அங்கே மில்லுக்கு சென்று கொண்டிருந்த விசாகனை வழி மறைத்துக் கொண்டது அவனின் நண்பர்கள் பட்டாளம்.

“என்ன மச்சான் உன்ன ஆளையே பார்க்க முடியலை. திருவிழா முடிஞ்சதும் ஓவர் பிசி ஆகிட்ட போல” என்றனர் நக்கலாய்.

“கடுப்பை கிளப்பாம பேசாம போங்கடா அங்கிட்டு. திருவிழாக்கு வந்தோமா போனோமான்னு இல்லாம ஒரண்டையை இழுத்து விட்டது பாத்தாதா?” என்றான் எரிச்சலாய்.

“இதெல்லாம் ஓவர்டா. அவனுங்க வம்பிழுத்தா நாங்க என்ன பண்ணுவோம்? இந்த வயசுல கிண்டல் பண்றது சைட் அடிக்கிறது எல்லாம் சகஜம். இதுக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் குடுப்பாரா உங்க அண்ணன்?” என்றனர் கோபத்துடன்.

“எங்கண்ணா காரணமில்லாம எதையும் பண்ண மாட்டார்” என்றான் விசாகன்.

“ஆமா உங்க அண்ணன் சரி. நாங்க எல்லாம் தப்பு. உன்னோட லவ்க்கு ஹெல்ப் பண்ணத்தான் வந்தோம். அதை மறந்துட்டு பேசுற?” என்றனர்.

“நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, இனி உங்க ஹெல்ப் தேவைப்படாது. சிவா என்னை லவ் பண்ணலைன்னு சொல்லிட்டா” என்றான் சோர்ந்த குரலில்.

அவர்களுக்குள் ஒருவன் ஜாடை காட்ட,

“அந்த பொண்ணு சொல்லுதுன்னு நீ நம்புறியா விசாகா? அது ஏதோ உங்க குடும்பத்து மேல இருக்குற பகையில பேசுது. உன்மேல ஆசை இல்லாமத்தான் உன்னைய வச்ச கண்ணு வாங்காம பார்த்துச்சா அன்னைக்கு?” என்றனர்.

“நான் கேட்டப்ப இல்லைன்னு சொல்லிட்டா” என்றான் விசாகன்.

“அந்த பேச்செல்லாம் விடு. உன்னோட காதல் உண்மை தான?” என்றனர்.

“நான் காதலிச்சா போதுமா? அந்த பொண்ணுக்கும் விருப்பம் இருக்கனும்ல. இந்த பேச்சை இதோட விட்ருங்க. அண்ணா காதுக்கு போச்சு என்னை உரிச்சு உப்புக் கண்டம் போட்ருவார்” என்றான் விசாகன்.

“கழுதை வயசாகிடுச்சு, இன்னும் அண்ணனைக் கண்டு பயந்துகிட்டு இருக்க?” என்றான் ஒருவன்.

“அதை நீ சொல்லாத மச்சான். அன்னைக்கு அவனோட அண்ணனைக் கண்டதும் பேண்ட்லையே யூரின் போனவன் தானடா நீ” என்று மற்றொருவன் சொல்லி சிரிக்க,

“மானத்தை வாங்காதிங்கடா.!இவனோட அண்ணன் அடிக்க ஆரம்பிச்சா மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறார்டா. பயம் வராம என்ன செய்யும்” என்றான் பாவமாய்.

“அப்ப இந்த வீர வசனம் எல்லாம் பேசக் கூடாது” என்றான் விசாகன்.

“விஷயம் தெரியுமா விசாகா? சிவா பொண்ணுக்கு எங்க ஊர்ல தான் மாப்பிள்ளை பார்த்திருக்காங்க” என்றான் ஒரு நண்பன். அவனின் பேச்சில் அதிர்ந்த விசாகன்,

“என்னடா சொல்ற? சிவா இன்னும் படிச்சு முடிக்கலையே?” என்றான் வேகமாய்.

“என்ன காரணம்னு தெரியலை. ஆனா பேசி உறுதியாகிடும்னு தான் நினைக்கிறேன்” என்றான் அவன்.

“விசாகா இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. பேசாம விஷயத்தை வீட்ல சொல்லி, நீயே பொண்ணு கேட்டு முடிச்சுடு” என்றான் மற்றொருவன்.

“நடக்குற காரியமாடா இது? ஆதி அண்ணாவே இன்னும் கல்யாணம் பண்ணலை. இந்த லட்சணத்துல நான் போய் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்க முடியுமா? அதுவும் சிவாவை, அவ்வளவு தான் வீடே ரெண்டு பட்டுரும்” என்றான் விசாகன்.

“இங்க பார் உங்கண்ணன் முப்பது வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம இருந்தா அதுக்கு நாம என்ன பண்ண முடியும். ஏதோ மனசுக்கு பட்டதை சொல்லிட்டோம். சிவா உனக்கு வேணும்னா நீ தான் முயற்சி பண்ணனும். அதுக்கு மேல உன் காதல், உன் விருப்பம்” என்று பேச்சை முடித்துக் கொண்டனர்.

