“டேய் ஆதி உங்க சுபா அத்தை பாப்பா பார்க்க பொம்மை மாதிரி பொசுபொசுன்னு அழகா இருக்குடா” என்று பாண்டி விளையாடும் போது சொல்லியிருக்க, யாருக்கும் தெரியாமல் சுபாவைப் பார்க்க சென்றிருந்தான் ஆதி கேசவன்.
“ஆதி” என்ற சுபா அவனை அணைத்துக் கொள்ள, அவனோ ஒரு திமிருடன் வீராப்பாய் முகத்தை திருப்பிக் கொண்டான்.
“அத்தைய பார்க்க மாட்டியா?” என்றாள் சுபா.
“நீங்கதான் நாங்க வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டிங்களே? நான் எதுக்கு பார்க்கணும்? அப்பாவும் பாட்டியும் எப்படி அழுதாங்க தெரியுமா? எல்லாம் உங்களால தான்” என்றான் ஆதி.
“நான் ஒன்னும் உங்களைப் பார்க்க வரலை” என்றான் வீம்புடன். தன் பிறந்த வீட்டின் மூத்த வாரிசான ஆதியின் மீது சுபத்ராவிற்கு எப்போதும் தனிப்பிரியம். ஆதியும் சுபத்ராவிடம் தான் அதிகம் வளர்ந்தான். அதனால் அவனுக்கும் சுபத்ரா மீது அளவுக்கு அதிகமான பாசம் இருக்கத்தான் செய்தது.
“என்னோட ஆதி பெரிய மனுஷன் வேற யாரை பார்க்க வந்திங்க?” என்றாள் சுபா.
“இந்தா பாரு பாப்பாவை” என்று தொட்டிலில் இருந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க,
“எனக்கு தூக்கத் தெரியாதே” என்றான்.
“இப்படி உட்காரு” என்று அவனை உட்கார வைத்து குழந்தையை மடியில் வைக்க, அவன் கைகள் நடுங்கியது.
“அச்சோ அத்தை பாப்பா ரொம்ப க்யூட்டா இருக்கு. நல்லா பொம்மை மாதிரி இருக்கு பாப்பா” என்று குழந்தையின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டவன், குழந்தையின் அழகில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“பாப்பாவை நான் வீட்டுக்கு தூக்கிட்டு போகட்டுமா?” என்றான் சுபாவிடம்.
“அத்தையையும், பாப்பாவையும் அங்க யாருக்கும் பிடிக்காது ஆதி” என்றார் கண் கலங்கியவராய்.
“உனக்கு பார்க்கணும்னா நீ இங்க வந்து பார்த்துட்டு போ ஆதி” என்றார் சுபத்ரா. அப்போது கிருஷ்ணன் வர, அங்கே ஆதி கேசவனைக் கண்டு அவருக்கு ஆச்சர்யம் தான்.
“என்ன சுபா? நம்ம வீட்டுக்கு புது மனுஷங்க எல்லாம் வந்திருக்காங்க?” என்றான் கிருஷ்ணன்.
“நான் ஒன்னும் புது மனுஷன் கிடையாது. நீங்க தான் புது மனுஷன். நீங்கதான் எங்க அத்தையை எங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டிங்க?” என்றான் குற்றம் சாட்டும் குரலில்.
“டேய் பெரிய மனுஷா? நான் உங்க அத்தையை பிரிக்கலை, இப்பக் கூட ஒன்னும் கெட்டுப் போகலை, உங்க அத்தையை வேணும்னா கூட்டிட்டு போ. அவ டார்ச்சர் தாங்க முடியலை” என்று கிருஷ்ணன் விளையாட்டாய் பேச, சுபத்ராவோ அதை வேறு விதமாய் எடுத்துக் கொண்டார்.
“உங்களுக்கு இப்பல்லாம் என்னைப் பிடிக்கிறதே இல்லை. எப்படா என்னை ஒழிச்சுக் கட்டுவோம்னு தான நினைக்கிறிங்க?” என்றாள் பட்டென்று.
ஆதியின் கேள்வியில் நெஞ்சில் கை வைத்துவிட்டார் விசாலாட்சி.
