“பிரச்சனையை முடிச்சுட்டு ஆதி வர்றான்னு நினைக்கிறேன். நடந்ததை அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ” என்ற விசாலாட்சி திரும்பி வாசல் பக்கம் பார்க்க, சிவ தீர்த்தாவுடன் அவன் ஜோடியாக வருவான் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
ஆதிகேசவனையும் சிவ தீர்த்தாவையும் மணக்கோலத்தில் பார்த்த ரேணுகாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. நிஜம் தானா என்பதைப் போல் மீண்டும் மீண்டும் பார்த்து வைத்தார்.
விசாகனோ ஒரு படி மேலே போய், கண்கள் தெறித்து விடும் அளவிற்கு பார்த்திருந்தான்.
சிவா சம்பந்தப்பட்ட யாரும் அவர்களுடன் அவர்கள் வீட்டிற்குள் வரவில்லை. ஆதியின் அருகில் பாண்டியும், சிவாவின் அருகில் கவிதாவும் மட்டுமே இருந்தனர்.
சிவாவிற்கு அந்த வீட்டு மண்ணை மிதிப்பதற்கு கூட விருப்பமில்லை. உணர்வுகளை அடக்கியபடி இலக்கற்ற பார்வையுடன் நின்றிருந்தாள்.
“அம்மா என்னம்மா நடக்குது இங்க? என்ன ஆதி இதெல்லாம்? அப்போ என் பொண்ணோட வாழ்க்கை?” என்று மணிமேகலை அந்த இடத்திலேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க,
“என்ன ஆதி இதெல்லாம்?” என்ற விசாலாட்சியின் குரலில் நிமிர்ந்தவன்,
“பார்த்தா தெரியலை? எனக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு. இவ தான் என் பொண்டாட்டி” என்று இறுகிய குரலில் சொன்னவன்,
“அம்மா” என்றான் ரேணுகாவை நோக்கி. அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவர், ஆரத்தி கரைக்க உள்ளே சென்றார்.
சத்தம் கேட்டு சுபத்ராவின் கணவன் மகாதேவனும் வெளியே வந்திருக்க, தாரணி, அமிர்தா, ஜீவன் என்று அனைவரும் ஒன்று கூடி விட்டனர்.
“என்ன ஆதி பண்ணி வச்சிருக்க? நான் விசாகனையே இவளைக் கட்டக் கூடாதுன்னு சொன்னேன். ஆனா நீ.. எப்படி ஆதி? இந்த வீட்டோட ஆணி வேரே நீதான்யா. நீயா இப்படி பண்ணியிருக்க? அதுவும் இவளைப் போய்? உன் கல்யாணத்தை எப்படி பண்ணனும்னு கனவு கண்டு வச்சிருந்தோம். சுத்துப்பட்டு ஊர்ல யாரும் அப்படி பண்ணியிருக்கக் கூடாதுன்னு நினைச்சேன்” என்ற விசாலாட்சி இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளி வரவில்லை.
விசாகனை கையோடு அழைத்து வந்தவர், ஆதியை மறந்திருந்தார். ஆதி இப்படி செய்வான் என்று அவருக்கும் தெரியாதே. பேரனின் மீது அப்படி ஒரு நம்பிக்கை.
“இப்பவும் நீங்க நினைச்ச மாதிரி தான் நடந்திருக்கு பாட்டி. சுத்துப்பட்டுல எந்த ஊர்லயும் இப்படி ஒரு கல்யாணம் நடந்திருக்காது தான்” என்றான் ஆதி அதே இறுகிய குரலுடன்.
“அப்போ என் பொண்ணோட வாழ்க்கை ஆதி?” என்றார் மேகலை.
“அத்தை நான் தாரணியை எப்போ கட்டிக்கிறேன்னு சொன்னேன்? எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை. அவ சின்ன பொண்ணு” என்றான்.
“அப்போ இவ மட்டும் சின்ன பொண்ணு இல்லையா?” என்ற மேகலைக்கு ஏனோ சிவாவின் மீது அந்த கணம் வெறுப்பு வந்தது.
“நடந்தது என்னன்னு தெரியாம பேசாதிங்க. இவளும் சின்ன பொண்ணு தான். யாரு இல்லைன்னு சொன்னா? நடக்க வேண்டிய கட்டாயம், நடந்திடுச்சு” என்றவன் விசாகனை முறைத்தான்.
