மறுநாள் வீடு வந்த மகனையும் மருமகளையும் பார்த்த ரேணுகாவோ எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் போல் விசாலாட்சி தான் வாயைத் திறந்திருந்தார்.

“ஏன்ப்பா ஆதி நேத்து வீட்டுக்கு வரலை?” என்றவரின் கேள்வி அவனைத் தேக்க, விசாலாட்சியின் குரலில் முன்பிருந்த அந்த அதிகார தொணி சற்று மட்டுப்பட்டிருந்தது.

“தோட்டத்து வீட்லயே தங்கிட்டோம் பாட்டி” என்றவன் ரேணுகாவைப் பார்க்க,

“என்னப்பா?” என்றார்.

“நான் நேத்து கிருஷ்ணன் மாமா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டேன்ம்மா” என்று அவன் சொல்லி முடித்த நொடி, விசாலாட்சி அதிர்ந்து எழுந்திருந்தார். வேண்டுமென்றே தான் சொல்லியிருந்தான்.

“ஆதி” என்றவருக்கு பேச்சே வரவில்லை.

“எதுக்கு அதிர்ச்சி ஆகுறிங்க பாட்டி. நீங்க சேர்த்து வச்சிருக்கிறது கொஞ்ச நஞ்ச பாவம் இல்லையே? கால்ல விழுந்து கொஞ்சத்தை கரைச்சுக்கிட்டேன். நீங்க திரும்பவும் அதையே செய்யணும்னு நினைச்சா நானும் இதையே தான் செய்வேன்.

நீங்க கொண்டாடுற குடும்ப வாரிசு தலை குனியறதும், தலை நிமிர்ந்து நடக்குறதும் உங்க கையில தான் இருக்கு. உங்களை மிரட்டுறதுக்காக சொல்லை. ஆனா இது தான் நடக்கும். கிருஷ்ணன் மாமான்னு இல்லை, யாரா இருந்தாலும் மனுஷங்களை மனுஷங்களா மதிக்கக் கத்துக்கோங்க. துரோகியை வீட்டுக்குள்ள வச்சு, ஒருத்தரை இழந்ததும் போதும். உங்க மக வாழ்க்கை கெட்டதும் போதும். உங்க புருஷனோட ஆணவமும் அகம்பாவமும் தான் இத்தனை பேர் வாழ்க்கையை கெடுத்து, குடும்பத்தையே சின்னா பின்னமாக்கி வச்சிருக்கு.

இனியாவது இந்த வீட்ல எல்லாமே சரியா நடக்கனும்னு நினைக்கிறேன். நினைக்கிறேன் என்ன? நடக்கணும். அதையும் மீறி இன்னும் பழையபடி தான் இருப்பேன்னு நீங்க சொன்னா, பேரன்கிற முறையில உங்களுக்கோ உங்க புருஷனுக்கோ கொள்ளி கூட போட மாட்டான் இந்த ஆதி. நான் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாத போது ஒரு பேச்சுன்னு இந்த வீட்ல இருந்தா உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்கிற மாதிரி தான்” என்றான் உறுதியான குரலில்.

“உங்க தாத்தா பண்ணது எதுவும் எனக்குத் தெரியாது ஆதி” என்ற விசாலாட்சியைப் பார்த்தவன், ஒரு வெற்றுச் சிரிப்பு சிரித்துக் கொண்டான்.

தயங்கி நின்ற மணிமேகலையைப் பார்த்தவன்,

“என்ன அத்தை? உங்க பங்குக்கு ஏதாவது சொல்லனுமா?” என்றவன்,

“நானே சொல்லிடுறேன்..! இந்த வீட்ல தீர்த்தாவை நீங்க ஒரு வார்த்தை பேசக் கூடாது. என் அம்மா, என் பொண்டாட்டி, என் தம்பிக்கு அப்பறம் தான் எனக்கு எல்லாம். நீங்க எல்லாம் சுயநலமா இருக்கும் போது நானும் அப்படி இருக்குறது தான் சரியா வரும். இல்ல, அப்படித்தான் இருப்பேன்னு நீங்க சொன்னா, உங்க வீட்டுக்கே நீங்க கிளம்பலாம்” என்றவனை மேகலை பயத்துடன் பார்த்திருந்தார்.

“ஆதி வேண்டாம்ப்பா” என்றார் ரேணுகா.

“தெளிவு படுத்திடனும்மா. என் அம்மாவோ, பொண்டாட்டியோ இவங்க யாருக்கும் வேலைக்காரங்க இல்லை. மாமா இல்லைன்ற ஒரு காரணத்துக்காக அமைதியா இருக்கேன். இவங்க மட்டும் இவங்க அம்மா வீட்ல காலம் முழுசுக்கும் உட்கார்ந்து சாப்பிடனும். என் அம்மா அவங்களுக்கு வடிச்சு கொட்டனுமா? அவங்க உங்களுக்கு பயந்துகிட்டு செய்யலை, பாசத்துல செஞ்சாங்க. அதை எப்பவும் மறந்துடாதிங்க” என்ற ஆதியை சுபத்ரா பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தார்.

விசாலாட்சி எதுவும் பேசமுடியாமல் நிற்க,

“வயசான காலத்துல உங்களுக்கு எதுக்கு சிரமம்? நீங்களே கொத்து சாவியை தீர்த்தாகிட்ட குடுத்துடுங்க” என்றான் நேர்பார்வையாய்.

“மாமா அதெல்லாம் வேண்டாம்” என்றவளை ஒரே முறைப்பில் அடக்கியிருந்தான் ஆதி கேசவன்.

விசாலாட்சிக்கு வேறு வழியிருக்கவில்லை. இத்தனை வருடங்கள் அவள் மேல் வளர்ந்திருந்த வெறுப்பை சட்டென்று அவரால் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. சாவியை அவளிடம் நீட்ட,

“ரேணுமா” என்றாள் பாவமாய்.

“வாங்கிக்கடா..! நான் பண்ண அதே தப்பை நீயும் பண்ணாத. இப்பவும் இதை வாங்காம விட்டா, இந்த வீட்டை சரி பண்ணவே முடியாம போய்டும்” என்று ரேணுகாவும் சொல்ல, வேறு வழியின்றி வாங்கிக் கொண்டாள்.

“வீட்டுப் பொறுப்பு இருக்குன்றதுக்காக வீட்டுக்குள்ளயே இருக்கணும்னு அவசியம் இல்லை தீர்த்தா. வாசல் கூட்டி, கோலம் போட்டு,சமைச்சுப் போடுறதால மத்தவங்க வயிறு தான் நிறையும். உன் வாழ்க்கையோ, உன்னோட கனவோ நிறையாது. எல்லாத்தையும் நீயும் அம்மாவும் தான் செய்யணும்னு அவசியம் இல்லை. எல்லாரும் செய்யட்டும்” என்றவனை விசாகன் பிரமிப்பாய் பார்த்திருந்தான்.

“என்னாடா பார்வை” என்றான் தம்பியிடம்.

“நீங்க என்னை ரொம்ப இம்ப்ரஸ் பன்றிங்கண்ணா” என்றான்.

“நீ இம்ப்ரஸ் ஆகி என்னடா பன்றது? பாரு, ஆக வேண்டிய எப்படி நிக்கிறான்னு?” என்றவனின் இதழ்களில் அப்போது தான் சற்று இதமான புன்னகை வந்திருந்தது.

“பொய் சொல்லாதிங்கண்ணா..! முன்னாடியெல்லாம் சிவா உங்களைப் பார்க்குற பார்வை வெட்டவா குத்தவான்னு இருக்கும். ஆனா இப்பல்லாம் ஒரே காதல் பார்வையால்ல இருக்கு” என்றான் விசாகன் சிரிப்புடன்.

“அண்ணின்னு சொல்லிப் பழகு விசாகா” என்றார் ரேணுகா.

“எனக்கு மூத்தவங்க தானே ரேணுமா. பேர் சொல்லியே பேசட்டும். அண்ணின்னு சொன்னா எனக்குத் தான் ஒரு மாதிரி இருக்கும்” என்றாள் சிவா.

“அது சரியா வராது சிவா. விசாகா நீ அண்ணின்னு தான் சொல்லணும்” என்றார் ரேணுகா.

“சரிங்கம்மா”

நீண்ட நாட்களுக்கு பிறகு வெகு இயல்பான பேச்சு அந்த வீட்டில்.

“ஆதி தாரணி விஷயம்” என்று மேகலை இழுக்க,

“அது சரியா வராது மேகலை” என்று ரேணுகா பேச்சை முடித்திருந்தார்.

“அண்ணி” என்ற மேகலைக்கு கண்கள் கலங்கி விட்டது.

“என்ன ரேணுகா பேசுற? விசாகனுக்கு வெளிய பொண்ணு எடுக்குறதுக்கு நம்ம தாரணியை கட்டினா என்ன?” என்றார் விசாலாட்சி.

“மன்னிக்கணும் அத்தை. தாரணி மேல எனக்கு கோபமோ வெறுப்போ இல்லை. அவளும் இந்த வீட்டுப் பொண்ணு தான். நான் தூக்கி வளர்த்த பொண்ணு தான். அவளுக்கு செய்ய வேண்டியதை எந்த குறையும் இல்லாம ஆதி செய்வான். ஆனா தாரணியை வெளிய பார்த்து குடுக்குறது தான் சரின்னு எனக்குத் தோணுது.

சிவா, ஒரு நாள் விசாகன் கூட கார்ல வந்ததுக்கே சந்தேகப்பட்டு வார்த்தையை விட்ட மேகலை கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பா. எனக்கு என் பிள்ளைங்க வாழ்க்கையோட நிம்மதியும் சந்தோஷமும் தான் முக்கியம். அது மட்டுமில்லாம, என் புருஷனை கொன்னவங்க வீட்டுப் பொண்ணையே என் மகனுக்கு கட்டி வைக்கிற அளவுக்கு எனக்கு பெருந்தன்மை எல்லாம் இல்லை” என்றார் பட்டென்று.

“ரேணுமா” என்ற சிவா அவரை கெஞ்சுதலாய் பார்க்க,

“இது என்னோட முடிவு இல்லை சிவா. விசாகன் சொன்னதைத் தான் இப்போ நான் சொல்லிட்டு இருக்கேன்” என்றார் ரேணுகா. சிவா திரும்பி விசாகனைப் பார்த்திருக்க, ஆதியும் தம்பியைத் தான்  பார்த்திருந்தான்.

“நான் தான் அம்மாகிட்ட மாட்டேன்னு சொன்னேன் ண்ணா. தாரணியை ஒரு நாளும் நான் அப்படி நினைச்சதில்லை. அதுவுமில்லாம மேகலை அத்தையோட சந்தேக புத்தி தாரணிகிட்டயும் வராதுன்னு என்ன நிச்சயம்? அவளுக்கு வரலைன்னாலும் இவங்க கூட இருந்தே வர வைப்பாங்க. எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?” என்றவன்,

“நீங்க கல்யாணம் முடிச்சு வந்தப்போ, சிவாவை வார்த்தையால குத்திக் கிழிச்ச இவங்களை விடவும், உரிமையா வந்து சண்டை போட்டு, நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக கோபத்தை மறந்து அமைதியாகி, சிவாவை பேரனோட பொண்டாட்டியா ஏத்துகிட்ட அம்மாவோட தாத்தா பாட்டி எவ்வளவோ மேல்.

எனக்கு பொண்ணு பார்க்குறதா இருந்தா அம்மாவோட அண்ணன் பொண்ணையே பாருங்க. அதுவும் இப்ப வேண்டாம். என்னை நானே பொறுப்பானவனா மாத்திகிட்ட பிறகு” என்றவனின் தெளிவான பேச்சில் ஆதிக்கு சற்று நிம்மதி வந்திருந்தது.

“நிஜமாவே என் தம்பி தானாடா பேசுறது?” என்றான் ஆதி அவனின் தோளில் கைபோட்டபடி.

“நீங்க ஒரு அத்தை பொண்ணை கட்டிகிட்டிங்க. நான் ஒரு மாமன் மகளைக் கட்டிக்கிறேன். ரெண்டு பக்கமும் சமமா போய்டுவோம் ண்ணா” என்றான் விசாகன் சிரிப்புடன்.

“ம்மா, இவனை ஒன்னும் தெரியாதவன்னு நம்ம தான் நம்பிட்டு இருக்கோம்” என்று ஆதி ரேணுகாவிடம் சொல்ல,

“எனக்குக் கூட தோணலை ஆதி” என்றார் ரேணுகா.

“எந்த நேரமும் இந்த வீட்டு மருமகளாவே யோசிக்காதிங்கம்மா. கொஞ்சம் எங்களோட அம்மாவாவும் யோசிங்க. அப்பத்தான் இப்படியெல்லாம் தோணும்” என்றான் விசாகன்.

“என் சின்ன பையனும் தேறிடுவான் போலயே ஆதி” என்று ரேணுகா சிரிக்க, மணிமேகலையின் முகமோ தொங்கிப் போனது.

“வருத்தப்படாதக்கா! ஆதி அப்படி எல்லாம் விட்டுட மாட்டான். தரணிக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுப்பான்” என்றார் சுபத்ரா.

“நீ நினைச்சதை சாதிச்சுட்டல்ல சுபா. அப்போ அப்படித்தான் பேசுவ. யாரும் என் பொண்ணுக்கு வாழ்க்கையை அமைச்சுத் தரணும்னு இல்லை. என் பொண்ணுக்கு நான் இருக்கேன்” என்று வெடுக்கென்று சொன்னவர் அங்கிருந்து சென்று விட்டார்.

“விடு சுபா, மேகலையோட குணம் தான் தெரிஞ்சதாச்சே” என்றார் ரேணுகா.

அனைவரும் சென்ற பிறகும் விசாலாட்சி அங்கேயே இருக்க, அவரின் அருகில் சென்ற சிவாவோ,

“என்ன கிழவி? ரொம்ப சோகமா இருக்குற மாதிரி தெரியுது?” என்றாள் நக்கலாய்.

“என்னடி நக்கலா?”

“ஆமா, நக்கலே தான். யாரு இல்லைன்னு சொன்னா?” என்றவள்,

“என்ன பாட்டி? இன்னும் அடங்காம அப்படியே இருந்தா எப்படி பாட்டி? இது உங்களுக்கே நல்லா இருக்கா பாட்டி. இப்படியே இருந்தா பிபி எகிறி, போய்ச் சேர்ந்துடுவிங்க பாட்டி” என்று அவள் போட்ட ‘பாட்டியில்’ கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தார் விசாலாட்சி.

“எது எப்படி இருந்தாலும் உன்னை எந்த காலத்துலயும் நான் ஏத்துக்கவே மாட்டேன்டி” என்றார்.

“அது தான் எனக்கும் வேணும் கிழவி. எங்க நீ திருந்தி, உடனே நல்ல விதமா பெர்பார்ம் பண்ணிடுவியோன்னு நினைச்சுட்டேன். நீ திருந்தவும் மாட்ட, வருந்தவும் மாட்டன்னு எனக்கு ஏற்கனவே தெரியும். நீயும் சட்டுன்னு திருந்திட்டா எனக்கும் இந்த வீட்ல போர் அடிக்கும் கிழவி. ஒரு சுவாரஸ்யமே இருக்காது.  அதனால நீ இப்படியே தான் இருக்கணும்” என்றாள் சிரிப்பை அடக்கி.

விசாலாட்சி அவளை முறைக்க,

“உன்னோட வீக்னசே உன் பேரன் தான்றது எனக்கு இன்னைக்குத் தான் தெளிவா தெரிஞ்சது கிழவி. ஆனா பார்த்தியா அவர் இனி எனக்கு புருஷன் மட்டும் தான். உன்னோட பேரன் எல்லாம் கிடையாது” என்றாள்.

“அவனை என்கிட்ட இருந்து பிரிச்சிடலாம்னு கனவு கூட காணாத” என்றார் விசாலாட்சி.

“உனக்கு நல்ல விதமாவே யோசிக்க வராதா கிழவி. உன் பேரனை நான் வச்சிக்கிறேன். சீக்கிரம் உனக்கு கொள்ளுப் பேரனை கையில குடுக்குறேன்னு அர்த்தம்” என்றாள் நமட்டுச் சிரிப்புடன்.

“அதுக்குள்ளவா?” என்று விசாலாட்சி அதிர்ந்து நிற்க,

“இன்னும் இல்லை கிழவி. ஆனா உன் பேரன் வேகத்துக்கு சீக்கிரமே வாந்தி எடுத்திடுவேன்” என்று சீண்டியவளை பார்த்த விசாலாட்சி கொஞ்சம் மிரண்டு தான் போனார்.

“போ..போ வயசான காலத்துல ஷாக்கை குறை” என்று முந்தியையும் கொத்து சாவியையும் இடுப்பில் சொருகியபடி சென்றவளைத் தான் பார்த்திருந்தார்.

மேலே அறைக்கு வந்தவளின் ஜடையைப் பிடித்து இழுத்திருந்தான் ஆதி கேசவன்.

“வலிக்குது, விடுங்க”

“இப்ப ஏன்டி பாட்டிகிட்ட வம்பு வளர்த்துட்டு வந்த?” என்றான்.

“இந்த கிழவி அடங்கவே மாட்டேங்குது மாமா. அதான் ஷாக் ட்ரீட்மென்ட் குடுத்துட்டு வந்தேன்” என்றாள்.

“நீ குடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்டை பார்த்தேன்” என்றான்.

“எல்லாத்தையும் கேட்டுட்டிங்களா?” என்றாள் அசட்டு சிரிப்புடன்.

“ம்ம்..! பேரனோட வேகத்துக்கு வாந்தி எடுப்பேன்னு நீ சொன்ன வரைக்கும்” என்றான் நமட்டு சிரிப்புடன்.

“நான் உண்மையைத் தான சொன்னேன்” என்றவளுக்கு முகம் சிவக்க,

“திரும்பவும் டெஸ்ட் பண்ணி பார்த்திடுவோமா?” என்றான்.

“ஆளை விடுங்க சாமி. ஏற்கனவே ராத்திரி எல்லாம் தூங்கலை. எனக்குத் தூக்கம் வருது. உங்களுக்கு நிறைய வேலை இருக்கு. நீங்க கிளம்புங்க” என்றாள்.

“நானும் தான் தூங்கலை, எனக்குத் தூக்கம் வராதா” என்று அவளை இடையோடு இழுத்தவன்,

“சொருகி இருக்க முந்தியோட இப்போ இந்த சாவியும் சேர்ந்துக்கிச்சுடி” என்றவனின் குரலில் இருந்த பேதமையை உணர்ந்தவள்,

“எனக்கு வேலையிருக்குப்பா” என்று அவன் பிடியில் இருந்து விலகி ஓடியவளை சிரிப்புடன் ரசித்திருந்தான் ஆதி கேசவன்.