நாள் முழுக்க ஒரே இடத்தில் இருந்து அவளுக்கு கால்கள் மரத்துப் போயிருந்தது.எழுந்து அறைக்குள்ளேயே நடை பயின்றவள், அந்த அறையையே அப்போது தான் நன்றாக பார்த்திருந்தாள். தேவையற்ற பொருட்கள் எதுவும் அங்கில்லை. அறையும் ஒரு நேர்த்தியுடன் அழகாக இருந்தது.

ஒரு பெரிய ஸ்க்ரீன் தொங்க, அங்கு ஜன்னல் எதுவும் இருக்கும் என்று எண்ணியவள், அந்த ஸ்க்ரீனை விலக்கி விட்டு பார்க்க, அந்த இடம் பார்ப்பதற்கு சிறியதாய் அழகாய் இருந்தது. அறை போன்ற அமைப்பும் இல்லை, பால்கனி போன்ற அமைப்பும் இல்லை. இரண்டும் கலந்து இருந்தது.  நிறைய செடிகள் தொட்டியில் வைக்கப்பட்டிருக்க, ஓரத்தில் இருந்த பெரிய மேஜையில் லேப்டாப் விகிதம் ஆதி படிக்கும் புத்தங்கங்கள் உட்பட அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

மேஜை மேல் அண்ணாமலை-ரேணுகா தேவியுடன் ஆதிகேசவன், விசாகன் இருக்கும் புகைப்படம் இருக்க, ஆதி கல்லூரியில் படிக்கும் போது எடுத்திருக்க வேண்டும். முதன் முறையாக அவனை நிறுத்தி நிதானமாய் காண்கிறாள் அதுவும் புகைப்படத்தில். அவனைப் பார்க்க ஆரம்பித்தவளின் கண்களில் அண்ணாமலையின் முகமும் தெரிய, சட்டென்று பார்வையை மாற்றியவள், அங்கிருந்து வெளியே வந்து விட்டாள்.

“சிவா” என்ற ரேணுகாவின் அழைப்பில் வெளியே சென்றவள், கீழே பார்க்க,

“வாம்மா” என்றார் ரேணுகா.

‘எதுக்கு கூப்பிடுறாங்க’ என்று யோசனையுடன் செல்ல, சாப்பிடுவதற்கு குடும்பமே அங்கு அமர்ந்திருந்தது.

கீழே வந்த சிவ தீர்த்தாவை அமிர்தாவும் ஜீவனும் ஆர்வமுடன் பார்க்க, தாரணியோ கடுப்புடன் பார்த்திருந்தாள். மேகலை அவளைக் கண்டும் காணாததும் போல் இருக்க, சுப்தராவோ அவள் மீதிருந்து கண்ணை எடுக்கவே இல்லை.

“நீயும் வந்து சாப்பிடுமா” என்றார் ரேணுகா.

“இல்லைங்க பசியில்லை” என்றவளுக்கு, காலையில் ஆதி எந்த அலட்டலும் இல்லாமல் தன் கையால் சாப்பிட்டது ஞாபகத்திற்கு வர, தயக்கத்துடன் ரேணுகாவைப் பார்த்தாள்.

“நீ வந்து உட்காரும்மா” என்று ரேணுகா அவளை வம்படியாய் உட்கார வைக்க, விசாலாட்சியோ ரேணுகாவை முறைத்துக் கொண்டிருந்தார். அமிர்தாவையும் ஜீவனையும் தவிர மற்றவர்கள் சாப்பிடாமல் எழுந்து கொள்ள, அதைப் பார்த்தவள் சட்டென்று எழுந்து விட்டாள்.

“இல்லைங்க இருக்கட்டும், அவங்க வந்த பிறகு சாப்பிட்டுக்கிறேன்” என்றவள் ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள். ரேணுகாவிற்கோ ஆதங்கம் பொறுக்க முடியவில்லை. அவள் சென்ற பிறகு மற்றவர்கள்  அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, அவளோ வாசலைத் தான் பார்த்திருந்தாள்.

“ஆதி வர பத்துமணிக்கு மேல ஆகுமே? அது வரைக்கும் இந்த புள்ள பட்டினியா இருக்குறதா?” என்று தவித்த ரேணுகா, வேண்டா வெறுப்பாய் அனைவருக்கும் பரிமாறினார். விசாகன் அப்போது தான் சாப்பிட வந்தான்.

