“அக்கா கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அப்பறம் நான் மட்டும் தனியா இருக்கனுமா?” என்றான் விக்னேஷ்.
“அதுக்காக உன் அக்கா காலம் முழுசுக்கும் உன்கூட இருக்க முடியுமா?” என்றார் காவேரி.
“மாப்பிள்ளை பக்கத்து ஊர் தானாம்டா விக்கி. நீ வரணும்னா உடனே வந்துடு” என்றாள் சிரிப்புடன்.
தான் ஒரு வார்த்தை சொன்னவுடன் மாப்பிள்ளையை கூட பார்க்காமல், மறுபேச்சின்றி சரி சொன்ன மகளை வாஞ்சையுடன் பார்த்திருந்தார் கிருஷ்ணன்.
“என்னாச்சுப்பா ஏன் எமோஷ்னல் ஆகுறிங்க?” என்றாள் சிவ தீர்த்தா.
“நீ என்கிட்ட ஏதாவது கேளுமா? இது வேணும்,அது வேணும்னு. இல்ல, இதை வாங்கித்தாங்க, அதை வாங்கித்தாங்கன்னு இப்படி எதையாவது கேளுமா சிவா. என் பொண்ணு இப்படி எதையுமே என்கிட்ட கேட்கலையேன்னு இப்ப வருத்தமா இருக்கு” என்றார் கிருஷ்ணன்.
“அப்பா” என்று அவரை செல்லமாய் முறைத்தவள்,”உங்களுக்கு இன்னைக்கு என்னமோ ஆகிடுச்சு” என்று சிரித்துக் கொண்டாள்.
வெளியில் சிரித்துக் கொண்டாலும், அன்றைக்கு அவரின் பேச்சுக்கள் அவளுக்கு மனதிற்குள் இனம் புரியாத ஒரு நெருடலைக் கொடுக்க, அந்த யோசனையுடன் உறங்கிப் போனாள்.
மறுநாள் விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதில், தந்தையுடன் சேர்ந்து தோட்டத்திற்கு சென்று விட்டாள். எப்போதும் முதல் நடவு அவள் சாமி கும்பிட்டு ஆரம்பித்து வைப்பது தான்.
நடவுக்கு ஆட்களும் வந்திருக்க, காலையில் புத்தும் புது மலராய் வந்து நின்ற சிவ தீர்த்தாவைப் பார்த்த நடவு பெண்கள் முகம் முழுவதும் சந்தோசம்.
“என்னக்கா எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரி இருக்கு?” என்றபடி வந்தாள் சிவா.
“இருக்காதா சிவா? நீ வந்தா வயித்துக்கு வஞ்சனை இருக்காதே. அந்த சந்தோசம் தான்” என்றனர் சிரித்துக் கொண்டே.
“உங்க வயித்துக்கு நான் கியாரண்டி” என்று சிரித்தவளை அவர்கள் வாஞ்சையுடன் பார்க்க, பிளாஸ்க்கில் இருந்து ஆவி பறக்க டீயை ஊற்றி அனைவருக்கும் கொடுத்தாள். வேலை செய்பவர்களுக்கு ஆதாரமே அது தானே.
காலை ஆறுமணிக்கு அந்த டீ அவர்களுக்கு அமிர்தமாய் இருந்தது.
“அம்மா இனி இப்படி தான் உடுத்தணும்னு சொல்லிட்டாங்கக்கா. நமக்கு சுடிதார் தான் வசதி. சொன்னா எங்க கேட்குறாங்க?” என்றாள் சலிப்பாய்.
“இன்னைக்கு நடவுனால அப்படி சொல்லியிருக்கும் காவேரி. நீ சாமி கும்பிடுமா” என்று சொல்ல, எடுத்து வந்திருந்த பூஜை பொருட்களை ஈசான்ய மூலையில் வைத்து சூடம் ஏற்றி வழிபட்டவள், முதல் நாற்றை நட்டாள்.