“ஆத்தி, அந்த வெறும்பய மகளை இங்க தூக்கிட்டு வரணுமா? பிறக்கும் போதே மாலை சுத்தி பிறந்ததாமே? நானே என் வீட்ல என்னாகுமோ ஏதாகுமோன்னு நினைச்சு பதறிக்கிட்டு இருக்கேன். நீ என்னடா இப்படி வந்து கேட்குற? உன்னை யாரு அங்க போக சொன்னா?” என்று அதட்ட,
“ஆதியை எதுக்கு அதட்டுற விசாலாட்சி. அவன் சின்னப் பையன், ஏதோ புரியாம பேசுறான்” என்றார் ரத்தினம்.
“இல்லை தாத்தா..! சுபா அத்தை பாவம். அந்த வீட்ல ஒண்ணுமே இல்லை. நம்மகிட்ட தான் இங்க எல்லாம் இருக்கே. அவங்களை இங்க கூட்டிட்டு வந்து நல்லா பார்த்துக்கலாம்” என்றான்.
“ஆதி இதெல்லாம் உனக்கு புரியாது. இனி அங்க எல்லாம் போகக் கூடாது” என்று அண்ணாமலை சொல்ல, அதற்கு மேல் அவனுக்கும் அந்த வயதில் எதுவும் பேசத் தோன்றவில்லை.
ஆதி தினமும் ஒரு முறையாவது சென்று சிவ தீர்த்தாவை பார்த்துவிட்டு வந்துவிடுவான். நாளுக்கு நாள் அவளின் மீதான அவனின் பிணைப்பு கூடிக் கொண்டே போக, ரேணுகாவிற்கு தான் வருத்தம்.
“அம்மா, நீங்களும் வாங்க பாப்பாவைப் பார்க்க” என்று தினமும் அவரையும் நச்சரித்துக் கொண்டிருப்பான்.
இப்படியே சிவ தீர்த்தா பிறந்து ஐந்து மாதங்கள் சென்றிருக்க, சிறு சிறு பிரச்சனைகள் ஒரு நாள் பெரிய பிரச்சனையாய் உருவெடுக்க, திடீரென்று ஒரு நாள் கண்ணீருடன் வந்து நின்றாள் சுபா. கையில் குழந்தையுடன் வந்தவளைப் பார்த்து ரேணுகா கையைப் பிசைந்து கொண்டு நிற்க,
“யார் வீட்டுக்கு வந்த? யாரும் வேண்டாம்னு தான போன?இப்ப என்ன?” என்று அண்ணாமலை வாசலில் நிற்க வைத்து கேட்க,
“அண்ணா என்னை மன்னிச்சிடுங்கண்ணா. இனி நான் அங்க போக மாட்டேன்” என்று சுபா அழுக,
“என்ன திடீர்ன்னு ஞான உதயம்?” என்றார் நக்கலாய்.
“நான் அவரை நம்பி ஏமாந்துட்டேன்.வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு வச்சிருக்கார். கேட்டதுக்கு என்னை அவர் கை நீட்டி அடிச்சுட்டார். இனி ஒரு நிமிஷம் கூட என்னால அந்தாளோட வாழ முடியாது” என்று கண்ணீருடன் சொல்ல, ரேணுகாவிற்கோ பதட்டம். அவர் கேள்விப்பட்ட வரையில் கிருஷ்ணன் மிக ஒழுக்கமானவன். இப்போது சுபா வந்து சொல்வதை அவளால் நம்ப முடியவில்லை.
“உன்னை இந்த வீட்ல தலைமுழுகி வருஷம் ஆகுது. நீ போகலாம்” என்றான் அண்ணாமலை.
“நான் அப்பாவைப் பார்க்கணும். அவர் சொல்லட்டும் என்னை போகச் சொல்லி” என்று அவள் அழுது கொண்டே சொல்ல,
“அண்ணாமலை சுபத்ராவை உள்ள வர சொல்லு” என்று ரத்தினம் சொல்ல,
“அப்பா” என்றவள் அவரின் காலடியில் விழுந்து விட்டாள்.
“நல்லா யோசிச்சுக்க சுபா, இனி ஒரு தடவை அந்த பய வந்து கூப்பிட்டான்னு நீ போன, அப்பறம் என்னோட பொணத்தை தான் பார்க்கணும். ஏற்கனவே உன்னால நாங்க பட்ட அவமானம் எல்லாம் போதும்” என்றார் ரத்தினம்.
