“விசாலாட்சி பேரனை புருஷனா ஏத்துக்கிறதுல அவ்வளவு தயக்கம் உனக்கு இல்லையா?” என்றவனின் குரலில் அவள் அதிர்ந்து பார்க்க,
“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. என்னோட கட்டாயத்துக்காக உன்னை பிடிச்சு வச்சிருக்க மாதிரி இருக்கு. விருப்பம் இல்லாத வாழ்க்கையை சகிச்சுகிட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை” என்று பேசி கொண்டிருந்தவனின் பேச்சு தடைபட்டிருந்தது.
அவனை நெருங்கி அமர்ந்திருந்தவள், அவன் கையோடு கைகளை கோர்த்து அவனின் தோள் சாய்ந்திருந்தாள். அவனின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அவளின் ஒற்றை செய்கையில் கிடைத்திருந்தது அவனுக்கு.
மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் அகன்ற உணர்வு அவனுக்கு. பாட்டியை வெறுப்பேற்றத்தான், தன்னுடன் இணக்கமாக நடந்து கொள்கிறாள் என்று தெரிந்ததில் இருந்து அவன் இயல்பாகவே இல்லை. அவள் கோபமாய் இருந்ததைக் கூட தாங்கிக் கொண்டவனால், அவள் நடிக்கிறாள் என்பதை மட்டும் ஏனோ தாங்க முடியவில்லை.
அவளை அவளுக்காக ஏற்றுக் கொண்டதைப் போல, தன்னை தனக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவன் மனம் எதிர்பார்த்திருந்தது.
“சரி சைட் அடிக்கிறது தான் அடிக்கிற? அதை இப்படியா பப்ளிக்கா தெரியற மாதிரி அடிப்ப?” என்றவன் சிரித்து வைக்க, அவனின் கிண்டலில் விலகப் போனவளை மீண்டும் இழுத்து அணைத்திருந்தான்.
“இப்ப எதுக்கு முறைக்கிற? நான் உண்மையைத் தான சொன்னேன்? முறைப் பொண்ணுன்னா முறைச்சுகிட்டே இருக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?” என்றவனுக்கு அவளிடமிருந்து வார்த்தையாக எந்த பதிலும் வரவில்லை. இந்த அளவிற்கு அவள் மனதை சொன்னதே போதுமென்ற நிலை தான் அவனுக்கும்.
“இன்னைக்கு மதியத்துக்கு மேல கிளாஸ் இல்லை ரேணுமா” என்றவளின் முகம் இப்போது தெளிந்திருப்பதை ரேணுகாவும் குறித்துக் கொண்டார்.
“என்னாச்சு சிவா? ஏன் காலையில ஒரு மாதிரி இருந்த?” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ரேணுமா. ஒரு சின்ன குழப்பம் அவ்வளவு தான்” என்றவள் அவரிடம் எதையோ கேட்க வருவதும் பின் தயங்குவதுமாய் நிற்க,
“ஏதாவது என்கிட்டே கேட்கணுமா சிவா?” என்றார்.
“அது ரேணுமா, இங்க வீட்ல நடந்த பிரச்சனை எல்லாம் அவங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் தயக்கமாய்.
“முதல்ல நடந்த பிரச்சனையை நான் சொன்னேன், இரண்டாவது நடந்த பிரச்சனையை விசாகன் சொல்லியிருக்கான்” என்றார் ரேணுகா.
“ஏன் ரேணுமா சொன்னிங்க? அவங்க அதனால தான் நான் அவங்ககிட்ட நார்மலா நடந்துக்கிறேன்னு நினைச்சுகிட்டாங்க” என்றாள் பாவமாய்.
“அது உண்மை தான சிவா” என்றார் ரேணுகாவும் சட்டென்று.
“என்ன ரேணுமா சொல்றிங்க?” என்றவளுக்கு திகைப்பு.
“ஆதியை நீ புருஷனா நினைச்சிருந்தா நடந்த பிரச்சனையை அவன்கிட்ட நீதானே சொல்லியிருக்கணும். என்னைய சொல்லிட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்க? நடக்குற பிரச்சனையை ஆதிகிட்ட மறைக்குறேன்னு தெரிஞ்சாலே இந்த வீட்ல இருக்குறவங்க இன்னும் அதிகமா தான் ஆட ஆரம்பிப்பாங்க. அதான் நான் சொல்லிட்டேன்” என்றார்.
“அது எனக்கு எப்படி தெரியும்? இதோ இப்போ என்கிட்ட சொன்ன மாதிரி சொன்னாத்தான தெரியும் சிவா” என்றார்.
