“சிவா” என்று கவிதா அவளை அமைதிப்படுத்த, ஆதியின் கைப்பிடியில் இருந்து ஆவேசமாய் கையை உறுவிக் கொண்டவள்,
கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி விசிறியிருந்தாள். கை வேகமாய் தாலிக்கும் போக,
“சிவா” என்று வேகமாய் ரேணுகா அவள் கை பிடித்து தடுத்திருந்தார்.
“என் பையன் கல்யாணத்தை பார்க்குற குடுப்பினை தான் இல்லாம போச்சு. இப்ப இதையும் கழட்டி என்னை மொத்தமா கொன்னுடாதம்மா” என்றார்.
ஏற்கனவே அவளின் உடலும், கரமும் நடுங்கிக் கொண்டிருக்க, அவரின் பேச்சில் தாலியில் இருந்து கையை விலக்கியிருந்தாள் சிவ தீர்த்தா.
அவளின் செயல்களைக் கண்டு ஆதியோ மொத்தமாய் அதிர்ந்துவிட்டான். அவளிடமிருந்து இப்படி ஒரு வெறுப்பையும் கோபத்தையும் அவன் எதிர்பார்க்கவில்லை.
அவள் திரும்பி விறுவிறுவென்று வெளியே நடக்க, அதுவரை யோசனையில் இருந்த ஆதி, அப்போது தான் அவள் வெளியே செல்வதையே கவனித்தான். இரண்டே எட்டில் அவளருகில் சென்று அவளைத் தடுத்திருந்தான்.
அவளோ அவனை திரும்பி கூட பார்க்காமல் நிற்க, அவனோ அவளை விடாமல் மீண்டும் இழுத்துக் கொண்டு வந்திருந்தான்.
இப்போது கையை மட்டும் பிடிக்காமல், தோளோடு அணைத்த மாதிரி விடாமல் பிடித்திருந்தான். அவனின் அருகாமையை வெறுத்தவள், உடல் கூச நின்றிருந்தாள்.
“வக்கத்து வந்தவ எல்லாம் இல்லை. என்னோட வாழ வந்தவ. இன்னொரு முறை இப்படி மரியாதை இல்லாத வார்த்தையை இந்த வீட்ல நான் கேட்கக் கூடாது. மீறி வார்த்தை வந்தா நீங்க ஆதி கேசவனோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும் பாட்டி” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
“விசாகனுக்கு சொன்னது தான் உனக்கும் ஆதி. இவ தான் முக்கியம்னா சொத்துல சல்லிப் பைசா கிடையாது” என்றார் விசாலாட்சி.
“தேவையில்லை” என்றவன் அவன் உயரத்திற்கு நிமிர்ந்து கூற, அதிர்ந்து போனார் விசாலாட்சி.
“அம்மா என்ன பேசுறிங்க?” என்றார் சுபத்ரா வேகமாய்.
“வாயை மூடு சுபா. உனக்கு எங்க இருந்து வந்தது இவ்வளவு தைரியம்?” என்றார் விசாலாட்சி.
“அப்போ இனி உங்க சொத்தை மேற்பார்வை பார்க்குற வேலையும் எனக்கு இல்லை தானே? நீங்களே பார்த்துக்கோங்க” என்றான் ஆதி பட்டென்று. இப்போது அதிர்வது விசாலாட்சியின் முறையாகிப் போனது. ஆதி இல்லை என்றால் அங்கு அணுவும் அசையாது என்று அவருக்குத் தெரியாதா என்ன? இப்போது பொறுப்பில் இருப்பவனும், பொறுப்பாய் இருப்பவனும் அவன் ஒருவன் தானே.
“அவங்க தான் கோபத்துல பேசுறாங்கன்னா நீயுமா ஆதி? அப்படியெல்லாம் விட முடியாது. சொத்துல மூல தனம் வேணும்னா இவங்களா இருக்கலாம். ஆனா அதை சம்பாதிச்சு பெருக்கினது உங்கப்பாவும் நீயும் தான். உனக்கு இல்லைன்னு இங்க யாரும் சொல்ல முடியாது” என்றார் ரேணுகா.
