அப்போது கையில் பார்சலுடன் அறைக்குள் வந்த ஆதி, அவள் தரையில் படுத்திருப்பதைக் கண்டு எங்கே மீண்டும் மயங்கிவிட்டாளோ என்று பதட்டப்பட, சிவாவோ சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
அவளுக்கு ஒன்றுமில்லை என்ற பிறகு தான் அவனுக்கு மூச்சே வந்தது. ஆசுவாசமாய் மூச்சு விட்டவன்,
“அட சாப்பிடும்மா..! அண்ணன் கல்யாண சாப்பாடு போடனும்ல. அப்பறம் பாண்டி கோவிச்சுக்க மாட்டானா” என்று லேசாய் இதழ் பிரித்து சிரித்தவன், சிவாவைப் பார்க்க அவளோ அவனைப் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“இது நான் சொந்தமா சம்பாதிச்ச பணத்துல வாங்குன சாப்பாடு. இந்த வீட்டுக்கு சம்பந்தப்பட்ட என்னையத் தவிர இதுல வேறு எதுவும் சம்பந்தப்படலை. இந்த ரூம்குள்ள இருக்குற ஒவ்வொரு பொருளும் என்னோட சுய சம்பாத்தியம். இந்த வீட்டுப் பணம் இது எதுலையும் இல்லை. ஆனா, நானோ என் படிப்போ இந்த வீடு கொடுத்தது தான். அதை என்னால மாத்த முடியாது” என்று அவளை நேர் பார்வை பார்த்தவன்,
“இப்போ சாப்பிடுவன்னு நம்புறேன்” என்றவன்,
“உன் அப்பா எந்த நம்பிக்கையில நான் மாப்பிள்ளையா ஆகணும்னு கேட்டார்னு தெரியலை. அந்த நம்பிக்கையை காப்பாத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கு. என்னை மீறி இந்த வீட்ல உனக்கு எதுவும் நடக்காது. அதே மாதிரி இந்த ரூம்க்கு வெளிய என்னோட மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம். அதை காப்பாத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் உனக்கு இருக்கு” என்றவன் வெளியே சென்று விட்டான்.
ஆதியின் பேச்சை கவி வியந்து கேட்க, சிவாவோ ‘என்ன பேசுறியோ பேசு’ என்பதைப் போல் பார்த்திருந்தாள்.
ரேணுகாவோ கவலையுடன் இருந்தார். சிவாவின் கோபத்தை பார்த்தவருக்கு, அவளை சரி செய்வது அத்தனை சுலபமான காரியமில்லை என்று தெரிந்திருந்தது.
“எத்தனை நாளைக்கு ஆதி இப்படி வெளிய சாப்பிட முடியும்?” என்றார் ரேணுகா தேவி.
“யோசிக்கிறேன்மா!” என்றவனுக்கும் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
“அண்ணி, என்னமோ ஊர்ல இல்லாத மருமகளை கொண்டு வந்த மாதிரி அவ ஆடுற ஆட்டத்துக்கு எல்லாம் இப்படி கூடப் போறது எனக்கு சரியாப்படலை. இப்பவே இப்படி பண்ணினா, இன்னும் என்னவெல்லாம் பண்ணக் காத்திருக்காளோ?” என்றார் மணி மேகலை.
“இன்னைக்கு அம்மாகிட்ட எப்படி நடந்துகிட்டான்னு பார்த்திங்க தான? இன்னும் அம்மா முன்னாடி நின்னு பேச நானே பயப்படுவேன். அவ என்னடான்னா அசால்ட்டா குரவலையைப் பிடிக்கிறா? ஆனாலும் ஒரு பொட்டப் பிள்ளைக்கு இவ்வளவு திண்ணக்கம் ஆகாது அண்ணி” என்றார் மேகலை.
“ஆதியோட பொண்டாட்டிக்கு இந்த திமிர் கூட இல்லைன்னா நல்லா இருக்காது அத்தை. அவ இப்படி திமிரோட இருக்குறதும் நல்லா தான் இருக்கு. அடுத்து என்ன பண்றதுன்னு நான் பார்த்துக்கிறேன். அது என்னோட கவலை. வீணா அதைப் பத்தி யோசிச்சு உங்க உடம்பை ஏன் கெடுத்துக்கிறிங்க?” என்றான் ஆதி.
