அத்யாயம் 11:

காலையில் தோட்டத்தில் சோர்வாகத்தான் அமர்ந்திருந்தார் கிருஷ்ணன். எப்போதும் சிவா இந்த நேரத்திற்கெல்லாம் அவருக்கு சூடாக டீ போட்டுக் கொண்டு வந்திருப்பாள். மகளின் செயல்களை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இனி அதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவராய், வயலுக்கு நீர் பாய்ச்சக் கிளம்ப, அப்போது தான் கவனித்தார் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வரும் சிவ தீர்த்தாவை.

“அம்மாடி சிவா” என்றவர் கண்கள் கலங்கிவிட்டது. என்னவோ மகளைப் பார்த்து பல மாதங்கள் ஆனவரைப் போல் பரிதவித்திருந்தார்.

“அப்பா” என்று வேகமாய் வந்தவள், பின் அவர் மீதுள்ள கோபத்தில் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டாள்.

“என்னம்மா சிவா? இந்த நேரத்துல வந்திருக்க? ஆதி மாப்பிள்ளை கூட வரலையா?” என்றார் வேகமாய்.

“எப்பவும் நான் மட்டும் வர்றது தான வழக்கம். உங்களுக்கு எப்பவும் மக மட்டும் தான்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு. கோபமாய் இருக்கிறாளாம்? மகளின் கோபத்தைக் கண்டவருக்கு சிரிப்பு தான் வந்தது.

பிளாஸ்கில் இருந்து சூடான டீயை ஊற்றி அவர் முன் நீட்ட,

“அம்மாடி” என்றவர் அழுதே விட்டார்.இப்போது தான் மனதிற்குள் நினைத்தார். நினைத்த மாத்திரத்தில் கண் முன் வந்திருந்த மகளைக் கண்டதும் அவருக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வு.

“அப்பா இப்ப எதுக்கு இப்படி பண்றிங்க? இப்ப நானும் உங்க கூட சேர்ந்து அழனுமா?” என்றவள், வேறுபுறம் திரும்பி கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டாள்.

“டீ ஆறிடப் போகுது. கண்ணைத் துடைச்சுட்டு குடிங்க” என்றாள் அதிகாரமாய்.

அவர் யோசனையுடன் நிற்க,

“நம்ம வீட்ல வந்து தான் டீ போட்டுட்டு, சமைச்சு எடுத்துட்டு வந்தேன். குடிங்க” என்றாள் அவர் எண்ணம் புரிந்தவளாய்.

அந்த நேரத்திற்கு மகளின் கையால் போட்ட டீ அவருக்கு தேவார்மிர்தமாய் இருந்தது. அவர் குடித்து முடிக்கும் வரை பொறுமை காத்தவள்,

“ஆனாலும் நீங்க ரொம்ப சுயநலம்ப்பா” என்றாள் எடுத்த எடுப்பில்.

“சிவா”

“ஒரு டீயை குடிக்கவே இவ்வளவு யோசிச்சு குடிக்கிறிங்க? ஆனா, என்னை மட்டும் காலம் முழுசுக்கும் அந்த வீட்ல இருக்குற மாதிரி பண்ணிட்டிங்க இல்ல. ஒரு டீக்கு யோசிச்ச நீங்க என் வாழ்க்கைக்கும் யோசிச்சிருக்கலாம்ப்பா” என்றாள் அவரை நேராய் பார்த்து.

“சிவாம்மா”

“நான் சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சு இந்த கல்யாணத்தை பண்ணி வச்சிங்களா? அப்படின்னா சாரிப்பா. நான் சந்தோஷமாவே இல்லை. இனியும் இருக்க மாட்டேன்னு தான் தோணுது. அந்த வீட்ல இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு வெறுப்பு கூடிகிட்டே தான் போகுது. எனக்கு மூச்சு முட்டுதுப்பா. எனக்குள்ளயே போராடி தோத்துட்டேன். மனசெல்லாம் பாரமா இருக்கு. யார்கிட்டையாவது சொல்லி வாய் விட்டு அழனும் போல இருக்கு. எனக்கு உங்களை விட்டா யார் இருக்கா. அதான் வந்துட்டேன் ” என்றவளின் கண்ணில் இருந்து கண்ணீர் இப்பவோ அப்பவோ என்று துருத்தி கொண்டு நின்றது.

