அத்யாயம் 22:

சிவா விடாமல் அவனைக் கட்டிக் கொண்டே நிற்க,

“இன்னும் எவ்வளவு நேரம்டி இப்படி கட்டிபிடிச்சுகிட்டே நிக்கிறதா உத்தேசம்?” என்றான் ஆதி.

“ம்ம்.. வாழ்நாள் முழுசுக்கும்” என்றாள் கண்களைத் துடைத்தபடி.

“கால் வலிக்குமே” என்றான் சிரிப்புடன்.

“வலிச்சா தாங்கிக்கத்தான் நீங்க இருக்கிங்களே” என்றாள் சிவா.

“தாங்கிக்க நான் ரெடியா தான் இருக்கேன். தாக்குப்பிடிப்பியான்னு தான் தெரியலையா?” என்றான் நமட்டு சிரிப்புடன்.

நிமிர்ந்து அவனை முறைத்தவள்,”அதெல்லாம் தாக்குப்பிடிப்போம். நீங்களா நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது” என்றாள் உதட்டை சுழித்தபடி.

“ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன், இப்படி புடவை முந்தியை சொருகாதன்னு. இப்போ இப்படி உதட்டை சுழிச்சு வேற மனுஷனை உசுப்பேத்திட்டு இருக்க” என்றான் அவளின் இடையை அழுத்தி பிடித்தபடி.

“ம்ம், உங்களை முந்தானையில முடிஞ்சு வச்சுக்கலாம்ன்னு தான் இப்படி சொருகியிருக்கேன்” என்றாள் சிவா சிரிப்பை அடக்கி.

“என்னடி பேச்செல்லாம் தினுசா இருக்கு. ஆளும் இன்னைக்கு ஒரு மார்க்கமா இருக்க. நான் வேற சின்ன பொண்ணா இருக்காளேன்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான் ஆதி மந்தகாசமான பார்வையுடன்.

“சின்னப் பொண்ணுன்னு நான் சொன்னேனா?அதென்ன தாலியை மட்டும் வேகமா கட்டிடுறது? அப்பறம் சின்ன பொண்ணு பெரிய பொண்ணுன்னு பேச வேண்டியது” என்று அவனிடமிருந்து விலகியவள்,

“என்னைப் பார்த்தா சின்ன பொண்ணு மாதிரியா இருக்கு?” என்றாள் கடுப்புடன்.

“ச்சா..ச்சா பார்த்தா சின்னப் பொண்ணு மாதிரியெல்லாம் இல்லை” என்று அவன் தலைமுதல் பாதம் வரை அவன் பார்த்த பார்வையில் அவளுக்குத் தான் முகம் குப்பென்று சிவந்து போனது.

“மாமா” என்றவளை இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான் ஆதி கேசவன்.  நிமிடங்கள் நீடித்த அவன் அணைப்பில் இருந்த அழுத்தம் அவளுக்கு வேறு எதையோ உணர்த்த,

“என்னாச்சு உங்களுக்கு?” என்றாள் புரியாமல். அவன் கண்களோ கலங்கியதைப் போல் இருக்க, அவளின் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டவனோ,

“தீர்த்தாவுக்கு கோபம் போயிடுச்சா? முழுசா?” என்றவனின் குரல் கரகரப்பாய் ஒலித்திருந்தது..

“ஏன் இப்படி கேட்குறிங்க?யார் மேல கோபம் போகணும்?” என்றாள் புரியாமல்.

“இந்த வீட்ல நீ நார்மலா இருக்குற மாதிரி இருந்தாலும், முகத்துல இருக்குற ஒட்டுதல் உன் கண்ல எப்பவும் தெரியாது. ஆனா, இப்போ உன்னோட கண்ல நான் பார்க்குற உணர்வு எனக்கே எனக்கானதா முழுமையா இருக்கு. அதான் கேட்டேன் கோபம் போயிடுச்சான்னு” என்றான் அவள் கண்களை பார்த்து.

