வெளியே செல்வதைப் போல் சென்றிருந்த ஆதியும் அவ்வளவு நேரம் வெளியே தான் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அவள் என்னதான் சொல்கிறாள் என்ற எதிர்பார்ப்பு. முதலில் அவள் பொதுவாக பேசிவிட்டு செல்லவும் ஒரு ஏமாற்றம் மனதிற்குள். மீண்டும் வந்து அவன் நினைத்ததையே வார்த்தை மாறாமல் கூறி சென்றவளை எண்ணி முதன் முறையாக சிரித்துக் கொண்டான் ஆதி கேசவன்.

இருந்த தடம் தெரியாமல் வெளியே சென்றவன், ஜீப்பில் ஏறிக் கொள்ள,

“என்னை ஜீப்பை எடுத்துட்டு வெளிய வர சொல்லிட்டு, நீ வர இவ்வளவு நேரமா ஆதி?” என்றான் பாண்டி.

அவன் கேள்வி எதுவும் காதில் விழாமல் அவனுடைய நினைவெல்லாம் சிவ தீர்த்தா பேசியதில் தான் இருந்தது.

“மச்சான்” என்று பாண்டி மீண்டும் சத்தமாய் அழைக்க,

“இப்ப என்ன பாண்டி பிரச்சனை உனக்கு?” என்றவன் சிறு புன்னகையுடனும்,யோசனையுடனும் ஜீப்பை ஓட்டிக் கொண்டிருக்க,

“பிரச்சனை எனக்கில்லை. உனக்குத்தான்னு நினைக்கிறேன். தனியா சிரிச்சுட்டு வர்ற? என்ன விஷயம் மச்சான்?” என்றான் பாண்டி ஆர்வமாய்.

“ஒண்ணுமில்லை பாண்டி” என்றவனை அவன் நம்பாமல் பார்க்க,

“வீட்ல நடக்குற பிரச்சனையைப் பத்தி தான் யோசிச்சுட்டு வர்றேன். உன் சிவா பாப்பா என்னை நிமிர்ந்தே பார்க்க மாட்டேங்குறா? அதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்” என்றான் ஆதி கேசவன்.

பாண்டி அவனை ஆச்சர்யமாய் பார்த்தான். அவனறிந்த ஆதி, அவ்வளவு எளிதில் குடும்ப விஷயத்தை வெளியே பேச மாட்டான். அது பாண்டியாகவே இருந்தாலும் கூட.

“எதுவும் பிரச்சனையா ஆதி?” என்றான் பாண்டி தயக்கமாய்.

“இல்லைன்னு சொல்ல முடியாது. பாட்டி வாயை அடக்க முடியலை. அம்மாவைத் தவிர வீட்ல எல்லாரும் அவகிட்ட வெறுப்பை கொட்டுறாங்க. என்ன பன்றதுன்னு தான் தெரியலை. வெளிய எவ்வளவு பிரச்சனையை அசால்ட்டா ஹேண்டில் பண்றேன். வீட்டுக்குள்ள இப்பவே கண்ணைக் கட்டுது” என்றான் ஆதி.

“ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே ஆதி?” என்றான் பாண்டி தயக்கமாய்.

“என்ன பாண்டி?” என்றான் புரியாமல்.

“என்னதான் கிருஷ்ணன் சித்தப்பாவை உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு பிடிக்கலைன்னாலும், சிவா அவங்க மக வயித்து பேத்தின்றது உண்மை தான? அந்த பாசம் கொஞ்சம் கூடவா உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு இல்லை? இத்தனை நாள் தான் சிவா பாப்பாவை போட்டு பாடா படுத்துனாங்க. இப்போ சிவா உங்க வீட்டு மருமக. இப்பவும் அதே மாதிரி நடந்துகிட்டா நல்லாவா இருக்கும்?” என்றான் பாண்டி.

