வீட்டிற்குள் ஜீப் வந்து நின்ற சத்தத்திலேயே புரிந்து போனது ஆதியின் கோபம். இறங்கி வேகமாய் உள்ளே சென்றவனை பின் தொடர்ந்தார் விசாலாட்சி.

“ஆதி என்னப்பா ஆச்சு?” என்று ரேணுகா பதட்டத்துடன் வர,

“இன்னும் என்ன ஆகணும்மா? இவங்களை யாரு தோட்டத்து பக்கம் வர சொன்னா? பேரு தான் ஊருக்குள்ள பெரிய குடும்பம். செய்றது எல்லாம் பார்த்தா அப்படி தெரியலை” என்றான் ஆதி கோபமாக.

“அம்மா என்னம்மா பண்ணிங்க?” என்று மணிமேகலையும், சுபத்ராவும் கேட்க,

“சொல்லி வச்சுக்கங்க அத்தை, இவங்க பண்ற எதுவும் எனக்கு சரியா படலை. இப்படியே பண்ணிட்டு இருந்தா, நான் பேசாம கிளம்பி போய்டுவேன். நீங்களே எல்லாத்தையும் பார்த்துக்கோங்க” என்றான்.

“என்ன ஆதி பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு?” என்று மகா தேவன் பதற,

“நான் நிஜத்தை தான் சொல்றேன் மாமா. சின்னப் பையன், சின்ன பொண்ணு கூட பார்க்காம இவங்க செய்றது எதுவும் நல்லா இல்லை. வயசுல மூத்தவங்களா போயிட்டாங்க. அதான் அமைதியா இருக்கேன்” என்றான் உறுமலாய்.

வீட்டில் இருந்த அனைவருக்கும் புரிந்து போனது, பிரச்சனை என்னவென்று.

“ஏன்மா?” என்றபடி பார்த்து வைத்தனர் மகள்கள்.

“தாத்தா படுத்த படுக்கையா இருக்கார். அந்த கவலை கொஞ்சமும் இவங்களுக்கு இருக்குற மாதிரி தெரியலை. இனி தோட்டத்துப் பக்கம் இவங்களைப் பார்க்கக் கூடாது நான்” என்றவன் சாப்பிடாமல் கிளம்பி சென்று விட்டான்.

“என்ன அத்தை இதெல்லாம்?” என்றார் மகாதேவன்.

“அவ என்னை அந்த முறை முறைக்கிறா? அதைக் கேட்காம என்னை பேசிட்டு போறான்” என்று விசாலாட்சி குறைபட,

“அம்மா எங்களுக்கு ஆதியைப் பத்தியும் தெரியும், உங்களைப் பத்தியும் தெரியும்” என்றனர் சுபத்ராவும், மணிமேகலையும்.

“எல்லாருக்கும் என் மேல பயம் விட்டு போச்சு. என் புருஷன் படுத்த படுக்கையா இருக்குற இளக்காரம்” என்றார் கோபமாய் விசாலாட்சி.

‘ம்க்கும், இந்த கோபத்தை ஆதி முன்னாடி காட்டியிருக்க வேண்டியது தான?’ என்று ரேணுகா மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

விசாலாட்சியின் கணவர் ரத்தினம் படுத்த படுக்கையாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அவர் பழையபடி எழுந்து நடந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர் வீட்டினர்.

சிவ தீர்த்தாவின் வீட்டில்…

வேலை செய்த அலுப்பில் ஒருமணி நேரம் நன்றாக தூங்கி எழுந்திருந்தாள் சிவா. மீண்டும் விசாலாட்சி செய்ததே மண்டைக்குள் குடைய, கஷ்ட்டப்பட்டு அதை ஒதுக்கி வைத்தவள், படிக்கலாம் என்று நினைக்க, வெளியே கவிதாவின் குரல் கேட்டது.

“வந்துட்டா” என்று எண்ணியவள்,

“உனக்கு மெதுவாவே பேசத் தெரியாதாடி கவி” என்றாள் முறைப்புடன்.

“உன்னை மாதிரி வாய்க்கும் வலிக்காம வார்த்தைக்கும் வலிக்காம எனக்கு பேசத் தெரியாது ஆத்தா. சரி வா, ஒரு முக்கியமான இடத்துக்குப் போகணும்” என்றாள்.

“எங்க?” என்றாள் சிவா சந்தேகமாய்.

