சிவாவின் வீட்டில் கிருஷ்ணனின் நிலைமையோ அதைவிட மோசம். எப்போதும் அவரை சுற்றியே இருக்கும் மகள் இல்லாத வீடு அவருக்கு வெறுமையாய் காட்சியளித்தது. வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் அவர் பின்னேயே சுற்றிக் கொண்டிருப்பாள். தோட்டத்திலும் அப்படித்தான். அவளின்றி அவருக்கு அணுவும் அசையாது. எங்கு பார்த்தாலும் மகள் முகமே அவர் கண் முன் வர, இத்தனை நாள் தனக்குத் துணையாய், உறவாய் இருந்த ஒற்றை மகளையும் தாரை வார்த்து கொடுத்துவிட்டு வந்திருந்தவருக்கு வெறுமையே துணையாய் நின்றது. அவள் பேசிச் சென்ற வார்த்தைகளில் மனம் முழுவதும் வேதனை அப்பிக் கிடக்க, சோர்வாய் அமர்ந்திருந்தவரின் முகம் கண்டு பேச்சிக்கோ வருத்தம்.
“எதுக்குய்யா இப்ப இப்படி விசனப்பட்டு உட்கார்ந்திருக்க? என்னைக்கா இருந்தாலும் பொண்ணை இன்னொரு வீட்டுக்கு அனுப்பித்தான ஆகணும்?” என்றார் பேச்சி.
“எனக்கும் கூட அப்படித்தான் தோணுச்சுயா. அந்த வீட்ல இருக்குறவக எதுக்கும் அஞ்ச மாட்டாக. அதுலயும் அந்த விசாலாட்சியை பத்தி நான் சொல்லித்தான் தெரியனுமாயா உனக்கு? புள்ள என்ன பாடு பட போகுதோ?” என்றார் பேச்சி.
“என் புள்ள என்னை வெறுத்துடாதுல அத்தை” என்றார் கிருஷ்ணன். கலங்கிய குரலுடன்.
“ஏன்யா இப்படி பேசுற? சிவா புள்ளைக்கு நீன்னா உசுரு. உன்னைய வெறுத்துட்டு எங்க போகப் போறா? அவ உன் பொண்ணுயா? அவளைப் பத்தி நான் சொல்லித்தான் தெரியனுமா?” என்ற பேச்சிக்கும் அவள் இல்லாத வீடு வெறுமையாகத் தான் இருந்தது. கிருஷ்ணனின் சொந்த அத்தை தான் பேச்சி. சிறுவயதில் இருந்தே சிவா பேச்சியின் மீது பாசமாகத் தான் இருப்பாள்.
இருபது வருடங்களுக்கு முன்பு,
அந்த ஊரின் பெண்களுக்கு கனவு நாயகன் தான் கிருஷ்ணன். வசதி இருந்தாலும் படிக்காமல் விவசாயத்தையை முழுநேரத் தொழிலாக செய்து கொண்டிருந்த ஊரில்,கஷ்ட்டத்திலும் மதுரை வரைக்கும் கல்லூரியில் சென்று படித்திருந்தது கிருஷ்ணன் தான்.
அடாவடித்தனம் இல்லாத அவனின் அமைதியான குணமே அனைவரையும் அவன்பால் ஈர்த்துவிடும்.
ரத்தினம்-விசாலாட்சி குடும்பத்தின் பேச்சே அந்த ஊருக்கு வேதவாக்கு. ரத்தினம் அடிப்படையில் நல்ல மனிதர் தான். அது சுபத்ரா-கிருஷ்ணன் காதல் தெரியாத வரை.
பயந்த சுபாவம் கொண்ட சுபத்ராவுக்கு, அமைதியான குணம் கொண்ட கிருஷ்ணனிடம் காதல். ஆரம்பத்தில் சுபாவின் மீது எந்த அபிப்ராயமும் இல்லாத கிருஷ்ணனுக்கு நாளடைவில் காதல் மலர, காதல் என்றாலே வெட்டுக் குத்து என்று இறங்கும் ஊரில் அவர்கள் காதல் தோட்டம் துரவு என்று வளர்ந்தது.
இந்த நேரத்தில் ரத்தினத்தின் ஒன்று விட்ட தங்கை மகன்களான செல்வம், மகாதேவன் இருவருக்கும் தங்கள் மகள்கள் இருவரையும் மணம் முடித்துக் கொடுப்பது என்று பேசி முடித்திருந்தனர்.
