அடுத்த மூன்று நாட்களில் அவளை டிஸ்சார்ஜ் செய்ய,

“நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்மா” என்றார் கிருஷ்ணன்.

“அண்ணா ஒரு மாசம் நம்ம வீட்ல இருக்கட்டும். புள்ள உடம்பைத் தேத்திட்டு அங்க கொண்டு வந்து விடுறோம். நான் நல்லா பார்த்துக்குவேன் ண்ணா” என்ற ரேணுகாவிடம் அதற்கு மேல் அவரால் மறுத்துப் பேச முடியவில்லை.

வீட்டிற்கு வந்தவுடன் சிவா செய்தது என்னவோ குழந்தையுடன் ரத்தினத்தின் அறைக்கு சென்றது தான்.

“எப்படி இருக்கீங்க?” என்றாள். அவரோ அவளை வெறித்துப் பார்க்க,

“இந்த நிலமையிலையும் இன்னும் உங்க குணம் மாறவே இல்லை இல்லையா? இதோ உங்க கொள்ளுப் பேரன். உங்க வீட்டோட வம்ச வாரிசு. இந்த குழந்தையை வேண்டாம்னு சொல்ல முடியுமா உங்களால?” என்றாள் நக்கலுடன்.

ரத்தினமோ அவளையும் குழந்தையையும் மாறி மாறி பார்த்திருக்க,

“என்ன? என்னை அப்பவே கொன்னுருக்கணும்னு தோணுதா?” என்றவள்,

“நீங்க செத்தாலும் உங்க ஆன்மா அமைதி இல்லாம தான் சுத்திட்டு இருக்கும். படுக்கையில இருக்குற காலத்துலையாவது மனுஷனா இருக்கப் பாருங்க” என்றவள் அங்கிருந்து கிளம்ப அப்போது வந்த விசாலாட்சியும் அவளைத் தான் பார்த்திருந்தார்.

கையில் இருக்கும் குழந்தையைப் பார்க்க உள் மனம் துடித்தாலும், அடக்கிக் கொண்டார்.

“என்ன கிழவி? கொள்ளுப் பேரனை பார்க்கனும்னு ஆசை இல்லையா?” என்றாள்.

“அவன் என் வீட்டு வாரிசுடி. பார்க்குறதுக்கு நான் ஏன் யோசிக்கணும்?” என்றார்.

“பெத்தது என்னவோ கிருஷ்ணனோட வாரிசாச்சே. அதான் கேட்டேன்” என்றாள் நக்கலாய்.

அவர் அவளை முறைக்க,

“இந்த முறைப்பெல்லாம் என்கிட்ட வச்சுக்காத கிழவி” என்று போகிற போக்கில் அவரை இடித்துவிட்டு சென்றாள்.

“ராங்கிக்காரி தான்” என்று நினைத்துக் கொண்டார் விசாலாட்சி.

குழந்தையை கையில் வாங்கிக் கொண்ட ஆதியோ,

“பாட்டியை வம்பிழுக்கலைன்னா உனக்குத் தூக்கம் வராதாடி” என்றான்.

“அட போங்க மாமா, இந்த வீட்ல எனக்கு இருக்குற ஒரே என்டர்டேயின்மென்ட் இந்த கிழவி தான்” என்றவளின் காதைப் பிடித்தவன்,

“வாய் கூடிடுச்சு”  என்றான்.

சுபத்ராவோ குழந்தையைப் பார்க்க தயங்கி நிற்க,

“உங்க சின்ன அத்தையை தயக்கமில்லாம வந்து குழந்தையைப் பார்க்க சொல்லுங்க மாமா. அவங்க அண்ணன் பேரனை அவங்க பார்க்குறாங்க. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று அவள் ஜாடையாய் சொல்ல, அடுத்த நிமிடம் குழந்தையைத் தூக்கிக் கொண்டவர் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு…

ரத்தினம் இறந்து ஒரு வருடமாகியிருந்தது.