நடந்த பேச்சுக்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் போல் நின்றிருந்தாள் சிவ தீர்த்தா. சொல்லப் போனால் அந்த வீட்டிற்கு வந்தது முதல் இப்போது வரை அவள் வாயைத் திறக்கவே இல்லை. இதை கவிதாவும் பாண்டியும் உணர்ந்திருந்தனர்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அமிர்தா வேறு ஒரு ஆரத்தி தட்டை எடுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுக்க, சூழ்நிலை கொஞ்சம் மாறியது.
“உள்ள வாங்க” என்றார் ரேணுகா.
வேண்டா வெறுப்பாய் உள்ளே சென்றிருந்தாள் சிவ தீர்த்தா. உள்ளே வந்தவளின் பார்வை விசாகனை குத்திக் கிழிக்க, தலையைக் குனிந்து கொண்டான் விசாகன்.
“வந்து விளக்கேத்துமா சிவா” என்றார் ரேணுகா.
அவளோ அவரைப் பார்த்து “மாட்டேன்” என்பதைப் போல் தலையை ஆட்ட, ரேணுகாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஆதியைப் பார்த்து வைக்க, அவனுக்கோ ஆயாசமாய் வந்தது.
அவளை இழுத்துக் கொண்டு பூஜை அறை சென்றவன்,
“விளக்கேத்து” என்றான். அவளோ பிடிவாதமாய் மாட்டேன் என்று நிற்க, வேறு வழியின்றி அவள் கை பிடித்து அவனே விளக்கை ஏற்றியிருந்தான்.
“போதுமாம்மா” என்றவனுக்கு அப்போதே கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
“ரொம்ப சந்தோசம் ஆதி” என்றவர் இருவருக்கும் திருநீரு வைத்து விட, அவளையும் இழுத்து அவரின் காலில் விழுந்திருந்தான்.
அவளுக்கு ரேணுகாவின் மீது எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை. அவன் கட்டாயத்தில் விழுந்தாலும், மனம் உவந்தே அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினாள்.
“அத்தை நீங்களும் வாங்க” என்று சுபத்ராவை அவன் அழைக்க, அவரோ ஆசையுடன் அருகே வர, சிவாவோ வெடுக்கென்று பூஜை அறையில் இருந்து வெளியே சென்று விட்டாள்.
“இருக்கட்டும் ஆதி” என்று கலங்கியவர், அவனுக்கு மட்டும் திருநீரை வைத்துவிட்டார். மற்றவர்கள் கோபத்தில் வராமல் இருக்க, அவனும் அதை பெரிதாய் எதிர்பார்க்கவில்லை.
“உட்காரும்மா” என்ற ரேணுகா மருமகளை அங்கிருந்த சோபாவில் அமர வைக்க, அவளோ யார் வீட்டுக்கோ விருந்தாளாய் சென்றவள் போல், பட்டும் படாமல் அமர்ந்தவள் யாரையும் பார்க்க விருப்பமில்லாதவள் போல் தலையை குனிந்து கொண்டாள்.
அதற்குள் விஷயத்தை கேள்விப்பட்டு ஊரில் இருந்த ஒவ்வொருத்தரும் மாறி மாறி வந்துவிட்டு செல்ல, அந்த வீடே கலை கட்டியிருந்தது.
“சிவா ஏதாவது பேசுடி” என்றாள் கவிதா. அவளைப் பார்த்தவளின் முகத்தில் இருந்த வேதனை கவிதாவை அதிர வைத்தது.
“என்ன பேசணும்? இனி பேச என்ன இருக்கு?” என்றவளுக்கு மீண்டும் கண் கலங்க, தன்னை திடப்படுத்திக் கொண்டாள்.