“எதையும் யோசிக்காம இப்படி செய்வேன்னு நான் நினைக்கலை ஆதி” என்றார் மகாதேவன்.
“வேற என்ன செய்வேன்னு எதிர்பார்த்திங்க மாமா?” என்றவனின் நேர் கேள்வியில் வாயை அடக்கிக் கொண்டார்.
“இவ இந்த வீட்டுக்குள்ள வரக் கூடாது” என்றார் விசாலாட்சி.
“அவ மட்டும் வரக் கூடாதா? இல்லை நானும் வரக் கூடாதா?” என்றான் ஆதி கேசவன் கோபமாக.
“இது உன் வீடுயா? உன்னை வரக் கூடாதுன்னு நான் எப்படி சொல்ல முடியும்? ஆனா அவ வரக் கூடாது” என்றார் மீண்டும்.
“அவ இப்போ ஆதி கேசவன் பொண்டாட்டி. அவளை உள்ள வரக்கூடாதுன்னு சொல்ல இங்க யாருக்கும் உரிமை இல்லை” என்றான் ஆதி.
“இவளுக்காக எங்களை எல்லாம் ஒதுக்குறியா ஆதி?” என்றார் மேகலை.
“நான் யாரையும் ஒதுக்கலை அத்தை. நீங்க நடந்துக்கிற விதத்துக்கு பதில் சொல்றேன் அவ்வளவு தான்” என்றான்.
அதுவரை வேண்டா வெறுப்பாய் நின்ற சிவ தீர்த்தாவிற்கு அந்த இடத்தில் நிற்பது நெருப்பின் மேல் நிற்பதைப் போல் இருந்தது. முயற்சியாய் கூட அவளால் அந்த இடத்தில் ஒன்ற முடியவில்லை. ஆதியின் தோள்கள் லேசாய் உரசியதற்கே தீச்சுட்டார் போல் விலகிக் கொண்டாள்.
ஆதிக்கும் அவளின் இறுக்கமும் ஒதுக்கமும் புரிந்திருந்தது. அவனுடன் கொஞ்சிக் குலாவ வேண்டும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதற்காக வெறுப்புடன் அவள் முகம் சுளிப்பதைத் தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீம்பிற்காகவே அவள் கையை இறுகப் பிடித்திருந்தான். அவள் கையை விலக்க முயற்சிக்க, அவன் பிடியோ இறுகிக் கொண்டே போனது.
அவள் இடத்தில் வேறு யாராய் இருந்திருந்தாலும், அவன் பிடித்த பிடிக்கு வலி தாங்க முடியாமல் அமைதியாய் இருந்திருப்பர். அவளோ முயற்சியை கைவிடாமல் கையை விலக்கப் பார்க்க, அவள் கை மேலும் சிவந்தது தான் மிச்சம்.
ரேணுகாவின் பின்னே சென்ற சுபத்ரா,
“அண்ணி உங்களுக்கு கோபம் இல்லையே?” என்றார் மெதுவாக.
“நான் ஆசைப்பட்டது தான நடந்திருக்கு சுபா. கோபம் எல்லாம் இல்லை, ஆனா வருத்தமா இருக்கு. இத்தனை வருஷம் பார்த்து வளர்த்த என் பையன் கல்யாணத்தை பார்க்க எனக்குக் குடுத்து வைக்கலையேன்னு” என்ற ரேணுகா கண் கலங்க,
“மன்னிச்சிடுங்க அண்ணி” என்றார் சுபத்ரா.
“நடந்த எல்லாமே நீ சொல்லி தான் நடந்திருக்குன்னு புரியுது சுபா. ஆனா, என்னோட ஆசையை விடு. சிவா முகத்தை பார்த்தியா? எனக்கு என்னவோ பயமா இருக்கு. எல்லாம் சரியாகுமான்னு தெரியலை. இன்னும் என்னென்ன பூகம்பம் வீட்ல வெடிக்கக் காத்திருக்கோ தெரியலை” என்ற ரேணுகா, பெருமூச்சுடன் ஆரத்தியை கரைத்துக் கொண்டு சென்றார்.
ரேணுகா ஆரத்தி எடுக்க முற்பட,
“வக்கத்து வந்தவளுக்கு ஆரத்தி ஒன்னு தான் கேடு” என்ற விசாலாட்சியின் குரலில், கோபம் கொண்டு வெகுண்டவள், சட்டென்று ஒரு கையால் ஆரத்தி தட்டை தட்டி விட, அதுவோ எங்கோ சென்று விழுந்திருந்தது.