ஆதி கேசவன்- சிவ தீர்த்தாவின் திருமணம் முடிந்து பத்து நாட்களை கடந்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிந்திருந்தது சிவாவிற்கு. ஆதியும் அவளிடம் சகஜமாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அவளோ அதற்கு சிறிதும் இடம் கொடுக்காமல் அவனை நிமிர்ந்து பார்ப்பதையே தவிர்த்து வந்தாள். ஆனால் ஒரு முன்னேற்றமாக, அவன் வெளியே செல்லும் நேரம், வீட்டிற்கு வரும் நேரம், அவனுடைய வேலைகள் என்று ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்தாள். அவனுடைய நடைமுறை பழக்க வழக்கங்கள் இப்போது அவளுக்கும் பழகியிருந்தது.
சிவ தீர்த்தாவிற்கும் ரேணுகாவிற்குமான பந்தம் தான் நாளுக்கு நாள் பிணைந்து கொண்டே சென்றது. தனக்குத் தேவையானதை அவரிடம் வாய் திறந்து கேட்கும் அளவிற்கு முன்னேறியிருந்தாள். கிருஷ்ணனுடன் தினமும் போனில் பேசுவதோடு சரி.
ஒரே ஊர், நினைத்தால் சென்று பார்த்துவிடும் தூரத்தில் அவர் இருந்தாலும், அன்றைய பிரச்னைக்குப் பிறகு அவள் அதிகம் செல்லவில்லை. அது கிருஷ்ணனுக்கும் புரிந்திருக்க வேண்டும், அதனால் அவரும் மகளிடம் வேறு எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
ஆனால் திருமணம் செய்து கொடுத்தாலும் மகளுக்கு முறையாய் செய்ய வேண்டிய எதையும் செய்யவில்லை என்ற எண்ணம் அவருக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போக, அதை ஒரு முறை ஆதியைப் பார்த்தும் கூறியிருந்தார்.
“உங்ககிட்ட இருக்குறது உங்க மகளுக்குத் தானே! அதை எப்ப வாங்கிக்கிட்டா என்ன? ஒரு அவசரமும் இல்லை. அப்படியே பத்திரமா வைங்க. உங்க பேரன் பேத்திக்கு ஆகும்” என்று ஒரு புன்னகையுடன் சொன்னவனைக் கண்டு அவருக்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி வியாபித்துக் கொண்டது.
இதையெல்லாம் அறியாத சிவ தீர்த்தா எப்போதும் போல் ஒரு சோகத்துடனே அந்த வீட்டில் வலம் வர, ஆதிக்குத் தான் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்து கொண்டிருந்தது. அவளின் மன உணர்வுகள் அவனுக்குப் புரிந்தாலும், எந்த நேரமும் அமைதியாய் இருப்பவளைக் கண்டு அவன் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை. அவளிடம் அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்பது அவனுக்கே புரியாத புதிராய் இருந்தது.
ஆதி தனக்காய் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வது சிவ தீர்த்தாவிற்கும் புரிந்து தான் இருந்தது. அதிலும் இத்தனை நாட்களில் அவன் கண்ணியமாய் நடந்து கொண்டதே அவனை பற்றிய அபிப்ராயத்தை அவளுக்குள் வேரூன்றச் செய்வதாய் இருந்தது.
அன்று காவேரியும், பேச்சியும் விக்னேஷையும் அழைத்துக் கொண்டு சிவ தீர்த்தாவை பார்க்க வந்திருந்தனர். ஆயிரம் தயக்கங்களும், யோசனைகளும் இருந்தாலும் அவளுக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கை செய்ய வேண்டுமே என்ற எண்ணம் அவர்களுக்கு.
வீட்டிற்கு வந்தவர்களைக் கண்டு திகைத்த ரேணுகாவிற்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியவில்லை. அவர்களின் வரவை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர்களுக்கும் புரிந்திருந்தது.
“வாங்க வாங்க” என்றார் படபடப்புடன். ரேணுகாவிற்கு விசாலாட்சியை நினைத்து பயம். அவரின் அறைப்பக்கம் ரேணுகாவின் பார்வை படிந்து மீள, உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“சிவா எங்கமா?” என்றார் பேச்சி.
“இதோ கூப்பிடுறேன், அதுக்கு முன்னாடி என்ன குடிக்கிறிங்க?” என்றார் ரேணுகா. பெரிய வீட்டு மருமகளாய் இருந்தாலும் ரேணுகாவின் தன்மையான பேச்சில் அவர்களுக்கு மகிழ்ச்சி.
“அதெல்லாம் வேண்டாம். முக்கியமான விஷயம் பேசணும். அதான் கிளம்பி வந்தோம்” என்றார் காவேரி.
“ஆதி தம்பி இல்லையாம்மா?” என்றார் பேச்சி.
“ஆதி வீட்ல தான் இருக்கான். ரெண்டு பேரையும் கூப்பிடுறேன்” என்றவர் ஆதியை அழைக்க, சிவா தான் வெளியே வந்தாள். அவளுக்குமே அங்கு வந்திருந்த காவேரி, பேச்சியைக் கண்டு ஆச்சர்யம். வேகமாய் வந்தவள்,
“காவேரிம்மா எப்படி இருக்கீங்க? பாட்டி நீங்களும்?” என்றாள் சிவா.