“சிவா அப்படி எல்லாம் பேசக் கூடாதும்மா. ஆதி ரொம்ப நல்ல பையன்” என்றார் கிருஷ்ணன். மகளின் கண்ணீரைக் கண்டு அவர் மனம் பரிதவித்துப் போயிருந்தது.

“அது தான் என் கவலைப்பா. என்னால அவங்க வாழ்க்கையும் நல்லா இருக்காதுப்பா. என்னால சரியா நடந்துக்க முடியும்னு தோணலை” என்றாள் கமரிய குரலில்.

“என் பொண்ணை நான் இப்படி கோழைத் தனமா வளர்க்கலையேம்மா?” என்றார்.

“கோழைத்தனம் இல்லைப்பா. இது பரிதவிப்பு. என்னால இன்னொருத்தர் வாழ்க்கையும் சேர்ந்து கெடுதேன்ற எண்ணம், வேற ஒண்ணுமில்லை” என்றாள் தலையை குனிந்தபடி.

“உன்னால தன்னோட வாழ்க்கை கெடுதேன்னு ஆதி ஒரு நாளும் நினைக்கக் கூடிய பையன் இல்லம்மா. எல்லாம் ஒரே நாள்ல மாறிடாது. ஆனா ஒரு நாள் எல்லாம் மாறும். அது உனக்கான நாளா இருக்கும்மா” என்றார் கிருஷ்ணன்.

“நல்லா புத்திக்கு உரைக்கிற மாதிரி இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லுங்க” என்ற குரலில் அவள் விதிர்விதிர்த்து நிமிர, கைகளைக் கட்டிக் கொண்டு அவளைத்தான் அழுத்தமாய் பார்த்துக் கொண்டு நின்றான் ஆதி கேசவன்.

அவனைப் பார்த்த அதிர்ச்சியில் கிணற்றுத் திட்டில் அமர்ந்திருந்தவள்,எழுந்து கொள்ள முயற்சிக்கும் போது தடுமாறி உள்ளே விழத் தெரிந்தாள்.

“சிவா” என்று கிருஷ்ணன் பதறி தடுப்பதற்குள், அவளின் கையைப் பிடித்து இழுத்ததில் அவன் மேல் பட்டென்று மோதி நின்றிருந்தாள்.

அதுவரை பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே வாயை மூடி பேசா மடந்தையாகிப் போனாள்.

“வரும் போது சொல்லிட்டு வரணும்னு தெரியாதா?” என்றான் கோபக் குரலில்.

அவளோ வேறெங்கோ பார்த்தபடி இருக்க, அவள் பதில் சொல்லாமல் நிற்பது கண்டு அவனுக்கும் கோபம் வந்தது.

“ச்ச்ச” என்றவன் கோபத்துடன் சற்று தூரம் சென்று விட்டான். அவன் தலையைக் கோதி கோபத்தை அடக்குவது இங்கே கிருஷ்ணனுக்கு புரிந்தது.

“சிவா இதென்ன சொல்லாம வர்ற பழக்கம்?” என்றார் மகளிடம்.

“அது தூங்கிட்டு இருந்தாங்கப்பா. எப்படி எழுப்புறதுன்னு தெரியாம அப்படியே வந்துட்டேன்” என்றாள்.

“இது தப்பில்லையாம்மா? இனி இப்படி சொல்லாம எல்லாம் இங்க வர வேண்டாம்” என்றார்.

“என்னை வர வேண்டாம்னு சொல்லிட்டிங்கல்ல. இனி நான் இங்க வரவே மாட்டேன்” என்றவள் கோபமுடன் கிளம்பிப் போக பார்க்க,

“அப்பா சொல்றதை கேட்டுட்டு போ சிவா” என்றார் அழுத்தமான குரலில். கிருஷ்ணன் எப்போதாவது தான் இப்படி பேசுவார். அதனால் அந்த குரலில் அப்படியே நின்றாள்.

“பெரியவங்க பிரச்சனை பெரியவங்களோட போகட்டும். இதுல ஆதி வாழ்க்கையை கெடுக்க நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவங்க செஞ்ச அதே தப்பை தான் இப்போ நீயும் பண்ற. உனக்கு அவங்களைப் பிடிக்கலையா, அதை அங்க இருந்தே காட்டு. ஆகவே ஆகாத, இந்த வேண்டாத வெறும் பய கிருஷ்ணனோட  பொண்ணு தான் இன்னைக்கு அந்த வீட்டோட மூத்த மருமக. அவங்க வம்சத்தையே தழைக்க வச்ச பேரன்னு நினைக்கிற ஆதி கேசவன் மனைவி. இதை விட பெரிய தண்டனை அவங்களுக்கு இருக்கவா போகுது?