சுபத்ரா அமிர்தாவுக்கும், ஜீவனுக்கும் என்ன தேவை என்று பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருக்க,

“அம்மா போதும்மா” என்றான் ஜீவன்.

“என்ன போதும்? ஒழுங்கா சாப்பிடு ஜீவன். வளர்ற பையனுக்கு இதெப்படி போதும்” என்றார் சுபத்ரா அதட்டலாய். சுபத்ராவின் குரலில் திரும்பிய சிவ தீர்த்தாவின் கண்களில் இந்த காட்சி விழ, சில நிமிடங்கள் அவர்களைத் தான் பார்த்திருந்தாள். அமிர்தாவும் ஜீவனும் போதுமென்று சொல்வதும், சுபத்ரா அவர்களை அதட்டி சாப்பிட வைப்பதுமாய் இருக்க, அவளறியாமல் ஒரு மெல்லிய ஏக்கமும் சோகமும் அவளுக்குள் புகுந்திருந்தது.

அவர்கள் அறியும் முன் பார்வையை மாற்றி குனிந்து கொண்டவளுக்கு ஏனோ கண்ணீரை மட்டும் மறைக்க முடியவில்லை. அவர்கள் அறியாமல் துடைத்துக் கொண்டவள், எதேச்சையாய் வாயிலைப் பார்க்க, அங்கு இவளைத்தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதி கேசவன். அவனைப் பார்த்தவள் மீண்டும் குனிந்து நகத்தை ஆராய்ச்சி செய்ய, உள்ளே வந்த ஆதி எதுவும் பேசாமல் மேலே சென்றான்.

“என்ன ஆதி இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டான். எப்பவும் வர பத்துமணிக்கு மேல ஆகுமே?” என்றார் விசாலாட்சி. ரேணுகாவோ பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தார். சாப்பிட அமர்ந்த பொண்ணை எழுந்து போக வைத்த கோபம் அவருக்கு. திரும்பி சுபத்ராவைப் பார்க்க, சுபாவோ அங்கு நடப்பதை பேருக்கு கூட கண்டுகொள்ளாமல் இருந்தார்.

அறைக்கு சென்ற ஆதி, குளித்து முடித்து ப்ரஷாகி கீழே வர,

“வா ஆதி சாப்பிடலாம்” என்றார் மகா தேவன் சாப்பிட்டுக் கொண்டே.

“நீங்க எல்லாம் குடும்பத்தோட சாப்பிடுறிங்க? நான் எதுக்கு தொந்தரவா? சாப்பிடுங்க” என்றவன் சிவ தீர்த்தா அமர்ந்திருந்த அதே சோபாவில் அமர்ந்து கொண்டு செல்லைப் பார்த்திருந்தான்.

அவனின் கோபம் விசாலாட்சிக்கு புரிந்து போனது.

அவளுக்கோ உள்ளுக்குள் சங்கடம்.’நம்மளால தான் இவங்களும் சாப்பிடாம இருக்காங்களோ’ என்று தவிக்க,

“அம்மா” என்றான் கோபமாய்.

“ஆதி” என்ற ரேணுகா அவனின் கோபத்தில் திகைக்க,

“மத்தவங்களுக்கு எல்லாம் கையில்லையா? நீங்க தான் பரிமாறனுமா? அதான் சுபத்ரா அத்தை பார்த்து பார்த்து பரிமாறுறாங்களே? அப்பறம் நீங்களும் எதுக்கு அங்க நிக்கிறிங்க?” என்றான் அழுத்தமான குரலில்.

“ஆதி” என்றார் புரியாதவராய்.

“எனக்கு பசிக்குது. இங்க எடுத்துட்டு வாங்க” என்றான்.

“இதென்ன ஆதி புதுப் பழக்கம்?” என்றார் விசாலாட்சி.

“இனி பழகிக்க வேண்டியது தான் பாட்டி” என்றான் நிமிராமல்.

ரேணுகா தட்டில் எடுத்துக் கொண்டு செல்ல,

“ஏன் பையனுக்கு கல்யாணம் முடிஞ்சுட்டா ஊட்டி விடக் கூடாதுன்னு இருக்கா?” என்றான் ரேணுகாவைப் பார்த்து.