அவனின் கேள்வி புரிந்தவள்,

“என் அப்பாவுக்கு அடுத்து எல்லாமே நீங்கதானே. அப்படித்தான் என்னை நினைக்க வச்சிருக்கிங்க மாமா. வருடலோ வார்த்தையோ தேவையில்ல.உங்க ஒரு பார்வையே போதும். எல்லாருக்கும் இப்படி அமையுமான்னு கேட்டா அதுக்கு என்கிட்ட பதில் இல்லை. தனக்காக எல்லா சூழ்நிலையிலையும் கூடவே நிக்கிற புருஷனோட உண்மையான அன்பெல்லாம் எல்லா பொண்ணுங்களுக்கும் அமையுமான்னும் எனக்குத் தெரியலை. ஆனா, எனக்கு அமைஞ்சிருக்கிங்களே. சில சமயம் கிருஷ்ணனை ஓவர் டேக் பண்ணிடுறிங்க நீங்க?” என்றாள் அவனையே பார்த்தபடி.

“சோ இப்போ உன் கண்ணுக்கு நான் விசாலாட்சி பேரனா தெரியலை தானே” என்றான் நேரடியாக.

“என் முன்னாடி இருக்குறது என் புருஷன் மட்டும் தான். அப்படி மட்டும் தான் தெரியறிங்க மாமா. ஏங்குன மனசுக்கு மட்டும் தான் தெரியும், அன்பும், அரவணைப்பும் எவ்வளவு முக்கியம்னு. அதை போக்குனதே நீங்கதான?” என்றாள் நேர் பார்வையாய்.

அவளின் வார்த்தைகளில் சிலிர்த்தவன்,

“நீதான் என் உசுருன்னு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்டி. ஆனா ஒன்னு, உன்ன உசுரா பார்த்துக்குவேன். அப்போ இந்த சிவ தீர்த்தாவுக்கு ஆதி கேசவன் ஓகே தான?” என்றான்.

“நீங்க சொன்னது தான், வாழ்வோ சாவோ அது ஒருத்தர் கூடத்தான். உங்க கூடத்தான். எனக்கு விதி மேல எல்லாம் நம்பிக்கை இல்ல.ஆனா எனக்கு நீங்கதான், நீங்க மட்டும் தான் ” என்று அவனைப் போலவே அவளும் சொல்லியிருக்க, அவனின் இறுக்கமான அணைப்பிற்குள் சென்றவளுக்கு மூச்சு முட்டியது. அவளின் முகத்தை முத்தத்தால் குளிப்பாட்டி, இதழ்களில் இளைப்பாறி இருந்தவனுக்கு அந்த இளைப்பாறுதல் போதவில்லை என்று தோன்றியது. அந்த இதழ் முத்தம் ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட  அவன் அன்பின் முதல் வாக்குறுதி.

இயல்பாய் அவர்களின் உறவு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்தது. ஒரு அழகிய கவிதையாய், உயிரோட்டம் நிறைந்த ஓர் உணர்வாய், அவர்கள் மொத்த அன்பின் அடையாளமாய், ஒரு மெல்லிய இசையாய்,ஒரு விசித்திரமான தனி காதல் மொழியாய்,  அவனுக்காக அவளும், அவளுக்காக அவனும் விரும்பியே அன்பின் சிறையில் சிறைப்பட்டுக் கொண்டனர். வாழ்வியல் பாடத்தை கற்று முடித்திருந்தவர்கள், களவியலையும் கற்று முடித்திருந்தனர்.

அழகிய கூடலுக்குப் பின் அவனிடமிருந்து பெறப்பட்ட அந்த ஒற்றை ஆழ் முத்தமே அவனின் மொத்த அன்பிற்கும் மன நிறைவுக்கும் சாட்சியாகிப் போக, அவன் மார்புச் சூட்டில் முகம் புதைத்திருந்தவளின் நூறைத் தாண்டிய இதயத் துடிப்போ சமநிலையை அடைந்திருந்தது.

வாழ்க்கை துணை என்பது உறவு மட்டுமல்ல, மன அமைதியையும் ஆறுதலையும் தரும் பாதுகாப்பான புகலிடம் என்பதைப் போல் அவளைத் தனக்குள் இறுக்கி வைத்துக் கொண்டான் ஆதி கேசவன். அவன் கரங்களின் அழுத்தத்தில் மொத்தமாய் அவனுக்குள் அடங்கிப் போயிருந்தாள் சிவ தீர்த்தா.

தனக்குள் அடங்கி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளது முகம் கண்டவனின் முகமும் கனிந்திருந்தது. நேரத்தைப் பார்க்க, நேரமோ இரவு பத்துமணி தான் ஆகியிருந்தது.

