காலை ஐந்து மணியளவில் நல்ல உறக்கத்தில் இருந்த விசாகன் அலைபேசியின் ஒலியில் எழுந்தான்.

“என்னடா இந்த நேரத்துல?” என்றான் கொட்டாவியுடன்.

“மச்சான் சீக்கிரம் கிளம்பி உங்க உங்க ஊர் ஆத்தோர விநாயகர் கோவிலுக்கு வந்திடு” என்று அவன் நண்பன் உரைக்க,

“எதுக்குடா?” என்றான் சலிப்பாய்.

“சீக்கிரம் வாடா, முக்கியமான விஷயம். சிவா பொண்ணை தூக்கிட்டோம். நீ வந்த உடனே கல்யாணம் தான்” என்றவன் போனை வைத்துவிட,  விசாகன் கையில் இருந்த போன் அதிர்ச்சியில் தானாக கீழே விழுந்திருந்தது.

“அய்யோ, என்ன பண்ணி வச்சிருக்கானுக?” என்று தலையில் கை வைத்தவன், பதட்டத்துடன் கிளம்பி சென்றான். செல்லும் வழியெல்லாம் அவனுக்கு பதட்டம் கூடியதே தவிர குறைந்தபாடில்லை. அந்த அதிகாலைப் நேரத்திலும் அவனுக்கு வியர்த்து வழிந்தது.

ஒருவழியாக கோவிலை அடைந்தவன், நண்பர்களைத் தேடி அவர்களிடத்தில் சென்றான்.

“வாடா புது மாப்பிள்ளை” என்று நண்பர்கள் தோளில் கை போட,

“என்னடா பண்ணி வச்சிருக்கிங்க? விடிஞ்சா கல்யாணம்டா. இப்படி பொண்ணைக் கடத்தியிருக்கிங்க? வம்பை விலை குடுத்து வாங்கியிருக்கிங்கடா” என்றவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“சும்மா பயந்து  சாகாத விசாகா. நீ தாலியை மட்டும் கட்டிடு. வர்றதை அப்பறம் பார்த்துக்கலாம்” என்றனர்.

“எப்படிடா கடத்துனிங்க?” என்றான் பாவமாய்.

“உனக்காக ரொம்ப கஷ்ட்டப்பட்டு தூக்கியிருக்கோம். யார் கண்ணுலையும் படாம வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு” என்றனர்.

“இங்க எப்போ வந்திங்க?” என்றான் விசாகன்.

“அது எதுக்கு உனக்கு? ஆறு டூ ஏழு முகூர்த்தம். இந்நேரம் சிவா புள்ள அங்க இல்லைன்னு தேடிட்டு இருப்பாங்க. நீ சீக்கிரம் தாலியை கட்டுற வழியப் பாரு” என்றனர்.

“சிவா எங்கடா?” என்றான் புரியாமல்.

“அங்க பாரு” என்றனர். மயக்கம் தெளிந்து ஆர்ப்பாட்டம் செய்தவளை வேறு வழியின்றி கைகால்களை கட்டி வைத்திருந்தனர்.

“என்னடா பண்ணி வச்சிருக்கிங்க?” என்று வேகமாய் அவளின் அருகில் சென்றவன், வேகமாய் அவள் கட்டுகளை அவிழ்த்து விட்டு,

“சாரி சிவா” என்றான் உள்ளே போன குரலில். அவளோ ஆவேசமாய் அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.

“சிவா” என்றவன் கோபத்துடன் அவளை முறைக்க,

“அறிவிருக்கா உனக்கு? நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல. அப்படியும் என்னை ஆள் வச்சு கடத்தியிருக்க?” என்றாள் கோபமாய்.

“அய்யோ நான் ஒன்னும் சொல்லலை. என்னை நம்பு. எனக்கு நல்லது பன்றதா நினைச்சு இவனுகளா ஏதோ பண்ணியிருக்கானுங்க. சத்தியமா நான் எதுவும் சொல்லலை” என்றான் விசாகன்.

“ஒருத்தன் பக்கத்துல கூட நிக்க முடியாது, அப்படி ஒரு சரக்கு வாடை. இவனுங்க எல்லாம் உனக்கு பிரண்டுக வேற? இப்பவே போய் நடந்ததை எல்லார்கிட்டவும் சொல்லலை, என் பேரு சிவ தீர்த்தா இல்லை” என்று கோபமாய் உரைத்தவள், வெளியேறப் போக,

“என்னம்மா சொல்லுவ? போய் சொல்லேன், நாங்களும் சொல்றோம். விசாகனை நீ லவ் பண்ணி ஏமாத்தின கதையை” என்றான் நண்பர்களுள் ஒருவன்.

“நான் லவ் பண்ணி ஏமாத்துனேன்னு நீ பார்த்தியா?” என்று ஆவேசம் பொங்க கேட்டாள்.

“சும்மா அவன்கிட்ட பொய் சொல்லி ஏமாத்துற மாதிரி எங்ககிட்ட ஏமாத்த முடியாது. முதல் நாள் திருவிழால்ல நீ அவனைப் பார்க்கலை. பார்வைன்னாலும் அப்படி ஒரு பார்வை. அந்த பார்வையில தான் எவ்வளவு ஏக்கமும் அன்பும் இருந்தது. பார்த்த நாங்க முட்டாளா? ஏன் விசாகன் கூட பார்த்தானே? அதுக்கு அப்பறம் தான உன்கிட்ட தைரியமா வந்து பேசுனான்” என்றான் ஒருவன் ஆவேசமாக.