ஊரில் அம்மன் கோவில் திருவிழா எப்போதும் போல் கலை கட்டியிருந்தது.

ஆதி கேசவனின் வீடே பரபரப்பாய் இருந்தது. ரேணுகாவின் பிறந்த வீட்டு சொந்தங்களும் வந்திருக்க, வீடே ஆட்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. முக்கிய பொறுப்புகள் அனைத்தும் ஆதியின் வசம் இருப்பதால் வீட்டிற்கு அவ்வப்போது வந்து தலையைக் காட்டிக் கொண்டிருந்தான்.

ஊர் அபிஷேகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் வேகமாய் கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவா. காலையில் இருந்து நிற்காமல் வேலை செய்து கொண்டிருந்த சிவ தீர்த்தாவை ரேணுகாவின் சொந்தங்கள் அனைவரும் பார்த்து மலைத்திருந்தனர். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா என்பதால் அதி விமர்சையாக இருக்கும்.

இளம் மஞ்சள் நிறத்தில் பட்டுடுத்தி, கைநிறைய கண்ணாடி வளையல்களை அடுக்கி கொண்டிருந்தவளை  காலோடு வந்து கட்டிக் கொண்டான் ஆதிகேசவன்-சிவ தீர்த்தாவின் இரண்டு வயது மகன்  ஆதவன்.

“அம்மா”  என்று மழலைக் குரலில் அழைத்தவனை தூக்கிக் கொண்டவள்,

“ஆதவ் கண்ணா இவ்வளவு நேரம் எங்க போனிங்க?” என்றாள் மகனுக்கு முத்தமிட்டு.

“சித்தா” என்றான் ஒற்றை வார்த்தையாய். விசாகனிடம் இருந்ததைத் தான் சொல்கிறான் என்று புரிந்து கொண்டவள்,

“கிளம்பலாமா தங்கம், அப்பாவை இன்னமும் காணோமே” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்திருந்தான் ஆதி.

இரண்டு வருடங்களில் அவனிடம் பெரிதாய் எந்த வித்தியாசமும் இல்லை. சிவா தான் கணவனின் கவனிப்பில் கொஞ்சம் கொழுகொழுவென்று மாறியிருந்தாள்.

“அப்பா” என்றவன் தந்தையிடம் தாவிக் கொள்ள,

“ஆதவ் ரொம்ப க்யூட்டா இருக்கானே? வேஷ்ட்டி எல்லாம் கட்டி” என்று மகனைக் கொஞ்சிக் கொண்டே சிவாவைப் பார்க்க, அவளோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி லுக்கு?” என்றான் சிரிப்புடன்.

“எப்ப வரீங்க வீட்டுக்கு? நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் வர்ற முதல் திருவிழா” என்றாள்.

“நான் என்னம்மா பண்றது? பொறுப்புல இருந்தா எல்லாம் சரியா செய்யணும்ல” என்றான்.

இது வழக்கமாய் நடக்கும் வாடிக்கை தான் என்பதால் அவளும் முறைப்புடன் விட்டுவிட்டாள்.

“ஆனா இனி எங்க கூடத்தான் இருக்கணும்” என்றாள் கட்டளையாய்.

“இருந்துட்டா போச்சு!” என்றவனின் பார்வை அவளை மேய,

“அந்த இருக்கனும் இல்லை” என்றவளுக்கு முகம் சிவந்திருந்தது.

“மாமா நான் எப்படி இருக்கேன்?” என்றாள்.

“உனக்கென்னடி? நல்லா கும்முன்னு தான் இருக்க” என்றான் ஆதி.

“உங்ககிட்ட கேட்டேன் பாருங்க என்னைச் சொல்லனும். கோவிலுக்கு நேரமாச்சு, கிளம்பலாமா? ரேணுமா கிளம்பிட்டாங்காளான்னு தெரியலை. கீழ நிறைய வேலை இருக்கு” என்று கிளம்பியவளை இழுத்து கை வளைவில் நிறுத்தியிருந்தான்.

