ஆதிகேசவன்-சிவ தீர்த்தா திருமண செய்தி சொந்த பந்தங்களிடமும், அங்காளி பங்காளிகளிடமும் , மாமன் மச்சினன்களிடமும் தீயாய் பரவியிருக்க, அனைவரும் ஆதியின் வீட்டிற்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். ஊராரின் வருகை நின்று இப்போது சொந்தங்களின் வருகை.மொத்த சொந்த பந்தமும் ஆதியின் வீட்டில் தான் இருந்தது.
ரேணுகா இதற்கு பயந்து தான் ஆதியை வீட்டில் இருக்க சொன்னார்.ரேணுகாவின் அண்ணன் தம்பி குடும்பமும் இதில் அடக்கம். அனைவர் வீட்டிலும் முறையில் பெண் இருக்க, ஆதியை மாப்பிள்ளையாக்கும் கனவில் இருந்தவர்களுக்கு அவனின் திருமண செய்தி அதிர்ச்சி தரும் ஒன்று தானே.
ரேணுகாவின் பிறந்த வீட்டினர் அவரின் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
“நீ இப்படி பண்ணுவேன்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை ரேணுகா. தாய்மாமனுக நாங்க இருக்கும் போது எங்களுக்கு சொல்லாம எப்படி மருமகனுக்கு கல்யாணத்தை முடிக்க போச்சு? எங்க வீட்ல இருக்குறது எல்லாம் பொண்ணா தெரியலையா?” என்று வீட்டிற்குள் வந்தவுடன் எகிறத் தொடங்கிவிட்டனர்.
“அண்ணா நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க. இப்படி நடக்கும்னு நாங்களே எதிர்பார்க்கலை” என்று ரேணுகா சொன்னது எதுவும் அவர்கள் காதில் விழுந்ததைப் போல் தெரியவில்லை.
“ஆதிக்குத் தான் குடுப்பேன்னு சொல்லி இந்த வீட்லயே ஒரு பொண்ணை வளர்த்து வச்சிருக்கேன். அவளுக்கே இங்க உரிமை இல்லைன்னு ஆகிப் போச்சு. இப்போ நீங்க வந்து கத்துனா மட்டும் நடந்தது மாறிடவா போகுது?” என்றார் மணிமேகலை.
இவர்கள் போட்ட சத்தத்தில் என்னமோ ஏதோவென்று சிவா வெளியே வந்திருக்க, கீழே இவர்கள் மொத்தமாய் வந்திருப்பது கண்டு அவளுக்கும் லேசான திடுக்கிடல் தான்.
“நீங்க இந்த வீட்டுக்கு பெரியவங்க தான? இப்படி நடக்க நீங்க விடலாமா? தாய்மாமன் எனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு? ஆதி என் தங்கச்சி மகன். என் வீட்டு மருமகனாக்கிக்கனும்னு நினைக்கிறதுல என்ன தப்பு?” என்றார் ரேணுகாவின் அண்ணன் எகிறிக் கொண்டு.
“நீங்க நினைக்கிறதுல தப்பு எதுவுமில்லைப்பா..! எங்களுக்கு என்ன வேண்டுதலா? அந்த சிறுக்கியை இந்த வீட்டு மருமகளா கூட்டிட்டு வரணும்னு? எல்லாம் இந்த விசாகன் பையனால வந்தது. அவன் ஒன்ன செய்ய போய், அதுக்கு பலியானது என்னமோ ஆதி தான்” என்றார் விசாலாட்சி.
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை அத்தை, அந்த பொண்ணை அத்து விடுங்க. அடுத்த முகூர்த்ததுலையே என் பொண்ணை இந்த வீட்டு மருமகளா அனுப்பி வைக்கிறேன்” என்றார் ரேணுகாவின் அண்ணன்.
அவர் பேச்சில் சிவா அதிர்ந்து பார்த்திருக்க, ரேணுகாவிற்கோ அப்படி ஒரு கோபம் வந்தது.