“நடந்தது நடந்திடுச்சு. என்ன இருந்தாலும் இப்போ நீ இந்த வீட்டு மருமக. ஆதி அண்ணன் பொண்டாட்டி. அவரு உன்னை நல்லா பார்த்துப்பாரு சிவா” என்றாள் கவி.
சிவாவின் முகத்தில் விரக்தி சிரிப்பொன்று தவழ,
“நிஜமா தான் சொல்றேன் சிவா. இந்த வீட்ல மத்தவங்க எப்படின்னு தெரியாது, ஆனா ஆதி அண்ணா சொக்கத் தங்கம்டி. ஒரு பொண்ணை கூட தேவையில்லாம அவர் நிமர்ந்து பார்த்தது இல்லை. உனக்கே தெரியுமே? நான் சொல்ல என்ன இருக்கு?” என்றாள் கவி.
“இனி இந்த பேச்சு வேண்டாம் கவி” என்று முடித்தவள் அதற்குமேல் அவளிடமும் பேசவில்லை. வந்தார்கள், பேசினார்கள், சென்றார்கள். ஆனால் அவளுக்கோ கருத்திலும் கண்ணிலும் எதுவும் பதியவில்லை. சிலையாக ரேணுகா அமர வைத்த அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“செய்றதை எல்லாம் செஞ்சுட்டு தாலி கட்டமாட்டேன்னு சொல்லிட்டு வர்ற? அந்த இடத்துல என்னோட பேச்சுக்கு என்ன மரியாதை? என்னவோ பாட்டி சொல்லை இத்தனை நாளும் தட்டாம செஞ்சவன் மாதிரி” என்றான் ஆதி கோபமாய்.
“அண்ணா நான் உங்க பேச்சை எப்பவுமே மீறினது இல்லை. சத்தியமா இது எதையும் நான் பண்ணலை” என்றான் மீண்டும்.
“நீ பண்ணலை சரி. ஆனா பண்ணினது உன்னோட பிரண்ட்ஸ் தான? சிவாவை கட்டிக்கணும்னு நினைச்ச தானே? கடைசி நிமிஷத்துல அந்த வாய்ப்பை நானே உருவாக்கிக் குடுத்தப்போ ஏன் மாட்டேன்னு சொன்ன?” என்றான் சட்டையைப் பிடித்து.
“அண்ணா பிளீஸ்” என்று அவன் கையை தன் சட்டையில் இருந்து பிரித்தெடுத்தவன்,
“நான் நீங்க சொன்னதை செய்ய தயாரா தான் இருந்தேன். ஆனா சுபத்ரா அத்தை தான் கையைப் பிடிச்சு என்னை தடுத்துட்டாங்க. அவங்க ஏன் அப்படி செஞ்சாங்கன்னு எனக்குத் தெரியலை. அவங்களை மீறவும் முடியலை, உங்க பேச்சை தட்டவும் முடியலை. அதான் பாட்டி அப்படி சொன்ன உடனே, அதையே சாக்கா வச்சு வந்துட்டேன்” என்றான் விசாகன்.
அவன் சொன்னதைக் கேட்டு ஆதிக்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை. ஓரளவுக்கு அவன் இதைத்தான் எதிர்பார்த்திருந்தான்.
“அப்பறம் அண்ணா, என் மேல துளி அபிப்ராயம் கூட சிவாவுக்கு கிடையாது. அதுவும் ஒரு காரணம் தான். இப்போ என் அண்ணன் பொண்டாட்டி வேற. அம்மாவுக்கு அடுத்த ஸ்தானம். பேச்சுக் கூட இனி பழசை பேசாதிங்கண்ணா. இன்னைக்கு சிவா பார்த்த பார்வையிலேயே நான் பாதி செத்துட்டேன். ஏற்கனவே குற்ற உணர்ச்சியில தான் வீட்டுக்கு வந்தேன். நீங்க சிவாவை கல்யாணம் பண்ணுவிங்கன்னு நான் எதிர்பார்க்கலை தான். ஆனா உங்க கல்யாணத்தால தான் என் குற்ற உணர்ச்சியே கொஞ்சம் குறைஞ்சிருக்கு” என்றான் விசாகன் கண் கலங்கியபடி.
