ஆதியின் சரிபாதியாகி இருந்தாள் சிவ தீர்த்தா. அவள் கனவில் கூட நினைத்திராத செயல்கள் எல்லாம் நடந்தேறியிருந்தது. சற்று முன் தந்தையிடம் மட்டுமல்ல ஆதியிடம் கூட கெஞ்சியிருந்தாள்.
“அப்பா தான் என் கல்யாணம் நின்ன ஆதங்கத்துல அப்படி சொல்றார். நீங்களாவது சொல்லுங்களேன், பிளீஸ். என்னால கண்டிப்பா இதை ஏத்துக்க முடியாது.வேண்டாம்னு சொல்லுங்க பிளீஸ்” என்று அவள் அவனிடம் மன்றாட, ஆதிக்கே இதெல்லாம் தேவையா என்று தோன்றி இருந்தது.
“அட என்னம்மா நீ தேடி வர்ற நல்ல வாழ்க்கையை வேண்டாம்னு சொல்ற?” என்று அவள் மேல் அக்கறை உள்ளவர்கள் பேச, மீண்டும் கிருஷ்ணனைத் தான் பார்த்தாள். அவரோ எதுவும் பேசாமல் உறுதியாக நிற்க, அதற்கு மேல் அழுது பிரயோஜனம் இல்லை என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.
“இதெல்லாம் தேவையா?” என்று ஆதி குற்றம் சாற்றும் பார்வையுடன் சுபத்ராவைப் பார்த்தான்.
“ஆதி இந்த அத்தைக்காக ஏதாவது பண்ணனும்னு நினைச்சா தயவு செஞ்சு சிவாவை கல்யாணம் பண்ணிக்கோ. இதை நான் பிச்சையா கேட்குறேன்” என்றவர் அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் வெளியேறப் போக, அவரின் கையைப் பிடித்து தடுத்தான் ஆதி.
அத்தைக்காகப் பார்த்தவன், அவளுக்காக யோசித்தாலும் அந்த இடத்தில் அவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை. எதைப் பற்றியும் யோசிக்காமல் தாலியைக் கட்டியிருந்தான்.
சிவ தீர்த்தாவோ உடலும் உள்ளமும் இறுகிப் போய் நின்றிருந்தாள். அவன் அருகில் நிற்க கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.
“சிவாம்மா” என்று கிருஷ்ணன் அவள் அருகில் வர, இரண்டடி தள்ளி நின்று கொண்டாள். அவளின் செய்கையில் அதிர்ந்தவருக்கு நெஞ்செல்லாம் வலிப்பதைப் போன்ற உணர்வு.
“அம்மாடி” என்றவர் அவள் கைகளைப் பற்ற, கைகளை உருவிக் கொண்டவள்,
“வேண்டாம்ப்பா! நான் எப்பவும் உங்களுக்கு ஒரு நல்ல மகளா இருக்கணும்னு ஆசைப் படுறேன். அதனால தான் அமைதியா இதை ஏத்துகிட்டேன்” என்றவள், கலங்கும் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“ஆனா, இத்தனை நாளா நீங்களும் என்னை பாரமா தான் நினைச்சிருக்கிங்க போல. அதான் இவ்வளவு பெரிய தண்டனையை எனக்கு குடுத்துருக்கிங்க. இதுக்கு எதுக்கு இத்தனை வருஷம் என்னை கஷ்ட்டப்பட்டு வளர்த்திங்க. இப்படி வளர்த்து உயிரோட கொன்னதுக்கு பிறந்தப்பவே கொன்னிருக்கலாம்” என்றாள் சிவ தீர்த்தா.
“அப்பா அப்படி எல்லாம் நினைப்பேனாமா?” என்றார் கலங்கும் குரலில்.
“நானும் இத்தனை நாள் அப்படி தான் நினைச்சேன்ப்பா. ஆனா அதெல்லாம் இல்லைன்னு நீங்க காட்டிட்டிங்க. இன்னைக்கு நடந்ததுல என்னோட தப்பு எங்க இருக்கு? ஏன் இன்னைக்கு கல்யாணம் நடக்கலைன்னா காலம் முழுசுக்கும் நடக்காமையே போய்டுமா? இல்ல அது மட்டும் தான் வாழ்க்கையா? இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்லி பொண்ணுங்க வாழ்க்கையை கெடுப்பிங்க?