“எப்படி சொல்றேன்னு மட்டும் பாருங்க” என்று சிரித்தவள், சுபத்ரா வரவும் அப்படியே சிரிப்பை முழுங்கிக் கொண்டாள்.
“நான் போய் ரெப்ரஷ் ஆகிட்டு வரேன் ரேணுமா” என்றவள் இடத்தை காலி செய்தாள்.
அறைக்கு வந்தவளுக்கு ஏனோ நினைவு முழுவதும் ஆதியைப் பற்றி தான்.
‘எப்படி இவங்ககிட்ட பேசுறது? அவங்க என்கிட்ட சகஜமா இருக்குற மாதிரி ஏன் என்னால இருக்க முடியலை?’ என்று எண்ணியபடி அறையை அளந்து கொண்டிருந்தாள். ஏனோ எதைப் பார்த்தாலும் அவன் முகம் தான் தெரிவதைப் போல் இருந்தது.
‘தாலி பிரிச்சு போட்ட பங்க்ஷன்ல இருந்தே நீ ஒரு மார்க்கமா தான்டி இருக்க?” என்று அவளின் மனசாட்சி எடுத்து சொல்ல,
“அப்ப இருந்தேவா?” என்று எண்ணியவளுக்கு ஒவ்வொன்றாய் நினைவடுக்கில் வர, ‘ஆமாம்’ என்று தான் தோன்றியது. சிறிது சிறிதாக அவன்பால் சாய்ந்திருந்த மனம் இப்போது மொத்தமாக அவனிடம் சாய்ந்திருந்தது.
ஆதி திரும்பி வரும் போது விசாலாட்சியும் மகாதேவனும் அங்கு தான் இருந்தனர்.
கையில் பைலுடன் வந்தவன் யாரையும் சட்டை செய்யாமல் மேலே செல்ல, விசாலாட்சியை பார்வையால் ஜாடை காட்டியிருந்தார் மகா தேவன்.
அறைக்குச் சென்றவன் அவளைக் காணாமல் தேட, அவளோ யாருமில்லை என்ற நினைப்பில் குளித்துவிட்டு டவலுடன் வெளியே வந்திருந்தாள்.
“தீர்த்தா” என்று திரும்பியவன், அவளைக் கோலம் கண்டு திகைத்திருந்தான். அவளோ அவன் திடீரென்று வந்து நிற்பான் என்று எதிர்பார்க்காதவள் அதிர்ச்சியில் அப்படியே நிற்க, சட்டென்று திரும்பிக் கொண்டான் ஆதி. அவன் திரும்பிக் கொள்ளவும் தான் அவளுக்குத் தான் இருக்கும் நிலையே உரைத்தது.
“ஸ்ஸ்” என்று என்று தலையிலடித்தவள், மீண்டும் பாத்ரூமிற்குள் செல்ல முற்பட,
“சாரிமா..! நான் கீழ இருக்கேன் நீ வா” என்றபடி சென்று விட்டான். அறைக்கு வெளியே வந்தவனுக்கு மூச்சடைத்தது. மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டவனுக்கு, தன்னிலைக்கு திரும்பவே சில நிமிடங்கள் எடுத்தது.
‘இப்ப எதுக்கு நீ யார் ரூம்க்குள்ளயோ நுழைஞ்சு யாரையோ பார்த்த மாதிரி வெளிய வந்த? உள்ள இருக்குறது உன்னோட வொயிப் தான” என்று மனசாட்சி நக்கலடிக்க,
‘அவ்வளவு நல்லவனாடா நீ’ என்றவனுக்கு தன்னை நினைத்தே சிரிப்பு. அவன் வந்து சென்ற பத்தாவது நிமிடத்தில் அவளும் அவன் பின்னே சென்றிருந்தாள்.
போன வேகத்தில் கீழே வந்த பேரன் அமைதியாய் இருப்பது கண்டு விசாலாட்சி யோசனையாய் பார்த்து வைக்க, பின்னோடு அவளும் வரவும் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
ஸ்கேர்ட்டும் டாப்புமாய் வந்தவளை ஆச்சர்யமாய் பார்த்திருந்தான் ஆதி கேசவன். அவள் கைக்கு அவசரத்திற்கு அதானே கிடைத்தது.
வந்தவள் அவனையே பார்த்துக் கொண்டு நிற்க, அவளை தீர்க்கமாக பார்த்தவன்,
“என் மேல நம்பிக்கை இருந்தா இந்த பத்திரத்தைப் படிச்சுப் பார்க்காம கையெழுத்துப் போடு தீர்த்தா” என்றான் ஆதி கேசவன். அவளோ சற்றும் யோசிக்காமல் அவன் காட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்டு முடித்திருந்தாள்.