“பார்த்து பேசுங்கண்ணா! நீங்களும் பொண்ணை வச்சிருக்கிங்க? கட்டிட்டு வந்த அன்னைக்கே அத்து விடுறதை பத்தி பேசுறிங்க? யார் மருமகளை யார் அத்து விடுறது? இங்க பாருங்க உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் சிவா தான் என் மருமக. அதை யாரும் மாத்த முடியாது. இப்படி பேசுறதை முதல்ல நிறுத்துங்க” என்றார் ரேணுகா.
“கூடப் பிறந்த அண்ணனை விட, யாரோ ஒரு பொண்ணு உனக்கு பெருசா போய்ட்டாளா ரேணுகா. என் பொண்ணுக்கு என்ன பதில்?” என்றார் கோபமாய்.
“யார் பொண்ணையும் கட்டிக்கிறேன்னு வாக்கு குடுத்து நாங்க ஏமாத்தலை. சொல்லப் போனா ஆதிக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை. நீங்களா ஆசையை வளர்த்துகிட்டா அதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது” என்றார் ரேணுகா பட்டென்று.
“பார்த்திங்களா அத்தை, சொந்த அண்ணன்னு கூட பார்க்காம ரேணுகா பேசுற பேச்சை. எங்க உறவே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா போல” என்றார்.
“என்ன ரேணுகா? இன்னைக்கு பேச்செல்லாம் தினுசா இருக்கு? என்ன இருந்தாலும் உன் பிறந்த வீட்டு மனுஷங்க கிட்ட இப்படி பேசுறது தப்பு” என்றார் விசாலாட்சி.
“எனக்கு என் மகன், மருமக ரொம்ப முக்கியம் அத்தை. அப்பறம் தான் பிறந்த வீடு, புகுந்த வீடு எல்லாம். என் மருமகளை பேசுறதைக் கேட்டுட்டு அப்படியே இருக்க முடியாது” என்று ரேணுகா பட்டென்று கூறி விட, அந்த வீட்டில் இருந்த அனைவருக்கும் திகைப்பு. ரேணுகா ஒரு நாளும் இப்படி பேசியதில்லை.
“அண்ணி” என்று சுபத்ரா ரேணுகாவை அடக்கப் பார்க்க,
“நீ இதுல தலையிடாத சுபத்ரா” என்றார் ஒரே வார்த்தையாய்.
“இன்னும் எதுக்கு நிக்கிறிங்க? அது தான் உங்க தங்கச்சி தெளிவா சொல்லிட்டாளே? மருமகளை அத்துவிட முடியாதுன்னு. இன்னும் இங்க இருந்து அசிங்கப்படனுமா? கிளம்புங்க” என்று ரேணுகாவின் அண்ணன் மனைவி சொல்ல,
வந்திருந்த சொந்த பந்தங்கள் ஆளாளுக்கு பேச, ரேணுகாவிற்கு தான் படபடவென்று வந்தது.
கிராமங்களில் இது ஒரு பிரச்சனை. சொந்தம் விட்டுப் போக அவ்வளவு சீக்கிரம் யாரும் விடுவதில்லை. அதற்காவே மாறி மாறி பெண் கொடுத்து உறவு முறையை உறுதியாக்கிக் கொண்டே செல்வர். சிலர் உறவுக்காக செய்வதுண்டு. சிலர் சொத்து வெளியே செல்வதைத் தடுப்பதற்காக செய்வதுண்டு.
அத்தனை சத்தமும் ஆதி கேசவன் வீட்டிற்குள் நுழையும் வரை மட்டும் தான். அவன் வீட்டிற்குள் வந்ததும், சத்தமெல்லாம் அடங்கி அந்த வீடே அமைதிக் கோலமாய் காட்சியளிக்க,
“வாங்க மாமா” என்றவன்,
“என்ன எல்லாரும் ஒன்னு சேர்ந்து வந்திருக்கிங்க?” என்றான் அனைவரையும் பார்த்து, எதுவும் தெரியாதவன் போல்.
அங்கு நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாவிற்கு மனதிற்குள் சற்று ஆச்சர்யம் தான்.
‘இவ்வளவு நேரம் இவங்க எல்லாம் தாண்டுன தண்டு என்ன? இப்போ பம்முற பம்மு எங்க?’ என்று எண்ணிக் கொண்டாள்.
