“ரேணுகா தான் அத்தை..! இத்தனை வருஷமும் அமைதியா இருந்த அதே ரேணுகா தான். நீங்க செஞ்ச மொத்தப் பாவத்தோட அறுவடைக்கும் என் புருஷனை பலியா கொடுத்த அதே ரேணுகா தான்.
இப்போ உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே? நல்லா இருந்தவளோட வாழ்க்கையைக் கெடுத்து, ஒரு கேடுகெட்டவனுக்கு கட்டி வச்சு, அது மூலமா கௌரவத்தை காப்பாத்திக்க நினைச்சிங்கல்ல. அதான் இந்த கேடுகெட்டவன், இந்த வீட்டோட ஆணிவேரா இருந்தவரையே கொன்னுட்டான்.யார் கண்டா? என் புருஷனையும் மாமா தான் கொல்லச் சொன்னாரோ என்னவோ?” என்றார் விரக்தியாய்.
“இந்த ஆளை சும்மா விடக் கூடாதுண்ணா!” என்று கோபமாய் சொன்ன விசாகனைப் பார்த்த ஆதி,
“இதை நீ சொல்லனுமா விசாகா? ஏற்கனவே போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன். இந்த ஆளு காலத்துக்கும் கம்பி தான் எண்ணனும்?” என்றான் ஆதி.
அடுத்த சில மணி நேரங்களில் மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார் மகாதேவன். யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று இறுமாப்பாய் இருந்தவரின் எண்ணத்தில் இடி விழுந்திருந்தது. சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆகியிருந்தாலும், எப்படியும் அவர் வெளியே வர முடியாதபடி செய்வதில் முனைப்புடன் இருந்தான் ஆதி.
நடந்த சம்பவங்களில் இருந்து ரேணுகாவை மீட்டெடுப்பது கடினம் என்று ஆதி நினைத்திருக்க, அவரோ வெகு இயல்பாய் இருந்தார். முகம் மட்டும் உணர்வுகள் துடைக்கப்பட்டிருந்தது. விசாலாட்சியுடன் அதிகம் பேசுவதெல்லாம் இல்லை.
விசாலாட்சியோ அறைக்குள்ளேயே முடங்கியிருந்தார். யாரின் முகத்தையும் பார்த்து அவரால் பேச முடியவில்லை. அந்த வீடே எப்போதும் போல் அல்லாமல் ஒரு வித நிசப்தத்துடன் துக்கம் விழுந்த வீட்டைப் போல் தான் இருந்தது.
“என் மேல கோபமா ரேணுமா?” என்ற சிவாவின் கேள்வியில் ரேணுகா புரியாமல் பார்த்தார்.
“உன்மேல ஒரு தப்பும் இல்லடா. அந்தாளு மேல நீ காட்டுன வெறுப்பை நான் தான் தப்பா நினைச்சுட்டேன். இந்த வீட்ல இருக்குறவங்க பண்ணதுக்கு அந்த ஆளு என்ன பண்ணுவார்னு கூட யோசிச்சிருக்கேன்? ஆனா உன் வெறுப்புக்குப் பின்னாடி இத்தனை காரணம் இருக்கும்னு தெரியாம போய்டுச்சுடா” என்றார் நிதானமாய்.
“ரேணுமா” என்றவள் கலங்கிய கண்களுடன் பார்க்க,
“எல்லாம் உனக்கும், உன் அப்பாவுக்கும் பண்ண பாவத்துக்குக்கான தண்டனை தான் இது. பொம்பளைங்க கண்ணீருக்கு தான் வலியும் வலிமையையும் இருக்குமா என்ன? ஆம்பளைங்க கண்ணீர்னா அலட்சியமா என்ன? கிருஷ்ணன் அண்ணா எத்தனை நாள் கண்ணீர் விட்டிருப்பாரு. அதுக்கான பலன் தான் இது. இதை நான் அப்படி தான் எடுத்துகிட்டேன் சிவா.
ஆதி அப்பா இறந்தப்பவே இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா தான் ரொம்ப நொறுங்கிப் போயிருப்பேனோ என்னவோ? காலம் ஏற்கனவே ஆத்தி வச்சிருந்த காயம் தான? ஆறிப் போயிருக்கிற காயத்தை கீறி விட்டதால வலி ஒன்னும் பெருசா இல்லை” என்றவரைத் தான் இமைக்காமல் பார்த்திருந்தாள் சிவா.
