அத்யாயம் 12:

ஜீப்பில் ஜோடியாக வந்து இறங்கிய ஆதியையும் சிவாவைவும் பார்த்த விசாலாட்சியின் முகத்தில் ஏகத்துக்கும் எரிச்சல். பரிதவிப்புடன் இருந்த ரேணுகாவிற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது.

வீட்டினுள் நுழைந்ததும் ரேணுகாவைப் பார்த்து சற்று தயங்கி நின்றாள் சிவ தீர்த்தா.

“என்னப்பா ஆதி இதெல்லாம்?” என்றார் விசாலாட்சி.

ஆதி புரியாமல் பாட்டியைப் பார்க்க,

“காலையில நீ மட்டும் தான் போன? இப்போ இவளோட வந்திருக்க? இவ எப்ப வெளிய போனா?” என்றார் கேள்வியாய்.

“நான் தான் சொன்னேனே அத்தை, என்கிட்ட சொல்லிட்டு தான் போனான்னு” என்று ரேணுகா முந்திக் கொண்டு பதில் உரைக்க,

“அது தான் ஏன்னு கேட்குறேன். இவ்வளவு சீக்கிரம் எந்திருச்சு அப்பன் வீட்டுக்கு போக வேண்டிய அவசியம் என்ன வந்தது?” என்றார் விசாலாட்சி.

“அவசியம் வந்தா தான் அப்பாவைப் பார்க்க போகனுமா?” என்றாள் சிவா பட்டென்று.

‘இவ இப்பத்தான் கொஞ்சம் மலை இறங்குனா? இந்த பாட்டி மறுபடியும் மலையேத்தி விட்ருவாங்க போலயே?’ என்று எண்ணிய ஆதி,

“இப்ப என்ன பாட்டி பிரச்சனை? அவ போனதா? இல்ல இப்ப என் கூட வந்ததா?” என்றான் ஆதி.

“இல்ல ஆதி? இவளுக்கு டிரைவர் வேலை பார்க்கனும்னு உனக்கென்ன தலையெழுத்தா?” என்றார் சிவாவை முறைத்தபடி.

“அப்படியே டிரைவர் வேலை பார்த்தாலும் அவளுக்குத் தான பார்க்குறேன். இதுல என்ன தப்பிருக்கு?” என்றவன்,

“எனக்கு வெளிய நிறைய வேலை இருக்கு. நான் போயிட்டு வரேன்” என்று கிளம்ப,

“சாப்பிட்டு போப்பா ஆதி” என்றார் ரேணுகா வேகமாய்.

“அதெல்லாம் அங்கயே சாப்பிட்டாச்சும்மா” என்று ஆதி சொல்ல, விசாலாட்சிக்கோ திகைப்பு. கிருஷ்ணன் வீட்டிற்கு அவன் செல்வதையே ஜீரணிக்க முடியாமல் இருந்தவருக்கு, இப்போது அவன் அங்கே சாப்பிட்டான் என்று சொல்லவும் தாங்க முடியவில்லை.

“என்ன பழக்கம் ஆதி இதெல்லாம்? கண்டவங்க வீட்ல சாப்பிடுறது? அதுவும் போயும் போயும் யார் வீட்ல? ஒரு தகுதி தராதரம் வேண்டாம்?” என்றார் விசாலட்சி கோபமாய்.

அவரின் பேச்சைக் கேட்ட சிவ தீர்த்தாவுக்கு கோபம் தாண்டவமாடத் தொடங்கியது.

“வார்த்தையை பார்த்து பேசுங்க?” என்றாள் கோபமாய்.

“என்னத்தடி பார்த்து பேச? வீட்டுக்குள்ள நுழைஞ்சு ஒரு நாள் ஆகலை, உடனே ஆரம்பிச்சுட்டியா உன் மாய மந்திர வித்தையை. இப்படி எல்லாம் பண்ணனும்னு உங்கப்பன் சொல்லிக் குடுத்தானா?” என்றவர்,

“சாப்பாட்டுல மருந்து கலந்து கொடுத்து என் பேரனை மயக்கப் பார்க்குறிங்களா?” என்றார் கோபமாய்.

“பாட்டி” என்று ஆத்திரம் தாங்காமல் கத்தியிருந்தான் ஆதி கேசவன்.

“ஆதி அமைதியா இருப்பா” என்று ரேணுகா அவனின் கோபத்தை தணிக்க முயல, சிவ தீர்த்தாவோ கோபத்தில் கண் கலங்கி நின்றிருந்தாள்.

‘ஒருவேளை சாப்பிட்டதுக்கு என்னவெல்லாம் பேசுறாங்க?’ என்றவளுக்கு  காரணமே இல்லாமல் கண் கலங்க, எப்போதும் பதில் பேசுபவள் இப்போது அமைதியாய் நிற்பதைக் கண்டு அவளைத் தான் பார்த்திருந்தான் ஆதி கேசவன்.

