அவளுடைய மனப்போராட்டம் அவருக்கும் புரியத்தான் செய்தது. இருந்தாலும் அவள் கூறிய அந்த மானங்கெட்ட சோறு என்ற வார்த்தைகள் அவரை பாதிக்க, கண் கலங்கியிருந்தார்.

அவர் எழுந்து வெளியே வர எத்தனிக்க, அவர்கள் பேசியதை எல்லாம் கோபத்துடன்  கேட்டுக் கொண்டு நின்றிருந்தான் ஆதி கேசவன்.

“ஆதி..! அது வேற ஒண்ணுமில்லை,ஏதோ கோபத்துல” என்று ரேணுகா அவனை கண்களால் அடக்கினார்.

“அம்மா எனக்கும் பசியில்லை. நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்க. உங்களுக்கும் காலையில இருந்து வேலை” என்றான் நிதானமாய்.

‘அதிகப்படியா பேசிட்டோமோ?’ என்று எண்ணியவள், வேறு எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாகிவிட்டாள்.

கதவை அடைத்தவன், அவளை நேர் பார்வையாய் பார்த்து நின்றான். அவன் பார்ப்பது புரிந்தாலும், அவன் கோபத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு அப்போது அவளுக்கு திடமில்லை. அவள் அவனைப் பார்க்கவேயில்லை.

“ஒரே இடத்துல அசையாம உட்காரணும்னு எந்த அவசியமும் இல்லை. என்னைப் பார்த்து பயப்படுற அளவுக்கு கொடுமைக்காரனும் இல்லை. ஆனா, என் அம்மாகிட்ட பேசும்போது வார்த்தையில் கவனம் இருக்கணும்” என்றவன்,

“இப்பவும் சொல்றேன், வெளிய என் மனைவியோட மரியாதைக்கு  எந்த பங்கமும் வாராம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. அதே மாதிரி என்னோட மரியாதையும் எனக்கு ரொம்ப முக்கியம். கட்டாயத்தை ஏத்துக்கிறது கஷ்ட்டம் தான். ஆனா ஒன்ன மறந்திடக் கூடாது, இது எனக்கும் கட்டாயம் தான்” என்றான் நிதானமாய்.

சில நிமிடங்கள் அவளையே பார்த்திருந்தவன்,

“இந்த கட்டில்ல நாலு பேர் தாராளமா தூங்கலாம். நம்பிக்கை இருந்தா மேல படுத்து தூங்கு. இல்லைன்னா உன் இஷ்ட்டம். தூங்கும் போது லைட் ஆப் பண்ணிடு” என்றவன், கட்டிலின் ஒரு புறத்தில் படுத்துவிட்டான்.

அவன் பேசியதில் அவளுக்குத் தான் இதயம் வேகமாய் அடித்துக் கொண்டது. அவனை நிமிர்ந்து பார்க்கவே விருப்பம் இல்லாதவளுக்கு அவனருகில் எப்படி உறங்க முடியும்? அவள் எவ்வளவு முயன்றாலும், அவனைக் கணவனாக என்ன முடியவில்லை. அவனைப் பார்க்க முற்பட்டாலே விசாலாட்சியும் ரத்தினமும் தான் கண் முன் வந்தனர்.

அவன் தூக்கத்திற்கு இடையூறு இருக்கக் கூடாது என்று எண்ணியவள், லைட்டை ஆப் செய்து விட்டு, கட்டிலில் இருந்த போர்வையை கீழே விரித்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள். அவள் இருந்த மனநிலைக்கும், அந்த இடத்திற்கும் பொட்டுத் தூக்கம் வரவில்லை அவளுக்கு. ஒரே நாளில் அவளின் மொத்த வாழ்க்கையும் மாறியிருந்தது.

அன்று நடந்தது அனைத்தும் அவள் நினைவடுக்கில் ஒவ்வொன்றாய் வந்து போக, இறுதியாக ரேணுகாவின் கலங்கிய கண்கள் அவள் கண் முன் வந்தது.

‘யார் மேலையோ இருக்குற கோபத்துல அவங்களை பேசிட்டேன்’ என்று வருந்தியவள், தன்னை எண்ணி தானே கழிவிரக்கம் கொண்டாள்.

“அப்பா என்னால முடியலைப்பா! ஒரு நாளையே என்னால கடத்த முடியலை? வாழ்க்கை முழுசுக்கும் இந்த வீட்ல நான் எப்படி இருப்பேன்?” என்று கலங்கியவளுக்கு சுபத்ராவின் முகம் கண் முன் வரவும், கடந்த காலமும் நினைவுக்கு வந்து சென்றது.

