ட, இயலாமையுடன் ரேணுகாவைப் பார்த்து வைத்தாள் சிவா.
“பாட்டியை தாத்தா இருக்குற அறைக்கு கூட்டிட்டு போய் அப்படியே அவங்ககிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கய்யா” என்று அங்கிருந்த கிழவி சொல்ல, அத்தனை பேர் முன்னிலையில் மறுக்க முடியாமல் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டாள் சிவா.
“வாடி வா” என்று எண்ணிய விசாலாட்சி ஒரு இறுமாப்புடன் நடந்து செல்ல, பல்லைக்கடித்தபடி ஆதியின் பின் சென்றாள்.
அறைக்குள் சென்றவள் அப்போது தான் படுத்த படுக்கையாய் இருந்த ரத்தினத்தை பார்த்தாள். பரிதாபம் எல்லாம் அறவே வரவில்லை. அவன் அவளின் கையைப் பிடித்து அழைக்க, அவளோ இம்மியும் நகரவில்லை. கைகளை இறுக மூடிக் கொண்டாள்.
அறைக்குள் வந்ததில் இருந்து பேரனையும் பேரனின் மனைவியையும் தான் பார்த்திருந்தார் ரத்தினம். அப்போது வரை கிருஷ்ணனின் மகள் தான் தன் பேரனின் மனைவி என்று அவருக்குத் தெரியாது. யாரும் சொல்லியிருக்கவில்லை. இப்போது பார்த்தவருக்கு உள்ளுக்குள் உலைகலமாய் கொதித்தது. அவரால் எழவும் முடியாது. ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார் அவ்வளவே!
விசாலாட்சியை அந்த நிலையிலும் முறைத்து வைத்தார். சிவாவோ அவரை இறுமாப்புடன் பார்த்திருந்தாள்.
அப்போது வேகமாய் அங்கே வந்த சுபத்ரா,
“ஆசீர்வாதம் வாங்கணும்னா நீ மட்டும் வாங்கிக்கோ ஆதி” என்றார்.ஆதி அவரை யோசனையுடன் பார்த்துவிட்டு, வேறு வழியின்றி அவன் மட்டும் ஆசீர்வாதம் வாங்கியிருந்தான்.
சிவாவோ சுபத்ராவை ஒரு ஆளாய் கூட மதிக்காமல் வெளியே சென்றிருந்தாள்.
ரேணுகா வந்திருந்தவர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க, அந்த பெரியவர்களின் கூட்டத்தில் சிவா அவஸ்தையுடன் அமர்ந்திருந்தாள்.
அதைக் கவனித்த ஆதி, அங்கிருந்து விலகி மேலே சென்றவன்,
“தீர்த்தா” என்றான் சத்தமாக.
அவனின் ‘தீர்த்தா’ என்ற அழைப்பில் விழி விரித்தவள் அப்படியே மேலே பார்க்க,
“ஒரு நிமிஷம் மேல வா” என்றான்.
“போம்மா ஆதி தம்பி கூப்பிடுறாப்டி. போய் என்னன்னு கேளு” என்று அந்த பெண்களே அவளை அனுப்பி வைக்க,
‘விட்டால் போதும்’ என்று தப்பித்தவள், அங்கிருந்து சென்றிருந்தாள்.
வேகமாய் வந்தவளைப் பார்த்தவன்,
“ஒரு இடத்துல அன்கம்பர்ட்டபிளா பீல் பண்ணா உடனே அந்த இடத்தை விட்டு வந்திடனும். இப்படி பக்கு பக்குன்னு முழிச்சுட்டு உட்கார்ந்திருக்க கூடாது” என்றான்.
‘இந்த வீடே எனக்கு அன்கம்பர்ட்டபிளா தான் இருக்கு. போறேன்னு சொன்னா விடவா போறீங்க?’ என்று மனதிற்குள் நினைக்க,
“அவ்வளவு சீக்கிரம் விடுறதுக்காக எல்லாம் தாலிகட்டிக் கூட்டிட்டு வரலை” என்றவன் கீழே சென்றிருந்தான்.
தன்னைப் புரிந்து கொள்பவனையும், தான் நினைப்பதைக் கூட தெரிந்து கொள்பவனையும் பார்த்து அவளுக்கு ஆச்சர்யம் தான் வந்தது. ஈர்ப்பு வரவில்லை. விசாலாட்சியின் பேரனாகவே அவனைப் பார்த்து விட்டவளுக்கு தன்னுடைய கணவனாக பார்ப்பது அத்தனை சுலபமில்லை.