அவளும் அமைதியாய், பொறுமையாய் போக வேண்டும் என்று தான் நினைக்கிறாள். விசாலாட்சி அமைதியாக இருந்தாலாவது அவளும் கொஞ்சம் தன்னிலைக்கு திரும்புவாளோ என்னவோ? அவளை நிதானமாய் யோசிக்கக் கூட விடாமல் அவரும் வார்த்தையால் அடித்துக் கொண்டே இருந்தார்.

கிருஷ்ணன் சொன்னதைப் போல, வேண்டாம் என்று ஒதுங்கிப் போனால் அவர்களுக்கு பயந்து போவதாய் நினைத்துக் கொள்கிறார்களோ என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு.

‘வெளிய என்னோட மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம்’ என்ற ஆதியின் வார்த்தைகள் வேறு அவளுக்கு ஞாபகத்திற்கு வர, முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்.

“இனி அந்த வீட்டுக்கு நீ போகவும் கூடாது, அவங்களோட நீ உறவாடவும் கூடாது ஆதி. நீ சொன்னதுக்காக இவளையே சகிச்சுக்க முடியலை. இதுல இவ குடும்பத்தோட வேற உறவாடனுமா? இதெல்லாம் உன் தாத்தாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சுப் பார்த்தியா?” என்றார் விசாலாட்சி.

“அதெல்லாம் யோசிச்சு இருந்தா மாப்பிள்ளை இந்த கல்யாணத்தையே பண்ணியிருக்க மாட்டாரே அத்தை” என்றார் மகா தேவன்.

இப்போதும் ஆதி எதுவும் பேசாமல் அவளைத்தான் பார்த்திருந்தான். வாய் வரை வந்த வார்த்தைகளை அவள் அடக்கிக் கொண்டு நிற்பது புரிந்தது அவனுக்கு. நேற்று ரேணுகாவை பேசியதற்கு அவன் சொன்ன வார்த்தைகளுக்காக வாயைத் திறக்காமல் நிற்கிறாள் என்று ஒரு யூகத்தில் புரிந்து கொண்டான்.

“இதுக்குத்தான் இதெல்லாம் சரியா வராதுன்னு சொன்னேன், கேட்டியா?” என்பதைப் போல் அவளின் பார்வை அவனை நோக்கி தான் வெறித்திருந்தது. தந்தையை பார்த்துவிட்டு வந்திருந்த இலகு மனநிலை அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் தொலைந்து விட்டிருந்தது.

கோபத்தை அடக்கியபடி நின்றவளைக் கண்டவனுக்குள் என்ன தோன்றியதோ, அவளின் இறுகியிருந்த விரல்களைப் பிரித்து தனக்குள் அடக்கிக் கொண்டவன், அவளை நேர் பார்வையாய் பார்த்தான்.

“இவங்க பேசுறதுக்கு பதில் சொல்ல எனக்கு ஒரு நிமிஷம் போதும். சொல்லிட்டு போயிட்டே இருப்பேன். ஆனா, அவங்களுக்கான பதிலை நீ தான் சொல்லனும்னு எதிர்பார்க்குறேன். எனக்கு என்னோட மரியாதை முக்கியம் தான் இல்லைன்னு சொல்லலை. அதுக்காக எந்த இடத்துலையும் உன்னோட சுயமரியாதையை இழந்து என்னோட மரியாதையை காப்பாத்தனும்னு எந்த அவசியமும் இல்லை புரியுதா?” என்றான் அழுத்தமாய்.

தரையைப் பார்த்திருந்தவளின் கண்களில் திரண்ட கண்ணீரை சட்டென்று உள்ளே இழுத்திருந்தாள் சிவா. கிருஷ்ணன் சொன்ன மாதிரி இங்கே இருந்து தான் போராட வேண்டும் என்று தெளிவிற்கு வந்திருந்தாள்.

“ஆதி?” என்று விசாலாட்சி கத்த, திரும்பி அவன் முறைத்த முறைப்பில் சட்டென்று அடங்கியிருந்தார். இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் எத்தனை பிரச்சனைகளைத் தான் அவனும் பார்ப்பான்?

“நான் கிளம்புறேன்ம்மா” என்றான் ரேணுகாவிடம்.

‘இங்க இவங்க இப்படி பேசிட்டு இருக்காங்க. ஆதி கிளம்புறேன்னு சொல்றான்?’ என்று ரேணுகா பரிதாபமாய் பார்க்க,

“எல்லா நேரமும் இவளுக்கு நான் காவல் இருக்க முடியாதும்மா. அவ எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணிக்குவா” என்று அவளை ஒரு பார்வை பார்த்தவன் கிளம்பிவிட்டான். அவன் கிளம்பும் வரை அமைதியாக இருந்த விசாலாட்சி,

“என்ன? என் பேரன் உனக்கு சப்போர்ட்டா இருக்கான்னு நீ நினைச்சதை சாதிக்கலாம்னு பார்க்குறியா? எப்படி வந்தியோ அதே மாதிரி உன்னை போக வைக்கவும் தெரியும்” என்றார் விசாலாட்சி.