“உங்க பேச்சை கேட்காம போனதுக்கு நான் ரொம்ப பட்டுட்டேன்ப்பா. இனி அந்த தப்பை செய்ய மாட்டேன்” என்றாள் சுபா உறுதியாக.
சுபா தாய் வீடு வந்து இரண்டு நாட்களில் அவளைத் தேடி வந்திருந்தான் கிருஷ்ணன்.
“சுபா நான் சொல்றதைக் கேளு. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. நான் தப்பானவன் எல்லாம் இல்லம்மா” என்று மன்றாடிப் பார்த்தான். சுபாவோ எதற்கும் அசையவில்லை.
“குழந்தையையாவது கண்ணுல காட்டு. நான் பார்த்துட்டு போய்டுறேன்” என்று கெஞ்ச, அவளோ மறுத்துவிட்டாள். சில நாட்களில் சரியாகி விடுவாள் என்று எண்ணியவன் எதுவும் பேசாமல் சென்று விட்டான்.
சுபத்ரா வீட்டிற்கு வந்து இரண்டு நாட்களில் அண்ணாமலை வண்டியில் இருந்து கீழே விழுந்திருக்க, அதற்கும் சிவ தீர்த்தாவையே காரணமாக்கினார் விசாலாட்சி.
அடுத்து அந்த வீட்டில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதற்கு அந்த சிறு குழந்தையே காரணமாகிப் போக, இதையெல்லாம் கேட்ட சுபத்ராவிற்கு ஒரு கட்டத்தில் அடக்க முடியவில்லை.
“போதும்மா! எப்பப் பார்த்தாலும் என் குழந்தையவே குறை சொல்லிட்டு இருக்கீங்க? அவளும் தாரணி மாதிரி உங்களுக்குப் பேத்தி தான்” என்று ஒரு முறை எதிர்த்து விட,
“ஏன்டி பேசமாட்ட? என் பேத்தி தாரணியும், இந்த வெறும்பய மகளும் ஒன்னா? என் வீட்டு வாரிசுன்னு சொல்றதுக்கு கூட ஒரு தராதரம் வேணும். நீ தராதரம் பார்க்காம போனாதால வந்த வினை தான் இது” என்றார் விசாலாட்சி.
“ஒரு பச்சைக் குழந்தையை வினைன்னு சொல்றிங்க? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?” என்றாள் சுபா.
“நான் இப்படித்தான் சுபத்ரா. நீ பண்ணிட்டு போனதே இன்னும் ஆறாம கிடக்கு. இப்போ உன் மகளால இந்த வீட்ல இன்னும் என்னென்ன நடக்கக் காத்திருக்கோ?” என்றார்.
சுபத்ரா தாய் வீடு வந்து ஒரு மாதம் சென்றிருக்க,
“அப்பா இன்னும் எத்தனை நாளைக்கு சுபாவை வீட்டோட வச்சிருக்க முடியும்? நமக்கு பிடிக்கலைன்னாலும் இப்போ ஒரு குழந்தைக்கு தாயாகிட்டா. பேசாம பிரச்சனையை பேசி முடிச்சு விட்றலாம்” என்றான் அண்ணாமலை. எல்லாம் ரேணுகாவின் போதனை தான்.
“பிரச்சனையை பேசி முடிக்கிறதா? பிரச்சனையை ஆரம்பிச்சு வச்சதே நான் தான? இனி ஒரு நாளும் அந்த கிருஷ்ணன் பய கூட என் மகளை அனுப்ப மாட்டேன். என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்” என்றார் ரத்தினம்.
“பண்றதுன்னா முன்னாடியே பண்ணியிருக்கணும். இப்போ குழந்தை இருக்குப்பா. அதுவும் பொன் குழந்தை வேற?” என்றான் அண்ணாமலை.
“அவன் பிள்ளை எதுக்கு நமக்கு? அவன் பிள்ளைய அவன்கிட்ட ஒப்படைச்சுட்டு சுபாவுக்கு மகா தேவனோட தான் கல்யாணம் நடக்கணும். அதை உள்ளூருக்குள்ள இருந்து பார்த்து, தினம் தினம் அவன் வேதனையிலயே சாகனும். ஒரேடியா கொன்னுட்டா எப்படி?” என்றார் ரத்தினம்.
