அத்யாயம் 2 :

தனி ஒருத்தியாக ஐந்து மணி நேரங்கள் உழவை ஓட்டி முடித்திருந்தாள் சிவ தீர்த்தா. இன்னும் கொஞ்சம் மட்டுமே மிச்சமிருக்க, கிருஷ்ணன் வரப்பை வெட்டி சமன் செய்து கொண்டிருந்தார். வானம் மீண்டும் இருட்டுக் கட்டிக் கொண்டு நின்றது. அந்த காலநிலை அவள் மனநிலையை கொஞ்சம் சாந்தமாக்கியிருக்க இப்போது ஒரு ரசனையுடன் ட்ராக்டரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

தோட்டத்து வீட்டிற்குள் இருந்து வந்த விசாலாட்சியின் கண்களில் இந்த காட்சி பட, கடுப்புடன் பார்வையை திருப்பிக் கொண்டார். தோட்டத்திற்குள் சென்றிருந்த ஆதி மீண்டும் அங்கு வந்து சேர,

“என்னாச்சு ஆதி? இன்னும் இங்கயே இருக்க?” என்றார் விசாலாட்சி.

“தோப்புக்கு காய் வெட்ட ஆள் வந்திருக்காங்க. அதெல்லாம் பார்த்து சொல்லிட்டு இப்போ தான் வர்றேன். நீங்க வீட்டுக்கு வரலையா? சாப்பிட நேரமாச்சே. வாங்க உங்களை வீட்ல விட்டுட்டு நான் கோக்கனட் பேக்டரி வரைக்கும் போகணும்” என்றான்.

“நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன் ஆதி. இந்த பாண்டி பயகிட்ட சொல்லிடு. அவன் வந்து என்னை கூப்பிட்டு போகட்டும்” என்று விசாலாட்சி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் வரப்பில் நடந்து வந்த விக்னேஷ் அவர்களின் கண்ணில் பட்டான். அவனுக்கு அவர்களை எல்லாம் தெரியவில்லை.

“அக்கா” என்று கத்த, ட்ராக்டர் சத்தத்தில் அவளுக்கு கேட்கவில்லை. அப்போது தான் ஆதியும் அவளை கவனித்தான்.

‘இன்னுமா உழவு ஓட்டிட்டு இருக்கா?’ என்று மனதிற்குள் நினைத்தவனுக்கு சற்று ஆச்சர்யம் தான். ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

“டேய் பையா, இந்த வரப்புல எல்லாம் நடக்கக் கூடாது” என்றார் விசாலாட்சி.

அவரை முறைத்த விக்னேஷ்,

“இது உங்களுக்கு பாத்தியப்பட்ட வரப்பு மட்டும் இல்லை. எங்களுக்கும் இது பாத்தியப்பட்டது தான். ரெண்டு தோட்டத்துக்கும் பொது வரப்புல நடக்கக் கூடாதுன்னு சொல்றிங்க?” என்றான் கேள்வியாய்.

“அப்படின்னு யாருடா சொன்னது உனக்கு?” என்றார் கோபமாய்.

“எங்க அக்கா சொல்லியிருக்கா. நீங்க இப்படி பேசுனா, இப்படித்தான் பதில் சொல்லனும்னு” என்று வெடுக்கென்று கூறியவன், அக்காவுக்கும், தந்தைக்கும் கொண்டு வந்த சாப்பாட்டை அங்கு வைத்து விட்டு, சிவ தீர்த்தாவின் அருகில் சென்றான்.

“சின்ன பையன்கிட்ட போய் எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க. உங்க வயசுக்கு இது நல்லாவா இருக்கு?” என்றான் ஆதி கோபத்துடன்.

“உனக்கு இவங்களைப் பத்தி தெரியாது ஆதி. கொஞ்சம் விட்டா தலையில ஏறி உட்கார்ந்துக்குவாங்க” என்றார் விசாலாட்சி.

“போதும் நிறுத்துங்க, இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க. ஒருத்தவங்களை நமக்கு பிடிக்கலைன்னா, அதோட ஒதுங்கிப் போய்டணும். இதென்ன சின்ன பிள்ளை மாதிரி பண்ணிக்கிட்டு. வயசுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கோங்க. முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க” என்றான் சற்று குரலை உயர்த்தி.

ஆதி கேசவன் குரலை உயர்த்துகிறான் என்றால் அதற்கு மேல் பேசக் கூடாது என்று அர்த்தம். விசாலாட்சியாகவே இருந்தாலும் அது தான். வீட்டில் அனைவரும் விசாலாட்சியைக் கண்டு பயப்படுவர். அவரோ மூத்த பேரனுக்கு பயப்படுவார்.

தூரத்தில் சிவ தீர்த்தா ட்ராக்டரை நிறுத்திவிட்டு, தன் தம்பியுடன் வருவது தெரிந்தது. கிருஷ்ணனும் துண்டை உதறி தோளில் போட்டபடி வர, அவர்களைக் கண்ட விசாலாட்சிக்கு அப்படியே செல்ல மனம் வரவில்லை.

எதார்த்தமாய் நடப்பதைப் போல் நடந்தவர், விக்னேஷ் வைத்து விட்டு சென்றிருந்த சாப்பாட்டு பாத்திரத்தை வேண்டுமென்றே தட்டி விட, குழம்பு வாளி உருண்டு, கீழே இருந்த கல்லில் மோதி அனைத்தும் கொட்டியிருந்தது. இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் வந்தாள் சிவா.

எப்போதும் பொறுமையாக இருக்கும் கிருஷ்ணனுக்கே அன்று கோபம் வந்திருந்தது.