“எதே” என்று வீட்டில் இருந்த அனைவரும் வாயப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, விசாகனோ அண்ணனை அதிசயமாய் பார்த்து வைத்தான்.

ரேணுகா ஆதிக்கு ஊட்ட,

“இவ மட்டும் தனியா சாப்பிடுவாளாமா? இவளுக்கும் சேர்த்தே ஊட்டிடுங்க” என்றான் போனை பார்த்துக் கொண்டே. ரேணுகாவிற்கு இப்போது தான் ஆதியின் செயலுக்கான காரணம் புரிந்தது.

“சிவா நீயும் சாப்பிடுமா” என்று அவளுக்கும் ஊட்ட, கண் கலங்கியபடி திகைத்திருந்தாள் அவள்.

“இல்லைங்க, வேண்டாம் “ என்று சொல்லப் போனவள், அவன் கையை மடக்கி பல்லைக் கடிக்கவும் வேறுவழியின்றி வாங்கிக் கொண்டாள். ரேணுகா மகனுக்கும் மருமகளுக்கும் மாறி மாறி ஊட்ட, விசாலாட்சிக்கு முகத்தில் ஈயாடவில்லை.

ஆதியை விட சிவாவிற்கு தான் அதிகம் ஊட்டியிருந்தார் ரேணுகா. வயிறு நிறைய சாப்பிட்டவளுக்கு அதற்குமேல் முடியவில்லை.

“எனக்கு போதும்” என்று நிறுத்திய பிறகே ஆதி சாப்பிட்டு முடித்தான்.

“நீங்களும் சாப்பிடுங்க” என்று ரேணுகா சாப்பிடும் வரை அங்கேயே இருந்தவன், அவரும் சாப்பிட்டு முடிக்கவும் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

“என்ன அத்தை நடக்குது இங்க?” என்றார் மகா தேவன்.

“இதையெல்லாம் பார்க்கனும்னு இருக்குது மாப்பிள்ளை” என்றார் விசாலாட்சி.

ரேணுகாவின் பின்னால் சென்ற சிவா தயங்கி நிற்க,

“என்னம்மா சிவா?” என்றார்.

“அது.. வந்து.. ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் ஆத்மார்த்தமாய்.

“என்ன சிவா இதெல்லாம், உன் அம்மாவா இருந்திருந்தா இப்படி தான் நன்றி எல்லாம் சொல்லுவியா?” என்று எப்போதும் சொல்வதைப் போல் சொன்ன பிறகு தான் நிதானித்தார் ரேணுகா.

அவரைப் பார்த்து விரக்தியாய் சிரித்தவள்,

“அப்படி ஒரு கொடுப்பினை எல்லாம் எனக்கு இது வரைக்கும் கிடைச்சது இல்லைங்க” என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள். சமயலைறைக்குள் நின்றிருந்த சுபத்ரா மனதளவில் சுரீரென்று அடிவாங்கியிருந்தார்.

வெளியே நடந்து கொண்டே போன் பேசி முடித்திருந்தவன் பத்து மணிக்கு மேல் அறைக்கு வர, அங்கு சிவாவோ முதல் நாளைப் போல தரையில் பெட்சீட்டை விரித்து படுத்திருந்தாள்.

“இவளை என்னதான் பண்றது?” என்று உள்ளுக்குள் சலித்தவன், தானும் தலையணையை கீழே போட்டு, அவளுக்கு சற்று இடைவெளி விட்டு படுக்க, சட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டாள் சிவா.

“உனக்கு தான் என் மேல நம்பிக்கை இல்லை. அதான் கட்டில்ல படுக்க மாட்டேங்குற. ஆனா, எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. அதான் நான் கீழ படுத்துட்டேன்” என்றவன் மறுபுறம் திரும்பி நமட்டு சிரிப்பு சிரிக்க, அவன் கூறிய வார்த்தையின் சாராம்சத்தை தாமதமாய் புரிந்து கொண்டவள் அவனை முறைத்திருந்தாள்.

அறுந்து போயிருந்த அவள் மனதின் உணர்வுப் பகுதிகளை, உறவெனும் நூல் கொண்டு இறுகக் கட்டிக் கொண்டிருந்தான் ஆதி கேசவன்.