“இப்போ நீ என்மேல இருக்குற அக்கறையில பேசுறியா? இல்ல, இனி உன் பொண்டாட்டி விஷயத்துல தலையிடக் கூடாதுன்னு மறைமுகமா சொல்றியா ஆதி?” என்றார் மேகலை.
“மறைமுகமா எல்லாம் சொல்லலை அத்தை, நேரடியாவே தான் சொல்றேன். அவ விஷயத்துல யாரும் தலையிடக் கூடாது. மீறி தலையிட்டு வாங்கிக் கட்டுனா, அதுக்கு நான் பொறுப்பில்லை” என்றவன்,
“அம்மா நான் மில்லு வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்” என்றான்.
“ஆதி இன்னைக்கு ஒரு நாள் வெளிய போக வேண்டாம்ப்பா..! எப்படி நடந்திருந்தாலும் இன்னைக்குத் தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. இன்னைக்கு ஒரு நாள் வீட்ல இருப்பா” என்றார் ரேணுகா.
ரேணுகாவிற்கு பயம், எங்கே ஆதி வெளியே சென்ற பின் வீட்டில் இருப்பவர்கள் சிவாவை வார்த்தையால் குத்திக் கிழித்து விடுவார்களோ என்று. அவர் முகத்தில் இருந்து அவனும் அதை உணர்ந்திருந்தானோ என்னவோ,
“சரி” என்றவன்,
“இப்ப வெளிய போன உடனே வந்திடுறேன்” என்று கிளம்பிவிட்டான். அவன் நேராக சென்றது சிவ தீர்த்தாவின் வீட்டிற்கு தான்.
இருபது வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டின் வாயிலை மிதிக்கிறான். அறியாத வயதில் சென்றது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செல்கிறான். அறியாத வயதிலும் சிவ தீர்த்தாவிற்காகத் தான் சென்றான். இப்போதும் அவளுக்காகத் தான் செல்கிறான்.
அவனை அங்கு கண்ட பேச்சியோ,
“எய்யா கிருஷ்ணா, பெரிய தம்பி வந்திருக்காப்படி” என்றார் பேச்சி.
“யாரு அத்தை?” என்றார் கிருஷ்ணன்.
“எய்யா, உம்ம மருமவன் தான்” என்று பேச்சி சொல்ல,
“யாரு ஆதியா?” என்றவர் பதட்டத்துடன் வெளியே வர, ஆதியோ தயக்கத்துடன் வெளியே நின்றான்.
“வா ஆதி” என்று பழக்க தோஷத்தில் அழைக்கப் போனவர், பின் சுதாரித்து,
“வாங்க தம்பி” என்றார். அவர் கண்கள் அவனுக்குப் பின்னால் மகளைத் தேட,
“நான் மட்டும் தான் வந்தேன்” என்றான் ஆதி. ஏனோ முன்பிருந்தே அவரை மாமா என்று அவன் அழைத்ததில்லை.
“சிவா.. சிவாவுக்கு ஒன்னும் பிரச்சனையில்லையே? புள்ள நல்லா இருக்குல்ல” என்று கிருஷ்ணன் கேட்கும் போதே, அவரின் குரல் உடைந்திருந்தது.
“நல்லா இருக்கான்னு பொய் சொல்ல மாட்டேன். அது உங்களுக்கும் தெரியும். இப்ப நல்லா இல்லைன்னாலும் இனி நல்லா இருப்பா. அங்க அனுப்பி விட்டுட்டு உங்களுக்கு இங்க மனசே இருக்காதுன்னு தெரியும். அதான் ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” என்றான் ஆதி.
“இல்லங்க இருக்கட்டும்” என்ற ஆதி அந்த வீட்டைத் தான் பார்வையால் அளந்து கொண்டிருந்தான். அவன் சிறு வயதில் வந்து பார்த்ததுக்கும் இப்போதைக்கும் அவ்வளவு மாற்றங்கள் இருந்தது. உள்ளே நுழையும் கேட் மட்டுமே ஒரே வாசலாய் இருக்க, உள்ளே பொது சுவர் வைத்து ஒரே மாதிரி இரண்டு வீடுகள் இருந்தது.