“என்னடா?” என்றார் சோகப் புன்னகையுடன்.
“அன்னைக்கு நீங்க சொன்னிங்களே உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்திருக்கலாம்னு” என்றாள்.
“ஆமா”
“எனக்கு உங்களை மாதிரி ஒரு அம்மா ஏன் இல்லாம போனாங்க ரேணுமா” என்றவள் அவரைக் கட்டிக் கொள்ள,
“அதான் இப்ப நான் இருக்கேனே? அப்பறம் என்னடா?” என்றவருக்கு அவள் தான் ஆறுதல் இப்போதைக்கு.
“பெத்தவங்க புத்தி தெரிஞ்சும் காதலிச்சது அவங்க தப்பு. மாட்டேன்னு சொன்னவரை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணது அவங்க தப்பு. அதுக்கப்பறமும் அவங்க நிலையான புத்தியோட இல்லையே? காதலிக்கிறப்போ தெரியலையா ரேணுமா, என் அப்பாவோட நிலைமையும், கடமைகளும். உறுதியே இல்லாத ஒருத்தவங்களுக்கு வந்த காதலுக்கு பலியாடு என் அப்பாவும், நானும்.
அதை எந்த காலத்துலயும் என்னால மறக்கவோ மன்னிக்கவோ முடியாது ரேணுமா. அவங்க வலிய மறைச்சு வாழ்ந்திருக்காங்க. ஆனா நானும் என் அப்பாவும் வாழலை,ரணத்தோட இந்த ஊருக்குள்ள நடமாடியிருக்கோம், அவ்வளவு தான்.
இதுல என்னோட வலி எல்லாம் சாதாரணம் தான் ரேணுமா. ஆனா அப்பாவை நினைச்சுப் பாருங்க, எத்தனையோ நாள் அவர் விட்ட கண்ணீருக்கான அர்த்தம் அப்போ புரியலை ரேணுமா. ஒரு வயசுக்கு அப்பறம் இப்போதான் புரியுது. இதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் என்னால மறக்க முடியாது. அவங்க இந்த வீட்ல எப்பவும் என் புருஷனோட அத்தை மட்டும் தான். எனக்கு எந்த காலத்துலயும் அம்மா ஆகவே முடியாது” என்று உறுதியாய் கூறியவளை, எப்பவும் போல் பிரமிப்பாய் பார்த்திருந்தார் ரேணுகா.
அவரை விடுத்து, ஆதியைத் தேடி வந்தவள் கண்டது என்னவோ தொலை தூரத்தை வெறித்திருந்தவனைத் தான். அவன் முகத்தில் இருக்கத்தையும் மீறி ஒரு வித வேதனை. இத்தனை நாட்களில் ஒரு நாளும் அவனை அப்படி பார்த்ததில்லை அவள்.
மெதுவாய் அவன் அருகில் சென்று தோள் சாய்ந்தவளுக்கு அதில் கிடைத்த நிம்மதி வேறு எதிலும் கிடைக்கும் என்று தோன்றவில்லை.
“என்னாச்சு உங்களுக்கு?” என்றாள் கேள்வியாய்.
“ஒன்னுமில்லைடா” என்று அவளின் தலையை பரிவுடன் வருடிக் கொண்டிருந்தவனின் சிந்தனை வேறு எங்கோ தான் இருந்தது.
“நீங்க இப்படி இருக்குறதை பார்க்கவே நல்லா இல்ல மாமா” என்றாள் அவன் முகத்தை வெடுக்கென்று திருப்பி.
“எங்கயோ எதுலயோ நான் சறுக்கி இருக்கேன் தீர்த்தா. அது எங்கன்னு தான் புரியலை.அதைத் தான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான் நிதானமாய்.
“யாரு நீங்களா? வாய்ப்பே இல்லை. திடீர்ன்னு சில விஷயங்கள் தெரிஞ்சதால அப்படி உங்களுக்குத் தோணுது. ஆனா நீங்க எந்த வகையிலையும் சறுக்கலை மாமா” என்றவள் அவன் முகத்திற்கு நேராய் வந்து அவனைத் தான் பார்த்திருந்தாள்.
“இப்ப எதுக்குடி இப்படி வந்து புதுசா பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருக்க? அழக்கூடாதுன்னு அத்தனை அழுத்தம் திருத்தமா சொல்லியும் எதுக்குடி அப்படி அழுத?” என்றான் ஆதி.
