அவர்கள் ஜீப்பில் செல்வதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் விஷயத்தை விசாலாட்சியிடம் சென்று சொல்லிவிட, கேட்ட அவருக்கு நெஞ்சைப் பிளந்து விடும் அதிர்ச்சி.

‘அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசில அடி மடியிலேயே கையை வச்சுட்டாளா?’ என்று எண்ணியவர்,

“ஏலேய் காளி வண்டியை அந்த ஊருக்கு விடுடா” என்று கிளம்பிவிட்டார். வீட்டில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

மண்டபத்தில் ஆதி கேசவனுடன் வந்து இறங்கியவளைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க,

“அம்மாடி சிவா? எங்கம்மா போன?” என்ற கிருஷ்ணனுக்கு பதட்டம்.

“அப்பா அது” என்று அவள் தயங்கினாள். அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

“எங்கடி போன?” என்றாள் காவியா மெதுவாய்.

“எல்லாரும் மன்னிக்கணும். சின்ன தப்பு நடந்திடுச்சு. பயப்படுற அளவுக்கு ஒண்ணுமில்லை” என்றான் ஆதி.

“என்ன தம்பி சொல்றிங்க? எதுவும் புரியலை, காலையில இருந்து பொண்ணைக் காணோம். பார்த்தா திடீர்ன்னு நீங்க கூட்டிட்டு வர்றீங்க? கேட்டா சின்ன தப்புன்னு சொல்றிங்க? உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை, இது சின்ன தப்பா?” என்றார் மாப்பிள்ளையின் அப்பா.

“மாமா தப்பெல்லாம் எங்க மேல தான். விசாகனுக்கு நல்லது பன்றதா நினைச்சு பொண்ணைக் கடத்துனது நாங்கதான்” என்றான் மாப்பிள்ளையின் உறவினன்.

“இப்ப எதுக்குடா எல்லாரும் மென்னு முழுங்குறிங்க? விசாகனுக்கு சிவாவை பிடிச்சிருந்தது.. அதான் தூக்குனோம்” என்றான் ஒரு நண்பன்.

 “அமைதியா தான் இருங்களேன்டா” என்றான் விசாகன்.

“அப்படி எல்லாம் எதுவுமில்லைங்க. இவனுங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இப்படி பண்ணிட்டானுக. சிவா மேல எந்த தப்புமில்லை” என்றான் விசாகன்.

மாப்பிள்ளையின் அப்பாவிடம் சென்ற ஆதி,

“நான் தான் இவ்வளவு தூரம் சொல்றேனே? என்மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? நடந்த தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள கல்யாணத்தை முடிங்க முதல்ல” என்ற ஆதி,

“காவியா கூட்டிட்டு போய் ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்கம்மா” என்றான்.

கிருஷ்ணனோ பிரம்மை பிடித்தவர் போல் நிற்க,

“அப்பா” என்றாள் சிவா தயங்கியபடி. அவள் பார்வையின் பொருள் அறிந்தவர்,

“என் பொண்ணைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்மா. ஒரு காலத்துலயும் அப்பா உன்னை சந்தேகப்பட மாட்டேன்” என்றார். ஏனோ அவரின் நம்பிக்கையில் அவளுக்கு கண் கலங்க, இதையெல்லாம் தள்ளி நின்று வேடிக்கையாக மட்டுமே பார்த்திருந்தார் சுபத்ரா. அங்கிருந்த அனைவரும் ஆளாளுக்கு ஒவ்வொன்றை பேச, காவியாவோ அவளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டாரும் புரிந்து கொண்டு அமைதியாய் இருக்க,தினேஷும் திருமணத்திற்கு தயாரானான். சிவாவிற்கு புடவைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே வெளியே விசாலாட்சியின் குரல் கேட்டது. வெளியே இருந்தவர்கள் அவரை அடக்க முயற்சி செய்ய அதையும் மீறி அவர் குரல் கேட்டது.

 சிவா என்னமோ ஏதோவென்று வெளியே வர, அவளைப் பிடித்துக் கொண்டார்.

“ஏன்டி என் பேரனை வளைச்சுப் போட சொல்லி உன் அப்பன் சொல்லிக் குடுத்தானா? எத்தனை நாளா அப்பனும் மகளும் சேர்ந்து திட்டம் போட்டிங்க” என்று அவர் கேட்ட கேள்வியில் சிவா அதிர்ந்து நிற்க, கிருஷ்ணனோ நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். போன் பேசிவிட்டு வந்த ஆதியின் காதிலும் பாட்டியின் இந்த வார்த்தைகள் விழுந்தது.

“பாட்டி” என்று அவன் அதட்டிய அதட்டலில், அங்கே சத்தமில்லாமல் இருக்க, பாட்டி மட்டும் அடங்கவே இல்லை.

