“ஏதாவது குடிக்கிறியா?” என்ற ஆதியின் வார்த்தைகள் சிவாவின் காதுகளில் விழுந்ததைப் போல் தெரியவில்லை. அவள் அந்த புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருக்க, வேறுவழியின்றி அவளைத் தோள் தொட்டு அசைத்தான் ஆதி.
அவனின் தொடுதலில் உணர்விற்கு வந்தவள் சட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டிருந்தாள். அவளின் செய்கையில் பல்லைக் கடித்தபடி தலையில் கை வைத்தவனுக்கு எரிச்சலாய் வந்தது.
அப்போது அங்கே வந்த ரேணுகா,
“ஆதி முறைக்கு பால் பழம் சாப்பிடனும்ப்பா” என்றார்.
ரேணுகாவை முறைத்தவன்,”ஆமாம்மா! பால் பழம் அப்படியே விருந்து எல்லாத்துக்கும் ரெடி பண்ணிடுங்க. ஏன்னா? ரொம்ப ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கேன். இவளும் அப்படியே ரொம்ப ஆசையோட தாலி கட்டிட்டு வந்திருக்கா. அதனால பால் பழம் ஒன்னும் தான் குறைச்சல்” என்றான் வார்த்தைகளை அழுத்தி.
“இங்க எல்லாமே முறையா தான் நடக்குதா?” என்றவன் தலையைக் கோதி தன் கோபத்தை சரி செய்தான்.
‘என்ன பண்ற ஆதி? அந்த பொண்ணு மேல என்ன தப்பு? அவ தான் தெளிவா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னாலே? எதைப் பத்தியும் கவலைப் படாம தாலியைக் கட்டிட்டு இப்போ இப்படி கோபப்பட்டா எப்படி?’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவன், முயன்று நிதானத்திற்கு வந்தான்.
மீண்டும் அவளைப் பார்க்க அவளோ முகம் இறுக அமர்ந்திருந்தாள். அவனின் கண்ணிற்கு பிடிவாதக் குழந்தையாகவே தெரிந்தாள் அவள். ஆனால் அவள் குழந்தை இல்லை என்றும் அவனுக்குத் தெரியும். அவளையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, அந்த பார்வையில் அசௌகரியமாக உணர்ந்தாள்.
சுபத்ரா தூரத்தில் இருந்து மகளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். விசாலட்சியோ எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க, அங்குமிங்கும் நடந்தபடி அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.
இதையெல்லாம் ஆதி கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அவளின் கையை அவன் மீண்டும் பற்ற, உதற முயன்றவளுக்கு இந்த முறை முடியவில்லை. பிடி இரும்புப் பிடியாய் இருந்தது.
“ரெஸ்ட் எடுக்குறியா?” என்றான் ஆழ்ந்த குரலில்.
“வேண்டாம்” என்பதைப் போல் அவள் தலையாடியது.
“எவ்வளவு நேரத்துக்கு இப்படியே உட்கார்ந்திருக்க போற? எதுவும் சாப்பிடவும் இல்லை. பசிக்கலையா?” என்றான் ஆதி.
“இல்லை” என்று மீண்டும் அவள் தலை மட்டும் தான் ஆடியது. வீட்டிற்குள் வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாத அவளின் மௌனப் போராட்டம் ஆதியை அசைத்துப் பார்த்தது.
“என்கிட்டே ஏதாவது சொல்லனுமா?” என்றான் மீண்டும். அதற்கும் இல்லை என்ற மௌனம் தான் அவளிடம்.
அப்போது பாண்டியும் கவியும் வர, அவர்கள் வந்தவுடன் பட்டென்று எழுந்துவிட்டாள் சிவா.
“சிவா உனக்குத் தேவையானது எல்லாம் இதுல இருக்குடி” என்றாள் கவி.
“பாண்டியண்ணா” என்றாள் நீண்ட நேரத்திற்கு பிறகு வாயைத் திறந்து.
“சிவா பாப்பா சொல்லுடா” என்றான் பாண்டி.
“எனக்கு குடிக்கத் தண்ணி வேணும்” என்றாள் கண் கலங்க. அவளின் வார்த்தையில் அதிர்ந்து சட்டென்று எழுந்து விட்டான் ஆதி. கண்கள் தெறித்து விடும் அளவிற்கு அவளைப் பார்த்திருக்க, பாண்டியோ அதற்கு மேல் அதிர்ந்தான்.
“பாப்பா” என்றவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்று கவி நகரப் போக,
“இங்க இருந்து எனக்கு வேண்டாம்” என்றாள் சிவ தீர்த்தா.
“சிவா என்னடி இதெல்லாம்? எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும்? சொன்னா கேளு” என்று கவிதா அவளை ஆறுதல் படுத்த,
“இந்த பாவப்பட்ட வீட்ல இருந்து பச்சை தண்ணி குடிக்கிறது கூட பாவம்னு நினைக்கிறேன் நான்” என்றாள் கவிதாவை வெறித்தபடி. அவளின் வார்த்தைகளைக் கேட்டு ரேணுகா ஆணியடித்தார்போல் அப்படியே நிற்க, சுபத்ராவோ சத்தமின்றி கண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்.
“பாவப்பட்ட வீடா? என்னடி வாயெல்லாம் நீளுது? இந்த பாவப்பட்ட வீட்டுக்கு வாக்கப்பட்டு வான்னு உன்னை யாரும் வெத்தலை பாக்கு வச்சு அழைக்கலை” என்றார் விசாலாட்சி கோபத்துடன்.