தப்பு செஞ்சது இவங்க வீட்டு பையன். பாதிக்கப்பட்டது நான். கேள்விக் குறியானது என்னோட வாழ்க்கை. தப்பு செஞ்சவன் நிம்மதியா வீட்டுக்கு போய்ட்டான். பாதிக்கப்பட்ட நான் தான் இனி காலம் முழுசுக்கும் பாதிக்கப் பட போறேன். அவங்களோட தப்புக்கு பரிகாரம் தேடப் போய் என்னோட வாழ்க்கையை பலி ஆக்கியிருக்கிங்க. அப்போ கூட என் வாழ்க்கையை பலி கொடுத்து இவங்க பரிகாரம் தேடிக்கிறாங்க” என்று விரக்தியாய் கூறியவள்,
“காலங்காலமா பொண்ணுங்கன்னா குனிஞ்ச தலை நிமிரா, நிமிஷத்துல மாப்பிள்ளை மாறினாலும் அதையெல்லாம் ஏத்துகிட்டு கட்டுங்க தாலியைன்னு கழுத்தை நீட்டனும். தம்பி என் வாழ்க்கையை கெடுத்தாலும் அண்ணன் வாழ்க்கை குடுத்துட்டாருன்னு ஊரெல்லாம் நல்ல பேர் வாங்கணும். இது தான சார் உங்களுக்கு வேணும்?” என்றாள் ஆதியைப் பார்த்து.
ஆதிக்கோ கோபம் தலைக்கு மேல் சென்று கொண்டிருந்தது. இருக்கும் இடம் அறிந்து அதைக் கட்டுப்படுத்தியவன்,
“இதோ பார், உன்னைக் கல்யாணம் பண்ணியே ஆகணும்னு நானும் கங்கனம் கட்டிக்கிட்டு அலையலை. இந்த வாழ்க்கை உனக்கு மட்டும் தண்டனை மாதிரி பேசற? எனக்கும் தான் தண்டனை. என் தம்பி செஞ்சது சரின்னு நான் எந்த இடத்துலையும் சொல்லலை. செஞ்ச தப்புக்கு பரிகாரம் தேடுறேன்னும் நான் சொன்னதா ஞாபகம் இல்லை. நான் தீர்வு தான் சொன்னேன். எந்த இடத்துலையும் கட்டாயப்படுத்தலை. நான் சொன்ன தீர்வே இப்படி தீராத பிரச்சனை ஆகும்னு எனக்கும் தெரியாது” என்றான் இறுகிய குரலில்.
‘நீ எனக்கு தீராத பிரச்சனை தான்’ என்று அவன் சொல்லாமல் சொல்வதாய் எடுத்துக் கொண்டவளுக்கு மனம் மேலும் இறுகிப் போனது.
“அம்மாடி சிவா..! இப்படி எல்லாம் பேசாதடா. அப்பாவுக்கு என்னமோ பண்ணுது. நீ என்னதான் வெளிய காட்டிக்கலைன்னாலும் உன்னோட ஏக்கம் இந்த அப்பாவுக்கு தெரியாம இருக்குமாடா. சீக்கிரமே அப்பாவை புரிஞ்சுப்படா” என்றார் கிருஷ்ணன்.
“உங்களுக்கு எப்பவுமே என்னைப் புரியாதுப்பா..! நீங்க அமைச்சு குடுத்த வாழ்க்கை எனக்கு வரம் இல்ல, சாபம். நல்லதுன்னு நினைச்சு எனக்கு நஞ்சை கொடுத்துட்டிங்கப்பா. நீங்க எனக்கு இப்படி பண்ணியிருக்க வேண்டாம். எனக்குன்னு இருந்தது நீங்க மட்டும் தான்னு நினைச்சேன். நீங்களும் இப்ப இல்லைன்னு சொல்லிட்டிங்கப்பா” என்றவளுக்கு முயன்றும் முடியாமல் ஒரு துளி கண்ணீர் வெளியே வந்திருந்தது.
“வேண்டாம் ராசாத்தி, கிருஷ்ணன்கிட்ட அப்படியெல்லாம் பேசாதடா. அவன் மனசொடிஞ்சு போய்டுவான். அவன் வாழ்றதே உனக்காகத் தான கண்ணு” என்றார் பேச்சி.
“எனக்காக எனக்காகன்னு சொல்லி இப்படி மொத்தமா என்னை தலை முழுகிட்டார் பாட்டி” என்று அடக்க முடியாமல் கதறியவள்,
“நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன்” என்றாள் அழுகையுடன். அவளின் அழுகையில் கிருஷ்ணனோ நெஞ்சைப் பிடித்து அமர்ந்துவிட்டார்.