“என்ன எதுக்கு அதட்டுற ஆதி? காலையில விசாகனோட இவளை கோவில்ல பார்த்தோம்னு ஆளுங்க வந்து சொன்னப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும். காலையில இங்க கல்யாணத்தை வச்சுகிட்டு அங்க இவனோட இவளுக்கு என்ன வேலை? நீ பார்த்து கூட்டிட்டு வரலைன்னா இந்நேரம் கல்யாணத்தை முடிச்சிருப்பா தான?” என்றார் விசாலாட்சி.

“நடந்தது என்னன்னு புரியாம, தெரியாம பேசாதிங்க. வாயை மூடுங்க” என்றான் அழுத்தமான குரலில்.

அவர் பேசியதை தாங்க முடியாமல் “வாயை அடக்கி பேசுங்க” என்றார் பேச்சி.

கிருஷ்ணனோ முகம் இறுக நின்றிருந்தார். நடந்த விஷயங்களைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டாருக்கு எதுவும் சரியாய் படவில்லை.

“சொல்றோம்னு கோவிச்சுக்காதிங்க தம்பி. இவ்வளவு குழப்பத்துல இந்த கல்யாணம் வேண்டாம். இதை இப்படியே நிறுத்திடுறது தான் நல்லதுன்னு படுது” என்றார் மாப்பிள்ளையின் அப்பா.

“சாரிங்க சிவா. எங்கப்பா சொல்றது தான் எனக்கும் சரின்னு படுது. நேத்து நைட்டே இவங்கல்லாம் வந்து சொன்னாங்க. நீங்களும் விசாகனும் லவ் பண்றதா” என்று விசாகனின் நண்பர்களைக் காட்டினான் தினேஷ்.

சிவா அவனை வெற்றுப் பார்வை பார்க்க,

“சத்தியமா அப்போ நான் நம்பல. ஆனா இப்போ நடக்குறதை எல்லாம் பார்த்தா, நம்பாம இருக்கவும் முடியலை” என்றான் தினேஷ் தன்மையாய்.

“மாப்பிள்ளை” என்று கிருஷ்ணன் ஏதோ பேசப் போக,

“வேண்டாம்ப்பா” என்று அவரின் கையைப் பிடித்து தடுத்தாள் சிவா.

“சிவாம்மா” என்றார் கலங்கிய மனதுடன்.

“நம்பிக்கையில்லாத ஒரு உறவு நீடிக்காதுப்பா” என்றாள்.

“சிவா கொஞ்ச நேரம் அமைதியா இரும்மா” என்றார் காவேரி.

“இல்லம்மா! அமைதியா இருந்த வரைக்கும் போதும்” என்றவள் விசாகனிடம் சென்றாள்.

“இப்போ உங்களுக்கு சந்தோசம் தான விசாகன். இதுக்குத்தான் ஆசைப்பட்டிங்களா? எது எப்படியோ கல்யாணம் நின்னு, நானும் ரொம்ப நல்ல பேர் வாங்கிட்டேன் உங்க பாட்டிகிட்ட. இதைத் தானே எதிர்பார்த்திங்க?” என்றவள் சுபத்ராவை வெறுமையாய் ஒரு பார்வை பார்க்க, அந்த பார்வையில் அவர் உள்ளுக்குள் மறித்துப் போனார்.

“போகலாம்ப்பா” என்றாள் சிவா.

“ஒரு நிமிஷம்” என்றான் ஆதி கேசவன்.

கிருஷ்ணனிடம் வந்தவன்,

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, என்மேல நம்பிக்கை இருந்தா விசாகனுக்கு உங்க பொண்ணை கட்டிக் குடுங்க. குறிச்ச நேரத்துல கல்யாணம் நடக்கட்டும்” என்றான் நேர் பார்வையாய்.

“அண்ணா” என்று விசாகன் அதிர்ச்சியுடன் பார்க்க,

“ஏன் இவ்வளவு ஷாக் ஆகுற விசாகா. உனக்குத் தான் இந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னியே? அப்பறம் என்ன? அமைதியா இரு” என்றான் ஆதி.

“ஒரு நாளும் நடக்காது ஆதி” என்றார் விசாலாட்சி.

“நான் உங்ககிட்ட கேட்கவே இல்ல பாட்டி. நான் என் தம்பிகிட்ட பேசிட்டு இருக்கேன். அவனால வந்த குழப்பத்துக்கு அவன் தான் தீர்வா இருக்க முடியும்” என்றான் ஆதி தீர்மானமாய்.

“சார் அதுக்கு நான் முதல்ல சம்மதிக்கணும். சாரி எனக்கு விருப்பமில்லை” என்றாள் சிவா பட்டென்று.

“எனக்கு சம்மதம்” என்றார் கிருஷ்ணன்.

