அத்யாயம் 25:

சிவாவின் வீட்டிற்கு வந்திருந்தனர் ஆதியும் சிவாவும். வந்தவளை பிடித்துக் கொண்டனர் காவேரியும், பேச்சியும்.

“ஒரு ஊருக்குள்ள இருக்குறன்னு தான் பேரு? பார்க்க முடியுதா சிவா உன்னை?” என்ற காவேரிக்கு சற்று மனத்தாங்கல் தான்.

“அப்படி எல்லாம் இல்ல காவேரிம்மா! அதான் இப்ப வந்துட்டேனே? அறிவு அப்பா எப்ப வர்றார்? போன் பண்ணாரா?” என்றாள் சலுகையுடன்.

“இன்னும் ரெண்டு மாசத்துல சர்வீஸ் முடியுதுல சிவா. அதானால தான கல்யாணத்துக்கு கூட வர முடியலை. வந்துடுவார்டா” என்றார் காவேரி.

“இனி என்னடா விக்கி? உனக்கு ஒரே ஜாலி தான்” என்று தம்பியின் தலையை கலைத்து சீண்ட, காவேரியோ அவளிடம் எதையோ சொல்ல தயங்கி நிற்பதை போன்று இருந்தது.

“என்னாச்சும்மா?” என்றாள் கேள்வியாய்.

“அது சிவா, உங்கப்பா இப்போ வீட்டுக்கே வர்றதில்லை. தோட்டத்துலையே இருந்துக்கிறார். விக்கிட்ட சாப்பாடு குடுத்துவிட்டாலும், வேண்டாம்னு சொல்லிடுறார். அவரே அங்க சமைச்சுக்கிறார் போல. நீ என்னை எதுவும் நினைச்சுக்காத சிவா” என்றார் தயக்கத்துடன்.

“அது எனக்கே தெரியும் காவேரிம்மா. அப்பாவைப் பார்க்க அடிக்கடி போறேனே? அறிவு அப்பா வர்ற வரைக்கும் தான காவேரிம்மா. விடுங்க பார்த்துக்கலாம்” என்றாள்.

“என்னவோ சிவா, இப்படியே தனியா கிடந்தது அல்லல் படனும்னு அவன் தலையில எழுதியிருக்கு” என்று பேச்சியும் ஆதங்கப்பட்டார்.

அவர்கள் பேசுவதை கேட்டும், கேட்காதவனைப் போல் இருந்தான் ஆதி கேசவன்.

“உள்ள வாங்க மாமா” என்று அவள் அழைக்கவும் வீட்டினுள் சென்றவனுக்கு பழைய நியாபகங்கள்.

“என்னாச்சு?” என்றாள்.

“சின்ன வயசுல இங்க வந்திருக்கேன். அதுக்கு அப்பறம் நம்ம கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு வந்தேன். ஆனா உள்ள வரலை. அப்போ பார்த்தது தெளிவா இல்லைன்னாலும் கொஞ்சம் நியாபகம் இருக்கு தீர்த்தா” என்றான்.

“சின்ன வயசுல யாரைப் பார்க்க வந்திங்க?” என்றாள் சிரிப்புடன்.

“எல்லாம் பாண்டியோட சிவா பாப்பாவைப் பார்க்கத்தான்” என்றவனின் முகத்தில் மென்னகை.

அவளுக்குத் தேவையான ஒரு சான்றிதழை எடுக்கத்தான் வந்திருந்தனர். அதை எடுத்துக் கொண்டவள்,

“கிளம்பலாமா?” என்றாள்.

“நீங்க எல்லாம் ஒண்ணா இருந்ததால தான் உங்கப்பாவை தப்பா பேசுனாங்களோ?” என்றான் ஆதி யோசனையாய்.

“வேற யாருக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லை, உங்க வீட்டு ஆளுங்களைத் தவிர. இது பொது சுவரு வச்சு கட்டியிருக்க ரெண்டு வீடு. நான் இருக்க வரைக்கும் சமையல் எல்லாம் ஒன்னு தான். பேச்சி பாட்டி அவங்க மக கூடத்தான் இருக்காங்க. அப்பப்ப அவங்க பையன் வீட்டுக்கு போயிட்டு வருவாங்க.

இப்போ நான் இல்லாததால அப்பா வீட்டுக்கு வர சங்கடப்பட்டுகிட்டு அங்கயே இருக்காங்க. நான் இருக்கும் போதே பல நாள் தோட்டத்துலையே தான் தங்கிப்பார். பிடிக்காதவங்க எது பண்ணாலும் குத்தம் தான மாமா. அப்படித்தான் உங்க வீட்டு ஆளுங்களுக்கு என் அப்பா எது பண்ணாலும் தப்பாவே தெரிஞ்சிருக்கு” என்றாள்.

“தெரியாம கேட்டுட்டேன்மா. பாடம் எடுக்க ஆரம்பிச்சுடாத. மாமனார் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு ஒரு கவனிப்பும் இல்லை” என்றான் முறுக்கிக் கொண்டு.