நடவுப் பெண்களும் வேலையைத் தொடங்க, எப்போதும் ஆரம்பித்து விட்டு அமர்ந்து கொள்ளும் சிவா, அன்று தொடர்ந்து நட, அவளை ஆச்சர்யமாய் பார்த்தனர் பெண்கள்.
“அக்ரி காலேஜ்ல இதைத் தான சொல்லித் தராங்கக்கா” என்றாள்.
“நாத்து நடறதை காலேஜ்ல போயா படிக்கிற? எங்க கூட ரெண்டு நாள் இருந்தா தன்னால வந்திடப் போகுது” என்றனர் சிரிப்புடன்.
“இது மட்டும் இல்லக்கா,ஆனா இதுவும் ஒன்னு” என்றவள் வேலையைத் தொடர, அங்கு நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் ரேணுகா.
ஆதி கேசவன் தோட்டத்திலும் நடவு வேலை இருக்க, ஆட்கள் வந்திருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் அன்று ரேணுகா உடன் வந்திருந்தார்.
“என்னம்மா அங்கயே பார்த்துட்டு இருக்கீங்க?” என்றான் ஆதி கேசவன்.
“சின்ன வயசா இருந்தாலும் இந்த புள்ளைக்கு என்ன பொறுப்பு பார்த்தியா ஆதி? நம்ம வீட்லயும் தான் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க” என்று அவர் குறைபட,
“அம்மா அமிர்தா இப்ப தான் ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணு. தாரிணி இப்ப தான் காலேஜ் போறா. யாரை யார் கூட இணை போடுறிங்க?” என்றான் ஆதி எரிச்சலுடன்.
“இந்த சிவா பொண்ணு மட்டும் என்ன நூத்துக் கிழவியா? அவளும் இப்பதான் காலேஜ் போறா. சொல்லப் போனா தாரணி வயசு தான் இவளுக்கும்” என்றார் ரேணுகா.
ரேணுகா அவளை சின்ன பொண்ணு என்று சொன்னவுடன் ஏனோ அவனுக்கு பாரமேறிய உணர்வு.
அதற்குள் அவர்கள் வயலுக்குள் நடவுக்கு ஆட்கள் தயாராகிவிட,
“தம்பி சாமி கும்பிடனும்” என்றனர். அவர்களிடம் தலையசைத்த்வன்,
“ஆரம்பிச்சு வைங்கம்மா” என்றான் அன்னையிடம்.
“நான் எப்படி ஆதி கும்பிட முடியும்?” என்று தயங்கியவர் “இதுக்குத்தான் அமிர்தா,தாரணி ரெண்டு பேரையும் கூப்பிட்டேன். ஒருத்தரும் எந்திரிக்கலை” என்றார் கவலையுடன்.
“யார் கும்பிட்டா என்ன? நீங்க கும்பிடுங்கம்மா” என்றான் மீண்டும் அழுத்தமாய்.
“வளர்ற புள்ளைங்க தான் கும்பிடனும் ஆதி” என்ற ரேணுகா, சில நிமிடங்கள் யோசித்து,கொஞ்சம் நடந்து சென்று கிருஷ்ணனின் வயல் முன்பு நின்றார்.
“அம்மாடி சிவா, இங்க வாம்மா” என்றார் ரேணுகா. ஆதி அதிர்ச்சியுடன் பார்க்க,
அவரின் அழைப்பில் திகைத்த சிவ தீர்த்தா, யோசனையுடன் புருவத்தை நெறிக்க,
“நடவுக்கு நேரமாச்சு, வந்து சாமி கும்பிட்டு முதல் நாத்தை மட்டும் நட்டு விடும்மா” என்றார்.
“அது சரியா வராதுங்க. நீங்களே பார்த்துக்கோங்க” என்றவள் மீண்டும் வேலையைப் பார்க்க, ரேணுகாவின் அழைப்பு அங்கிருந்தவர்களுக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.
“ஏய் சிவா! மாட்டேன்னு சொல்றது அன்னபூரணியை வேணாம்னு சொல்றதுக்கு சமம். இதுல கோப தாபம் எல்லாம் பார்க்க கூடாது” என்று சில பெண்கள் அதட்ட, தந்தையைப் பார்த்தாள்.