“எனக்கு இது சரியா படலைப்பா..! அப்படியே பண்றதா இருந்தாலும் அது நம்ம சுபாவோட குழந்தைப்பா. நம்ம வீட்ல வளர்ந்துட்டு போகுது” என்றான் அண்ணாமலை.
“இங்க பார் அண்ணாமலை, ஒன்னு குழந்தையை அவன் கிட்ட ஒப்படைச்சுடு. இல்லையா கொன்னுடு. கண்டவன் வாரிசு எல்லாம் இந்த வீட்ல வளரக் கூடாது” என்றார் ஒரே வார்த்தையாய்.
பஞ்சாயத்திலும் சுபத்ரா கணவனுடன் வாழ மாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட, கலங்கி நின்றது என்னவோ கிருஷ்ணன் தான். அவளை மிரட்டி அப்படி பேச செய்ததாகவே எண்ணினான்.
“எனக்கு என் பொண்டாட்டி பிள்ளை வேணும்” என்று அப்போதும் அவன் உறுதியாக நிற்க,
“வெறும்பய கூடல்லாம் என் பொண்ணை அனுப்ப முடியாது” என்றார் விசாலாட்சி.
“உங்க பொண்ணை அனுப்ப மாட்டேன்னு சொல்லத்தான் உங்களுக்கு உரிமை இருக்கு. என் பொண்ணை என் கூட அனுப்ப மாட்டேன்னு சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை” என்றான் கிருஷ்ணன்.
இதைத் தானே ரத்தினமும் எதிர்பார்த்தார்.
“தாராளமா தூக்கிட்டுப் போ, யார் வேண்டாம்னு சொன்னா? எனக்கு என் பொண்ணு எங்க கூட வந்தா போதும்” என்றார் பட்டென்று.
“அப்பா இவ என் குழந்தைப்பா. நான் எப்படி குழந்தையை விட்டுட்டு” என்றவள் அழ ஆரம்பிக்க,
“அப்பா சொல்றதை கேளு சுபா. அவன் மகளை அவன்கிட்டவே குடுத்துட்டு வா. இந்த பிள்ளை வீட்டுக்கு வந்ததுல இருந்து ஒரு நல்லதாவது நடந்திருக்கா?” என்றார் விசாலாட்சி.
“நான் தர மாட்டேன்” என்றார் சுபா.
“எனக்கு என் குழந்தை வேணும். குழந்தைன்னு பார்க்காம இப்படி பேசுறவங்க, நாளைக்கு என் பிள்ளையை எண்ணமும் செய்வாங்க. குழந்தையை வாங்கிக் குடுங்க” என்றான் கிருஷ்ணன் உறுதியாய். அப்படியாவது மனைவி தன்னுடன் வந்து விடமாட்டாளா என்ற எண்ணம் அவனுக்கு. ஆனால் அவன் எதிர்பார்த்தது நடக்கவே இல்லை.
இருவருக்கும் வெட்டிவிடப்பட்டு குழந்தை கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.
“அத்தை பாப்பாவை ஏன் குடுக்குறிங்க? தூக்கிட்டு வாங்க. நம்ம கூட கொண்டு போகலாம்” என்று ஆதி சொல்ல, ஆதியை கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள் சுபா.
“வேண்டாம் ஆதி, பாப்பா அங்க இருந்தா தான் நிம்மதியா இருக்கும். இங்க வேண்டாம், இவங்ககிட்ட வேண்டாம்” என்றாள் சுபத்ரா.
“இப்படி கலங்கி நிக்கிறதுக்கு நீ உன் புருஷன் கூப்பிட்டப்பவே போயிருக்கலாம் சுபா” என்றாள் ரேணுகா.
“வேண்டாம் அண்ணி..!” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ரத்தினமோ மர்மமாய் சிரித்துக் கொண்டார்.
தந்தையின் முகத்தைப் பார்த்த சுபத்ரா, வெறுமையாய் உணர்ந்தாள்.
அவர்கள் சென்ற பிறகு, ஆறுமாத கைக்குழந்தையுடன் நிராதரவாய் நின்றார் கிருஷ்ணன்.
நினைவுகளில் இருந்து மீண்டவருக்கு இப்போது வரை சில கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.