“என்னாச்சு ஆதி? எதுக்கு இந்த கையெழுத்து?” என்று ரேணுகா தான் கேட்டிருந்தார்.

“அது டிவேர்ஸ் பேப்பர்ஸ் தான்மா” என்றான் அலுங்காமல் குலுங்காமல். சொன்னவன் போனை எடுத்துக் கொண்டு பைலுடன் வெளியே செல்ல,

விசாலாட்சியும் மகாதேவனும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தனர். அன்று மாந்தோப்பிற்கு சென்று ஆதியிடம் அவர்கள் பேசிய விஷயமும் இது தானே. அதற்கு பிறகு அவன் கோபமாய் இருப்பதற்கு காரணம் தாங்கள் பேசியது தான் என்று நினைத்திருக்க, கடைசியில் பேரன் தான் சொன்னதை தான் செய்து முடித்திருக்கிறான் என்று எண்ணிய விசாலாட்சிக்கு அப்படி ஒரு சந்தோசம். மகாதேவனுக்கோ எண்ணியது இவ்வளவு சீக்கிரம் நடந்துவிட்டதே என்ற எண்ணம்.

ஆனாலும் அவன் அப்படி உரிமையாய் கையெழுத்து போட சொன்னது தான், எங்கோ இடித்தது.

சிவாவை தன்னுடைய அறைக்குள் இழுத்து சென்ற ரேணுகா,

“என்ன சிவா இதெல்லாம்?ஆதி விவாகரத்து பேப்பர்னு சொல்றான். நீ வேற என்ன ஏதுன்னு கேட்காம கையெழுத்து போட்டு வச்சிருக்க?” என்றார் பதட்டத்துடன்.

“இப்போ எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறிங்க ரேணுமா? கண்டிப்பா அது டிவேர்ஸ் பேப்பரா இருக்காது” என்றாள் உறுதியாய்.

“எப்படி சொல்ற?” என்றார்.

“கண்டிப்பா இருக்காது ரேணுமா. பிரிஞ்சு போகணும்னு நான் நினைச்சா தான் ஆச்சு. அவங்க எப்பவும் அப்படி நினைக்க மாட்டாங்க. உங்க பையனைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா ரேணுமா?” என்றாள் சிவா.

“அப்பறம் ஏன் ஆதி அப்படி சொன்னான்?” என்ற ரேணுகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

“அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்! நீங்க தேவையில்லாம எதையாவது யோசிக்காதிங்க” என்றாள் சிவா.

“என் பையன் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையாடா?” என்றார் அவர் சஞ்சலம் மறைந்த நிறைவுடன்.

“அப்படியும் சொல்லலாம்” என்று இழுத்தவள்,

“உங்க பையனை விட, என் புருஷன் மேல அவ்வளவு நம்பிக்கை ரேணுமா. வாங்க போய் டீ போடலாம்” என்றபடி திரும்ப, அவர்களை பார்த்தபடி கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் ஆதி கேசவன்.

‘அய்யோ’ என்ற நிலையில் பார்த்தவள்,

“நான் போய் டீ போடுறேன் ரேணுமா, நீங்க பேசிட்டு வாங்க” என்று எஸ்கேப் ஆகப் பார்க்க, தன்னைத் தாண்டி சென்றவளின் கையைப் பிடித்து இழுத்து தன்னருகில் நிறுத்தியவன்,

“அம்மா எனக்கு நீங்க போடுற டீ தான் வேணும்” என்றான் சிவாவைப் பார்த்தபடி.

“நான் போட்டு எடுத்துட்டு வரேன்ப்பா” என்று சென்றவருக்கு முகமெல்லாம் பூரிப்பு.

அவன் பார்வையே தினுசாய் இருக்க,

“நானும் வரேன் ரேணுமா” என்று பின்னே செல்ல முயன்றவளை உள்ளே தள்ளி கதவை அடைத்தவன், அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“புருஷன் புருஷன்னு எல்லார்கிட்டயும் சொல்லத் தெரிஞ்சவளுக்கு அதை என்கிட்ட சொல்லணும்னு தெரியலை பார்த்தியா? சும்மா சொல்லக் கூடாது கேட்கவே சும்மா கிக்கா தான் இருக்கு. இது தெரியாம கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செம்ம சான்சை மிஸ் பண்ணிட்டு வந்துட்டேன்” என்றவனின் குரலில் இருந்த உல்லாசத்தில் அவளுக்கு வெட்கம் பிடுங்கித் திங்க அதை அவனுக்குள்ளேயே மறைத்துக் கொண்டாள்.

“தீர்த்தா, நிஜமாவே அது டிவேர்ஸ் பேப்பர்சா இருந்தா என்ன பண்ணுவ?” என்று அவன் கேட்டு முடிக்கும் முன், தன் கை கொண்டு அவன் வாயை மூடியிருந்தாள். அவளின் விரல்களைப் பிரித்தவன்,

“ஒரு பேச்சுக்கு கேட்குறேன்? நிஜமாவே அப்படி இருந்தா என்ன பண்ணுவ?” என்றான் தீவிரமான மனநிலையுடன். அவனை உக்கிரமாய் முறைத்தவள், சப்பென்று கன்னத்தில் அடித்திருந்தாள்.

