“அது ஒண்ணுமில்லை ஆதி. சும்மா பேசிட்டு இருந்தோம்” என்றவர் போட்டோவை உள்ளே வைக்க,
“ஆமா அது என்ன போட்டோ?” என்றான்.
“அது” என்று தயங்கியவர் அவனிடம் நீட்ட, அதைப் பார்த்தவனின் முகம் புன்னகையில் விரிந்தது.
“மேடம் இதைப் பார்த்துட்டு தான் சிரிச்சுட்டு போறாங்களா?” என்றான்.
“ஆமா ஆதி. உன்கிட்ட காட்டக் கூடாதுன்னு வேற சொல்லிட்டு போனா. நீ பார்த்த மாதிரி காட்டிக்காத ஆதி” என்றார்.
“இத்தனை நாள் என்கிட்ட கூட நீங்க காட்டலை. இன்னைக்கு மருமகளுக்கு மட்டும் ஸ்பெஷலா?” என்றவன் அதை வாங்கிக் கொள்ள,
“வேண்டாம் ஆதி. அப்பறம் சிவா என்னை நம்ப மாட்டா. அது என்கிட்டையே இருக்கட்டும்” என்றார்.
“இதெல்லாம் ரொம்ப ஓவர்மா” என்றவன் அவளைப் போல் தன் மொபைலில் படம் பிடித்துக் கொண்டு அவரிடம் கொடுத்துவிட்டான்.
“ஆதி, பாட்டியும் தாத்தாவும் உங்களை விருந்துக்கு வர சொன்னாங்க. ஒரு நாள் போயிட்டு வந்திடுங்கப்பா” என்றார் ரேணுகா.
“அங்க போய் மாமா எதையாவது பேசி வச்சுட்டா சங்கடமா போய்டும்மா” என்றான் யோசனையுடன்.
“அதெல்லாம் பேச மாட்டாங்க. நான் தெளிவா பேசி தான் அனுப்பியிருக்கேன்” என்றார்.
“பார்க்கலாம்” என்றான் ஆதி கேசவன்.
அன்றிரவு உறங்கப் போவதற்கு முன், அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள் சிவ தீர்த்தா. ஆதி தன் லேப்டாப்பில் தீவிரமாய் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, இவளோ அறையின் நீள அகலத்தை அளப்பவள் போல் நடந்து கொண்டிருந்தாள். விசாலாட்சி பேசியது அவள் மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
அவன் வேலைக்கு நடுவே அறைக்குள் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்த வளையல் ஓசையும், கொலுசின் ஒலியும் ஒரு ஏகாந்த உணர்வை அவனுக்குக் கொடுக்க, ஸ்க்ரீனை சற்று விலக்கி அவளைப் பார்த்திருந்தான் ஆதி.
அவளோ தீவிரமான யோசனையில் இருந்தாள்.அவ்வப்போது நகத்தை வேறு கடித்துக் கொள்ள, இவன் பார்வையோ அவள் இதழ்களுக்கு சென்று மீண்டு கொண்டிருந்தது.
‘ஆதி, மைண்ட டைவர்ட் ஆக விடாத. ஓரளவுக்கு சகஜமா இருக்குற மாதிரி இருக்குறா. நீ இப்படி பார்க்குறேன்னு தெரிஞ்சா வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடும்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவன், மீண்டும் வேலையில் கவனம் செலுத்த முயல, கண்களோ அவளைத் தேடித் தான் சென்றது.
“காலையில இருந்து இன்னைக்கு என்னை பாடா படுத்துறா. அதுக்குத்தான் வீட்டுப் பக்கமே வராம இருந்தேன். ஸ்டெடி ஆதி ஸ்டெடி. உனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. அதை டேமேஜ் பண்ணிடாத” என்று புலம்பிக் கொண்டவன்,
“இது கதைக்கு ஆகாது. பேசாம போய் படுத்து தூங்கிட வேண்டியது தான்” என்று எண்ணியவன், அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு வந்து படுத்து விட்டான். அவளோ அவன் படுத்தது கூட தெரியாமல் இன்னமும் நடந்து கொண்டிருக்க,
“இப்ப இவளுக்கு என்னதான் பிரச்சனை?” என்று யோசித்தவன்,
“அவளே வந்து பேசட்டும். மேடம் வாயைத் திறக்காம நானே புரிஞ்சுகிட்டு இருந்தா கடைசி வரைக்கும் இப்படியே ஊமைப் படம் ஓட்டுவா” என்று எண்ணியவன், அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
அவனிடம் அவள் எதையோ கேட்க வருவதும், பின் தயங்குவதுமாய் இருக்க, வெறுமனே கண்களை மூடியிருந்தவனுக்கு பொறுமை பறந்தது.
“இப்ப என்ன தீர்த்தா உன் பிரச்சனை? எதுக்கு அப்போ இருந்து ரூமை அளந்துட்டு இருக்க?” என்றான் மனசு கேட்காமல்.