“இவங்களை” என்று கையை இறுக்கிக் கொண்டு போனவரை கை பிடித்து தடுத்தாள் சிவ தீர்த்தா.

“என்ன பண்ணி வச்சிருக்கிங்க?” என்றான் ஆதி கோபமாய்.

“ஆதி, அது தெரியாம பட்டிருச்சுப்பா. நான் வேணும்னு பண்ணலை” என்றார் வேண்டுமென்றே உள்ளே போன குரலில்.

“என் கையை விடும்மா, இன்னைக்கு நானா அவங்களான்னு பார்க்குறேன். என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு” என்று கிருஷ்ணன் கொதிக்க,

“வேண்டாம்ப்பா” என்றாள் சோர்வாய். பசியில் அவளுக்கு மயக்கமே வருவதைப் போல் இருக்க,

“அக்கா வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரலாம் வா” என்றான் விக்கி.

“குழம்பு தானே கொட்டிருச்சு, சாப்பாடு அப்படியே தான் இருக்கு. சாப்பிட்டுக்கலாம் விக்கி” என்றவள், சற்றும் யோசிக்காமல் அவர்கள் வீட்டுத் தேவைக்காக அங்கு நட்டிருந்த தக்காளிச் செடியில் நன்கு பழுத்த பழங்களைப் பார்த்து பிடுங்கியவள், அதோடு மிளகாய் செடியில் இருந்து நான்கைந்து பச்சை மிளகாயையும் பிடுங்கிக் கொண்டாள். வெங்காயத் தாளைப் பிடுங்கி, வெங்காயத்தை ஆய்ந்து அதையும் உரித்து கொண்டவள், தண்ணீரில் கழுவி விட்டு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மசித்துக் கொண்டாள்.

“அக்கா கை எறியப் போகுது” என்றான் விக்கி.

“அதெல்லாம் எறியாதுடா” என்றவள்,

“உப்பு கொண்டு வந்தியா?” என்றாள்.

“இதோ எப்பவும் போல எடுத்துட்டு வந்தேன்” என்று அவன் சொல்லவும், அதையும் கலந்து கொண்டு, இலையில் சாப்பாட்டை வைத்து அந்த மசியலையும் வைத்து கிருஷ்ணனுக்குக் கொடுத்தாள்.

“அக்கா இது நல்லா இருக்குமா?” என்றான் விக்கி சந்தேகமாய்.

“சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லு” என்றவள் அவனுக்கும் ஊட்ட,

“அக்கா நிஜமாவே சூப்பரா இருக்கு” என்றவன் அவனும் சாப்பிட, அவளும் சாப்பிட ஆரம்பித்தாள். அவர்கள் மூவரைப் பொறுத்தவரை விசாலாட்சி என்ற ஒரு ஜீவனை கண்டு கொள்ளவே இல்லை.

அதையெல்லாம் கண்டும் காணாததும் போல் இருந்த ஆதி,

“கிளம்புங்க” என்றான் அடிக்குரலில்.

சிவ தீர்த்தவோ கையில் ஒடித்து வைத்திருந்த பெரிய குச்சியை மண்ணில் குத்தி குத்தி அளந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவளை முறைத்த விசாலாட்சி அவர்களைத் தாண்டி செல்ல முற்பட, சட்டென்று குச்சியை நடைபாதையின் இடையே நீட்டியிருந்தாள் சிவா. அதில் கால் இடறி, குப்புற விழப் போன விசாலாட்சியை ஆதி பிடித்திருந்தான்.

“பார்த்து நடங்க” என்றவன் சிவ தீர்த்தாவை அழுத்தமாய் பார்க்க,

“தெரியாம குச்சி குறுக்க போய்டுச்சுடா விக்கி” என்றாள் தம்பியைப் பார்த்துக் கொண்டே.

“நான் சொன்னேன்ல ஆதி, அவளுக்கு திமிர் அதிகம். கொஞ்சம் விட்டிருந்தா இந்நேரம் என் நிலைமை என்ன ஆகியிருக்கும்?” என்று புலம்பிக் கொண்டே சென்றார் விசாலாட்சி.

“நீங்க பண்ணதுக்கும் அந்த பொண்ணு பண்ணதுக்கும் சரியா போச்சு. இனியாவது இப்படி சின்னப் பிள்ளைத்தனமா நடந்துக்கிறதை விடுங்க” என்றவன்,

“இவளும் லேசுப்பட்ட ஆள் இல்லை போலவே” என்று எண்ணிக் கொண்டான்.

அதுவரை குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கி, கண்ணீர் வெளியே வர,

“சிவா” என்றார் கிருஷ்ணன்.

“அப்படி என்னப்பா அவங்களுக்கு நம்ம மேல வன்மம். சாப்பிடுற சாப்பாட்டைத் தட்டி விடுற அளவுக்கு? இப்படியும் இருப்பாங்களா?” என்றவளுக்கு குரல் கமறியது.

“அவங்க குணம் தெரிஞ்சது தானே..விடும்மா. இதுக்குத்தான் நான் உன்னை வீட்டுக்கு போக சொன்னேன்” என்றார்.

ஏனோ இப்போதெல்லாம் அவளால் அவ்வளவு சாதரணமாக எதையும் கடந்து செல்ல முடியவில்லை. கோபத்தில் அவளும் பதிலுக்கு பதில் எதையாவது செய்து வைத்து விடுகிறாள்.

“நீ வீட்டுக்கு போமா. நாளைக்கு காலேஜ் போகணும். மிச்ச வேலையை நான் முடிச்சுட்டு வர்றேன்” என்றார். அவளோ விடாமல் இருந்து வேலையெல்லாம் முடித்துக் கொண்டு தந்தையுடன் தான் கிளம்பினாள்.