“ஒரு வேலையும் செய்ய வேண்டாம்னு சொன்னா கேட்குறியாடி” என்றான் கண்டனக் குரலில்.

“வீட்டுக்கு வந்தவங்களை நாம தான கவனிக்கணும் மாமா. வருஷத்துல ஒரு நாள் வர்றாங்க. ரேணுமா அவங்க கூட இருக்கட்டுமே” என்றாள்.

“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது தீர்த்தா” என்றவன், மனைவி மகன் சகிதம் அறையை விட்டு வர, விசாலாட்சி ஆதியின் கையில் இருந்த பேரனைத் தான் பார்த்திருந்தார். அப்படியே அண்ணாமலையையும், ஆதியையும் கலந்த கலவையாய் இருந்த  கொள்ளுப் பேரன் மீது அலாதி பிரியம் அவருக்கு. சிவா பார்க்காத போது, இஷ்ட்டத்திற்கு கொஞ்சி மகிழ்ந்து கொள்வார். அவள் இருந்தால் அடக்கி வாசிப்பார். சிவாவும் கண்டு கொள்வதில்லை.

ஆனால் மகனின் பொறுப்பை ரேணுகாவைத் தவிர்த்து யாரை நம்பியும் ஒப்படைப்பதில்லை.

அனைவரும் கிளம்பி கோவிலுக்கு செல்ல, எப்போதும் போல் ஊரின் முதல் மரியாதை ஆதிகேசவனுக்கு கொடுக்கப்பட, அவனின் அருகில் நின்றிருந்த மகளின் பாந்தத்தில் நிறைவை உணர்ந்தார் கிருஷ்ணன்.

அபிஷேகம் முடித்து தந்தையிடம் வந்தவள்,

“எப்பப்பா வந்திங்க? “ என்றாள்,

“அப்பவே வந்துட்டேன்டா” என்றவர் ஆதவனை வாங்கிக் கொள்ள, அவனோ அவரிடம் சமத்தாய் சென்று விட்டான்.ஆதவன் பாதி நேரம் அவரிடம் தான் இருப்பது.

“ஆதவ் கண்ணா பெரிய பையனாகிட்டிங்களே” என்று பேரனைக் கொஞ்சிக் கொண்டு தனி உலகில் இருந்தவரை தொந்தரவு செய்யாது கணவனிடம் வந்து விட்டாள்.

கும்மி அடிக்கும் நிகழ்வு தொடங்க, பாடிக் கொண்டே கும்மி அடித்துக் கொண்டிருந்தவளை தள்ளியிருந்து ரசித்துக் கொண்டிருந்தான் ஆதி கேசவன்.

“ஏற்கனவே இந்த சீன் வந்திடுச்சு மாப்ள. அன்னைக்கு விழுந்தவன் தான்டா நீ” என்றான் பாண்டி சிரிப்புடன்.

“அடங்குடா டேய்! நீ மட்டும் என்ன? புதுப் பொண்டாட்டியை பார்க்கத் தான நிக்கிற?” என்றான் கிண்டலுடன்.

பாண்டிக்கும் கவிதாவிற்கும் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது.

“என்ன ஒரு வித்தியாசம்? அன்னைக்கு நீ மட்டும் பார்த்த. இன்னக்கு சிவா பாப்பாவும் பார்க்குது. அவ்வளவு தான் “ என்றான் பாண்டி சிரிப்புடன்.

“அது என்னவோ உண்மைதான் மச்சான்”என்றான் ஆதி.

“ஆமா சிவா பாப்பாக்கு பக்கத்துல நல்லா சைனாக்கார பிள்ளை மாதிரி ஒரு பிள்ளை நிக்கிதே அது யாரு மாப்ள? கும்மியும் அடிக்கத் தெரியாது போலயே?” என்றான் பாண்டி.

“அது தாய்மாமா பொண்ணு தான்டா” என்ற ஆதி, திரும்பி தம்பியைத் தேட, அவனோ எப்போதும் போல் நண்பர்களுடன் தான் நின்றிருந்தான்.

