“விடு விசாகா, இந்த ஆளைக் கொன்னா கூட என் ஆத்திரம் அடங்காது. இன்னும் இந்தாளு என்னல்லாம் பண்ணியிருக்காருன்னு தெரிஞ்சா நீயும் இப்படித்தான்டா ஆத்திரப்படுவ”  என்று அடங்காத காளையாய் அவன் திமிரிக் கொண்டு நிற்க,

கண்களைத் துடைத்துக் கொண்டு, மகாதேவனின் முன் சென்று அவரை நேர் பார்வையாய் பார்த்த சிவ தீர்த்தாவோ,

“இதையெல்லாம் பண்ணச் சொல்லி இந்த கிழவியோட புருஷன் சொன்னாரு சரி, அவரோட மகனையும் அவர் தான் கொல்ல சொன்னாரா என்ன?” என்றாள் நிதானமான குரலில்.

அவளின் கேள்வியில் அதுவரை தெனாவெட்டாய் நின்றிருந்த மகாதேவனுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது.

ஆதியைத் தவிர அனைவரும் அதிர்ந்து நிற்க, ரேணுகாவிற்கோ தாங்க முடியாமல் தலையெல்லாம் சுத்திக் கொண்டு வந்தது.

“ஏய்? என்ன புதுசா கதை கட்டிட்டு இருக்க? இது உன்னோட அடுத்த பிளானா? நம்பாதிங்க அத்தை இவளை” என்று அவர் விசாலாட்சியை பார்த்து பதற, வயசான காலத்தில் அந்த கிழவியும் எத்தனையைத் தாங்கும்?

“உனக்கெப்படி தெரியும் தீர்த்தா?” என்றான் ஆதி, கோபம் அடக்கிய குரலில்.

“உனக்கெப்படி தெரியும்னா? அப்போ உனக்கும் தெரியுமா ஆதி? என்ன தான் நடக்குது?” என்று ரேணுகா மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்.

“எனக்கு இப்போ ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் தெரியும்மா. மதுரைக்கு போயிருந்தப்போ இந்த ஆளோட பழைய கூட்டாளி ஒருத்தரை பார்த்தேன். அவர் தான் சொன்னாரு இந்த ஆளோட சுயரூபத்தை. குடுக்கல் வாங்கல் பிரச்சனையில, உதவி பண்ண அந்த கூட்டாளியையும் இவரு விட்டு வைக்கலை.

செஞ்ச கர்மா யாரை விட்டுச்சு? தான் பாதிக்கப்படவும் அந்த ஆளு என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு. அதெல்லாம் உண்மையா பொய்யான்னு தெரியாமத்தான் ஒரு வாரம் வீட்டுப் பக்கம் வரலை. எங்க இந்த ஆளை நேர்ல பார்த்தா ஏதாவது பண்ணிடுவேனோன்னு நினைச்சு தான் ,உண்மையை முழுசா தெரிஞ்சுக்கணும்னு பொறுமையா போனேன்.

என்ன இருந்தாலும் பாட்டி சொன்ன மாதிரி இவரு இந்த வீட்டு மருமகன். அதாவது அவங்களோட மகனையே கொன்ன மருமகன். அவருக்கான மரியாதையை நாம முறைப்படி குடுக்கனும்ல. அப்பறம் சுபா அத்தையையும் ஒரு வார்த்தை கேட்கணும்ல” என்றான் ஆத்திரம் அடங்காத எகத்தாளத்துடன்.

ஏற்கனவே ஆதி சொன்னதைக் கேட்டு திகைத்திருந்த சுபத்ராவோ,

“ஆதி சத்தியமா எனக்கு இதைப் பத்தி எதுவும் தெரியாதுப்பா. அண்ணாவை எப்படி இவரு?” என்றவருக்கு எதுவும் புரியவில்லை.

“தீர்த்தா உனக்கெப்படி தெரியும்?” என்றான் சிவாவை நோக்கி ஆதி.

“உங்கப்பா இறந்தப்பவே தெரியும். அன்னைக்கு தோட்டத்துல அவர் கரண்ட் ஷாக் அடிச்சு இறக்கும் போது நானும் அப்பாவும் அங்க வயல்ல தான் இருந்தோம்” என்றவளின் வார்த்தைகளில் அனைவரும் அவளையே பார்த்திருந்தனர்.

“சிவா? என்னம்மா சொல்ற? உங்க மாமா கரண்ட் ஷாக் அடிச்சு சாகலையா அப்போ? அய்யோ அப்போ இத்தனை நாளும் என் தாலியை அறுத்த கொலைகாரனை வீட்டுக்குள்ளயே வச்சு சோறாக்கி போட்ருக்கேனா நானு?” என்றவர் தலையில் அடித்துக் கொண்டு அழ,

“இல்ல நான் எதுவும் பண்ணலை. அந்த பொண்ணு பொய் சொல்லுது. ஆதி கிட்ட சொன்னவன் கூட என்மேல இருக்குற கோபத்துல ஏதோ சொல்லியிருக்கான். என் மச்சானை போய் நான் எப்படி?” என்றார் மகாதேவன்.

