“டேய் பாண்டி, இவ பொருளை எல்லாம் மேல எடுத்துட்டு வா” என்றவன் அவள் மறுப்பையும் மீறி, தூக்கிக் கொண்டு போய் அவனறையில் விட்டிருந்தான். பாண்டியிடமிருந்து பெட்டிகளை வாங்கி உள்ளே வைத்தவன்,
“கவிம்மா, கொஞ்ச நேரம் கூட இரும்மா, இதோ வந்திடுறேன்” என்றபடி வெளியே சென்று விட்டான்.
கீழே சென்றவன் நேராக விசாலாட்சியிடம் தான் சென்றான்.
“உங்களுக்கு இருக்குறது வாயா இல்லை தேள் கொடுக்கா? உங்க இஷட்டத்துக்கு பேசிட்டு போறீங்க? இன்னைக்கு மட்டும் அவ ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தா இந்நேரம் உங்க சின்ன பேரனை ஜெயில்ல தான் பார்த்திருக்கணும் நீங்க. தப்பை எல்லாம் நம்ம மேல வச்சுகிட்டு அவளைப் பேசிட்டு இருக்கீங்க. நான் தான் தெளிவா சொன்னேனே அவ ஆதி கேசவன் பொண்டாட்டி. அவளை யாரும் எதுவும் சொல்லக் கூடாதுன்னு. மீறி இப்படித்தான் இருப்பேன்னு நீங்க சொன்னா, இப்பவே சொல்லிடுங்க, அடுத்து என்ன செய்யணும்கிறதை நான் பார்த்துக்கிறேன்” என்றான் பட்டுக் கத்தரித்தார் போல்.
“அவ என்னை கொல்ல வர்றா, அதைப் பத்தி ஒரு வார்த்தை பேசலை ஆதி நீ. ஆனா நான் பேசுனதுக்கு மட்டும் பொண்டாட்டிக்கு வக்காலத்து வாங்கிட்டு வர்ற” என்றார் விசாலாட்சி ஆதங்கத்துடன்.
“அவ அமைதியா தான் இருந்தா. பாண்டி கிட்ட பேசிட்டு இருக்கும் போது நீங்க ஏன் தலையை குடுக்குறிங்க? அவ கோபத்துல தப்பிருந்ததா எனக்குத் தெரியலை. என் அப்பாவை பேசினா எனக்கு எப்படி கோபம் வருமோ, அதே நியாயமான கோபம் தான அவளுக்கும் வந்தது? இதுல எங்க இருந்து தப்பு சொல்ல முடியும்?” என்றவன், வெளியே செல்லப் போக, மீண்டும் திரும்பி வந்தான்.
“வினை விதைச்சவன் வினை அறுப்பான்னு நீங்க கேள்விப் பட்டதில்லை. அது தான் இப்போ நடக்குதுன்னு நான் நினைக்கிறன்” என்றவன் அங்கிருந்த அனைவரையும் ஒரு முறைப்புடன் கடந்து சென்றான்.
அவன் பேசியது மேலே இருந்த சிவாவுக்கும், கவிக்கும் வார்த்தை மாறாமல் கேட்டிருந்தது.
“ஆதி அண்ணா செம்மல்ல” என்றாள் கவி.
அவள் பேசியதை எல்லாம் காதில் வாங்காமல் அந்த அறையையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் சிவ தீர்த்தா. அந்த அறையை சுற்றி வந்த கவி,
“சிவா இத்தனை நாள் இந்த வீட்டுக்கு வந்திருக்கேன். ஆனா ஒரு தடவை கூட மேல வந்தது இல்லடி. சும்மா சொல்லக் கூடாது, பணம் இருந்தா பாத்ரூம் தரை கூட இப்படி பளிச்சுன்னு பளிங்கா மின்னும் போல. இந்த வீடு வெளிய இருந்து பார்த்தா அந்த காலத்து வீடு மாதிரி இருக்கு. இதென்னடி சிவா அண்ணன் ரூம் மட்டும் இப்படி அல்ட்ரா டிசைன்ல இருக்கு” என்று ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் கவி. அப்படியாவது சிவாவின் கவனத்தை மாற்ற அவள் முயற்சி செய்ய, அவளோ அதையெல்லாம் பேருக்குக் கூட கண்டு கொண்டாளில்லை.