“என்னடி பொசுக்குன்னு அடிச்சுட்ட?” என்றவன்,

“இந்த ஆதி கேசவனை அடிக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சா? யார் குடுத்த தைரியம் இது?” என்றான் புருவத்தை உயர்த்தியபடி.

‘நீங்க குடுத்த தைரியம் தான்’ என்ற ரீதியில் பார்த்து வைத்தாள் சிவ தீர்த்தா.

தன் கையணைப்பில் நின்று, தன்னையே அடித்து, தன்னை நேருக்கு நேர் பார்த்து நின்றவளின் தைரியத்தில் சொக்கி நின்றவன்,

“என்னை என்னவோ பன்றடி நீ” என்றவன் முதன் முறையாக அவள் இதழ்களை சிறை செய்திருந்தான். அவனின் இதழ் முத்தத்தில் கிறங்கி நின்றவளின் முகம் பார்த்தவனுக்கு உணர்கள் பேயாட்டம் போட, அவள் இதழ்களின் இதத்தில் இருந்து வெளி வரவே தோன்றவில்லை அவனுக்கு.

மூச்சிற்கு ஏங்கியவள், சட்டென்று அவனிடமிருந்து பிரிய, அவனின் நிலைதான் திண்டாட்டமாய் இருந்தது. அவனின் முகம் பார்க்க தயங்கிவள், கதவைத் திறந்து கொண்டு சென்றுவிட, அவனோ ஒரு சிரிப்புடன் நின்றிருந்தான்.

விசாலாட்சியின் அறையில் இருந்த மகா தேவனோ,

“நிஜமாவே ஆதி நம்ம சொன்னதை செஞ்சுருப்பான்னு நினைக்கிறிங்களா அத்தை” என்றார்.

“நம்ம முன்னாடி தான கையெழுத்து வாங்கினான் மகா தேவா” என்றார் விசாலாட்சி.

“ஆனா, அன்னைக்கு தோப்புல வச்சு நம்மள அந்த பேச்சு பேசுனானே? எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. அதைப் பார்த்தா விவாகரத்து பேப்பர் மாதிரி தெரியலை” என்றார் யோசனையுடன்.

“அவன் சுபத்ராவை மனசுல நினைச்சு தான் அவ கூட வாழ்றேன்னு சொல்லியிருக்கணும்.அவளைப் பத்தி சொல்லவே வேண்டாம், ஏற்கனவே திமிர் பிடிச்சவ. ஆதி அவளை வேண்டாம்னு சொன்னா, கண்டிப்பா அவ திரும்பிக் கூட பார்க்க மாட்டா. இந்த குடும்பத்துக்கு எது நல்லதோ அதைத் தான் ஆதி செய்வான். நம்ம தான் தெளிவா எடுத்து சொல்லியிருக்கோமே. அவளை விவாகரத்து பண்ணினாதான் சொத்துன்னு” என்றார் விசாலாட்சி.

“ஏற்கனவே சொத்து தேவையில்லைன்னு சொல்லி தான அந்த பொண்ணை உள்ள கூட்டிட்டு வந்தான். இப்போ இப்படி மாத்தி பேசுறான். எனக்கென்னவோ இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கு அத்தை ” என்றவர்,

“நீங்களாவது உங்க முடிவுல உறுதியா இருப்பிங்களா? இல்லை நீங்களும் இடையில மனசு மாறிடுவிங்களா?” என்றார் மகாதேவன்.

“என் பொண்ணை இழுத்துட்டு போய் கல்யாணமும் பண்ணி, ஒரு குழந்தையையும் குடுத்துட்டு, இன்னொரு பொம்பளையோட தொடர்பு வச்சுகிட்டவன் அந்த கிருஷ்ணன். அவனுக்கு என் பொண்ணு கிடைச்சது எவ்வளவு பெரிய விஷயம்? என் பொண்ணை அடிச்சு அனுப்புற அளவுக்கு அந்த ஒன்னுமில்லாதவனுக்கு தைரியம் எங்க இருந்து வந்தது?நீ மட்டுமில்லைன்னா சுபத்ரா வாழ்க்கை என்னாகியிருக்கும் மகாதேவா? இப்போ அவன் பொண்ணை மட்டும் இந்த வீட்ல வாழ விட்ருவேனா?” என்றார் விசாலாட்சி.

“பழசெல்லாம் இப்போ எதுக்கு அத்தை?” என்றார் பெருந்தன்மையாய்.

“இப்ப நினைச்சாலும் மனசே ஆற மாட்டேங்குது மகாதேவா” என்றவரை மிதப்பாய் பார்த்திருந்த மகாதேவன், தங்கள் அறைக்கு செல்ல, சுபத்ராவோ அவரை நேருக்கு நேர் பார்த்து நின்றார்.

கதவை அடைத்தவரின் முகம் வேறு ஒன்றாய் மாறியிருந்தது.