“என்ன விசாகா? நீ பார்த்த பொண்ணை உங்க அண்ணன் பிக்கப்பண்ணி குழந்தையும் ஆகிப் போச்சு. நீ இன்னும் சிங்கிளாவே சுத்துறியே?” என்று நண்பன் ஒருவன் கிண்டல் பண்ண,

“உங்க கூட சேர்ந்தா நான் என்னைக்குடா மிங்கிள் ஆகுறது. இல்ல ஆகத்தான் நீங்க விட்ருவிங்களா?” என்றவனின் பார்வை என்னவோ மாமன் மகள் மேல் தான்.

“இந்த புள்ளையாவது தேறுமா?” என்று நண்பர்கள் கிண்டல் செய்ய,

“என் மாமன் பெத்த மைனாடா அவ. இந்த தடவை சந்தேகமே வேண்டாம். அவ என் ஆளு” என்று சட்டையை பின்னால் தூக்கி விட, அவன் பார்ப்பதைப் பார்த்தவளோ,

“சிவாக்கா அந்த கிறுக்குப் பய இங்க தான் பார்த்துட்டு இருக்கான். அவன் கண்ணை நோண்ட போறேன் பாருங்க. இவனுக்கு என்னைக் கட்டிக்கனுமாம். இந்த கிறுக்கனை கட்டிக்க எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு?” என்று சிலுப்பிய தேவசேனாவைப் பார்த்துவிட்டு விசாகனைப் பார்த்த சிவாவோ பக்கென்று சிரித்துவிட்டாள்.

சிவா சிரிப்பதிலேயே தெரிந்து விட்டது விசாகனுக்கு. அவள் தன்னைப் பற்றி தான் ஏதோ பேசியிருக்கிறாள் என்று. கும்மி முடிந்து வந்தவளை மறைத்தவன்,

“பேசுடி பேசு, என்னைக்கா இருந்தாலும் மைனா நீ இந்த மாமனுக்குத் தான்டி”  என்றான்.

“போடா கிறுக்குப் பயலே” என்றவள் ரேணுகாவின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

“அத்தை அவன்கிட்ட சொல்லி வச்சுக்கங்க. என்னை கிண்டல் பண்ணிட்டே இருக்கான்” என்றவளை,

“விடுடா அத்தை அதட்டி வைக்கிறேன்” என்றார் ரேணுகா.

அனைத்தும் முடிந்து, இரவு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்திருந்தனர். வழமை போல் அன்று இரவும் மழை பிடித்துக் கொண்டது. எப்போதும் திருவிழா முடிந்ததும் மழை வருவது வழக்கம். சாரலாவது போட்டு விடும். அது அவர்களின் நம்பிக்கையாகவே இருந்து வருகிறது.

ஆதவன்  தூங்கியிருக்க, மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சிவ தீர்த்தா.

“இங்க என்னடி பண்ற?” என்றபடி வந்த ஆதி அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள, அவனுக்குள் பாந்தமாய் அடங்கிக் கொண்டாள்.

“என்ன இவ்வளவு அமைதி?” என்றான்.

“மனசு அமைதியா இருக்கு மாமா. அதான் நானும் அமைதியா இருக்கேன்” என்றாள்.

“இப்படி இருக்கக் கூடாதே?” என்றான் சிரிப்புடன்.

“அப்பறம்?” என்றாள்.

“அப்பறம் என்ன? அடுத்த பாப்பாவுக்கான வேலையைப் பார்க்க வேண்டியது தான்” என்றான் சிரிப்புடன்.

“உங்களை” என்று சிரித்தவளை, மேற்கொண்டு பேச விடும் எண்ணம் அவனுக்கில்லை.

வெளியே மழை பெய்து பூமி குளிர்ந்திருக்க, இங்கே இவர்களின் வாழ்வும் மனமும் குளிர்ந்திருந்தது.