ஒரே வீட்டில் அக்கா தங்கையை கொடுப்பதா என்று முதலில் யோசித்த ரத்தினமும், விசாலாட்சியும் பிறகு சரி என்று கூறி விட அதிர்ச்சி என்னமோ சுபத்ராவிற்கு தான்.
விஷயத்தை நேராக கிருஷ்ணனிடம் எடுத்துக் கொண்டு சென்றாள் சுபத்ரா.
“நான் உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்கிறேன் சுபா” என்றான் கிருஷ்ணன்.
“நீங்க வந்து கேட்ட உடனே சரின்னு சொல்லி கல்யாணம் பண்ணி குடுத்துடுவாங்களா? எங்க வீட்டைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே?” என்ற சுபத்ராவின் முகம் முழுவதும் கலக்கம் சூழ்ந்திருந்தது.
“வேற என்ன பண்ண முடியும்?” என்றான் கிருஷ்ணன் புரியாதவனாய்.
“நாம வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம். கொஞ்ச நாள் கழிச்சு ஒரு குழந்தைன்னு வந்துட்டா ஏத்துப்பாங்க” என்றாள் சுபா.
”வேண்டாம் சுபா, அப்படி பண்ணா ரெண்டு குடும்பத்துக்கும் தான் அவமானம். நம்ம ஊரைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே?என்னால அந்த தப்பை செய்ய முடியாது” என்றான் கிருஷ்ணன்.
“உங்களுக்கு என்மேல உண்மையான அன்பு இல்லை. அதான் யாரையும் கல்யாணம் பண்ணிட்டு போகட்டும்னு நினைக்கிறிங்க?” என்று சுபா அழுக,
“புரியாம பேசாத சுபா. வசதியிலையும் அந்தஸ்துலையும் நீங்க எங்கயோ இருக்கீங்க. உங்க வீட்டு ஆட்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். ஏற்கனவே உங்கண்ணன் அண்ணாமலை கோபக்காரர் வேற. உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. இந்த நேரத்துல நான் உன்னை கூட்டிட்டு போய் திருட்டு கல்யாணம் பண்ணினா எல்லாரும் என்ன பேசுவாங்க? உன் சொத்துக்காக உன்னை ஏமாத்தி நான் கூட்டிட்டு போய் கட்டிகிட்டதா பேச மாட்டாங்க? இதுக்குத்தான் ஆரம்பத்துலையே நான் வேண்டாம்னு சொன்னேன்” என்றான் கிருஷ்ணன்.
“எப்பவும் நீங்க வேண்டாம்னு தான் நினைக்குறிங்க? நான் மட்டும் தான் வேணும்னு நினைக்கிறேன்” என்றாள் சுபா.
“நான் ஓடிப் போய் கல்யாணம் பண்ண வேண்டாம்னு தான் நினைக்கிறேன். முறைப்படி உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்குறேன்னு சொல்றேன்” என்றான் கிருஷ்ணன்.
“கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. இப்போ நான் சொன்ன மாதிரி நீங்க என்னை கட்டிக்கலைன்னா சாகுறதைத் தவிர்த்து எனக்கு வேற வழியில்லை” என்ற சுபா, வேகமாய் கிணத்தை நோக்கி செல்ல, கிருஷ்ணனுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனுக்கோ தந்தை கிடையாது. தாயும், தம்பியும் மட்டும் தான்.
“சரி கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று சொல்லவும் தான் சுபத்ராவிற்கு நிம்மதி பிறந்தது.
கிருஷ்ணனும் சுபத்ராவும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள, விஷயத்தை கேள்விப்பட்ட அவளின் வீடே ரணகளம் ஆனது. அண்ணாமலையோ கிருஷ்ணனை கொன்று விடும் ஆத்திரத்துடன் செல்ல, ரத்தினம் தான் தடுத்திருந்தார்.
“நம்ம பொண்ணு செத்துட்டான்னு நினைச்சுக்குவோம்” என்றவர் அமைதியாகி விட, வீட்டில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
“நேரம் வர்ற வரைக்கும் பொறுமையா இரு அண்ணாமலை” என்றார் ரத்தினம்.