“ஹி..ஹி.. உன்னை எங்கடி கூப்பிடுவேன். அந்த ஆத்தோர மாந்தோப்புல எப்பவும் பிடுங்குவோமே அந்த மரத்துல லட்டு லட்டா மாங்கா இருக்கு. வந்து பிடுங்கிக் குடுடி சிவா” என்றாள் கவி.

“எதுக்கு? போன தடவை மாதிரி தோட்டத்துக்கு சொந்தக்காரங்க துரத்துனும். நாம தலை தெறிக்க ஓடி வரணுமா? இந்த ஆட்டைக்கு நான் வரலை. உனக்கு வேணும்னா சொல்லு, எங்க தோட்டத்துல இருக்குற மரத்துல பிடுங்கித் தர்றேன்” என்றாள் சிவ தீர்த்தா.

“அய்ய..அது ரொம்ப புளிக்கும் சிவா. இந்த மாங்கா டேஸ்ட் வராது. ப்ளீஸ் வாடி” என்றாள் மீண்டும்.

“எனக்கும் படிக்கணும் கவி. நாளைக்கு காலேஜ் இருக்கு” என்றாள்.

“பார்த்தியா காலேஜ் போன உடனே சின்ன வயசுல இருந்து பழகுன பிரன்ட்ஷிப்ப மறந்துட்ட” என்று குறைபாட்டாள் கவி.

“ஓவர் ஆக்சன் குடுக்காத. நான் தான் காலேஜ் போறேன், மேடம் என்ன கழுதை மேய்க்கவா போறிங்க? நீங்களும் காலேஜ் தான போறிங்க?” என்றாள்.

“இருந்தாலும் நான் ஆர்ட்ஸ்டி , நீ அக்ரிடி” என்றாள் கவி.

“நீ ஆளை விடுடி” என்றாள் சிவா.

“ஹேய் வா சிவா” என்று கவி அவளை விடாமல் இழுத்துக் கொண்டு சென்றாள்.

அவர்களுடன் இன்னும் இரண்டு பெண்கள் சேர்ந்து கொள்ள,

“என்னடி கொள்ளையடிக்க போற மாதிரி கூட்டமா போறோம்” என்றாள் சிவா சிரிப்புடன்.

“மாங்காயை கொள்ளை தான் அடிக்க போறோம்” என்றாள் கவி.

ஒரு வழியாக அந்த ஆத்தோர மாந்தோப்பை அடைந்து விட்டனர். ஆற்றில் நீர் குறைவாகத்தான் சென்று கொண்டிருந்தது.

கவி சொன்னது போல அந்த மரத்தில் மாங்காய்கள் கொத்துக் கொத்தாக பார்ப்பதற்கே கண்ணைப் பறித்தது.

“இந்த வருஷம் காப்பு நிறைய இருக்கும் போலவே?” என்றாள் சிவா.

“ஆமா சிவா. மாங்காயும் புளிப்பு இல்லாம நல்லா தேங்கா சில்லு மாதிரி இருக்கும். இன்னைக்கு இருக்கு வேட்டை” என்றாள் கவி.

“பக்கத்துல எதுவும் இல்லையே கவி. மரம் அநியாயத்துக்கு பெருசா வளர்ந்திடுச்சு. கல் எடுத்து தான் அடிக்கணும்” என்றாள்.

“அதுக்கு எதுக்கு உன்னை கூட்டிட்டு வரணும்? நீ தான் நல்லா மரம் ஏறுவியே? அப்பறம் ஏன் கல் எடுத்து அடிக்கணும்?” என்றாள் கவி.

“ஆமா சிவா, யோசிக்காம ஏறு” என்றனர் மற்ற இரு பெண்களும்.

“உங்களோட பெரிய தொல்லைடி” என்று சலித்தவள், துப்பட்டாவை ஒரு பக்கம் போட்டு, குறுக்காக கட்டிக் கொண்டவள், லாவகமாய் ஏற.. அவள் ஏறுவதை கவி வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“போன பிறவியில குரங்கா பிறந்திருப்பாளோ? என்னமா ஏறுறா?” என்று எண்ணிக் கொண்டாள்.

மேலே ஏறிய சிவா, ஒரு கொத்து மாங்காயை அப்படியே ஒடித்து போட, அதைப் பிடித்துக் கொண்டாள் கவி.