அவளோ அப்போதும் பேசாமல் நிற்க,
“இன்னும் ரெண்டு நாள்ல நீ காலேஜ் போகணும் அதானே” என்றான் ஆதி. அவளுக்கோ வியப்பில் கண்கள் விரிந்தது. அவள் கேட்க வந்த விஷயமே வேறு. ஆனால் அவன் சொன்ன விஷயத்தையும் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் தான்.
“கண்ணை ரொம்ப விரிக்காத. பார்த்தா வழுக்கி விழுந்திடுவேன் போல” என்று முனங்கியவன்,
எழுந்து சென்று அவளின் கல்லூரிக் கட்டணம் கட்டப் பட்டதற்கான பில்லை அவளிடம் வந்து நீட்டியிருந்தான்.
“மொத்தமா பே பண்ணியாச்சு. இந்த வீட்ல இருந்து காலேஜ் போய்ட்டு வர இஷ்ட்டம் இல்லைன்னா ஹாஸ்ட்டல்ல கூட ஸ்டே பண்ணிக்க. உன்னோட விருப்பம் தான். காலேஜ் பஸ் பெசிலிட்டிஸ் இல்லைன்னு சொன்னாங்க. அவுட் பஸ்ல தான் போயிட்டு வருவியாமே? எதுக்கு அலைச்சல்?” என்றவன், மீண்டும் அவனிடத்தில் சென்று படுத்துவிட்டான்.
‘இப்போ இவங்களை பீஸ் கட்ட சொன்னாங்களா? இப்பவே கட்டணும்னு என்ன அவசியம்? எல்லாம் பில்டப்பு’ என்று கடுப்படைந்தவள்,
‘இதுல விருப்பப்பட்டா ஹாஸ்ட்டல்ல கூட ஸ்டே பண்ணிக்கவாம்? நான் ஏன் ஹாஸ்ட்டல் போகணும்? அந்த கிழவி என்னை ஓரமா இருன்னு சொல்லுது, இவங்க என்னை ஹாஸ்ட்டல்ல இருக்க சொல்றாங்க? என்ன நினைச்சுட்டு இருக்காங்க என்னைப் பத்தி. விடியட்டும் வச்சுக்கிறேன்’ என்று அவனை மனதிற்குள் கழுவி ஊற்றியவள் பேசாமல் படுத்துவிட்டாள்.
“இவங்களுக்கு எப்படி தெரியும்? அப்பா சொல்லியிருப்பாரோ?” என்று யோசித்துக் கொண்டிருந்தவள், உறங்கியும் போனாள்.
“இவ என்ன புடவையைக் கூட மாத்தாம அப்படியே படுத்துத் தூங்கிட்டா? எனக்குத்தான் தூக்கம் வருமான்னு தெரியலையே?இதுல தலை நிறைய பூ வேற?ஏற்கனவே காலையில் இருந்து அவனை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறாள். இப்போது அவளின் அருகாமை அவனை மேலும் சோதனைக்கு உள்ளாக்க,
“சரித்தான், இன்னைக்குத் தூங்கின மாதிரி தான்” என்று அவளைத் தான் ரசித்துக் கொண்டிருந்தான். உறங்கும் போது மட்டும் தான் அவள் முகம் இறுக்கம் விடுத்து இயல்பாக இருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு.
“தூங்குறவளை சைட் அடிக்கிறியே தப்பில்லையா?” என்று ஒரு மனம் நக்கலடிக்க,
“தூங்குறப்ப மட்டும் தான் இவளை சைட் அடிக்க முடியும். முழிச்சிருந்தா இவ அடிக்க வருவாளே” என்றான் பதிலாய்.
பூவின் வாசனையும் அவளின் வாசனையும் சேர்ந்து கொள்ள, முதன் முறையாக அவனுடைய அறையில் அவனுக்கு மூச்சு முட்டியது. மனதின் புழுக்கம் உடலிலும் தெரிய ஏசியின் குளிரை அதிகப்படுத்தி வைத்தான். ஆனால் குளிர் எடுத்தது என்னவோ அவளுக்குத் தான்.
அவளோ தூக்கத்தில் குளிர் தாங்க முடியாமல் அவனை ஒண்டிப் படுத்துக் கொள்ள, அவளின் அந்த நெருக்கம் அவனுக்குத் தான் சோதனையாய் வந்து விடிந்தது.
தன் மேல் விழுந்த அவளின் வளையல்கள் நிறைந்த கரத்தை ஆச்சர்யமாய் பார்த்தவன், அவளைத் தன் தோள் வளைவில் இழுத்துக் கொண்டான்.
“இந்த ஐடியா நல்லா இருக்கே! குளிர் வந்தா மேடம் பக்கம் வர்றாங்க. ஆதி இதையே மெயின்டெய்ன் பண்ணிக்கடா” என்று சொல்லிக் கொண்டவன்,