வேக எட்டுக்கள் வைத்து அவனருகில் சென்றவளுக்கு, பேசுவதில் தயக்கம். அவள் வந்து நின்றது அவனுக்கும் தெரிந்தது. ஏதாவது பேசுவாள் என்று அவன் நினைக்க, அவளோ எப்போதும் போல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள்.

‘ம்க்கும்..! இந்த அம்மினி வாயைத் திறந்து எதுவும் பேசமாட்டா. எல்லாம் நம்மளே புரிஞ்சுகிட்டு செய்யனுமாக்கும்’ என்று கடுப்படைந்தவன்,

“காலையில எந்திருச்சு மனுஷன் பல்லுகூட விலக்காம, தேடி அலைஞ்சு திரிஞ்சு வந்தா, இங்க அப்பா கூட சேர்ந்து பாசப் பயிரை வளர்த்துட்டு இருக்க வேண்டியது. எதை வளர்க்குறதா இருந்தாலும் இனி சொல்லிட்டு வந்து செய்ங்க” என்றான் எரிச்சலுடன்.

எதுவும் பேசாமல் அங்கிருந்த வேப்ப மரத்தில் இருந்து வேப்பங்குச்சியை ஒடித்து நீட்டினாள் அவனிடம். யோசனையுடன் அதை வாங்கிக் கொண்டவன், வேறு வழியின்றி அதில் தான் பல் தேய்த்தான்.

‘கல்யாணம் ஆன மறுநாளே வேப்பங்குச்சியில பல்லுத் தேய்க்க விட்டுட்டா. நல்ல முன்னேற்றம்டா ஆதி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவன், பக்கத்தில் அவர்கள் தோட்டத்து வீட்டில் அவசரத்திற்கு என்று இருந்த மாற்றுடையை எடுத்தவன், பம்பு செட்டிலேயே குளிக்க, இவளோ சட்டென்று தூரமாய் தள்ளி வந்துவிட்டாள்.

அவள் தள்ளி சென்றதை அவனும் பார்த்திருந்தான்.

“ம்க்கும்..! நிமிர்ந்து பார்க்கவே இன்னும் எத்தனை நாள் ஆகும்னு தெரியலை. இதுல இவ பார்த்து, பழகி எப்ப குடும்பம் குட்டின்னு ஆகுறது? போற போக்கை பார்த்தா நான் சம்சாரி ஆகாம சன்னியாசம் வாங்கிடுவேன் போல” என்று நினைத்துக் கொண்டே குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டு வந்தவன்,

“வந்தது வந்தாச்சு, நான் அப்படியே வாழைத் தோப்பு வரைக்கும் போயிட்டு வந்திடுறேன். இன்னைக்கு தார் வெட்ட  ஆள் வர்றாங்க” என்று தகவலாய் சொன்னவன், செல்ல எத்தனிக்க, பிளாஸ்க்கில் இருந்த டீயை ஊற்றி அவனுக்கு நீட்டியிருந்தாள்.

அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன்,

“இல்ல எனக்கு வேண்டாம்” என்றான் வேண்டுமென்றே.  அவள் கடுப்புடன் அதை கீழே ஊற்ற போக, அவனின் கை அதை தடுத்திருந்தது. டம்ளரோடு அவளின் கையை இறுக்கி பிடித்திருந்தவன்,அவளின் கையை விடுவித்து டீ  டம்ளரை மட்டும் வாங்கிக் கொண்டான்.

அதிகாலை பம்புசெட் குளியலும், அந்த சூடான தேநீரும் அவனுக்கு புத்துணர்ச்சியைத் தர, குடித்து முடித்து டம்ளரை அவளிடம் கொடுத்துவிட்டு கிளம்பியிருந்தான்.

அவன் சென்ற பிறகு தான் அவன் செல்லும் திசையை திரும்பிப் பார்த்திருந்தாள் சிவ தீர்த்தா.

“மாப்பிள்ளை எங்கம்மா போறார்?” என்றார் கிருஷ்ணன்.

“வாழைத் தோப்பு வரைக்கும் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போறாங்கப்பா” என்றாள்.

“நீயும் கூட போயிருக்கலாம்ல சிவா. இங்க தனியா உட்கார்ந்திருக்குறதுக்கு?” என்றார்.

“ம்ம்க்கும்” என்று எண்ணிக் கொண்டவள்,

“நான் மடையைத் திருப்பிக்கிறேன். நீங்க கரை போடணும்னு சொன்னிங்களே! போய் அதைப் பாருங்கப்பா” என்றவள் மண் வெட்டியை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.

“எதுக்கும்மா? நான் பார்த்துக்கிறேன்!” என்றார்.

“சும்மா தானப்பா இருக்கேன். கொஞ்ச நேரம் செய்றதால ஒன்னும் குறைஞ்சு போய்ட மாட்டேன்” என்றவள் அவரை அனுப்பி விட்டு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.

இரண்டு மணி நேரமாகியும் அவனைக் காணவில்லை. கிருஷ்ணன் வேலையை முடித்துக் கொண்டு வர, சிவாவும் நீர் பாய்ச்சி முடித்திருந்தாள்.

“இன்னும் மாப்பிள்ளை வரலையாம்மா?” என்றார்.

“தெரியலைப்பா” என்றவள்,

“நீங்க உட்காருங்க, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றாள்.

“இருக்கட்டும்மா, நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன். இப்ப என்ன அவசரம்?” என்றார்.

“நீங்க சாப்பிட்டா எனக்கு நிம்மதியா போய்டும். அதோட எனக்கும் பசிக்குதுப்பா” என்றாள் பாவமாய்.

‘அவ்வளவு நேரம் வேலை செய்தவளுக்கு பசி எடுக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்” என்று எண்ணிக் கொண்டவர்,

“சரி எடுத்து வைடா சாப்பிடலாம்” என்று சொல்ல, வாழை இலையை அறுத்தவள், தந்தைக்கு பரிமாறிவிட்டு, தானும் சாப்பிடலாம் என்று போக, சரியாக வந்து சேர்ந்திருந்தான் ஆதி கேசவன்.

“வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்” என்றார் கிருஷ்ணன்.

“இல்ல இருக்கட்டும். நீங்க சாப்பிடுங்க. நான் வீட்ல போய் சாப்பிட்டுக்கிறேன்” என்று சொல்ல, சிவாவும் எழுந்து விட்டாள்.

“நீ சாப்பிடுறதுன்னா சாப்பிட்டு வா, நான் வெயிட் பண்றேன்” என்றான்.

“இன்னேர வரைக்கும் வயலுக்கு தண்ணி பாய்ச்சுனதுல புள்ளைக்கு பசி எடுத்திடுச்சு மாப்பிள்ளை, அதான்” என்றார் கிருஷ்ணன்.

‘இவ சும்மாவே இருக்க மாட்டாளா? எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு வேலையை செஞ்சுகிட்டே இருக்கா’ என்று கடுப்படைந்தவன்,

“வேலைக்கு ஆள் வச்சுக்கங்க. நீங்க வேலை செஞ்சா உங்க பொண்ணுக்கு பொறுக்காது. உங்க பொண்ணு வேலை செஞ்சா எனக்கு பொறுக்காது போல தெரியுது” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட கிருஷ்ணன்,

“சரிங்க மாப்பிள்ளை” என்றார். சிவாவின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“சமைச்சு எடுத்துட்டு வந்தது எல்லாம் சிவா தான். அதனால நீங்களும் சாப்பிட்டா எனக்கும் சந்தோஷமா இருக்கும்” என்றார் கிருஷ்ணன். சொன்னவர் மகளைப் பார்த்தார். அவனுக்கும் ஒரு இலையை போட்டவள், சாப்பாட்டை மாறிமாற, ஆதியோ எந்த அலட்டலுமின்றி அமர்ந்தவன்

“பொண்டாட்டி கையால, அவ வீட்டு சாப்பாட்டை சாப்பிடுறதுல எனக்கொன்னும் பிரச்சனை இல்லை. இது மானங்கெட்டத் தனமா எல்லாம் தெரியாது. எனக்கு உரிமை இருக்கு சாப்பிடுறேன்” என்றவன் சாப்பிடத் துவங்கினான்.

அவன் பேச்சின் சாராம்சம் மாமனாருக்கு புரியவில்லை என்றாலும் மகளுக்குப் புரிந்திருந்தது.

கருவாட்டுக் குழம்பின் ருசி நாக்கிலேயே நர்த்தனம் ஆட, காரம் தான் அவன் சாப்பிடுவதை விட கொஞ்சம் அதிகம் இருந்தது.

“இவ்ளோ காரம் எப்படி சாப்பிடுறிங்க?” என்றான்.

“சிவாக்கு காரமா இருந்தா தான் சாப்பாடு உள்ள இறங்கும்” என்றார் கிருஷ்ணன்.

‘சாப்பாடு மட்டுமா காரமா இருக்கு. உங்க மகளும் மொளகா பழம் மாதிரி காரமாத்தான் இருக்கா’ என்று நினைத்துக் கொண்டவன், வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாவே சாப்பிட்டிருந்தான்.

“எப்படியோ கல்யாணம் ஆனா மறுநாளே மாமனார் வீட்டு மறுவிருந்தை இப்படி கருவாட்டுக் குழம்போட முடிச்சுட்டிங்க” என்றான் கிருஷ்ணனிடம்.

“நீங்க சரின்னு சொன்னா, பெரிய விருந்தே ரெடி பண்ணிடுறேன் மாப்பிள்ளை” என்றார்.

“எல்லாம் சரியாகட்டும். தடபுடல் பண்ணிடலாம்” என்றவன் சிவாவைத்தான் பார்த்திருந்தான்.

அவர்கள் இருவர் பேசுவதும் காதில் விழுந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு முடித்திருந்தாள் சிவ தீர்த்தா. அவனுக்கோ காரத்தில் உதடெல்லாம் எறிய, அவளோ அப்படி எதுவுமின்றி சாதரணமாக இருக்க,

“எப்படி இவ்வளவு காரத்தையும் சாப்பிட்டுட்டு இப்படி அமைதியா இருக்கா. எல்லா விஷயத்துலையும் ஒரு டைப்பா தான் இருக்கா” என்று நினைத்தவன்,

“நாங்க கிளம்புறோம்” என்றான் கிருஷ்ணனிடம்.

“அப்பா ஸ்கூட்டி இருக்கு. நான் இதை வீட்ல போய் நிறுத்திட்டு போறேன்” என்றாள் தகவலாய்.

“நான் எடுத்துட்டு போறேன்மா. நீ மாப்பிள்ளை கூடவே கிளம்பு” என்றார் கிருஷ்ணன்.

தகப்பனை முறைத்தவள் வேறு வழியின்றி அவனுடன் தான் சென்றாள்.

“பெரிய துரை, ஜீப் இல்லாம எங்கயும் போக மாட்டாரு” என்று ஏற்கனவே அவனை பல முறை மனதில் நக்கலாய் நினைத்திருக்கிறாள். விதி இன்று அவனுடன் அவளையும் ஒன்றாக பயணம் செய்ய வைத்திருந்தது.

அவன் ஏறி அமர்ந்தும் அவள் ஏறமால் இருப்பதைக் கண்டவன்,

“இப்ப என்ன நான் தூக்கி உள்ள உட்கார வைக்கணுமா?” என்றான். அவன் பேச்சில் ஒரு முறைப்புடன் முன்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.

மேடு பள்ளங்களில் தள்ளாடிய ஜீப் பயணம் போல் தான் அவர்களின் மனமும் தள்ளாடிக் கொண்டிருந்தது. உரிமைக்கும் உறவுக்கும் இடையில் அவன் மனமும், வெறுப்பிற்கும் விருப்பிற்கும்  இடையில் அவள் மனமும்.