“அது ஒண்ணுமில்ல மருமகனே! நடந்த விஷயத்தை கேள்விப் பட்டோம். நம்ம வீட்ல பொண்ணு இருக்கும் போது,ஒரு வார்த்தை எங்க கிட்ட சொல்லாம இப்படி நடந்தா விசனப்படுறது எதார்த்தம் தானுங்களே”என்றார் ரேணுகாவின் அண்ணன்.
“நீங்க சொல்றது வாஸ்தவம் தான் மாமா. தாய்மாமன் வீட்டுக்கு சொல்லாம செய்றது தப்புத்தான். இது எதிர்பார்க்காம நடந்த விஷயம். நீங்க வரலைன்னாலும் நானே உங்களை அழைச்சு சொல்லியிருப்பேன். உங்க கோபம் நியாயமானது தான். ஆனா பாருங்க நடைமுறைன்னு ஒன்னு இருக்குல்ல” என்றான் ஆதி.
“நம்ம ஆளுங்கல்ல அத்துட்டு கட்டுறது புதுசா மருமகனே” என்று அவர் தயங்கியபடி கூற, அடுத்த நிமிடம் அங்கிருந்த சேர் ஒன்று அவன் உதைத்த உதையில் வெளியே சென்று விழுந்திருந்தது.
அவனின் கோபத்தில் அனைவரும் அடங்கிவிட, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிவ தீர்த்தாவோ நெஞ்சில் கை வைத்துவிட்டாள்.அவள் பார்த்தவரை அவனை அமைதியானவனாகவே பார்த்திருக்கிறாள். அதனால் அவனின் இந்த கோப முகத்தைக் கண்டவளுக்கு உடலில் நடுக்கம் வந்தது என்னவோ உண்மை.
“தாலி கட்டி முழுசா ஒரு நாள் ஆகலை, அதுக்குள்ள வந்து அத்து விடுறதைப் பத்தி பேசிட்டு இருக்கீங்க? யாரு வீட்டுக்கு வந்து யாரு யாரை அத்து விடுறது. என் வாழ்க்கையில முடிவெடுக்குற அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது? வாழ்வோ சாவோ அது ஒருத்தியோட மட்டும் தான். மாத்தி மாத்தி பண்ணிக்கிறதுக்கு இதென்ன பொம்மை கல்யாணமா? எந்த காலத்துல இருக்கீங்க?” என்று கோபமாய் கத்தியவன்,
“இதெல்லாம் உங்க வேலை தானா?” என்றான் விசாலாட்சியிடம் திரும்பி.
“அய்யோ, எனக்கு எதுவும் தெரியாது ராசா. விஷயத்தை கேள்விப்பட்டு அவுகளா வந்திருக்காக” என்றார் வேகமாய்.
“இங்க பாருங்க ஒவ்வொரு தடவையும் என்னால சொல்லிட்டே இருக்க முடியாது. எங்க அம்மா முகத்துக்காக பார்க்குறேன். உறவு நீடிக்கனும்னா இனி இந்த பேச்சை எடுத்துட்டு வராதிங்க” என்றான் ஆதி.
“ஒரு ஆதங்கத்துல வந்து கேட்டது தான்ப்பா. அதுக்காக உறவு இல்லைன்னு ஆகிடுமா? அப்படி விட்டுக் குடுக்குற உறவா இது?” என்று சட்டென்று தணிந்து போய் விட்டார் ரேணுகாவின் அண்ணன்.
அவருக்கு அவனால் ஆக வேண்டிய காரியம் நிறைய இருக்கும் போது, சட்டென்று தங்கை மகனை பகைத்துக் கொள்ள அவர் தயாராய் இல்லை.
கோபம் சற்று தணிந்தவன்,
“எல்லாரும் இருந்து சாப்பிட்டு தான் போகணும்” என்றவன்,
“அம்மா எல்லாருக்கும் விருந்து ரெடி பண்ணுங்க. வீட்டுக்கு வந்தவங்களுக்கு கல்யாண சாப்பாடு போட வேண்டாமா?” என்றவன், அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலே சென்றான்.