“என்ன பார்வை எல்லாம் பலமா இருக்கு? அந்த அளவுக்கு திமிர் ஆகிடுச்சா உனக்கு? மாமா படுத்த படுக்கையா இருக்காருன்ற தைரியமா?” என்றார்.

“ஆமா திமிர் தான், தைரியம் தான். அதுக்கு என்ன இப்போ?” என்றார் சுபத்ரா.

“என்னடி, நினைச்ச மாதிரி முதல் புருஷனுக்கு பிறந்த மகளை இந்த வீட்டுக்குள்ள கொண்டு வந்துட்டோம்கிற திமிரா? நான் இருக்குற வரைக்கும் அதெல்லாம் நடக்காது” என்றார் மகா தேவன்.

“நீங்க தான் தைரியமான ஆளாச்சே? எங்க என் பொண்ணைத் தொட்டுப் பாருங்க தெரியும்?” என்றார் சுபத்ரா.

“என் பொண்ணுன்னு நீ தைரியமா சொல்ற அளவுக்கு வந்துட்ட போல? நானும் மாமாவும் தப்புப் பண்ணிட்டோம், அன்னைக்கு குழந்தையா இருந்தப்பவே கழுத்தைத்  திருகிப் போட்டிருந்தா, இன்னைக்கு வளர்ந்து வந்து இப்படி குடைச்சல் குடுக்காது” என்றார் மகாதேவன்.

“என்னோட இத்தனை வருஷ அமைதிக்கு ஒரு பலன் வேண்டாமா?” என்றார் சுபத்ரா நக்கலாய்.

சுபாவின் கழுத்தை நெரித்தவர்,

“என்னடி வாய் நீளுது? எனக்கு நிச்சயம் பண்ணிட்டு அவனோட ஓடிப்போனப்ப இருந்த அதே திமிரு உன் முகத்துல தெரியுதே? பயம் விட்டு போச்சா? இப்பவும் எதுக்கும் யோசிக்காம முடிச்சுவிட்டு போயிட்டே இருப்பேன். என்னைப் பத்தி தெரியும்ல” என்றார்.

“நல்லா தெரியுமே? ரூம்குள்ள மட்டும் வீரத்தை காட்டுற ஆம்பள தானே நீ.  எங்க உண்மையான ஆம்பளையா இருந்தா இதை அப்படியே வெளிய காட்டு பாப்போம். ஆதி இருந்த இடம் தெரியாம உன்னை கொன்னு புதைச்சுடுவான். இப்போ என் பொண்ணும் இங்க தான் இருக்கா? ஞாபகம் இருக்குல்ல” என்றார் சுபா.

“என்னடி வார்த்தைக்கு வார்த்தை என் பொண்ணுன்னு சொல்லிட்டு இருக்க?” என்றவர் எகிற,

“உண்மை அதான? அவ எனக்கு பிறந்தவ தான? அப்போ என் பொண்ணுன்னு சொல்றதுல என்ன தப்பிருக்கு” என்றார் சுபத்ரா எதிர்த்து நின்று.

“புள்ளப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்க ஆரம்பிச்சிருக்கு. என்னையவே ஆம்பளையான்னு கேட்குற அளவுக்கு? ஏன் ரெண்டு பிள்ளை பெக்கும் போது தெரியலையா நான் ஆம்பளையா இல்லையான்னு?” என்றார்.

“கூடப் படுக்குறவன் எல்லாம் ஆம்பளையும் ஆகிட முடியாது. புள்ளையைக் குடுத்தா மட்டும் புருஷனும் ஆகிட முடியாது” என்று சுபத்ரா சொல்லி முடிக்கும் முன் அவரை அறைந்திருந்தார் மகா தேவன்.

“தப்பு பண்ணிட்டேன்டி, அன்னைக்கே அந்த கிருஷ்ணன் பயலையும் அவன் பெத்த குட்டிப் பிசாசையும் ஜோலியை முடிச்சிருக்கணும். நான் அவமானப் பட்ட மாதிரி, அவனும் படனும்.. தினம் தினம் உன்னைய என் பொண்டாட்டியா பார்த்து அவன் உக்கி உருகி சாகனும்னு நினைச்சு அவனை விட்டு வச்சதுக்கு, இன்னைக்கு அவன் பொண்ணு இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சு என்னையவே ஓசி சோறு திங்கிறவன்னு சொல்றா? நீயும் அதை ரசிச்சு கேட்டுகிட்டு இருக்க?” என்ற மகாதேவன், ஆத்திரத்தை அடக்கியபடி,

“உன் பேர்ல இருக்குற சொத்து மட்டும் என் கைக்கு வரட்டும். அதுக்கு அப்பறம் இருக்குடி உனக்கு. அப்ப தெரியும் இந்த மகா தேவன் யாருன்னு” என்றவரின் கோர முகத்தை தினம் தோறும் பார்த்துக் கொண்டிருப்பதால், சுபத்ராவிற்கு பெரிதாக ஒன்றும் வலிக்கவில்லை. இத்தனை வருடங்களில் அவருக்கான தண்டனையாகவே இதை எடுத்துக் கொண்டார்.