அவளுக்கு விபரம் தெரிந்த வயதில் என்றோ ஒரு நாள் கிருஷ்ணனின் தாய்,

“அதோ போறாளே அவ தான் உன் அம்மா” என்று சொன்னதில் ஆரம்பித்தது அவளின் போராட்டம்.

சுபத்ராவை பார்க்கும் இடங்களில் எல்லாம் இவள் அம்மா என்ற பாசத்தில் பின்னால் போக, அவளுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றமும், அவமானமும் தான். சுபத்ரா ஒரு நாளும் இவளைத் திரும்பி கூட பார்த்ததில்லை.

கிருஷ்ணன் அவர் தாயுடன் சண்டையிட்டது கூட இன்னமும் அவள் நினைவில் இருக்கிறது.

“சின்ன பிள்ளைகிட்ட என்னம்மா சொல்லி வச்சிருக்கிங்க?” என்று ஒரு நாள் அவர் கோபத்தில் பேசியது இப்போதும் அவளுக்கு மறக்கவில்லை.

“கிருஷ்ணா நான் உள்ளதைத் தான சொன்னேன். பெத்தவளை பிள்ளைக்கு அடையாளம் காட்டினேன். அதுல என்ன குத்தம் கண்ட?” என்று அவளின் பாட்டி அவளுக்காய் பேசிய வார்த்தைகள் இன்று பேசியதைப் போல் இருந்தது அவளுக்கு.

“ஆறுமாசக் குழந்தையை வேண்டாம்னு சொல்லிட்டு போனப்ப  இல்லாத பாசம் இப்ப மட்டும் வந்திடுமாம்மா. இப்போ சுபத்ரா இன்னொருத்தரோட மனைவி.எந்த உறவையும் புதுப்பிக்க வேண்டாம். என் பொண்ணுக்கு நான் இருக்கேன். இன்னொரு தடவை என் பொண்ணு முகத்துல ஏக்கத்தைப் பார்த்தேன் அவ்வளவு தான்” என்று தன் தாயை அதட்டியிருந்தார் கிருஷ்ணன்.

அன்றிலிருந்து ஏனோ அவளும் எதையும் வெளிப்படையாய் காட்டிக் கொண்டதில்லை. ஆனால் கோவில் குளம் என்று சுபத்ராவைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் அவர் பின்னால் செல்வதையும் சிவா நிறுத்தவில்லை.

ஒரு முறை அவள் ‘அம்மா’ என்று சத்தமாய் அழைத்துவிட, அது விழுந்தது என்னவோ விசாலாட்சியின் காதுகளில் தான்.

“யாருக்கு யாருடி அம்மா. இன்னொரு தடவை இப்படி சொல்லிக்கிட்டு வர்றதைப் பார்த்தேன்” என்று அவளின் காதைப் பிடித்து திருகியதை மறக்கத்தான் முடியுமா அவளுக்கு.

இப்படி கடந்த காலத்தில் நடந்த ஒவ்வொன்றும் அவள் கண் முன் வர, கண்ணீரும் சேர்ந்து வந்தது. ஏனோ தனக்கென்று யாரும் இல்லாததைப் போன்ற ஒரு உணர்வு அவளுக்கு. எண்ணங்களின் அலைகழிப்பில் அமர்ந்த வாக்கிலேயே உறங்கியிருந்தாள்.

நடு இரவில் விழிப்பு வந்த ஆதி கேசவன் கண்டது என்னவோ அவளின் அமர்ந்த நிலை தூக்கத்தை தான். விடிவிளக்கின் வெளிச்சத்தில் வரிவடிவமாய் தெரிந்தவளைக் கண்டிருந்தவனுக்கு ஆயாசமாய் வந்தது.

எழுந்து அவளின் அருகில் சென்ற பிறகு தான் அவனுக்குப் புரிந்தது, அழுது களைத்து உறங்கியிருக்கிறாள் என்று. அவளின் அருகில் சுவரில் தலை சாய்த்து அமர்ந்தவனுக்குள்ளும் பல கேள்விகள். அவளின் ஒரு கையை எடுத்து தன் உள்ளங்கைக்குள் அடக்கிக் கொண்டவன்,

“நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்குறா? இப்படி அழுது கோபப்பட்டு கத்தி வெறுப்பைக் கொட்டுறவளை என்னன்னு சரி பண்றது? கோபமா பேசவும் முடியலை. அமைதியா பேசினா இவ கோபமா பேசுறா? பொண்ணுங்களை ஹேண்டில் பண்றது கொஞ்சம் கஷ்ட்டம்  தான் போலயே” என்று சிகையைக் கோதிக்  கொண்டவன், ஒரு தலையணையை எடுத்து போட்டு, அவளின் தலையை சாய்த்து விட, அவளோ அருகில் அமர்ந்திருந்த அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.