அவனை முறைத்தவள்,”அதான் மாமனாரோட மக தினமும் கவனிக்கிறேனே? அப்பறம் என்ன?” என்றாள் புருவம் உயர்த்தி.

“எங்க பத்த மாட்டேங்குதே?” என்றான் அவளை ஏற இறங்க பார்த்தபடி.

“எனக்கு எங்கப்பாவைப் பார்க்கணும். தோட்டத்துக்கு வண்டியை விடுங்க” என்றாள் சிலுப்பிக் கொண்டு.

“இப்படியெல்லாம் சிலுப்பாதடி, அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை” என்று அவளை சீண்டியபடியே கிருஷ்ணனைப் பார்க்க அழைத்துச் சென்றிருந்தான் ஆதி.

மாலை ஆறுமணிக்கு மேல், அந்த வயல்வெளி கடந்து செல்வதே பேரானந்தமாக இருந்தது.

“வாங்க மாப்பிள்ளை, வாடாம்மா” என்ற கிருஷ்ணன் சமைத்துக் கொண்டிருந்தார்.

“பகல் முழுசும் இங்க வேலையும் பார்த்துட்டு, இப்படி நீங்களே சமைச்சு சாப்பிடனுமாப்பா? அதான் காவேரிம்மா சமைச்சு குடுத்து விடுறாங்கல்ல. ஏன் வேண்டாம்னு சொன்னிங்க?” என்றாள் சிவா மனத்தாங்கலுடன்.

“எதுக்குமா காவேரிக்கு சிரமம்?” என்றார் கிருஷ்ணன்.

“அறிவப்பா பங்கு தோட்டத்தையும் நீங்க தான பார்க்குறிங்க? சமைச்சு குடுக்குறதால என்ன ஆகிடப் போகுது அவங்களுக்கு?” என்றவள்,

“தள்ளுங்க நான் பண்றேன்” என்றாள்.

“நீ அப்படியே உட்காருடா சிவாம்மா. இன்னைக்கு அப்பா செய்யறேன். எத்தனை நாள் ஆச்சு என் பொண்ணுக்கு சமைச்சுக் குடுத்து” என்றவரின் குரலில் அத்தனை அன்பு வழிந்திருந்தது.

ஆதி அவர்கள் இருவரையும் இமைக்க மறந்து பார்த்திருந்தான். ஏனோ தகப்பனையும் மகளையும் இப்படி பார்க்கும் போது, அவன் மனதிற்குள் எழும் வேதனையை சமீப காலமாய் உணர்ந்திருந்தான்.

வீட்டில் நடந்த விஷயங்களை ஏற்கனவே சிவாவின் மூலம் அறிந்திருந்தார் கிருஷ்ணன். அவருக்கும் வருத்தமும், வேதனையும் எழத்தான் செய்தது. காலம் கடந்து தெரியும் உண்மைகளால் ஒரு பயனும் இல்லை என்பதே அவரின் எண்ணமாக இருந்தது.

“என்னாச்சு மாப்பிள்ளை? எங்களையே பார்த்துட்டு இருக்கீங்க?” என்றபடி வந்தவரைப் பார்த்து புன்னகை புரிந்தவன்,

“எப்படி மாமா உங்களால இப்படி இருக்க முடியுது?” என்றான். அவரோ ஆச்சர்யத்துடன் அவனைப் பார்க்க,

“என்னாச்சு?” என்றான் புரியாமல்.

“இத்தனை வருஷம் கழிச்சு தான ஆதி உனக்கே என்னை மாமான்னு கூப்பிடனும்னு தோணியிருக்கு. சின்னப் பையன்ல என்னை மாமான்னு கூப்பிட அவ்வளவு யோசிச்ச? இதோ இப்ப தான் ஆதி வாயில இருந்து மாமான்ற வார்த்தையே வருது” என்றார் அமைதியான குரலில்.

“அப்படியெல்லாம் நான் நினைச்சது இல்ல மாமா, சின்ன பிள்ளையில தயக்கம். இப்போ குற்ற உணர்ச்சி. வேற எந்த காரணமும் இல்லை” என்றவனுக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

“நடந்ததை எல்லாம் சிவா சொல்லி கேள்விப்பட்டேன் மாப்பிள்ளை. மனசுக்கு கஷ்ட்டமாத்தான் இருக்கு. ஆனா உண்மை என்னைக்கா இருந்தாலும் வெளிய வந்து தான ஆகணும்” என்றார்.

“இப்ப கூட அது உங்களால தான் வெளிய வந்திருக்கு மாமா. நீங்க சிவாவை எனக்கு கட்டித் தரலைன்னா, இப்போ வரைக்கும் எல்லாரும் அந்த  துரோகியோட ஒன்னாத்தான இருந்திருப்போம். அவங்க வேண்டாம்னு ஒதுக்குன ஒருத்தியால தான் அவங்க குடும்பத்துக்கு இன்னைக்கு விமோச்சனமே கிடைச்சிருக்கு” என்றான் உணர்வற்ற குரலில்.