இந்த வெறும்பயலோட மகளை முன்னாடி நிறுத்தி தான் இனி எந்த நல்லது கெட்டதும் அந்த வீட்ல நடக்கும். யாரைக் கண்டா ‘ச்சீ’ போன்னு துரத்துனாங்களோ இனி அந்த பொண்ணு இல்லாம அந்த வீட்ல அணுவும் அசையாது. இதையெல்லாம் யோசிச்சு பார்த்து தான் ஆதியை மாப்பிள்ளையா கேட்டேன். அப்பா ஏன் அப்படி பண்ணேன்னு இப்போ உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்மா”  என்றார் தீர்க்கமாய்.

“அப்பா” என்றவள் அவர் சொன்ன விதத்தில் யோசித்திருக்கவில்லை.

“நீ சொன்ன மாதிரி இது தண்டனை தான்மா. உனக்கில்லை, அவங்களுக்கு. அவங்களை பழி வாங்கணும்ன்ற எண்ணம் எனக்கு எப்பவும் இருந்ததில்லை. ஆனா நம்ம ஒதுங்கிப் போறது அவங்களுக்கு பயந்து போறோம்னு ஆகிடக் கூடாது பாரு. உன் கல்யாணம் அந்த வீட்டுப் பையனால நின்னதும் எனக்கும் கோபம் தான் வந்தது. ஆனா, ஆதி அதுக்கு ஒரு தீர்வு சொன்னப்போ, எனக்கு விசாகன் மேல நம்பிக்கை வரலை. ஏன்னா விசாகனும் இன்னொரு கிருஷ்ணன் தான். வாழ்க்கையை எதிர்த்து போராட தெரியாத கோழை. தனக்கு என்ன வேணும்னு தெளிவா முடிவு எடுக்கத் தெரியாத முட்டாள், என்னை மாதிரி. அதுக்காக விசாகனை நான் குறை சொல்லலை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு குண நலன் இருக்கும்.

நின்ன கல்யாணமும் நடக்கணும், அந்த வீட்ல நீ நிம்மதியாவும் இருக்கணும்னா அது ஆதிக்கு மனைவியா இருந்தா மட்டும் தான் முடியும்னு நினைச்சேன். மத்தபடி உன்னை கஷ்ட்டப்படுத்தனும்னு அப்பா எந்த முடிவையும் எடுக்கலைடா. உனக்கு தண்டனை குடுக்கனும்ன்ற எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது.

நமக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் சுபத்ராவோட  எண்ணமும் இதுவா தான் இருக்கும். சுபத்ராவுக்கு எல்லாத்துலையும் அவசரம், காதல்ல அவசரம், கல்யாணத்துல அவசரம், குழந்தை பெத்துக்கிறதுல அவசரம்? ஏன் வாழ்றதுல கூட அவசரம் தான். அதான் எல்லாமே அவசர அவரசமாவே முடிஞ்சிடுச்சு. எந்த ஒரு சூழ்நிலையில அப்படி ஒரு முடிவு எடுத்தான்னு எனக்கு இப்போ வரைக்கும் தெரியலை. இனி அதைப் பத்தி யோசிச்சு பலனுமில்லை.

அதனால நீயும் அப்படி யோசிக்காம நிதானமா யோசிமா. இந்த அப்பாவோட நிதானம் உனக்குள்ளையும் இருக்கும்னு நம்புறேன்” என்றார் பொறுமையாய்.

“எனக்கு புரியுதுப்பா..! ஆனா என்னால அங்க சட்டுன்னு அந்த குடும்பத்தோட செட் ஆக முடியலை, முயற்சி பண்றேன்ப்பா” என்றாள் சற்று தெளிவுடன்.

“எதுவா இருந்தாலும் உள்ள இருந்து போராடனும்மா..! எனக்குத் தெரிஞ்சு உங்க மாமியார் ரொம்ப தங்கமானவங்க” என்றார்.

“ஆமாம்ப்பா” என்றாள்.

“சரிம்மா, ஆதி வேற கோபமா இருக்கார். இனி ஒரு தடவை இப்படி சொல்லாம வரக்கூடாது. போய் என்னன்னு பாரு” என்றார் கிருஷ்ணன்.