“என்னடா பண்ணி வச்சிருக்க ஆதி?” அவனறியாமல் வெட்கச் சிரிப்பும் வந்திருந்தது. அது அவன் மனதின் நிறைவாகக் கூட இருக்கலாம்.

“எப்பவும் வீட்டுக்கு வர்ற டைம் கூட இன்னும் ஆகலை. அதுக்குள்ள” என்று அருகில் இருந்தவளைப் பார்த்தவனுக்கு,

“கோபத்துல இருந்தவனை, என்ன பண்ணி வச்சிருக்கா இவ? சில்வண்டுக்கு நம்ம வீக்னஸ் தெரிஞ்சுடுச்சு போல” என்றவனுக்கு அப்போது தான் சாப்பிடக் கூட செல்லாதது ஞாபகத்திற்கு வந்தது.

“தீர்த்தா” என்றான் மெதுவாய் அவள் கன்னம் தட்டி.

“மாமா” என்றவள் மேலும் அவனுக்குள் புதைந்து கொள்ள,

“இவ மாமா மாமான்னு சொல்லியே என்னை கோமாவுக்கு அனுப்பிடுவா போல. ஏற்கனவே இவளைக் கண்டா எல்லாம் பேதலிக்கும். இதோட இப்போ மாமாவும் சேர்ந்துடுச்சா, சரித்தான்” என்று நினைத்தவன்,

“மணி பத்து தான்டி ஆகுது. இன்னும் சாப்பிடவும் இல்ல.எனக்குப் பசிக்குது, உனக்குப் பசிக்கலையா?” என்றான், அவளை எழுப்பியபடி.

“அச்சோ ஆமால்ல..! சாயந்தரம் மேல வந்தோம். அய்யோ ரேணுமா என்ன நினைச்சிருக்க மாட்டாங்க” என்று சட்டென்று எழுந்தவளைக் கண்டு அவன் நமட்டுச் சிரிப்பு சிரிக்க,

“இப்ப எதுக்கு சிரிக்கிறிங்க?” என்றவளுக்கு அப்போது தான் தன் நிலை உரைத்தது.

“உங்களை” என்று முறைக்கத் தோற்று வெட்கம் கொண்டவள்,

“என் புடவையைக் காணோம்” என்றாள் பாவமாய்.

“நீதானடி முந்தானையில என்னை முடிஞ்சு வச்சுக்கிறேன்னு சொன்ன? இப்ப இப்படி புடவையையே தொலைச்சுட்டு நிக்கிறியே இது நியாயமா?” என்றவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“பிளீஸ் மாமா..! எடுத்துக் குடுங்க” என்றாள் பாவமாய்.

“மாட்டேன்” என்றான் தலையசைப்புடன்.

“நீங்க பண்றதெல்லாம் தப்பா இருக்கு” என்றாள் முறைப்புடன்.

“அப்படியா? எல்லாரும் சரியா ஒரு தப்பை செய்யணும்னு எதிர்பார்க்கிறது இந்த தப்பை தான்டி. எப்படி மாமன் தப்பை சரியா பண்ணேனா?” என்றவனை மேற்கொண்டு பேச விடாமல் வாயை மூடியிருந்தாள் சிவா.

“இப்படி தப்புத் தப்பா பேசாதிங்க. இப்படியெல்லாம் பேசுவிங்களா நீங்க” என்றவளுக்கு எவ்வளவு முயன்றும் அவனை முறைக்க முடியாமல் சிவந்திருந்தாள்.

“இதென்னடி வம்பா இருக்கு. பொண்டாட்டிகிட்ட தான இதையெல்லாம் பேச முடியும்?”  என்றவனிடத்தில்,

“தெரியாம கேட்டுட்டேன், நீங்க எதையும் எடுத்துத் தரவே வேண்டாம். நான் எந்திரிச்சு வரப் போறதும் இல்லை” என்றவள் மீண்டும் தூங்கப் போக, அவளைக் அள்ளிக் கொண்டு போய் பாத்ரூமிற்குள் விட்டவன்,

“குளிச்சுட்டு வாடி” என்று கதவை அடைத்துவிட்டு வந்தவனுக்கு, முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த இதமெல்லாம் தொலைந்து, பால்கனியில் நின்று இருளை வெறித்திருந்தான்.