“போதுமா?” என்றாள்.

“இது எப்படி சிவா போதும்? இன்னும் கொஞ்சம் பிடுங்கு” என்றாள்.

“ஏன்டி கடையா வைக்க போற?” என்று சலித்தவள் மீண்டும் பிடுங்கிப் போட, கீழே கவியோ மாங்காயைப்  பிடிக்காமல் யாரையோ பாவமாய் பார்த்திருந்தாள்.

“யாரைப் பார்த்துட்டு இருக்கா?” என்று எண்ணிய சிவா, அவள் பார்வை போன திசை பக்கம் பார்க்க, கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் ஆதி கேசவன்.

“ஆதி அண்ணா, அது சும்மா டேஸ்ட்டுக்கு” என்று இழுத்தாள் கவி.

அவள் முன் இருந்த மாங்காய்களைப் பார்த்தவனின் கண்கள்,

“இது தான் உங்க ஊர்ல டேஸ்ட்டுக்கு பிடுங்கிறதா?” என்று கேட்காமல் கேட்டு வைத்தன.

மேலே இருந்த சிவ தீர்த்தாவிற்கோ முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பதென்று தெரியவில்லை.

‘இதென்ன இவங்க வீட்டு தோப்பா? நான் ஏன் பயப்படனும்?’ என்று எண்ணியவள், நிதானமாய் கீழே இறங்க, அவளைத் தான் பார்த்திருந்தான் ஆதி.

“அண்ணா சாரிண்ணா” என்றாள் கவி.

“நம்ம சாமிக்கண்ணு அண்ணா தோப்புல தான பிடுங்கினோம். அதுக்கு எதுக்கு இவங்ககிட்ட சாரி கேட்குற? வா போகலாம்” என்ற முறைப்பாய் கூறியவள், முன்னே நடக்க,

“தோப்பை நாங்க வாங்கி மூணு மாசம் ஆகுது” என்றான் அழுத்தம் திருத்தமாய். சிவ தீர்த்தா திகைக்க,

“எடுத்துட்டு போமா” என்றான் கவியை பார்த்து.

அவளும் சந்தோஷமாய் மாங்காய்களை எடுத்துக் கொண்டு செல்ல, அவளிடம் இருந்து வெடுக்கென்று பிடுங்கினாள் சிவ தீர்த்தா. அதை அவன் முன்னால் வைத்தவள்,

“இது இவங்க தோப்புன்னு தெரிஞ்சிருந்தா என்னோட மூச்சுக் காத்து கூட இங்க பட்டிருக்காது. வாடி போகலாம்” என்றவள் விறுவிறுவென்று முன்னே சென்று விட்டாள்.

“இவ ரோஷத்தை இப்பத்தான் காட்டணுமா?” என்று புலம்பிய கவியும், மற்ற இரு பெண்களும் அந்த மாங்காய்களை எடுக்காமலேயே சென்றனர்.

சிவ தீர்த்தா மட்டும் தனியே வருவதைப் பார்த்த விசாகன் சட்டென்று அவள் முன்னால் வந்தான்.

திடுக்கிட்டவள் ஒரு எட்டு பின்னால் வைக்க,

“நீ எங்க சிவா இங்க?” என்றவன் அவள் கையைப் பிடிக்கப் போக, அவள் முறைத்த முறைப்பில் கையை பின்னால் இழுத்துக் கொண்டான்.

“சிவா பிளீஸ்..! ஒரு தடவை நான் சொல்றதை கேளேன்” என்றான் விசாகன் கெஞ்சும் குரலில்.

“உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? என்கிட்ட எதுக்கு பேச முயற்சி பண்றிங்க? எனக்கு உங்க கூட பேசுறதுல விருப்பம் இல்லை. மறுபடியும் என் பின்னால் வராதிங்க” என்று உறுதியுடன் சொல்ல,

“அப்போ நம்ம காதல்” என்றான் விசாகன்.

“நம்ம காதலா?” என்றவள் அதிர்ந்தாள்.

“ஆமா, நம்ம காதல் தான். நீ என்னை லவ் பண்ணலைன்னு மட்டும் சொல்லிடாத. அதை நான் நம்ப மாட்டேன். உன்னோட கண்ணுல எனக்கான காதலை நான் பார்த்தேன்” என்றான் விசாகன்.

சிவ தீர்த்தாவோ அதிர்ந்து நின்றாள்.