“அது என்னவோ தெரியலை, அழுகை கூட உங்ககிட்ட மட்டும் தான் வருது” என்றவள்,
“ஏன் அப்படி பண்ணிங்க? என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை நீங்க?என்ன இருந்தாலும் நீங்க இப்படி பண்ணி இருக்கக் கூடாது” என்றாள்.
“நான் என்ன பண்ணேன்?” என்றான்.
“எதுக்காக என்னை அத்தாரிட்டியா மாத்துனிங்க? நான் கேட்டேனா உங்களை?” என்றாள் கோபம் கலந்த குரலில்.
“எந்த விஷயத்துலையும் உனக்கு சின்னத் தயக்கம் கூட வரக் கூடாதுன்னு தான் மாத்துனேன். நானே முழுசா உனக்குத் தான் சொந்தம்கிறப்போ, நான் சம்பந்தப்பட்ட எல்லாமே உனக்குத்தானடி சொந்தம். இங்க என்னோடதுன்னு எதுவுமே இல்லை. என்னையும் சேர்த்து எல்லாமே உன்னோடது தான்” என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டு.
“இவ்ளோ அன்பெல்லாம் என் மேல வைக்காதிங்க. அதோட கனத்தை என்னாலத் தாங்க முடியலை” என்றாள் அவனின் கண் பார்த்து.
“கனத்தைத் தாங்க முடியலைன்னா, அதே மாதிரி என்கிட்ட திரும்ப வச்சிடு. கனம் சரி சமமாகிடும்” என்றான் ஆதி.
“அப்படியா?” என்றவள்,
“மெதுவாத்தான் உங்களை பிடிக்க ஆரம்பிச்சது. ஆனா இனி உங்களை மீறி எதுவும் பிடிக்கும்னு தோணலை” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
அவளை ஆழ்ந்து பார்த்திருந்தவன்,
“உன்னை இறுக்கி அணைச்சுக்கனும்னு தோணுது. எனக்கு இருக்குற மனநிலைக்கு தாங்குவியான்னும் தோணுது” என்றவனின் மன அழுத்தம் அவன் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. அதை அவன் அடக்கிக் கொண்டு நிற்பதும் புரிந்தது அவளுக்கு.
தன்னை நோக்கி கைகளை விரித்திருந்தவளை அடுத்த நிமிடம் அணைப்பிற்குள் அடக்கியிருந்தான். அவன் ஏன் அப்படி கேட்டான் என்று அவன் அணைத்த பிறகு தான் அவளுக்கு புரிந்தது. அப்படி ஒரு இறுக்கமும், வலிமையும் இருந்தது அவன் அணைப்பில். சில நிமிடங்கள் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
“மாமா” என்றவளின் திணறிய அழைப்பில் தான் சற்று இறுக்கத்தை தளர்த்தியிருந்தான்.
“தீர்த்தா” என்றான் ஆதி கரகரப்பான் குரலில்.
“மாமா”
“எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கு. என்னை இப்பவே முந்தானைல முடிஞ்சு வச்சுக்கிறியா? எனக்கு சொந்தமானது, நான் பட்டா சிட்டா போட்டதெல்லாம் எனக்கு இப்பவே வேணும்” என்றவனை மிரண்டு தான் பார்த்திருந்தாள். மன அழுத்தத்திற்கு வடிகால் தேடியவனை மடி தாங்கிக் கொண்டாள் சிவ தீர்த்தா.
ஏற்கவும் மறுக்கவும் முடியாமல் இருந்த அவனின் அன்பு இப்போது அவளுக்கே அவளுக்கான அன்பாய் மாறியிருந்தது.கடந்து செல்லவும் முடியாமல், கட்டி அணைக்கவும் முடியாமல் இருந்த உறவு இப்போது அவளுக்கே அவளுக்கான உறவாய் மாறியிருந்தது.உரிமை கொள்ளவும் முடியாமல் விட்டுக் கொடுக்கவும் முடியாமல் இருந்த அவனின் நேசமும் இப்போது அவளுக்கே அவளுக்கான நேசமாய் மாறியிருந்தது. உடல் தொட்டு உயிரில் ஊடுருவிய நேசமாய், அவள் இதயக் கூட்டில் முகம் பதித்து, அவளின் காதல் அரவணைப்பில் அமைதி கண்டிருந்தான் ஆதி கேசவன்.