“சிவா” என்ற கவி அவளின் தோளைத் தொட,
“இதையெல்லாம் பார்த்து மயங்கி நான் மனசு மாறுவேன்னு நினைச்சியா கவி. சந்தோஷமும் நிம்மதியும் இப்படி ஆடம்பரத்துல இல்லை. தோட்டத்துல அப்பா கூட வேலை பார்த்துட்டு, பம்புசெட்ல அலுப்பு தீர குளிச்சுட்டு, சூடா சமைச்சு, அவரும் நானும் சேர்ந்து சாப்பிடுறப்போ வருமே ஒரு நிம்மதி அதுல கால்வாசி கூட இங்க வராது” என்றாள் சோர்வாய்.
“எப்படி இருந்தாலும், நின்னு போன அந்த கல்யாணமே நடந்திருந்தாலும் நீ இன்னைக்கு இன்னொரு வீட்டுக்கு போயிருப்ப தான சிவா. அப்படி நினைச்சுக்கோடி” என்றாள்.
“அதுக்கும் இதுக்கும் வித்யாசம் இருக்கு கவி. அந்த கல்யாணம் நடந்திருந்தா என் அப்பா, பொண்ணு வீடுன்னு உரிமையா வந்துட்டு போயிருப்பார். இப்படி தாலி கட்டின உடனே அநாதை மாதிரி எல்லாரும் விட்டுட்டு போயிருக்க மாட்டாங்க. என் மூச்சுக் காத்து கூட படக் கூடாதுன்னு நான் நினைச்ச இடத்துல தான், இனி என் வாழ்நாள் மூச்சு முழுசும் இருக்கப் போகுதுன்னு நினைச்சாலே எனக்கு மூச்சு முட்டுது கவி” என்றாள் சிவா கலங்கிய குரலில்.
“மத்தவங்களுக்காக யோசிக்கலைன்னாலும் ஆதி அண்ணாவுக்காக யோசிடி. நீ ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கலைன்னாலும் இந்த வீட்ல அவர் நியாயவாதி தான். இப்படி பிடிவாதம் பிடிச்சு வாழ்க்கையை கெடுத்துகிட்டு போய் உங்கப்பா முன்னாடி நின்னா மட்டும் அவர் சந்தோஷப்படுவாரா? இல்ல அவர் தான் உன்னை இப்படி கஷ்ட்டப்படுத்தனும் நினைப்பாரா? உனக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சும் கிருஷ்ணன் மாமா ஒரு விஷயத்தை பண்ணியிருக்கார்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும் சிவா, நல்லா யோசிச்சு பாரு” என்றாள் கவி.
“எந்த காரணமா இருந்தாலும் அது எனக்கு உவப்பா இருக்காது கவி” என்றவளுக்கு ஏனோ சோர்வு அதிகமாய் இருந்தது. காலையில் இருந்து சொட்டுத் தண்ணீர் வாயில் படவில்லை. தந்தையைப் பற்றிய கவலையில் முதல் நாளும் சரியாக சாப்பிடவில்லை. விசாகனின் நண்பர்கள் கடத்தியது, கை கால்கள் கட்டியிருந்தது, என்று ஏற்கனவே சோர்வாய் இருந்தவளுக்கு, மனப் போராட்டமும் சேர்ந்து கொள்ள தன்னை பலவீனமாக உணர்ந்தாள்.
அவள் அப்படியே சாய்ந்து தரையில் படுத்துவிட, கவிக்கோ அவளைப் பார்த்து பாவமாய் இருந்தது.
எப்போதும் ஒரு இடத்தில் சும்மா நிற்காமல் துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பவள், இன்று வாடிய கொடியாய் கிடப்பதை கண்டு கவிக்கும் வருத்தம் தான்.