விசாகனுக்கு தான் குழப்பமாய் இருந்தது. அன்று சிவா பேசிய பிறகு அவன் ஓரளவு தெளிந்திருந்தான். இப்பொது நண்பர்கள் குழப்பி விட்டுவிட்டனர்.

‘இவனுங்க சொன்ன மாதிரி விஷயத்தை வீட்ல சொன்னா என்ன? எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. இதை அரேஞ்சிடு மேரேஜா மாத்திட்டா என்ன?’ என்று கூட யோசித்தான். அடுத்த நிமிடம் விசாலாட்சியின் முகம் கண் முன் வர, யோசனையை கைவிட்டான் விசாகன்.

“இன்னைக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. முடிவா என்ன சொல்றான்னு சிவாகிட்ட கேட்டுடனும்” என்று நினைத்துக் கொண்டவன், மில்லில் வேலைகளை முடித்துவிட்டு அவளைத் தேடி சென்றான்.

வயலில் நடவு வேலைகள் முடிந்து அனைவரும் கிளம்பியிருக்க, கிருஷ்ணன் வாழை மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமான சிவா, அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு கிருஷ்ணன் வரட்டும் என்று எண்ணியவள்,வரப்பில் அமர்ந்து  வாய்க்கால் தண்ணீரில் காலை நனைத்தபடி, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கையில் இருந்த சிறு நெல்லிக்காயை உப்பைத் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் அங்கு தான் இருப்பாள் என்று எண்ணி சரியாக அங்கு வந்து சேர்ந்திருந்தான் விசாகன். அவள் பின்னே வந்து நின்றவன்,

“இது கொஞ்சம் கூட நல்லா இல்லை” என்றான் பட்டென்று அவளிடம்.

“ஆமா, நெல்லிக்காய் கொஞ்சம் புளிப்பு தான். ஆனா எனக்கு நல்லாத்தான் இருக்கு” என்றாள் அவனைத் திரும்பி பார்க்காமல்.

“விளையாடாத சிவா, நான் எதைப் பத்தி பேசுறேன்னு உனக்கு நல்லா தெரியும்” என்றான் விசாகன்.

“இங்க பாருங்க, நானும் உங்களுக்கு பல முறை பதில் சொல்லிட்டேன். மறுபடியும் என்னை பேச வைக்காதிங்க” என்றாள் திரும்பாமல்.

“உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்கலாமே?” என்றான்.

‘எனக்கே தெரியாத விஷயம் கூட இவனுக்கு தெரிஞ்சிடும் போல’ என்று எண்ணியவள்,

“அதுக்கு என்ன இப்போ?” என்றாள் பட்டென்று.

“எப்படி உனக்கு மனசு வந்தது சிவா. நான் ஒரு வருஷமா உன் பின்னால சுத்திட்டு இருக்கேன்” என்றான் விசாகன்.

“என் பின்னால சுத்துறவங்களை எல்லாம் கல்யாணம் பண்ணனும்னா எத்தனை கல்யாணம் பண்றது?” என்றாள் இடக்காய்.

“ஏய்” என்றவனுக்கு கோபம் வர,

“என்ன கோபம் வருதா? நானும் பொறுமையா சொல்லிப் பார்த்துட்டேன். எனக்கு உங்கமேல அப்படி எந்த எண்ணமும் இல்லை” என்றாள் தெளிவாய்.

“நீ பொய் சொல்ற? வீட்டுக்கு பயந்து மறைக்குற. நாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவனின் பேச்சில் உடல் இறுகியது அவளுக்கு.

“ஏய்..!” என்று சீற்றத்துடன் திரும்பியவள்,

“உனக்கு அவ்வளவு தான் சொல்லிட்டேன். யார்கிட்ட என்ன பேசிட்டு இருக்க? எனக்கு எப்போ என்ன செஞ்சு வைக்கனும்னு என் அப்பாவுக்குத் தெரியும். இன்னொரு தடவை இப்படி பேசிட்டு வந்து நின்ன, நேரா உங்க வீட்டுக்கு வந்திடுவேன் பஞ்சாயத்துக்கு பார்த்துக்கோ” என்றாள் மிரட்டலாய்.

“வா, அப்படியாவது நீ எனக்கு கிடைப்பன்னா எனக்கு சந்தோசம் தான்” என்றவனை எரிச்சலுடன் பார்த்து வைத்தாள் சிவ தீர்த்தா.

“முட்டாள் மாதிரி பேசாதிங்க. என்னை தொந்தரவு பண்றதை இதோட விட்ருங்க” என்றாள்.

“நம்ம குடும்பம் தான் பிரச்சனைன்னா, கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னா, அவங்க கோபம் போய்டும் சிவா. பிளீஸ் மத்தவங்களுக்காக உன்னோட காதலை மறைக்காத” என்றான் விசாகன்.

“விசாகா” என்ற ஆதியின் ஓங்கிய குரலில் சட்டென்று நடுக்கம் கொண்ட உடலை அடக்கும் வழி தெரியவில்லை அவனுக்கு. சிவாவோ யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்திருந்தாள்.