“அய்யோ இல்லை” என்றாள் சிவா.

“நீ பார்த்ததை நானும் பார்த்தேன் சிவா” என்றான் விசாகன்.

“நீ என்ன லூசா? நான் உன்னைப் பார்க்கலை” என்று தயங்கியவள்,

“உனக்கு பின்னாடி நின்னுட்டு இருந்த உங்க அத்தையைத் தான் பார்த்தேன். நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. பிளீஸ் நான் போகணும். அங்க என்னைக் காணாம தேடுவாங்க. எங்கப்பா பதறிப் போய்டுவார்” என்றாள் கலங்கிய குரலில்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதி கேசவனிடம் இருந்து போன் வந்தது விசாகனுக்கு. பதட்டத்துடன் போனை எடுத்தான்.

“அண்ணா” என்றவனுக்கு நாக்கு மேலன்னத்துடன் ஒட்டிக் கொண்டது.

“எங்கடா இருக்க?” என்றவனின் குரலில் அத்தனை உஷ்ணம்.

“அண்ணா அது எனக்கு எதுவும் தெரியாதுண்ணா. நான் கடத்த சொல்லலை. இவனுக ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு சிவாவை தூக்கிட்டு வந்துட்டானுக” என்று கடகடவென்று ஒப்பிக்க, எதிரில் இருந்த ஆதியோ அதிர்ந்தான்.

“இப்ப எங்க இருக்க?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“நம்ம ஊர் விநாயகர் கோவில்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஆதி வண்டியைக் கிளப்பியிருந்தான்.

காலையில் எழுந்து, அவளின் திருமணத்திற்கு செல்ல  கிளம்பி கீழே வந்தவன் ரேணுகாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட, சுபத்ராவோ ஒரு தவிப்புடன் அவனைப் பார்த்திருந்தார். வெளியே செல்ல முற்பட்டவன் என்ன நினைத்தானோ,

“வரீங்களா அத்தை” என்றான் தயங்கிபடி.

“ஆம்” என்பதை போல் அவர் தலை ஆட,  ஒரு பெருமூச்சு விட்டவன்..

“வாங்க போகலாம்” என்று அவரையும் அழைத்துக் கொண்டு மண்டபத்தை நோக்கி சென்றிருந்தான். அங்கு சென்ற பிறகு தான் அவளைக் காணாமல் அனைவரும் பதட்டத்துடன் இருப்பதே அவனுக்குத் தெரிந்தது.

“என்னம்மா ஆச்சு காவியா?” என்றான்.

“எங்க கூட தான் தூங்கிட்டு இருந்தாண்ணா. திடீர்ன்னு முழிச்சு பார்த்தா ஆளைக் காணோம்” என்றாள் அவள் பதட்டத்துடன்.

கிருஷ்ணனோ அங்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க, ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை. மண்டப்பத்தில் ஒவ்வொருத்தரும் இஷ்ட்டத்திற்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தனர்.

“அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்ட்டம் தானம்மா?” என்றான் காவியாவிடம்.

“இஷ்ட்டம் தான் அண்ணா. நைட் நல்லா பேசிட்டு தான் தூங்கப் போனோம்” என்றவள், தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

“எதுன்னாலும் சொல்லும்மா” என்றான்.

“எனக்கு என்னமோ உங்க தம்பி விசாகன் அண்ணா மேல தான் சந்தேகமா இருக்குண்ணா” என்றாள் மெதுவான குரலில். அப்போது தான் அவனுக்கும் விஷயம் புரிபட வேகமாய் தம்பிக்கு அழைத்திருந்தான்.

“என்னாச்சு ஆதி?” என்றார் சுபத்ரா.

“இதோ வந்திடுறேன். நீங்க இங்க இருங்க அத்தை” என்றவன் வண்டியை புயல் வேகத்தில் கிளப்பிக் கொண்டு வந்து சேர்ந்திருந்தான்.

வந்தவன் அங்கு கண்டது சோர்வுடன் தலையெல்லாம் கலைந்து இருந்த சிவ தீர்த்தாவைத் தான்.

ஆதி தூரத்தில் வரும் போதே, இங்கு விசாகனுக்கு உதறத் தொடங்கியது. வந்தவன் வேகமாய் அவனை அறைய,

“அண்ணா எனக்கு எதுவும் தெரியாதுண்ணா, நான் எதுவும் பண்ணலை” என்றான் வேகமாய்.

“இதுக்குமேல என்ன பண்ணனும்?” என்று உறுத்து விழித்தவன், அவன் நண்பர்களுக்கும் ஆளுக்கு ஒரு அறை வைத்தான்.

“எதுல விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை. இதென்ன சிட்டின்னு நினைச்சிங்களா? கிராமத்துல முகூர்த்த நேரத்துல பொண்ணைக் காணோம்னா என்ன பேசுவாங்கன்னு தெரியாது” என்றவன் மீண்டும் அவர்களை அடிக்க,

“காதலை சேர்த்து வைக்க நினைச்சது ஒரு தப்பா” என்றான் ஒருவன் வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன்.

“அடிங்க! வாங்குன அடி பத்தாது”என்றவன், சிவாவிடம் திரும்பினான்.

“வாம்மா, உன்னைக் காணாம அங்க எல்லாரும் தேடிட்டு இருக்காங்க. நீங்களும் வாங்கடா, வந்து ஒழுங்கா நடந்ததை சொல்லுங்க” என்றவன் அனைவரையும் ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றான்.