“விசாகா” என்ற ஆதி அவனை அமைதிப்படுத்த,
“சாரிண்ணா நடந்த எல்லாத்துக்கும்” என்றவன் வெளியே சென்று நேராக சிவாவின் முன் நின்றான். அவளோ அவனை பார்க்காமல் சுவரை வெறித்துக் கொண்டிருக்க,
“நடந்த எல்லாத்துக்கும் நான் தான் காரணம். எந்த வகையில் மன்னிப்புக் கேட்டாலும் நடந்தது சாதாரண விஷயமில்லைன்னு மட்டும் எனக்குத் தெரியும். ஆனா இது எதையும் நான் பண்ணவே இல்லை. சத்தியமா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனா மூலக் காரணம் நான் தான். அதனால என்னை மன்னிச்சுடு சிவா. என் மனசுல வேற எந்த தப்பான எண்ணமும், நோக்கமும் இல்லை. நான் தப்பானவனும் இல்லை. முடிஞ்சா மன்னிச்சுடு. முடியலைன்னாலும் பரவாயில்லை” என்றவன் வெளியே சென்று விட்டான்.
விசாகன் பேசிச் சென்றது அனைத்தும் அவள் காதில் விழுந்தாலும், எதையும் அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
வெளியே வந்த ஆதி, ஒரே இடத்தில் சிலையாய் இருந்தவளை அப்போது தான் நிதானமாய் கவனித்தான்.
மணப்பெண்ணிற்கு உரிய அடையாளம் அலங்காரத்தில் தான் இருந்ததே தவிர அவள் அகத்தில் இல்லை. அவள் அகத்தின் அழகு முகத்தில் தெரிந்து கொண்டிருந்தது.
அவள் முகம் கண்ணாடியாய் அவளின் உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டிருக்க, சூழ்நிலையை சமாளித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு.
அவள் தனியே அமர்ந்திருந்த தோற்றம் அவனுக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்த, நிதானமாய் சென்றவன் அவள் அருகில் அமர்ந்து கொண்டான். அவன் அருகில் வந்து அமர்ந்ததும் சட்டென்று சற்று தள்ளி அமர்ந்தாள் சிவா. அதை அவன் கவனித்தாலும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
போனை எடுத்து பாண்டிக்கு அழைத்தவன்,
“எங்கடா போனிங்க அதுக்குள்ள?” என்றான் சற்று குரலை உயர்த்தி.
“சிவா பாப்பா வீட்ல தான் இருக்கோம் ஆதி. பாப்பாக்கு தேவையான ட்ரஸ் எல்லாம் எடுக்கனும்னு கவி சொல்லுச்சு. அதான் இங்க வந்திருக்கோம்” என்றான் பாண்டி.
“அளவுக்கு போதும் பாண்டி. தேவைன்னா வாங்கிக்கலாம்” என்றான் ஆதி.
“சிவா பாப்பா ஏற்கனவே எல்லாத்தையும் எடுத்து பேக் பண்ணி தான் வச்சிருக்கு ஆதி” என்றான் பாண்டி எதிர்முனையில்.
“கல்யாணம் முடிஞ்சு அந்த மாப்பிள்ளை வீட்டுக்கு போறதுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சிருப்பா போல” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல்,
“சரி சீக்கிரம் வந்து சேருங்க” என்றபடி வைத்துவிட்டான்.
“ஏதாவது குடிக்கிறியா?” என்று கேட்டபடி அவளைப் பார்த்தவன், அவள் பார்வை போன திசையில் பார்க்க, அங்கே மகாதேவன்-சுபத்ரா திருமணக் கோலத்தில் இருந்த புகைப்படத்தை தான் வெறித்திருந்தாள் சிவ தீர்த்தா.