“என்ன சொல்ற பாண்டி? எனக்கு புரியலை?” என்றான் ஆதி கேசவன் யோசனையுடன்.

“வேண்டாம்னு வெட்டி விட்டுட்டா அவங்க வாழ்க்கையை அவங்களை நிம்மதியா வாழவாவது விடணும். ஆனா உங்க வீட்டு ஆளுங்க ஒரு நாளும் அப்படி விடலைன்றது தான் நிஜம் ஆதி. நீ வெளியூருக்கு படிக்க போய்ட்டதால இங்க நடந்தது எல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. கிருஷ்ணன் சித்தப்பாவை இந்த ஊர்ல இருக்கவே விடக் கூடாதுன்றதுல உறுதியா இருந்தாங்க உங்க வீட்டு ஆளுங்க.மனுஷன் எல்லாத்தையும் சமாளிச்சு நின்னார். அந்த கோபத்துல பார்க்குற இடத்துல எல்லாம் அந்த பொண்ணை வார்த்தையால குத்தி கிழிச்சு, அவமானப்படுத்தி இப்படி நிறைய பண்ணிட்டாங்க உங்க பாட்டி. இதுனால என்ன கிடைச்சுருக்கும் அவங்களுக்கு? அவங்க அப்பா மேல இருக்குற வெறுப்பை ஏன் ஒரு சின்ன பொண்ணுகிட்ட காட்டனும் ஆதி?” என்றான் பாண்டி ஆதங்கமாய்.

“பாண்டி” என்றான் ஆதி அதிர்ந்து.

“முதல்ல அழுதுகிட்டே அமைதியா போன பொண்ணு தான் சிவா. அதுக்கப்பறம் தான் பதிலுக்கு பதில்னு பேச ஆரம்பிச்சது. உங்க வீட்டு ஆளுங்களுக்கு பயந்து எந்த நேரமும் மகளை கூடவே வச்சுகிட்டு சுத்துவார் மனுஷன். இங்க பணமும் அதிகாரமும் தான பேசுது ஆதி” என்றான் பாண்டி.

சிவாவின் வார்த்தைகளில் சற்று சிரித்திருந்த ஆதியின் முகம் பாண்டியின் வார்த்தைகளில் இறுகியிருந்தது.

அவனின் இறுகிய முகத்தைப் பார்த்த பாண்டி,

“இதெல்லாம் ஏன் இப்ப உன்கிட்ட சொல்றேன்னு உனக்கு புரியுதா ஆதி? இன்னும் சிவா பாப்பா படிச்சு கூட முடிக்கலை” என்றான் தயக்கத்துடன்.

சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியிருந்தான் ஆதி கேசவன்.

“ஆமால்ல! இதை எப்படி மறந்தேன்” என்று தலையில் யோசனையுடன் கைவைத்துக் கொண்டான்.

“என்னாச்சு ஆதி?”

“இல்ல, அவ படிச்சுகிட்டு இருக்கான்னு தெரியும். ஆனா என்ன படிக்கிறா?” என்றான் ஆதி.

“அக்ரி தான், மதுரையில படிக்குது” என்றான் பாண்டி அவனை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு.

“என்னை எதுக்கு இப்படி பார்க்குற பாண்டி? நிஜமா தெரியாது” என்ற ஆதிக்கு அந்த யோசனையும் சேர்ந்து கொண்டது.

“நீ சிவாவை நல்லா பார்த்துப்பன்னு தெரியும் ஆதி. இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை” என்றான் பாண்டி.

“அடேய் நல்லவனே! அந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும். ரொம்ப பாசத்துல உருகாத. இப்போதைக்கு உன் சிவா பாப்பா எங்க வீட்டு ஆளுங்க கிட்ட சிக்கலை. அவகிட்ட தான் எங்க வீட்டு ஆளுங்க சிக்கியிருக்காங்க. அப்படியும் அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் இருக்கேன்டா” என்றான் பாண்டியிடம்.