“போம்மா” என்று அவர் தலையசைக்க, கைகளைக் கழுவிக் கொண்டு சென்றாள். ஆதியோ வேண்டா வெறுப்பாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை அவள்.
அவளுக்கு அவர்கள் நிலத்தில் கால் வைக்க துளியும் விருப்பமில்லை. வேறு வழியின்றி சென்றாள். அவர்கள் நிலத்திலும் சூடம் காட்டி சாமி கும்பிட்டவள், முதல் நாற்றை எடுத்து நட, குலவையுடன் அங்கும் தொடங்கியது நடவு. சட்டென்று சென்றால் நன்றாய் இருக்காது என்று எண்ணியவள், கையில் இருந்த ஒரு முடி நாற்றையும் நட்டு முடித்திருந்தாள்.
அதுவரை அவளின் செயல்களை எல்லாம் பாராமல் பார்த்திருந்தான் ஆதி கேசவன்.
தூக்கி சொருகியிருந்த பாவாடையும், அதில் தெரிந்த வாழைத்தண்டு கால்களும், இளம் கதிரில் மினுமினுத்த அவளின் முகமும், அவனை அவள்பால் விடாமல் ஈர்க்க, அதை ஈர்ப்பு என்று அறியாத அவனோ கல்லையோ மண்ணையோ பார்ப்பவன் போல் பார்த்து வைத்தான்.
“இதை மட்டும் அந்த கிழவி பார்க்கணும்?” என்று எண்ணிக் கொண்டே வரப்பில் கால் வைத்தவள் தடுமாறி விழப் போக,
“ஏய் பார்த்து” என்ற ஆதி அவளைப் பிடித்து நிறுத்தியிருந்தான். கைகளைப் பிடித்து தான் நிறுத்தியிருந்தான். அதற்கே அவள் தீச்சுட்டார் போல் கையை இழுத்துக் கொண்டாள். அவளின் செய்கையில் அவனுக்குத் தான் எரிச்சல் மண்டியது.
“பெரிய இவ? பாட்டி சொன்ன மாதிரி திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று எண்ணிக் கொண்டவன்,
“எனிவே தேங்க்ஸ்” என்றான் அவள் முகம் பார்க்காமல்.
“ரொம்ப நன்றிமா” என்றார் ரேணுகா தேவி.
“அதெல்லாம் வேண்டாங்க. ஆனா உங்க வீட்டு கிழவிக்கு மட்டும் தெரியாம பார்த்துக்கோங்க. தெரிஞ்சா நெஞ்சு வெடிச்சு செத்துடும்” என்று சிரிக்காமல் சொன்னவள் அவர்கள் வயலுக்குள் சென்று விட்டாள்.
அவள் சொன்ன தொனியில் ரேணுகாவிற்கு சிரிப்பு வர அடக்கிக் கொண்டார்.
“நல்ல பொண்ணு ஆதி. தங்க விக்ரகம் மாதிரி செஞ்சு வச்ச அழகு. யாருக்கு குடுத்து வச்சிருக்கோ?” என்று எண்ணிய ரேணுகாவிற்கு மனதிற்குள் ஏக்கம் இல்லாமல் இல்லை.
“ஆரம்பிச்சுட்டிங்களா?” என்று சலித்தவன்,
“நான் போய் எல்லாத்தையும் ஒரு பார்வை பார்த்திட்டு வந்திடுறேன்ம்மா. அதுவரைக்கும் இங்க இருங்க. அப்பறம் கொண்டு போய் வீட்ல விடுறேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.
அவன் செல்வதைக் கண்ட சிவா,
“பெரிய ஜாமீன் பரம்பரை, தோட்டத்துக்கு கூட தார் ஜீப்ல தான் வருவாக. இதையெல்லாம் பார்க்கணும்னு இருக்கு” என்று நினைக்க,
“பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான். உனக்கு என்ன பிரச்சனை சிவா?” என்றது மனசாட்சி.