“வேண்டாம் சிவா, இப்படி பேசாத. பாரு அவருக்கு முகமே சரியில்லை.நடந்தது நடந்து போச்சு. இனி எப்படி வாழ்றதுன்னு மட்டும் பாரு” என்றார் காவேரி.
“இவ்வளவு நேரம் அமைதியா தானம்மா இருந்திங்க. இப்பவும் அப்படியே இருங்க. நீங்க பெத்த பொண்ணா இருந்திருந்தா இப்படி அமைதியா இருந்திருப்பிங்களா? இந்நேரம் சண்டை போட்டு கூட எனக்காக பேசி இருக்க மாட்டிங்க?” என்றாள் வேதனை நிறைந்த குரலில்.
அவளின் பேச்சில் அதிர்ந்த காவேரி,
“நான் எப்பவாவது உன்னை அப்படி நினைச்சிருக்கேனா சிவா?” என்றவருக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை.
அவள் பேசுவதை கேட்டிருந்த ஆதிக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைவதைப் போன்ற உணர்வு.
‘தப்புப் பண்ணிட்டேனோ?’ என்று அவனையறியாமல் எண்ணத் தொடங்கிவிட்டான்.
வீட்டிற்கு விசாகனை அழைத்துக் கொண்டு வந்த விசாலாட்சியோ இன்னமும் பேசிக் கொண்டு தான் இருந்தார். ஏதோ பிரச்சனை என்று தெரிந்தது. ஆனால் என்ன பிரச்சனை என்று தான் வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை.
“என்னம்மா ஆச்சு? இப்ப என்ன நடந்ததுன்னு இப்படி பேசிட்டு இருக்கீங்க?” என்றார் மேகலை.
“இன்னும் என்ன நடக்கணும்? அவ கெட்ட கேட்டுக்கு என் பேரன் கேட்குதா?” என்று மூச்சு வாங்க பேச,
“பாட்டி சிவா மேல எந்த தப்புமில்லை. எல்லாமே என்னால தான்” என்றான் விசாகன்.
“நீ வாயை மூடுடா..! இருந்திருந்து அவ மேலையா உனக்கு ஆசை வரணும்?” என்று அவனை அதட்ட,
“என்னத்தை சொல்றிங்க?” என்ற ரேணுகாவிற்கு மேற்கொண்டு வார்த்தை வரவில்லை.
“டேய் விசாகா, பாட்டி சொல்றது உண்மையா? என்ன நடந்தது? என்ன பிரச்சனை?” என்றார் பதட்டத்துடன்.
“அம்மா அது வந்து” என்று தயங்கியவன், வேறுவழியின்றி நடந்ததைக் கூறி முடித்திருந்தான்.
“என்னடா பண்ணி வச்சிருக்க? ஒரு பொம்பளைப் பிள்ளை வாழ்க்கையை இப்படி கெடுத்திருக்க? இந்த பாவம் நம்மளை சும்மா விடும்மா? சின்னப் பையன் விளையாட்டுத் தனமா இருக்கேன்னு நினைச்சதுக்கு எவ்வளவு பெரிய காரியத்தை பண்ணியிருக்க நீ” என்று அவனை அவர் அடிக்க ஆரம்பிக்க,
“நிறுத்து ரேணுகா! இதென்ன இளந்தாரிப் பையனை அடிக்கிற பழக்கம்?” என்றார்.
“உங்களுக்கு வேணும்னா அவன் செஞ்சு வச்சிருக்குற வேலை சாதரணமா தெரியலாம். ஒரு பொம்பளைப் பிள்ளை கல்யாணத்தை நிறுத்தி, எவ்வளவு பெரிய பாவத்தை பண்ணியிருக்கான். இதை அப்படியே விட சொல்றிங்களா?” என்றார் ரேணுகா.
“என்ன ரேணுகா குரல் எல்லாம் உசருது. அவ எம் பேரனை மயக்கப் பார்த்திருப்பா. இதெல்லாம் அந்த குடும்பத்துக்கு சொல்லியா தரனும்?அப்பன் என் பொண்ணை மயக்கி அவ வாழ்க்கையை கெடுத்தான், மக என் பேரனை மயக்கப் பார்த்திருக்கா. ஆதி போனதால இவன் தப்பிச்சான்” என்று விசாலாட்சி பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க, வெளியே ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.