“அப்பா” என்று அதிர்ந்த சிவாவிற்கு அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் மளமளவென்று கீழே இறங்கியது.

“இங்க பார் விசாகா, உன் அண்ணன் சொல்றான்னு எதையாவது பண்ண, சொத்துல சல்லிப் பைசா குடுக்க மாட்டேன்” என்றார் விசாலாட்சி.

“அம்மா” என்று சுபத்ரா தவிக்க,

“உன்னை இங்க யாரு வர சொன்னா சுபா. கிளம்பு முதல்ல” என்று அவரையும் அதட்டினார் விசாலாட்சி.

“நான் சொன்னதை செய்ய முடியுமா முடியாதா?” என்றான் ஆதி கோபமாய் விசாகனிடம்.

“அண்ணா” என்று அவன் எச்சில் விழுங்கி பாட்டியைப் பார்க்க, அவரோ அவனை முறைத்தார்.

அவனருகில் வந்த விசாகன் “சாரிண்ணா! நீங்க சொன்ன மாதிரி தான் கட்டாயப்படுத்தி காதலை வாங்க முடியாது. பாட்டி பேச்சை மீறியும் என்னால எதுவும் செய்ய முடியாதுண்ணா” என்றான். அவனின் பேச்சில் ஆதிக்கு கோபம் வர,

“கட்டாயப்படுத்தி அந்த பொண்ணு கல்யாணத்தை மட்டும் நிறுத்த முடியுமோ?” என்றான் ஆத்திரத்துடன். தலை குனிந்தான் விசாகன்.

“நீ செஞ்ச காரியம் எங்க வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியா?” என்றவன்,

“அதான் அந்த பொண்ணு வாழ்க்கையை கெடுத்தாச்சே. இன்னும் ஏன் நிக்கிறிங்க? கிளம்புங்க” என்றான் விசாலாட்சியைப் பார்த்து.

அவன் சுபத்ராவை திரும்பிப் பார்க்க, அவரோ அவனை கையெடுத்து கும்பிட்டார்.

“அத்தை” என்றவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவர் பார்வை உணர்த்திய செய்தி அறியாதவனா அவன்.

“அத்தை இது சரியா வராது” என்றான் ஆதி.

“ஒரு நிமிஷம் தம்பி” என்ற கிருஷ்ணன்,

“நான் சம்மதம் சொன்னது உங்க தம்பிக்கு இல்லை. நீங்க மாப்பிளைன்னா எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்” என்றார் கிருஷ்ணன். சுபத்ராவை சில வினாடிகள் நேருக்கு நேர் பார்த்தவர், பார்வையை திருப்பிக் கொண்டார்.

தந்தையின் பேச்சில் அதிர்ந்து,அதுவரை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்த கிருஷ்ணன்,

“சிவாம்மா” என்று  ஏதோ சொல்ல வர,

“அப்பா பிளீஸ்..! இப்படி ஒரு தண்டனையை மட்டும் எனக்கு குடுத்துடாதிங்க? நான் என்ன தப்புப் பண்ணேன், எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனையை குடுக்குறிங்க? அப்படியே நான் தப்பு பண்ணியிருப்பேன்னு நினைச்சிங்கன்னா, நீங்களே உங்க கையாள என்னை கொன்னுடுங்க. ஆனா, இந்த கல்யாணம் மட்டும் வேண்டாம்ப்பா. என்னால சத்தியமா முடியாது. ப்ளீஸ்ப்பா” என்ற மகளின் கண்ணீரை அவரால் பார்க்க முடியவில்லை.

“உன்னோட நல்லதுக்காகத் தான்டா சொல்றேன்” என்றார் அவர் கலங்கிய குரலில்.

“எனக்கு அந்த நல்லது வேண்டாம்ப்பா. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். ஆனா, இந்த கல்யாணம் மட்டும் வேண்டாம்.என்னால முடியாதுப்பா, பிளீஸ்ப்பா” என்றாள் அவர் காலில் விழாத குறையாய்.

“அம்மாடி” என்று அவளைத் அவர் தூக்கி நிறுத்த, அவர்களைப் பார்த்திருந்த ஆதிக்கும் ஆயாசமாய் வந்தது.

“என்னைக் கல்யாணம் பண்றது இவளுக்கு தண்டனையா?” என்று எண்ணியவனுக்கு மனம் ஏதோ ஒரு மூலையில்  உடைந்திருந்தது. அதை அவன் உணரவில்லை என்பதே உண்மை.

“இதுவரைக்கும் நான் சொல்லி என் பொண்ணு எந்த விஷயத்தையும் மாட்டேன்னு சொன்னதில்லை சிவா” என்றார் மகளைப் பார்த்தபடி.

“அப்பா” என்றவள் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.