“அத்தை” ரேணுகா குரலை உயர்த்தியிருக்க,

“என்ன ரேணுகா? நேத்தைக்கு இருந்து குரல் எல்லாம் உசருது? வக்கத்தவன் பொண்ணுக்கு வந்த வாழ்வா இது? இவளை இந்த வீட்ல பார்க்க பார்க்க எனக்கு உள்ளுக்குள்ள அப்படியே எறியுது?” என்றார் விசாலாட்சி. மகாதேவன் அமைதியாய் அவர் பக்கத்தில் நிற்க, நேற்று வரை சற்று வாயைக் கட்டியிருந்த இருந்த விசாலாட்சி இன்று ஆடுவதற்கான காரணம் ரேணுகா தேவிக்கு தெரியாமல் இல்லை.

‘இந்த ஆதியும் இப்படி விட்டுட்டு போயிட்டானே? சின்னப் பொண்ணை இந்த பேச்சு பேசுறாங்க?’ என்று எண்ணிய ரேணுகா,

“அம்மாடி சிவா, நீ உங்க அறைக்கு போம்மா” என்றார், அவளைக் காக்கும் பொருட்டு.

“இருங்க, அவங்க தான் ஏதோ பேசிட்டு இருக்காங்களே? என்னன்னு கேட்டுட்டு போறேன்” என்றாள் சிவா சாவகாசமாய்.

“என்னடி திமிரா?” என்று விசாலாட்சி முறைக்க,

“இருக்காத பின்னே? என்ன தான் கிருஷ்ணன் பொண்ணா இருந்தாலும், இந்த வீட்டு ரத்தம் எனக்குள்ளயும் கொஞ்சம் இருக்கும்ல. அப்பறம் உங்களுக்கு இருக்குற திமிருல கொஞ்சம் கூட எனக்கில்லைன்னா எப்படி?” என்றாள் நிதானமாய்.

அவளின் பேச்சில் விசாலாட்சியே ஒரு நிமிடம் திகைத்து நிற்க, பின் சுதாரித்தவர்,

“என்னடி வாய் நீளுது?”

“நேத்து கை கூட தான் நீண்டது. குரவலையை பிடிச்ச மேனிக்கு இன்னும் கொஞ்சம் அழுத்திப் பிடிச்சிருந்தா இந்நேரம் பேசுறதுக்கு நீங்க இருந்திருக்க மாட்டிங்க” என்று விசாலாட்சியை முறைத்தவள்,

“என்ன சொன்னிங்க? மருந்து வச்சு மயக்குறேனா? அதுவும் சாப்பாட்டுல?” என்று நக்கலாய் பார்த்தவள்,

“அப்படி பார்த்தா உங்க ரெண்டு மகளுக்கும் வீட்டோட மாப்பிள்ளை தான் பார்த்திருக்கிங்க. நீங்களும் உங்க மருமகன்களுக்கு இப்படி தான் மருந்து வச்சு மயக்க உங்க மகளுகளுக்கு சொல்லிக் குடுத்திங்களா? இல்ல உங்க புருஷனுக்கும் இப்படித்தான் மருந்து வச்சு மயக்குனிங்களா?” என்றாள் அதிராமல்.

ரேணுகா அவளை அதிர்ச்சியுடன் பார்க்க, அதைப் பற்றியெல்லாம் அவளுக்கு கவலை இல்லை.

“இந்த பூச்சாண்டி காட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். இன்னைக்கு பொறுமையா பதில் சொல்றேன். எல்லா நேரமும் இப்படியே சொல்லிட்டு இருக்க மாட்டேன்” என்றவள் மாடிப் படியில் பாதி தூரம் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தாள்.

“நான் ஏன் வளவளன்னு பேசி உங்களுக்கு பதில் சொல்லணும்? சிம்பிளா சொல்றேன் கேட்டுக்கோங்க, உங்க பேரன் இப்ப எனக்கு புருஷன். அதை மறந்துட வேண்டாம். என் புருஷனுக்கு மை, மருந்தெல்லாம் வச்சு மயக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை புரியுதா?” என்றாள் ஒரே போடாய்.

அவளின் ‘என் புருஷன்’ என்ற வார்த்தையில் விசாலாட்சி அதிர்ச்சியில் வாயைப் பிளக்க, ரேணுகாவிற்கோ ஆனந்த அதிர்ச்சி. சிவ தீர்த்தாவின் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தையை அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் அவர் எதிர்பார்க்கவில்லை.

அவள் விசாலாட்சியை வெறுபேற்றும் பொருட்டு சொல்லியிருந்தாலும், அதை சொல்லும் போது அவளுக்குள்ளும் ஒரு உணர்வு தாக்கியிருந்தது.