அவள் அப்போதும் அழுத்தமாய் நிற்க,
“சிவா பாப்பா அண்ணன் சொல்றேன்னு கோவிச்சுக்காதம்மா..! நீ இப்போ இந்த வீட்டுக்கு மருமக. எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும். நீ ஏன் மத்தவங்களை எல்லாம் பார்க்குற? இப்போ ஆதி உன் புருஷன். அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே உனக்கும் உரிமைப்பட்டது தான?” என்றான் பாண்டி.
“எனக்கு எந்த உரிமையும் வேண்டாம்ண்ணா. எனக்கு அப்பாகிட்ட போகணும். எனக்கு இங்க இருக்க வேண்டாம். எனக்கு ஏன் அப்பா தான் வேணும்” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிய,
“சிவா என்ன இது சின்னப் பிள்ளையாட்டம்?” என்ற கவிக்கும் கண்கள் கலங்க,இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விசாலாட்சியோ,
“ஊர்ல இல்லாத அப்பன் மக. அப்படியே உருகித் தவிக்கிறா? இப்படி எல்லாம் நடிக்க சொல்லி உங்கப்பன் சொல்லிக் குடுத்தானா? சொல்லிக் குடுத்திருப்பான், இதெல்லாம் அவனுக்கு கை வந்த கலையாச்சே?” என்று பேசி முடிக்கவில்லை, ஆவேசமாய் சென்று விசாலாட்சியின் குரல் வலையை பிடித்திருந்தாள் சிவ தீர்த்தா.
“என் அப்பாவைப் பத்தி ஏதாவது தப்பா பேசுன, கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போகக் கூட தயங்க மாட்டேன். இந்த நடிக்கிறது கெடுக்குறது எல்லாம் உன் குடும்பத்தோட புத்தி. சுட்டுப் போட்டாலும் எங்களுக்கு வராது. முதல்ல என் அப்பா வாழ்க்கையை கெடுத்திங்க. இப்போ என் வாழ்க்கையை கெடுத்திருக்கிங்க. அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம நாக்குல நரம்பே இல்லாம பேசிட்டு இருக்க. கிருஷ்ணன் பொண்ணு கிருஷ்ணனை மாதிரி அமைதியா இருப்பேன்னு மட்டும் நினைக்காத” என்றவள் மேலும் அவர் குரல்வலையை இறுக்க,
“சிவா வேண்டாம்மா விட்டுரு” என்றார் ரேணுகா. வேகமாய் அவள் அருகில் வந்த ஆதி, அவள் கையை ஒரே பிடியில் பிரித்தெடுக்க, விசாலாட்சிக்கோ மயக்கம் வருவதைப் போல் இருந்தது.
“இப்படி இத்தனை பேர் இருக்கும் போதே என் குரவலையை நெறிச்சு கொல்ல வர்றா. நீங்க எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?” என்றார் விசாலாட்சி.
அவரின் பேச்சில் சிவா மீண்டும் அவரை நோக்கி கோபமாய் செல்ல,
“என்ன பண்ணிட்டு இருக்க சிவா, நீ என்ன பைத்தியமா?” என்றான் ஆதி கோபத்துடன்.
“ஆமா நான் பைத்தியம் தான். இத்தனை நடந்தும் இன்னும் அமைதியா இருக்கேன் பாருங்க நான் பைத்தியம் தான்” என்று தலையைப் பிடித்தவளுக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது.
“இந்த பைத்தியத்துக்கு அவ அப்பாதான் வேணும். என்னை விட்ருங்க, நான் என் அப்பாகிட்டையே போறேன். இந்த வீட்ல இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் நரகத்துல இருக்குற மாதிரி தோணுது. என்னால இங்க இருக்க முடியாது” என்று கத்தியவள், அப்படியே மயங்கி சரிந்திருந்தாள்.
“சிவா” என்று பாண்டியும் கவிதாவும் பதறிக் கொண்டு வர, அவர்களுக்கு முன் அவளைத் தாங்கியிருந்தான் ஆதி கேசவன்.
“ம்மா தண்ணி எடுத்துட்டு வாங்க” என்றவன், அவள் கன்னங்களைத் தட்ட, அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.
“அண்ணா அவ நேத்து இருந்து சாப்பிடவே இல்லை. அதான் மயங்கிட்டான்னு நினைக்கிறேன்” என்றாள் கவி.
“என்னம்மா சொல்ற?” என்றவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கோபப்படுவாள் என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு இருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை.
பதறியபடி வந்த சுபத்ராவோ ஆதியின் முறைப்பில் அப்படியே நின்று விட்டார். தண்ணீரை முகத்தில் தெளித்த பிறகு கண்களைத் திறந்தவளுக்கு மீண்டும் தலையை சுற்றிக் கொண்டு வர, முயன்று தன்னை சரி செய்ய பார்த்தாள்.
“சிவா” என்ற ஆதியின் முகம் பக்கத்தில் தெரிய, அப்போது தான் அவன் கைவளைவில் இருப்பது புரிந்தது. தடுமாறியபடி விலகப் போக, அவனோ சட்டென்று அவளைத் தூக்கியிருந்தான். வீட்டில் இருந்தவர்கள் வாயைப் பிளக்க, அவர்களை எல்லாம் கவனித்தானில்லை ஆதி.