அவன் வருவதற்குள் சிவா அறைக்குள் சென்றுவிட, கவியோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

ஆதி மேலே வரவும்,

“அப்போ நான் கிளம்புறேன் அண்ணா” என்றாள் கவி.

“என்னம்மா அவசரம் இருந்துட்டு சாயங்காலமா போலாமே” என்றான் ஆதி.

“நான் வீடு வரைக்கும் போயிட்டு சாயங்காலம் வந்துட்டு போறேண்ணா” என்றவள் அவன் தலையசைக்கவும் கிளம்பிட்டாள். சிவாவிற்கு தான் அவள் கிளம்பவும் மனதிற்குள் பக்கென்று இருந்தது. எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

கீழே நடந்த அனைத்தையும் மீண்டும் ஒரு முறை அவள் எண்ணிப் பார்க்க, பெரும் கோபமும், துயரமும் மனதிற்குள்.

‘எவ்வளவு ஈசியா அத்து விடுறதைப் பத்தி பேசுறாங்க?’ என்று எண்ணியவளுக்கு, ரேணுகா தனக்காக பேசியதும் நினைவிற்கு வந்தது.

‘நான் வேணும்னு நினைக்கக் கூட ஆள் இருக்கு போல’ என்றவளுக்கு கண்ணோரம் கண்ணீர்த் துளி.

ஆதி கேசவன் இன்னமும் அறைக்குள் செல்லவில்லை. கவி உடன் இருந்த போது அவளை எளிதில் எதிர்கொண்டவனுக்கு, இப்போது சற்று தயக்கமாக இருந்தது.

தயக்கம் எல்லாம் பெண்களுக்குத் தான் வர வேண்டுமா என்ன? அவனுடைய அறையில் முதன் முறையாய் ஒரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்குள்ளும் ஒரு பதட்டத்தைக் கொடுத்திருந்தது.

ஒருவேளை முறைப்படி திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டு, எதிர்காலத் துணையை எதிர்நோக்கி நாட்களை கடத்தியிருந்தால் இப்படி தயக்கம் இருந்திருக்காதோ என்னவோ?

அப்போது ரேணுகா மேலே வர, அறைக்கு வெளியே யோசனையுடன் நின்றிருந்த மகனைக் கண்டு,

“என்னாச்சு ஆதி? ஏன் இங்கயே நிக்கிற?” என்றார்.

“ஆங்..! ஒண்ணுமில்லைம்மா, ஏதோ யோசனை” என்றான்.

“நல்லவேளை நீ வந்த ஆதி. கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போயிட்டேன்” என்றவர்,

“சிவா என்ன பண்றா?” என்றார்.

“அது உள்ள தான் இருக்காம்மா” என்றான்.

சட்டென்று அவர் உள்ளே செல்லப் பார்க்க,

“அம்மா!” என்று அவரை கை பிடித்து தடுத்திருந்தான் ஆதி.

“என்னாச்சு ஆதி?” என்றார் புரியாமல்.

“இப்ப எதுக்கு அவகிட்ட போறீங்க? திரும்பவும் அழுது கத்திட போறா?” என்றான் ஆதி.

“இப்ப கீழ இருக்குறவங்க வாயை அடைக்கனும்னா சிவாவை நீ கீழ அழைச்சுட்டு வந்து காட்டிட்டு வந்துடு ஆதி.அதை சொல்லத்தான் வந்தேன்” என்றார் ரேணுகா.

“இப்ப இதெல்லாம் தேவையாம்மா? காட்டிட்டு வர அவ என்ன பொம்மையா? பொருளா?” என்றான்.

“இப்ப இதை கண்டிப்பா பண்ணித்தான் ஆகனும். வீட்டுக்கு வந்தவங்க பாதிப் பேர் புதுப் பொண்ணை பார்க்கவும் வந்திருப்பாங்க” என்றார்.

“சரி நான் கூட்டிட்டு வரேன். நீங்க போங்க” என்றான்.

“சரிப்பா” என்றவர் சென்று விட்டார். அவர்கள் பேசியது அவள் காதிலும் விழுந்திருந்தது.

கட்டியிருந்த பட்டுப்புடவை அவளுக்கு ஏற்கனவே எரிச்சலைத் தந்து கொண்டிருந்தது. அதை மாற்றும் பொருட்டு, வேறு ஒரு புடவையை எடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவன் உள்ளே வர, அவன் வந்தது தெரிந்தாலும், தெரியாதவள் போல் இருந்து கொண்டாள்.

அவன் வாயைத் திறக்கும் முன்பே, புடவையுடன் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள். உள்ளே சென்று கதவை அடைத்தவளுக்கு அப்போது தான் மூச்சே விட முடிந்தது.

‘இப்பவே கண்ணைக் கட்டுது. எப்படி இந்த வீட்ல நாளைக் கடத்தப் போறேனோ தெரியலையே’ என்று நினைத்துக் கொண்டவள், குளித்துவிட்டு புடவையை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்க, அங்கு இருந்தது அனைத்துமே அவன் உபயோகப்படுத்தும் பொருட்கள் தான்.

“இந்த சோப்பை போட்டு குளிக்கிறதுக்கு குளிக்காமையே இருக்கலாம்” என்று நொந்து கொண்டாள்.

‘என்ன பண்றது?’ என்று மனதிற்குள் பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தாள்.

இவள் இப்படி பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருப்பது அவனுக்கும் தெரிந்திருக்க வேண்டும். வெளியே இருந்து கதவைத் தட்டும் சத்தம் கேட்க, சட்டென்று அதிர்ந்தபடி, ஒரு படபடப்புடன் பாத்ரூம் கதவைத் திறந்தாள்.