“சும்மா நடிக்காத? இந்த வீட்ல நீ யாரை வேணும்னாலும் ஏமாத்தலாம். அன்னைக்கு பக்கத்து தோட்டத்துலையே இருந்த எங்களையெல்லாம் ஏமாத்த முடியாது.” என்றவள்,

“வயரு தானா அறுந்தெல்லாம் உங்க வயல்ல விழலை மாமா. அதை பர்ப்பசா கட் பண்ணி விட்ருக்காங்க. அந்த  போஸ்ட் மரத்துல இருந்து தான் எங்க தோட்டத்துக்கும் கரண்ட் கனெக்ஷன் வருது. எங்க வயலைத் தான்டி தான் உங்களுக்கே வருது. அப்படி இருக்கும் போது சரியா அந்த இடத்துல மட்டும் எப்படி அறுந்து விழும்? உங்கப்பா அங்க வர்றதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் இவர் அந்த இடத்துல தான் இருந்தார். அவர் இருக்குற வரைக்கும் கரண்ட்டும் இல்லை. சரியா உங்கப்பா வரும் போது இவர் அங்க இல்லை. அந்த நேரத்துக்கு சரியா கரண்ட்டும் வந்திருச்சு. வெளிய இருந்து பார்த்தவங்களுக்கு கண்டிப்பா இது ஒரு விபத்து தான்.ஆனா, நாங்க தான் பக்கத்துல இருந்து பார்த்தோமே?” என்றாள்.

நடந்ததை சிவா சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு தன் மீதே ஆத்திரம் வந்தது. தான் ஊரில் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்காதோ என்ற குற்ற உணர்ச்சியில் தானே ஒரு வாரமும் தவித்துக் கொண்டிருக்கிறான்.

“தப்பு பண்ணிட்டேன்ம்மா..! தப்புப் பண்ணிட்டேன்! படிக்கிறேன்னு வெளிய போயிருக்கவே கூடாது. இந்த ஆளுக்கு எல்லாமே தோதா நடக்குறதுக்கு நானும் ஒரு காரணமாகிட்டேன்” என்றவன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் நிற்க,

“ஏங்க?” என்று அவனின் கையைப் பிடித்து சிவா அமைதிப்படுத்த முயல,

“உங்களுக்கு  தெரிஞ்சிருக்குல்ல? அப்பறம் ஏன்டி சொல்லாம விட்டிங்க? என்ன தான் கோபமா  இருந்திருந்தாலும் இப்படியா அமைதியா இருந்திருப்பிங்க?  என்று அவளிடம் ஆதங்கமாய் கேட்டிருந்தான் ஆதி.

“நாங்க சொல்லலைன்னு நீங்க பார்த்திங்களா? இதோ இந்த கிழவிகிட்டையும், இந்த கிழவி புருஷன்கிட்டயும் எங்கப்பா விஷயத்தை சொல்ல வந்ததுக்கு எப்படி எல்லாம் பேசி அவமானப்படுத்தி அனுப்புனாங்கன்னு அவங்களையே கேளுங்களேன்? எங்கப்பா என்னவோ இவங்க மகளையும் மகளோட புருஷனையும் பிரிக்கத்தான் இப்படி  கட்டுக்கதை சொல்லிட்டு இருக்காருன்னு அவரை அடிச்சு விரட்டாத குறையா விரட்டலைன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்” என்றாள் கோபமாய்.

“தீர்த்தா சொல்றது உண்மையா பாட்டி?” என்றான் ஆதி ஆக்ரோஷமாய்.

“இவன் இப்படி என் வம்சத்தையே கருவருப்பான்னு எனக்கு தெரியாம போச்சு ஆதி. அத்தை அத்தைன்னு சொல்லி என் புள்ளையவே கொன்னிருக்கானே? இது தெரியாம பாம்புக்கு பாலை வார்த்திருக்கேனே?” என்று விசாலாட்சி ‘ஓ’வென்று ஒப்பாரி வைக்க, சிவாவிற்கு கொஞ்சமும் பரிதாபம் தோன்றவில்லை.

“அடப்பாவி? என்னையத்தான் படுத்துனேன்னு பார்த்தா? என் அண்ணன் என்னடா பண்ணாரு உன்னை?” என்று சுபத்ரா ஆத்திரத்தில் அவர் சட்டையை பிடித்திருக்க,

“ஆமா நான் தான் பண்ணேன்! இப்போ என்ன அதுக்கு? இதோ இவன் படிச்சு முடிச்சு இந்த ஊர் பக்கமே வரமாட்டான்னு நினைச்சேன். இந்த விசாகன் சின்னப் பய, அவனுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சேன். ஆரம்பத்துல நல்லா தான் இருந்தான் உங்கண்ணன்.அதுக்கப்பறம் உன் அண்ணன் ஒருத்தன் தான் எல்லாத்துக்கும் இடைஞ்சலா இருந்தான். ஏற்கனவே மாமாவுக்கும் அத்தைக்கும் நான் சொன்னா சரித்தான். அவன் ஒருத்தன் இல்லையின்னா, இதையெல்லாம் கட்டி ஆளலாம்னு நினைச்சேன்” என்றவர்,பேசி முடிப்பதற்கு முன்பே இப்போது விசாகன் எட்டி உதைத்திருந்தான்.

“எவ்வளவு தைரியம் இருந்தா பண்றதை எல்லாம் பண்ணிட்டு இப்பவும் இப்படி தெனாவெட்டா பேசிட்டு இருப்ப?” என்று அடிக்கப் போனவனை தடுத்துவிட்டு ஆத்திரம் தீர அடித்து துவைத்திருந்தான் ஆதி.

“ஆதி” என்ற ரேணுகாவின் குரலில் திரும்பியவன்,

“இந்தாளை இன்னைக்கு கொன்னா தான் என் ஆத்திரம் அடங்கும்மா” என்றான்.

“வேண்டாம் விட்டுரு ஆதி. நீ கொல்லனும்னா உன் தாத்தாவையும் பாட்டியையும் சேர்த்து தான் கொல்லனும்” என்றார் ரேணுகா.

“ரேணுகா” என்றார் விசாலாட்சி கண்ணீருடன்.