“நாங்க நல்லா இருக்கோம் சிவாம்மா..! நீ எப்படித்தா இருக்க?” என்றார் பேச்சி.
“எனக்கென்ன? நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள். பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த விசாலாட்சி ஹாலில் இவர்களைக் கண்டு ரேணுகாவை முறைத்தார்.
“வாங்க பாட்டி” என்ற ஆதியின் குரலில், விசாலாட்சி முகத்தை மாற்றிக் கொள்ள,
“நீ சும்மா இரு சிவா. செய்றதை செஞ்சுடணும்” என்ற காவேரி,
“நாளனன்னைக்கு நாள் நல்லா இருக்கு. அன்னைக்கே பண்ணிடலாமாங்க” என்றார் ரேணுகாவைப் பார்த்து.
ரேணுகாவிற்கும் இந்த யோசனை இருந்தது. ஆனால் எப்படி செய்வது என்று குழம்பியவராய் யோசித்திருந்தார். இரண்டு வீட்டு ஆட்களையும் ஒரு இடத்தில் கூட்டுவது என்பது சாதாரண காரியமா?
“சரிப்பா ஆதி” என்றவருக்கு ‘அப்பாடா’ என்ற எண்ணம் தான் வந்திருந்தது.
“நீங்க இருந்து சாப்பிட்டு தான் போகணும்” என்றான் ஆதி.
“சாப்பிட்டு தான் வந்தோம் ராசா. இன்னொரு நாள் சாப்பிடுறோம்” என்ற பேச்சி, காவேரியை அழைத்துக் கொண்டு கிளம்ப,
விக்னேஷ் அவளைப் பிரிய மனமின்றி சோகமாய் இருக்க,
“என்னடா சோகமா இருக்க? அறிவு அப்பா போன் பண்ணாரா? பேசினியா?” என்றாள் தம்பியிடம்.
“அதெல்லாம் பேசுனேன். நீதான் என்கிட்டே பேசவே இல்லை, வீட்டுக்கும் வரலை. நீ இல்லாம நல்லாவே இல்லக்கா” என்றான் பாவமாய்.
“நான் இருந்தா மட்டும் என்னமோ என்கூடவே இருக்குற மாதிரி. உனக்கு ஊர் சுத்தவே நேரம் பத்தாது. இதுல நான் இல்லாம பீல் பண்ற மாதிரி சீன் போடுற ஏன்டா?” என்று அவன் காதைப் பிடித்து திருக,
“உண்மையை எல்லாம் இப்படி வெளிய சொல்லாதக்கா. நானும் ரெண்டு பாசமலர் டயலாக் பேசலாம்னா விட மாட்டியே” என்றவன்,
“நிஜமாவே மிஸ் பண்ணேன் சிவாக்கா. நீ என்ன சொன்ன? மூணு கிலோ மீட்டர் தூரம் தான். நினைச்ச நேரத்துக்கு நீ வந்து பார்த்துக்கோன்னு சொன்ன? ஆனா இப்ப மூணு தெரு தள்ளி தான் இருக்க? ஆனா பார்க்க முடியலை” என்றான் விக்னேஷ் குறையாய்..
“நானும் தான்டா உன்னை மிஸ் பண்ணேன். இனி வந்து பார்க்குறேன்” என்று அவனை சமாதானப்படுத்த, அவர்களைத் தான் பார்த்திருந்தான் ஆதி கேசவன்.
இங்கு வந்த இத்தனை நாட்களில் இன்று தான் அவள் இயல்பாய் பேசி பார்க்கிறான். அவளின் முகமும் மலர்ச்சியாக இருக்க,ஏனோ அது அப்படியே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் தீவிரமாய் எழுந்தது.
“விட்டா ரெண்டு பேரும் பேசிட்டே இருப்பிங்க. வாடா விக்கி கிளம்பலாம்” என்று காவேரி அவனை வம்படியாய் அழைத்துக் கொண்டு சென்றார்.
“இவ்வளவு மனக்கசப்பு இருக்கும் போது அவங்க வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை சிவா” என்றார் ரேணுகா.
“நானுமே எதிர்பார்க்கலைங்க” என்றாள் சிவ தீர்த்தா.
“அவங்க முறையை அவங்க சரியா செய்யணும்னு நினைக்கிறாங்க? எல்லாரும் தயங்கியே நின்னா எப்படி? பூனைக்கு யாராவது மணி கட்டித்தான ஆகணும்” என்றான் ஆதி.
“ஆமா, பெரிய ஜமீன் பரம்பரை. அப்படியே மகளுக்கு சீர்வரிசையை முறையா மூட்டைல கொண்டு வந்து கொட்டிட்டு போறாங்க. இதுல பெருமை வேற? வெறும் வாயில முழம் போடுறதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?” என்றார் விசாலாட்சி.
“என் வீட்ல இருந்து மூட்டையில கொண்டு வந்து கொட்டித்தான் இங்க சாப்பிடனும்ன்ற நிலைமையா இருக்கு? எனக்கு இது தெரியாம போச்சே?பேருக்குத் தான் பெரிய குடும்பம் போல, உள்ள வந்து பார்த்தாத்தான தெரியுது. இது பெரிய குடும்பமும் இல்லை. இங்க இருக்குறது பெரிய மனுஷங்களும் இல்லன்னு” என்றாள் சிவா.