உள்ளே சென்றவள் சென்றபடியே இருந்ததைக் கண்டு, தான்  நினைத்தது சரி தான் என்று நினைத்துக் கொண்டான் ஆதி.

அவன் கையில் பிரிக்கப்படாத சோப், புது டவல் என்று இருக்க, தேவையான அனைத்தையும் புதியதாகவே அவளிடம் நீட்டியிருந்தான். சிவாவோ அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஒரு தயக்கத்துடன் வாங்கிக் கொண்டாள்.

‘நாம நினைச்சது எப்படி இவருக்குத் தெரியும்?’ என்று எண்ணியபடியே குளித்து முடித்தவள் அங்கேயே நின்று புடவையைக் கட்டத்தான் சிரமப்பட்டாள்.

மீண்டும் கதவு தட்டப்பட,  கதவைத் திறந்தவள் கதவின் பின்னயே நின்று கொள்ள,

“பாத்ரூம்குள்ள டிரஸ் மாத்தணும்னு அவசியம் இல்லை. நான் வெளிய இருக்கேன்” என்று தகவல் சொன்னவன் அறையை விட்டு வெளியே செல்ல, வெளியே வந்து அறைக்கதவை சாத்தியவள் சற்று ஆசுவாசமாய் மூச்சு விட்டுக் கொண்டாள்.

வெளியே ஆதியோ,

‘இப்ப இவளை கீழ கூப்பிட்டா வருவாளா? எப்படி கூப்பிடுறது? கீழ யாராவது எதையாவது பேசினா, காலையில பாட்டி குரவலையை பிடிச்ச மாதிரி பிடிச்சுடுவாளோ?’ என்று அவனாகவே யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கதவு திறக்கும் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தவனின்  விழிகள் ஆச்சர்யத்தில் ஒளிர்ந்தது. இளஞ்சிவப்பு நிறத்தில் மெல்லிய கரையிட்ட காட்டன் புடவை அவளைப் பாந்தமாய் தழுவியிருக்க, குளித்ததில் சோர்வு நீங்கி பளிச்சென்று இருந்தவளின் முகம் அவனுக்குள் அப்படியே பதிந்து போனது.

கதவைத் திறந்து விட்டவள், மீண்டும் அதே பழைய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள். அவளுக்கு கீழே செல்வதில் துளியும் விருப்பமில்லை. அவனுக்கோ அவளை அழைக்கத் தயக்கம். அந்த நேரத்திற்கு சரியாக அங்கு வந்து சேர்ந்தார் ரேணுகா தேவி.

அறைக்கு வெளியே ஆதியும், அறைக்கு உள்ளே சிவாவும் இருப்பதைக் கண்டு இருவரையும் மாறி மாறி பார்த்தவர்,

“என்ன ஆதி? வர்றேன்னு சொல்லிட்டு இன்னும் என்ன பண்றிங்க?” என்றார்.

அவன் பதில் பேசாமல் அவளைப் பார்க்க, ரேனுகாவிற்கு புரிந்து போனது.

வேகமாய் உள்ளே சென்றவர், அப்போது தான் கவனித்தார், அவள் குளித்து புடவை மாற்றி இருந்ததை. தலையைப் பிரித்து கொண்டையிட்டிருந்தாள்.

“இந்த தலையையும் பின்னியிருக்கலாம்ல சிவா” என்றவர் அவரே அவளுக்கு தலை வாரிவிடத் துவங்க, அவரின் செயலில் சிவாவுக்கு தான் சட்டென்று ஒன்ற முடியவில்லை.

“இல்ல, நானே பார்த்துக்கிறேன்” என்று அவள் சொல்ல, அவரோ விடாமல் பின்னி விடத் தொடங்கிருந்தார்.

அவளுக்கு விபரம் தெரிந்தது முதல், கிருஷ்ணன் தான் இவளுக்கு தலை பின்னிவிடுவது. கொஞ்சம் பெரியவள் ஆனதும் அவளே தான் தலைவாரிக் கொள்வாள். ஏனோ காவேரியிடம் கூட தலைவாரிக் கொண்டதில்லை. இன்று முதன் முறையாக ரேணுகா,அவளை அதட்டி உரிமையுடன் தலைவாரிக் கொண்டிருக்க, அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவரை முகத்தில் அடித்தார் போல் சட்டென்று விலக்கவும் முடியவில்லை அவளால்.

வீடே யுத்த பூமியாய் இருக்க, அதைப் பற்றி கவலைப்படாமல் மருமகளுக்கு தலைவாரிக் கொண்டிருந்த அன்னையை எண்ணி உள்ளுக்குள் சிரித்தபடி, அவர்களை பார்த்தும் பார்க்காதது போல் இருந்த ஆதி,

‘வயலுக்கு போடுற உரத்தை கொஞ்சம் தலைக்கும் போடுவாளோ? முடியை இப்படி வளர்த்து வச்சிருக்கா? இதை பின்றதுக்கே தனியா ஒரு ஆள் வேணும் போலவே” என்று நினைத்துக் கொண்டான்.

அவளுக்கு தலைவாரி முடித்தவர்,”இதோ வந்திடுறேன்” என்று சென்றவர் திரும்பி வரும் போது, கைகளில் மல்லிகைப் பூச்சரத்துடன் வந்தார்.

“இந்த பூவை வச்சுக்கோமா?” என்றவரிடம் அவள் கையை நீட்ட, ரேணுகாவோ தானே அவளுக்கு வைத்துவிட்டுக் கொண்டிருந்தார். சில விஷயங்களை யோசித்துப் பார்த்தவளுக்கு முயன்றும் முடியாமல் கண்ணோரம் நீர் துளிர்த்திருந்தது.