உணர்வுகளை அடக்க முடியாமல் நின்றிருந்த சிவாவின் அருகில் வந்த சுபத்ராவோ அவளின் கையைப் பிடிக்க, அவளுக்கு விபரம் தெரிந்த இத்தனை வருடங்களில் தாயின் முதல் தொடுகை உணர்வு. கண்ணீர் இப்பவோ அப்பவோ என்று விழி நிறைத்திருக்க, கிருஷ்ணனின் முகம் கண் முன் வந்து போன சில வினாடிகளில் சட்டென்று அவரின் கையை உதறியிருந்தாள் சிவ தீர்த்தா.
“சிவா” என்ற சுபத்ரா கண்ணீர் விட, அதெல்லாம் அவளை கொஞ்சமும் அசைக்கவில்லை. கைகளை இறுக மூடி நின்றிருந்தவளின் அருகில் சென்ற ஆதி அவளின் கையை பிடித்த நிமிடம் முற்று முதலாய் உடைந்து போனாள் சிவா.
“தீர்த்தா” என்றவனின் குரலில், அவளையும் மீறி கண்ணீர் வெளி வந்திருக்க,
“இவங்களை என் பக்கத்துல வர வேண்டாம்னு சொல்லுங்க மாமா. எனக்கு திடீர்ன்னு ஒரு அம்மா தேவையில்லை. எத்தனை நாள் ஏங்கி இருப்பேன்? எத்தனை நாள் இவங்க பின்னாடியே போயிருப்பேன்? இவங்க என்ன காரணம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. எனக்கு வேண்டாம், எனக்கு இவங்க வேண்டாம்” என்று கத்தியவளை அவனோ நெஞ்சோடு அணைத்துக் கொள்ள, அடக்கி வைத்திருந்த அழுகையெல்லாம் கதறலாக வந்திருந்தது.
“இவங்க எனக்கு வேண்டாம், எனக்கு என் அப்பா மட்டும் போதும்” என்று அழுதவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் கலங்கிக் போய் நின்றிருந்தான் ஆதி கேசவன்.
“சிவாம்மா” என்று ரேணுகா அவளை அணைத்துக் கொள்ள, பாட்டியிடம் வந்த ஆதியோ,
“என்ன முடிவு பண்ணியிருக்கிங்க?” என்றான் மொட்டையாய்.
பார்த்த விஷயங்களும், தெரிந்து கொண்ட உண்மைகளும் விசாலாட்சியை நிலைகுலையச் செய்திருந்தது. சுபத்ரா பேசிய வார்த்தைகள் அவர் மனதிற்குள் இடியாய் இறங்க, வார்த்தைகளின்றி இருந்தார் விசாலாட்சி.
“முடிஞ்சதைப் பத்தி பேசி என்ன ஆகப்போகுது ஆதி. தப்பு அவர் பேர்லயே இருந்தாலும், இப்போ சுபத்ராவுக்கு அவர் தான புருஷன். அதை மறுக்க முடியாது. இல்ல, இத்தனை வயசுக்கு அப்பறம் வேண்டாம்னு சொல்ல முடியுமா?” என்றார் மேகலை.
“ஹோ, அப்ப இவர் என்ன பண்ணாலும், உங்க தங்கச்சியை எவ்வளவு கொடுமை பண்ணாலும் இவர் கூடவே சேர்ந்து அவங்க வாழனும்? அப்படித்தான?” என்றான் ஆதி கோபமாய்.
“நான் அப்படி சொல்லலை ஆதி. ஆனா ஜீவனையும், அமிர்தாவையும் நாம யோசிக்கனும்ல? தன் அப்பா இப்படின்னு தெரிஞ்சா பிள்ளைங்க மனசு என்ன பாடு படும்?” என்றார் மேகலை.
“ஏன் உங்க புருஷனோட அண்ணங்கிறதால வக்காலத்துக்கு வர்றீங்களா? இந்த கவலை அக்கறை எல்லாம் அன்னைக்கு அந்த ஆறுமாச குழந்தை மேல ஏன் உங்களுக்கு இல்லாம போச்சு? அத்தனை நடந்தும் அன்னைக்கு வேடிக்கை மட்டும் தான பார்த்திங்க. இன்னைக்கும் அப்படி வேடிக்கை மட்டும் பாருங்க” என்றான் ஆதி. யார் முயன்றும் அவன் கோபத்தை தணிக்க முடியவில்லை.
“நான் தான் வேணும்னு சொல்லு சுபா, நான் பண்ணது தப்புத்தான். அதுக்காக என் பிள்ளைகளை என்கிட்ட இருந்து பிரிச்சுடாத. நான் தான் வேணும்னு சொல்லு” என்றார் மகாதேவன்.
“அவர் சொல்றது தான் சரி ஆதி” என்ற சுபத்ராவை ஆதி அதிர்ச்சியுடன் பார்க்க, மகாதேவனோ மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தார்.