“அதுக்காக அவனைக் கொலை பண்ணிட்டு நீ ஜெயிலுக்கு போகப் போறியா? எதையும் நேரம் பார்த்து தான் செய்யணும்” என்று அப்போதைக்கு மகனை அடக்கி வைத்தார்.
நடந்த பிரச்சனையில் மணிமேகலையின் திருமணமும் கேள்விக் குறியாக,
“மேகலைக்கும் செல்வத்துக்கும் கல்யாணத்தை முடிங்க. எனக்கு அப்பறம் பார்க்கலாம்” என்று மகாதேவன் சொல்லவும் தான் அவர்கள் திருமணம் முடிந்திருந்தது.
அனைத்தும் நன்றாகத் தான் சென்றது சிவ தீர்த்தா பிறக்கும் வரை. மதுரையில் தங்கியிருந்த கிருஷ்ணனும், சுபாவும் முடிவாக சொந்த ஊருக்கு திரும்பியிருந்தனர். சுபா நிறைமாதமாக இருக்க, வீட்டிற்கு வந்த மகளை வாசலை கூட மிதிக்க விடாமல் விரட்டியடித்தார் விசாலாட்சி.
“என் குடியை கெடுத்துட்டு போனவளுக்கு இனி என் வீட்ல இடமில்லை. என்னைக்கு அந்த பரதேசி பயலோட போனியோ அன்னைக்கே உன்னைத் தலைமுழுகிட்டோம்” என்று பேசி அனுப்பிவிட, வேறுவழியின்றி கிருஷ்ணனின் வீட்டுக்கு சென்றனர்.
பிறக்கும் போதே மாலை சுத்தி பிறந்திருந்தாள் சிவ தீர்த்தா.
“ஏங்க மாலை சுத்தி பிறந்தா தாய்மாமனுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க” என்ற சுபத்ராவிற்கு மனதிற்குள் கலக்கம் சூழ்ந்து கொண்டது.
“எந்த காலத்துல இருக்க சுபா. அதெல்லாம் ஒண்ணுமில்லை, பார்த்துக்கலாம்” என்று கிருஷ்ணன் சொன்னாலும் சுபாவிற்கு மனதிற்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.
பிறந்ததில் இருந்து ஆடம்பரத்தில் வாழ்ந்த சுபாவிற்கு, இப்போது குழந்தை பிறப்பும் சேர்ந்து கொள்ள, கிருஷ்ணன் எவ்வளவு அனுசரணையாக நடந்து கொண்டாலும், ஏன் என்றே தெரியாமல் அழுவாள், எதற்கு கோபப்படுகிறோம் என்று தெரியாமலயே கோபப்படுவாள். குழந்தை பிறந்த பிறகு வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கி இருந்தனர் சுபாவின் வீட்டினர்.
காதலனாய் இருந்த கிருஷ்ணனை காதலித்த சுபாவிற்கு கணவனாய் மாறிய கிருஷ்ணனை காதலிப்பதை சவாலாய் இருந்தது. இப்போது அவனுடைய பொறுப்புக்களையும் சேர்த்து காதலிக்க வேண்டும் அல்லவா? அது அவளால் முடியவில்லை.
இதில் ஊரில் இருந்த சொந்த பந்தங்கள் சும்மா இல்லாமல், ”இதெல்லாம் உனக்குத் தேவையா? இப்படி கஷ்ட்டப்படனும்னு உனக்குத் தலையெழுத்தா, உங்கக்காவை பார் எப்படி நிம்மதியா இருக்கான்னு?” என்று ஒவ்வொன்றாய் சொல்லி வைக்க, அதுவே அவளுக்கு மன அழுத்தத்தை கொடுத்திருந்தது.
ஒரே ஊரில் இருந்தாலும் தாய் வீட்டிற்கு செல்ல முடியாமல், அவர்களுடன் உறவாட முடியாமல் தவித்தாள் சுபா. அது அவளுக்கு மேலும் அழுத்தமாக மாற, எதற்கெடுத்தாலும் சண்டை என்று முதலில் ஆரம்பித்தது. சுபாவின் அத்தனை ஆர்ப்பாட்டத்தையும் கிருஷ்ணனின் அமைதியே சரி செய்து கொண்டிருந்தது. இப்படியே நாட்கள் செல்ல சிவ தீர்த்தா பிறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது.