“போனதெல்லாம் எதுக்கு மாப்பிள்ளை,இனி நடக்குறது நல்லபடியா நடந்தா சரித்தான்” என்றவரை ஆழ்ந்து பார்த்தவன்,

“எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் மாமா?

“கேளுங்க”

“இல்ல, எப்படி எல்லாத்தையும் கடந்து வந்திங்க மாமா? இப்பவும் எப்படி எதையும் வெளிய காட்டாமா இப்படி நிதானமா இருக்கீங்க? உங்களுக்கு சுபத்ரா அத்தை மேல கோபமே வரலையா?” என்றவனின் குரலில் இருந்த உணர்வுகளை கிருஷ்ணனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“மத்தவங்க மேல கோபப்படுறதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு மாப்பிள்ளை? அதுவுமில்லாம உங்க வீட்டு ஆளுங்க தான் எனக்கு காலத்துக்கும் ஆயுள் தண்டனை மாதிரி கொடுத்துட்டாங்களே? காதலிச்சு கல்யாணம் பண்ணின, என்னோட குழந்தைக்கு தாயான என் மனைவியை.. இத்தனை வருஷம் இன்னொருத்தனுக்கு மனைவியா அவனோட குழந்தைகளுக்கு தாயா கண்ணு முன்னாடி நடமாடுறதைப் பார்க்குற வேதனை எல்லாம் சொன்னாப் புரியாது மாப்பிள்ளை. அதெல்லாம் மனசுக்குள்ள எப்பவுமே ஆறாத ரணம். அது மாறவும் மாறாது.

யாருக்கு வேணும்னாலும் காதல் வரலாம், ஆனா ஏழைக்கும், ஒரு கோழைக்கும் காதல் வந்திடவே கூடாது மாப்பிள்ளை” என்றவரின் பலநாள் ரணங்கள் வெளியே வந்து கொண்டிருந்தது.

“மாமா” என்ற ஆதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆறுதலாய் சொல்லப்படும் வார்த்தைகளுக்கு வலிக்காது. ஆனால் கேட்பவர்களுக்கு வலிக்குமே என்று அமைதியாய் இருந்தான்.

“நீங்க என்ன கேட்க வரீங்கன்னு புரியுது” என்று நிறுத்தியவர்,

“வாழ்க்கையில ஒரு தடவை பட்ட ரணமே போதும்னு தான் வேற வாழ்க்கையை பத்தி யோசிக்கலை மாப்பிள்ளை. எனக்குத்தான் ராசாத்தி மாதிரி என் பொண்ணு இருக்காளே! வாழ்க்கையில இதை விட என்ன வேணும்? என் பொண்ணு என்னைப் பெத்த தாய்க்கும் மேல!” என்றவருக்கு கண்ணீர் வந்துவிட,

“மாமா” என்ற ஆதி அவரை இறுக அணைத்துக் கொண்டான். ஏனோ அவரின் கண்ணீரைப் பார்த்தவனுக்கும் அவனறியாமலே கண்ணீர் வந்திருந்தது. அவரின் மனவலிக்கு அவன் காரணமில்லாமல் இருந்தாலும், ஏனோ நடந்த அனைத்திற்கும் அவனே பொறுப்பு என்பதைப் போன்ற ஒரு குற்ற உணர்வு அவனுக்குள். அவன் குடும்பம் சார்ந்தவர்களால் தானே அவருடைய வாழ்க்கையே போனது என்பதைப் போன்ற எண்ணம் ஆதிக்கு.

அவரை அணைத்திருந்தவன் பட்டென்று அவர் காலில் விழுந்து விட்டான். ஆதியின் செயலில் அதிர்ந்த கிருஷ்ணன்,

“எய்யா ஆதி” என்று பதறிவிட்டார்.

“மாமா” என்று ஓடி வந்த சிவ தீர்த்தாவும் பதறி நிற்க,

“என்ன மாப்பிள்ளை பண்றிங்க நீங்க? ஊரே உங்க கண்ணசைவுக்கு கட்டுப் பட்டு நிக்குது. நீங்க போய் என் கால்ல விழுந்துட்டு” என்று பதறி தூக்க, அவரை கையெடுத்து கும்பிட்டிருந்தான் ஆதி கேசவன்.

“மன்னிச்சிடுங்க மாமா..! நடந்த விஷயத்துல என்னோட சம்பந்தம் எதுவும் இல்லைன்னாலும், என்னோட சம்பந்தப்பட்டவங்கனால தான் உங்களுக்கு இப்படி ஒரு துன்பம். ஒரு மன்னிப்பால நடந்ததை சரி செய்ய முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா இப்பவும் இதை கேட்காம இருந்தா என் மனசாட்சியே என்னை கொன்னுடும் மாமா” என்றனைப் பார்த்து தீர்த்தா அழுது விட்டாள்.

”என்ன பண்றிங்க நீங்க?” என்றவளுக்கு அவன் அப்படி கிருஷ்ணன் காலில் விழுந்ததைப் பார்த்தவுடன் மனதிற்குள் பிசைந்தது.

அவளை இழுத்து கைவளைவில் நிறுத்திக் கொண்டவன்,

“இதுல என்ன இருக்கு தீர்த்தா, என் மாமனார் தான?” என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்.

“இருந்தாலும் சட்டுன்னு இப்படியெல்லாம் பண்ணாதிங்க மாப்பிள்ளை.யாராவது பார்த்தா என்ன நினைக்க மாட்டாங்க? என் மாப்பிள்ளை எப்பவும் போல தலை நிமிர்ந்தே தான் இருக்கணும்” என்றவரைப் பார்த்த ஆதிக்கு அவரை வியக்காமல் இருக்க முடியவில்லை. சிவாவின் தெளிவும், தீர்க்கமும் யாரிடம் இருந்து வந்திருக்குமென்று இப்போது அவனுக்கு நன்றாக புரிந்தது.

“உங்களுக்குன்னு எந்த ஆசையுமே இல்லையா மாமா?” என்றான் ஆதூரமாய்.

“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன் மாப்பிள்ளை. நான் வாழாத  ஒரு வாழ்க்கையை என் பொண்ணு வாழனும். அவ வாழ்ற வாழ்க்கையில தான் என்னோட இத்தனை வருஷ வாழ்க்கையும், மிச்சம் இருக்க வாழ்க்கையும் அடங்கியிருக்கு” என்றவரை,

“அப்பா” என்று கட்டிக் கொண்டவள் கண்ணீர் விட,

“அப்பா உண்மையை தான்டா சொல்றேன்” என்றவர் அவளின் கண்ணீரை துடைத்துவிட, அவளை தன்னருகில் இழுத்துக் கொண்டான் ஆதி.

“நீங்க சொன்னதுக்காகன்னு இல்ல மாமா. என் வாழ்க்கையில எல்லாமே இவ தான். நீங்க வாழாத ஒரு வாழ்க்கையை கண்டிப்பா உங்க பொண்ணு வாழ்வா. இந்த ஆதியோட சிவமே உங்க பொண்ணு தான்” என்றவனைப் பார்த்திருந்த கிருஷ்ணனுக்கு மனம் நிறைந்து போனது.

“அப்பா பசிக்குது” என்றாள் சிவா.

“மாப்பிள்ளையை கூட்டிட்டு வாம்மா சாப்பிடலாம்” என்றவர் விலகிச் செல்ல,

“மாமா” என்றவளைத் தான் பார்த்திருந்தான்.

“ம்ம்”

“வாழ்க்கையில எல்லாமே கிடைச்சுட்டா நமக்கு ஒரு அலட்சியம் வந்திடும் தான? அதனால தான் எனக்கு நிறைய விஷயம் கிடைக்கலைன்னு நினைச்சிருக்கேன். ஆனா இப்படி கிடைக்காத எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு நீங்க கிடைப்பிங்கப்பிங்கன்னு நினைக்கவேயில்லை.இனி யார் கால்லையும் நீங்க விழக் கூடாது ” என்றாள் கண்டிப்பாய்.

“அப்படியா?” என்றான் ஆழ்ந்த பார்வையுடன்.

“உங்க பார்வையே சரியில்லை” என்றாள்.

“இன்னைக்கு வீட்டுக்கு போகனுமான்னு யோசிக்கிறேன். லொக்கேஷன் நல்லா இருக்கு. என் பொண்டாட்டியும் செம்மையா இருக்கா” என்றான் மந்தகாச புன்னகையுடன்.

“அதுக்கு??” என்று அவள் முறைத்திருக்க,

“தோட்டத்து வீடு, சில்லுன்னு காத்து,ஜன்னலை சாத்துன்ற கதை தான்” என்றான்  சிரிப்புடன்.

“உங்களை ரெண்டு சாத்து சாத்தினா சரியா போய்டும்” என்றாள் சிவா.

“உனக்கு சாமர்த்தியமே பத்தலடி என் அத்தை பெத்த மகளே! முந்தானையில முடிஞ்சு வச்சுக்கறேன்னு சொன்னவ என்னைக்காவது முடிஞ்சு வச்சிருக்கியா? உன் சேலையைத் தேடிக் குடுக்குறது தானடி எனக்கு தினமும் வேலையா இருக்கு. சேலையவே பத்திரமா வச்சுக்கத் தெரியலை, இதுல இவ என்னை முடிஞ்சு வைக்கப் போறாளாமா?” என்றவன் தலைகோதி நமட்டுச் சிரிப்பு சிரித்திருக்க,

“உங்களை” என்று முகம் சிவந்திருந்தவள்,

“நான் இனிமேல் புடவையே கட்ட மாட்டேன்” என்றாள் முறைப்பாய்.

“இன்னும் வசதியா போச்சு. எனக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. தேடித் தர்ற வேலையும் மிச்சம் பாரு”  என்றவன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்திருந்தான்.

“மானத்தை வாங்காதிங்க” என்றவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவனைப் பார்த்தவளின் பார்வையில் உணர்வுகள் பொங்கி வழிய,

“இப்படி பார்த்தே ஆளை மயக்குறது என்னமோ நீதான்டி. ஆனா, கடைசியில பழி மட்டும் என்மேல” என்றவனை,

“பேசாம வாங்க! பசிக்குது” என்று இழுத்துச் சென்றிருந்தாள்.

அவர்களின் அந்நியோன்யத்தை பார்த்திருந்த கிருஷ்ணனனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? மனதில் அப்படி ஒரு அமைதியும், நிம்மதியும் அவருக்கு.

ஆதியின் விருப்பம் போல் அன்று இரவு அங்கு தங்கிவிட்டு தான் சென்றனர்.