அத்யாயம் 27:

அனைத்து நிகழ்வுகளும் முடிந்து,

சம்பிரதாயத்திற்கு சிவாவின் வீட்டிற்கு அனுப்பியவன், அன்றே சென்று அவளை மீண்டும் அழைத்து வந்து விட்டான்.

“நாளைக்கு கூட்டிட்டு வரேன் மாமா” என்று சொல்லியே அழைத்து சென்றிருந்தான்.

இதில் அறிவழகனுக்கும் காவேரிக்கும் கூட கொஞ்சம் வருத்தம் தான்.

“ஏன் மாமா? அப்பா பீல் பண்ணுவார்” என்றாள் சிணுங்கியபடி.

“ஹேய் நானும் தான்டி பீல் பண்ணுவேன். மண்டபம் முழுக்க அப்பா மக பெர்பாமன்ஸ் தான். நானும் விட்டுக் குடுத்து அமைதியா இருந்தேன்ல. இப்போ என் டேர்ன், மாமா விட்டுக் குடுக்கணும்” என்றான்.

அவளின் அலங்காரங்களை களைத்து, பட்டுப்புடவையை கழற்ற உதவி செய்தவன்,

“மிதமான சூட்ல  தண்ணி விளாவி வச்சிருக்கேன். குளிச்சுட்டு வா” என்றான். குளித்து முடித்து ஒரு மெட்டர்னிட்டி வியருடன் வந்தவளின் முகத்தில் சோர்வு அப்பட்டமாய் தெரிய, மிதமான சூட்டில் ஒரு டம்ளர் பாலை நீட்டியிருந்தான். குடித்து முடித்தவள், ஆசுவாசமாய் கட்டிலில் சாய்ந்து அமர, பாதங்கள் சற்று வீங்கியதைப் போல் இருந்தது.

அவளின் பாதங்களை மடியில் வைத்து இதமாய் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தான் ஆதி கேசவன். அவனையே பார்த்திருந்தவள் அவனைத் தான் ரசித்துக் கொண்டிருந்தாள். மேற்சட்டை இல்லாமல், உள் பனியனுடன் இருந்தவனின் கழுத்தில் இருந்த  செயின் எப்போதும் போல் அவன் வசீகரத்தைக் கூட்ட, அடங்க மறுத்த சிகையோ அவளின் கவனத்தை ஈர்த்திருந்தது.

“வச்ச கண்ணு வாங்கமா அப்படி என்னடி பார்வை” என்றான் சன்ன சிரிப்புடன்.

“இன்னைக்கு நீங்க அழகா தெரியறிங்க” என்றாள் மையலுடன்.

“அப்போ இத்தனை நாள் அப்படி தெரியலையா?” என்றான் சிரிப்புடன்.

“எப்பவும் அழகு தான். இன்னைக்கு என்னமோ கூடுதலா தெரியறிங்க. அப்படியே உங்களை கடிச்சுத் திங்கணும் போல இருக்கு” என்றாள்.

“நான் சும்மா இருக்கணும்னு நினைச்சாலும் நீ விட மாட்டடி” என்றவளைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டவன்,

“இப்படி என்னையவே சைட் அடிச்சு, பாப்பாவும் என்னை மாதிரியே பிறக்கப் போகுது பாரு” என்றான்.

“பாப்பா எல்லாம் இல்லை. பையன் தான். நீங்க வேணும்னா பாருங்க” என்றாள்.

“ஏன் பாப்பா வேண்டாமா?” என்றான்.

“அடுத்த பிளான்ல பார்த்துக்கலாம்” என்று அவள் சொன்ன விதத்தில் அவன் நமட்டு சிரிப்பு சிரிக்க,

“சிவா பாப்பா சந்தோஷமா இருக்கிங்களா?” என்றான் மென்மை கலந்த குரலுடன்.

“எனக்கென்ன மாமா? ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னைப் பார்த்துக்கத் தான் என் அப்பா, நீங்க இருக்கிங்களே. இன்னும் கொஞ்ச நாள்ல என் பையனும் வந்துடுவான். சோ, தீர்த்தா ஹேப்பியோ ஹேப்பி. எல்லாத்துக்கும் நீங்க மட்டும் தான் காரணம்” என்றவளை இமைக்காமல் பார்த்திருந்தான் ஆதி.

“என்ன அப்படி பார்க்குறிங்க?” என்றாள்.

“எனக்கு பொண்ணு பிறந்தா கிருஷ்ணன் மாமா அவர் பொண்ணை வளர்த்த மாதிரி தான் வளர்க்கணும்” என்றான் அவள் கண் பார்த்து.

“ஏன்?” என்றாள்.

“அதெல்லாம் தெரியாது, ஆனா அப்படித்தான்” என்றான்.

“பையன் பிறந்தா உங்களை மாதிரி தான் வளர்க்கணும், ரேணுமா உங்களை வளர்த்த மாதிரி” என்றாள் அவளும்.

மனைவியை மடியோடு இருத்தி, வயிற்றில் கை வைத்து குழந்தையையும் அணைத்திருந்தவன், அந்த நிமிடங்களை ரசித்து உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

அடுத்த இரண்டு மாதமும் வேகமாய் ஓடி மறைந்திருக்க, பத்தாவது மாதத்தின் தொடக்கத்திலேயே சிவாவிற்கு வலி வந்திருந்தது. நடு இரவில் மின்னல் வெட்டாய் வலி விட்டு விட்டு வலிக்க, அவளின் அசைவிலே அசௌகர்யத்தை உணர்ந்த ஆதி சட்டென்று முழித்திருந்தான்.

“என்னமா ஆச்சு?” என்றான் பதட்டத்துடன்.

“வலி வந்திருச்சுன்னு நினைக்கிறேன் மாமா. ரேணுமாவைக் கூப்பிடுங்க”  என்றாள்.