“என்ன சொல்ல வர்றீங்க?” என்றான் புருவம் நெறித்த பார்வையோடு.
“அவர் சொல்றது தான் சரி. ஆனா, என் பேருக்கு வர்ற சொத்துக்கு வாரிசு சிவா தான். இவருக்கு நானும் பிள்ளைங்களும் தான முக்கியம். அதனால சொத்தை சிவா பேருக்கே எழுதிடு” என்றார் சுபத்ரா தீர்க்கமாய்.
“ஏய்? என்ன பேசிட்டு இருக்க சுபா. அப்போ என் பிள்ளைங்க ரெண்டு பேரும் தெருவுல நிப்பாங்களா? அதுக்காகவா இவ்வளவையும் பண்ணேன்” என்றார் மகாதேவன்.
“ஏன்? பெத்த அப்பன் நீங்க இல்ல? சம்பாதிச்சு உங்க பிள்ளைங்களுக்குச் சேருங்க. சிவாவோட அப்பா தான சொத்துக்கு ஆசைப்பட்டு என்னை கல்யாணம் பண்ணார். நீங்க அப்படி இல்லையே? சொந்தம் விட்டுப் போய்டக் கூடாது, அத்தை வீட்டு கௌரவம் போய்டக் கூடாதுன்னு எனக்கு வாழ்க்கை குடுத்த வள்ளல் தான நீங்க? அப்பறம் எதுக்கு உங்களுக்கு சொத்து?” என்றார் சுபா எகத்தாளமாய்.
“என்ன சுபத்ரா நக்கலா?” என்றவர் கோபமாய் அவரின் அருகில் வர, ஆதியோ அவரை கழுத்து சட்டையை கொத்தாய் பிடித்திருந்தான்.
“இந்த மிரட்டி அதட்டுற வேலையெல்லாம் வேண்டாம். இன்னும் என்கிட்ட வாங்க வேண்டியது நிறைய இருக்கு” என்றான் ஆதி.
“உங்க பாட்டியை நல்லா பார்த்துக்க சொல்லு ஆதி. இது தான் அவங்க மாப்பிள்ளையோட லட்சணம். யாரு சொத்துக்காக வந்தாங்கன்னு இப்போ தெரிஞ்சிருக்குமே?” என்றார் சுபத்ரா, விசாலாட்சியைப் பார்த்து.
சுபத்ராவின் வார்த்தைகளில் வெகுண்ட மகாதேவன்,
“ஏய் என்னடி விட்டா பேசிட்டே போற? ஆமா, நான் சொத்துக்காகத் தான் உன்னை கல்யாணம் பண்ணேன். யாரு இல்லைன்னு சொன்னா? நீ மட்டும் என்ன பெரிய ஒழுங்கா, நிச்சயத்தை என்கூட முடிச்சுட்டு அவன்கூட ஓடிப் போனவ தான? அப்போ நான் பட்ட அவமானத்துக்கும் அசிங்கத்துக்கும் யார் காரணம்? என்னமோ நான் மட்டுமே திட்டம் போட்டு எல்லாம் பண்ண மாதிரி பேசுற? எல்லாத்தையும் பண்ண சொன்னதே உங்கப்பன் தான். அவரு மகன் அண்ணாமலைய வச்சு அவர் நினைச்சதை முடிக்க முடியலை. என்னை வச்சு முடிச்சுகிட்டார், அவ்வளவு தான்” என்றார் மகாதேவன், கசங்கியிருந்த சட்டையை நீவியபடி.
“மகாதேவா??” என்றார் விசாலாட்சி பொறுக்க முடியாமல்.
“உண்மை அது தான் அத்தை. வேணும்னா படுத்த படுக்கையா இருக்குற உங்க புருஷனைப் போய் கேளுங்க” என்று கொஞ்சமும் குறையாத திமிருடன் கூறியவர்,
“பரவாயில்ல ஆதி, நேத்து வந்த இவளுக்காக இத்தனை வருஷம் வளர்த்த இந்த மாமாவையே எட்டி உதைக்கிற அளவுக்கு வந்துட்ட. உனக்கு பொண்டாட்டி மயக்கம், உங்க அத்தைக்கு முதல் புருஷன் மேல மயக்கம். அதுக்கு நான் தான் கிடைச்சேனா?” என்று அவர் பேசி முடிப்பதற்குள் அவரை அடித்துத் தள்ளியிருந்தான் ஆதி கேசவன்.
“அண்ணா பொறுமையா இருங்கா, அவர் வேணும்னே உங்க கோபத்தை தூண்டுற மாதிரி பேசுறார். ஏதாவது ஒன்னு ஆகிப் போச்சுன்னா என்ன பண்றது?” என்றான் விசாகன் பதட்டத்துடன்.