“ரொம்ப சந்தோசம் மச்சான்” என்றான் பாண்டி.

“இருந்தாலும் கூடப் பிறந்தவன் மாதிரி இந்த பில்டப் ஆகாதுடா” என்றான் ஆதி.

“கூடப் பிறந்தா தான் பிறப்பா? அதென்னவோ தெரியலை சின்ன வயசுல நல்லா குண்டு குண்டுன்னு கன்னத்தோட சிவா பாப்பாவை பார்த்தப்ப இருந்து இப்ப வரைக்கும் ஒரு தனிப் பாசம் தான்” என்றவன்,

“என்னைய சொல்றவன், நீயும் தானடா சின்னப் பிள்ளையில சிவாப் பாப்பாவை தூக்கி வச்சுகிட்டு தரமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணின?” என்றான் பாண்டி.

ஏனோ சிறு வயது சம்பவங்கள் நிழல்களாய் நினைவிற்கு வர,

“அப்ப மட்டுமில்லை, இப்பவும் உன் சிவா பாப்பாவை யாருக்கும் தர மாட்டேன்” என்றான் ஆதி கேசவன் சிரிப்புடன்.

“முறைச்சுக்கிட்டும் விறைச்சுகிட்டும் ஆதின்னு ஒருத்தன் இருந்தானே அவனைப் பார்த்தியா மச்சான். கல்யாணம் ஆன ஒரு நாள்ல எவ்வளவு மாற்றம்” என்றான் பாண்டி.

“குடும்பஸ்தன் ஆகிட்டா எந்நேரமும் வெளிய இருக்குற மாதிரி வீட்டுக்குள்ள இருக்க முடியுமா” என்றவனை நிறைவாய் பார்த்திருந்தான் பாண்டி.

அங்கு சிவாவோ நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தாள். இரவு எட்டு மணியாகியும் இன்னும் ஆதி வீடு வந்து சேரவில்லை. அவன் விட்டுச் சென்றதில் இருந்து அறைக்குள் தான் இருக்கிறாள்.

கீழே செல்லவும் ஒரு மாதிரியாக இருந்தது. ரேணுகா இரண்டு முறை வந்து அவளை பார்த்துவிட்டு சென்றிருந்தார்.

‘இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ரூம்குள்ளயே அடைஞ்சு கிடக்குறது?’ என்று நொந்து கொண்டவள், தன் போனை எடுத்து கிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்தாள்.

“அம்மாடி சிவா” என்று தான் ஆரம்பித்தார் கிருஷ்ணன்.

“சாப்பிட்டிங்களாப்பா?” என்றாள் எடுத்த எடுப்பில்.

“இனி தான்மா. விக்னேஷ் வந்து சாப்பாடு குடுத்துட்டு போனான். அப்பா தோட்டத்துல இருக்கேன்” என்றார்.

“வீட்டுக்கு போகலாம்லப்பா” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“அது சரியா வராதுமா” என்றவர்,

“சாப்பிட்டியாடா?” என்றார்.

“இன்னும் இல்லப்பா” என்றவள் அவரிடம் எதையோ கேட்க தயங்க,

“அம்மாடி சிவா, அப்பாகிட்ட எதுவும் சொல்லனுமா?” என்றார்.

“ப்பா..! நான் கொஞ்ச நாளைக்கு மட்டும் நம்ம வீட்ல வந்து இருக்கவா?” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை முழுங்கிக் கொண்டாள். காலையில் அவ்வளவு தெளிவாக பேசி அனுப்பியவரிடம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம் என்று எண்ணிக் கொண்டாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. நீங்க சாப்பிட்டிங்களான்னு கேட்க தான் கூப்பிட்டேன். சாப்பிட்டு நேரங்காலத்தோட தூங்குங்க” என்று பேசி விட்டு போனை வைத்தவளுக்கு, அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.