அவனோ அவளையும் தூக்கிக் கொண்டே வந்துவிட்டான். ரேணுகாவையும் அழைத்துக் கொண்டு  மருத்துவமனை விரைய, போகும் போதே கிருஷ்ணனுக்கும் அழைத்து தகவல் சொல்லியிருந்தான்.

“ஹாஸ்பிட்டல் வந்துட்டோம் தீர்த்தா, கொஞ்சம் பொறுத்துக்க” என்றவனை நிதானமாய் பார்த்தவள்,

“இப்போ ஏன் இவ்வளவு பதட்டப்படுறிங்க?” என்று அதட்டியிருந்தாள்.

“நீதானடி வலிக்குதுன்னு சொன்ன?” என்றான்.

“வலிக்காம எப்படி பிள்ளைப் பெக்க முடியும்?” என்றவளை விநோதமாய் பார்த்திருந்தான்.

“அவ தைரியமா இருக்கா. நீதான் ஆதி பயப்படுற” என்றார் ரேணுகா.

“இன்னும் கொஞ்ச நேரத்துல சுகப் பிரசவமே ஆகிடும்” என்று டாக்டர் சொல்ல, உள்ளே சென்றவளிடமிருந்து ஒரு சத்தமும் வரவில்லை.

ஆதிக்குத் தான் வெளியே டென்ஷன் ஏறிக் கொண்டே போக, கிருஷ்ணனும் வந்துவிட்டிருந்தார்.

“சிவாம்மா எங்க மாப்பிள்ளை” என்றவரின் முகம் முழுவதும் பதட்டம். இப்போது மாமனாரைத் தேற்றுவது அவனின் முறையாகிப் போனது.

“அண்ணா பயப்படுற அளவுக்கு ஒண்ணுமில்லை. சுகப்பிரசவமே ஆகிடும்ன்னு சொல்லியிருக்காங்க” என்று ரேணுகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குழந்தையுடன் வந்திருந்தார் செவிலியர்.

“வாழ்த்துக்கள் சார், உங்களுக்கு பையன் பிறந்திருக்கான்” என்று ரோஜாப்பூ குவியலாய் அவன் கையில் குழந்தையைக் கொடுக்க,

“சிஸ்டர் என் வொயிப் எப்படி இருக்கா?” என்றான் ஆதி.

“அழுது ஆர்ப்பாட்டம் பண்றவங்க மத்தியில, வலியைத் தாங்கிக்கிட்டு சத்தமே இல்லாம குழந்தை பெத்திருக்காங்க சார். நிஜமாவே பெரிய விஷயம் தான். கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு ரூம்க்கு ஷிப்ட் பண்ண உடனே நீங்க பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு சென்றார் அந்த செவிலியர்.

“மாமா” என்று கிருஷ்ணனின் கையில் குழந்தை கொடுக்க, அவருக்கோ சந்தோஷத்தில் கண்ணீர் வந்திருந்தது.

“உங்க பொண்ணு ஆர்டர், குழந்தையை உங்ககிட்ட குடுக்கனும்னு” என்றான் ஆதி.

“எனக்கு பேரன் பிறந்துட்டான் மாப்பிள்ளை” என்றவரின் முகம் பெருமையிலும் மகிழ்ச்சியும் விகசித்தது.

ரேணுகாவிடம் குழந்தையை நீட்டியவர்,

“குழந்தையைப் பாருமா, மாப்பிள்ளை ஜாடையும், மாப்பிள்ளையோட அப்பா ஜாடையும் அப்படியே இருக்கு” என்றார் கிருஷ்ணன்.

குழந்தையை பார்த்தவுடன் ரேணுகாவும் அப்படித்தான் நினைத்திருந்தார்.தன் வீட்டு வாரிசை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவருக்கு அப்படி ஒரு நிறைவு  மனதில்.

“வலியில உங்க பொண்ணு என் கையைப் பிடிச்சு அவ கூடவே இருக்கணும்னு சொல்லுவான்னு எதிர்பார்த்தேன் மாமா. எல்லாமே தலைகீழா நடக்குது” என்று  சிரித்தான் ஆதி.

“அது சின்ன வயசுல இருந்து அப்படியே பழகிட்டா மாப்பிள்ளை. வலிக்குதுன்னு சொன்னா நான் கவலைப்படுவேன்னு சொல்லியே புள்ளை வலிச்சாலும் வெளிய சொல்லாது. அதைத்தான் இன்னைக்கும் பண்ணியிருக்கும்” என்றார் கனிவுடன்.

சற்று நேரத்தில் அவளை அறைக்கு மாற்றியிருந்தனர். வதங்கிய கொடியாய் இருந்தவளின் வதனம் கண்டு ஆதியோ துடிக்க, களைப்பையும் மீறிய ஒரு சோபை அவள் முகத்தில்.

“பயந்துட்டிங்களா மாமா” என்றவளை அணைத்து முத்தமிட்டவன்,

“நான் பயந்துடுவேன்னு தான வலியில கூட நீ கத்தவே இல்லை” என்றான். இதழ் பிரித்து சிரித்தவள்,

“மாமா குழந்தை எங்க?” என்றாள்.

“என்கிட்டே தான்மா இருக்கான்” என்றபடி ரேணுகா உள்ளே வர,

“ரேணுமா” என்றவளுக்கு அப்போது தான் கண் கலங்கியது.

“என்னடா ஆச்சு?” என்றார் தவிப்பாய்.

“அம்மா இல்லாத குறையே தெரியாம நான் குழந்தை பெத்ததுக்கு நீங்க மட்டும் தான் காரணம்” என்றவளைத் தான் வாஞ்சையாய் பார்த்திருந்தார்.