“முதல்ல ஒரு வீடு மட்டும் தான இருந்தது” என்றான் ஆதி.
“அது தம்பி குடும்பத்துக்காக எடுத்த வீடு” என்றார் கிருஷ்ணன். அப்போது விக்னேஷ் அந்த வீட்டிற்குள் இருந்து வர, அங்கே ஆதியைக் கண்டவன் வேகமாய் அவனிடம் ஓடி வந்தான்.
“இப்போ உன் அக்கா கூட வரலை. இன்னொரு நாள் கூட்டிட்டு வர்றேன்” என்றான் ஆதி.
காவேரி அவனுக்கு டீ கொண்டு வந்து கொடுக்க, அதைத் தயக்கத்துடன் எடுத்துக் கொண்டான்.
‘அங்க ஒருத்தி என் வீட்ல பச்சைத் தண்ணி குடிக்க மாட்டேன்னு உட்கார்ந்திருக்கா. நான் அவ வீட்ல வந்து டீ குடிக்க போறேன். இத மட்டும் விசாலாட்சி பார்க்கணும்’ என்று எண்ணியவனுக்கு தன்னை நினைத்தே வியப்பு. அவனின் இவ்வளவு மெனக்கெடல்களும் அவளுக்காக அல்லவா. அந்த வியப்பு தான் அவளுக்கு.
அவனறியாமல் அவனுக்குள் புகுந்திருந்தவளுக்கு அனைத்தையும் அவன் மனமறியாமலே பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறான்.
“சிவா கொஞ்சம் கோபம் வந்தா பட்டுன்னு பேசுவா, மத்தபடி தங்கமான பொண்ணு தம்பி” என்றார் காவேரி.
“தெரியும்ங்க” என்றான்.
“என்னவோ தெரியலை, மண்டபத்துல சிவா அப்படி பேசுனதுல இருந்து மனசு கிடந்தது அடிச்சுக்குது. அவளைப் பார்த்துக்கோங்க” என்றார் காவேரி.
“எல்லாம் போகப் போக சரியாகிடும். நீங்க எதையும் நினைச்சு வருத்திகிட்டு இருக்காதிங்க. எந்த நம்பிக்கையில எனக்கு கட்டி வச்சிங்களோ அதே நம்பிக்கையோட இருங்க. அவளை நான் பார்த்துப்பேன்” என்றான் அவர்களிடம் பொதுவாய்.
“அப்ப நான் கிளம்புறேன்” என்றவன் கிளம்ப, கிருஷ்ணன் எதற்கோ தயங்குவதைப் போல் இருந்தது.
“எதுன்னாலும் தயங்காம சொல்லுங்க” என்றான்.
“புள்ளைக்கு செய்ய வேண்டியது எல்லாம் முறையா செய்யணும்ல, அதான்.சும்மா அனுப்பி விட்டேன்னு நாளைக்கு ஒரு சொல்லு வந்துடக் கூடாது பாருங்க” என்றார் யோசனையாய்.
“உங்க பொண்ணுக்கு நீங்க செய்றதுக்கு ஏன் இவ்வளவு தயங்குறிங்க? ரெண்டு வீடும் சேர்ந்து சகஜமா எல்லாத்தையும் செய்ய முடியுமான்னு எனக்கு தெரியலை. முதல்ல உங்க மக நார்மல் ஆகணும். அதுக்கப்பறம் என்ன பண்றதுன்னு பார்ப்போம்” என்றவன் கிளம்பிவிட்டான்.
“அந்த வீட்ல இப்படி ஒரு தங்கமான புள்ளையா? இந்த தம்பி அதிகம் இந்த ஊர்ல இல்லாததால பயலோட குணம் தெரியாம இருந்துட்டேன். கிருஷ்ணன் பண்ணது சரிதான்” என்றார் பேச்சி.
“ரொம்ப பொறுப்பான பையன் அத்த. அதுவுமில்லாம கிருஷ்ணன் பொண்ணைத் தான் அவங்க சீண்ட முடியும். ஆதி கேசவன் மனைவியை அவங்களால சீண்ட முடியாது பாருங்க” என்றார் யோசனையுடன்.
“காலம் எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வச்சிருக்கும்யா” என்றார் பேச்சி.