அவளின் செயலில் அவன் விழிகள் அவளை ஆச்சர்யமாய் நோக்கியது.

காலையில் அவள் கையைப் பிடித்த போது, அவளை தோளோடு அணைத்த போது வராத, அவன் உணர்ந்திராத ஒரு உணர்வு, இப்போது அவள் தூக்கத்தில் அவன் தோள் சாய்ந்திருக்கும் போது வந்தது. அவனறியும் பெண்ணின் முதல் ஸ்பரிசம். இதயக் குதிரை பந்தையக் குதிரையாய் ஓடிக் கொண்டிருந்தது. ஏனோ அவளை விலக்க மனம் வரவில்லை. பத்தொன்பது வயது குமரியின் குழந்தை முகத்தை பார்த்திருந்தவனுக்கு, வேறு எதுவும் சிந்தையில் இல்லை.

நீண்ட நேரம் அதே நிலையில் இருக்க அவனுக்கும் ஆசை தான். அவளைப் பற்றி அறிந்தவன்,

‘எந்திருச்சு பார்த்தா, அவ்வளவு தான்’ என்று எண்ணியபடி, தலையணையில் மெதுவாய் தலையை சாய்த்து படுக்க வைத்து, பெட்ஷீட்டை எடுத்து போர்த்தி விட்டவன், தன்னிடத்தில் வந்து படுத்துக் கொண்டான்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வீட்டு வாசலில் வந்து நின்ற  சிவ தீர்த்தாவை பார்த்த காவேரிக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னாச்சு  சிவா? என்ன இந்த நேரத்துல தனியா வந்திருக்க?” என்று படபடப்புடன் அவர் வேகமாய் அவளுக்கு பின்னால் பார்க்க,

“நான் மட்டும் தான் வந்தேன் காவேரிம்மா” என்றாள்.

“என்னாச்சு சிவா?” என்றவர் மேற்கொண்டு கேட்கும் முன் அவளே வாயைத் திறந்தாள்.

“ம்மா..! இங்க வர்றதுக்கு நான் சொல்லிட்டு தான் வரணுமா என்ன? அப்பாவைப் பார்க்கணும் போல இருந்தது. அதான் எந்திரிச்ச உடனே வந்துட்டேன்” என்றாள் வேகமாய்.

“என்ன பேச்சு சிவா இதெல்லாம். அதுவும் தனியா வந்திருக்க?” என்றார் காவேரி.

“மூணு தெரு தள்ளி  இருக்குற வீட்ல இருந்து வர்றதுக்கு துணைக்கு ஆளை வேற கூட்டிட்டு வரணுமா?” என்றவள் வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள். அவளின் பேச்சு சத்தம் கேட்டு பேச்சியும் எழுந்து வர,

“சிவா குரல் கேட்டதே காவேரி” என்றார் பேச்சி.

“அவ தான் வந்திருக்காம்மா..! ஆனா என்ன பிரச்சனைன்னு தெரியலை” என்றார் காவேரி.

“எங்க காணோம்?” என்றார் பேச்சி.

“அந்த வீட்டுக்குள்ள போயிருக்கா” என்ற காவேரி கையை பிசைந்து கொண்டு நின்றார்.

பேச்சியும் அங்கே சென்று பார்க்க, அதற்குள் வீட்டிற்குள் இருந்து வந்த சிவா,

“அப்பா எங்க பாட்டி” என்றாள்.

“கிருஷ்ணன் ராவைக்கு வீட்டுக்கு வரலை சிவா. தோட்டத்துலையே இருந்துகிட்டான்” என்றார் பேச்சி.

“நைட்டு சாப்பிட்டாரா?” என்றாள்.

“பசியில்லைன்னு சொல்லிட்டு போய்ட்டாரு சிவா” என்றார் காவேரி.

“அதெல்லாம் விடுத்தா , நீ என்ன இவ்வளவு காலையில இங்க வந்திருக்கவ. அங்க எதுவும் பிரச்சனையா?” என்றார் பேச்சி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி” என்று உள்ளே சென்றவள், எப்போதும் எழுந்தவுடன் அங்கே செய்யும் வேலைகளை கடகடவென்று முடித்தவள், சமையலையும் முடித்து, தந்தைக்கு டீயையும் போட்டு பிளாஸ்க்கில் எடுத்துக் கொண்டவள், தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு கிளம்ப, காவேரியும் பேச்சியும் தான் வாய் பிளந்து பார்த்திருந்தனர்.

“அய்யோ என்ன வம்பை கூட்டிட்டு வந்திருக்காளோ தெரியலையே?” என்ற காவேரி தலையில் கை வைத்துவிட,

“அந்த தம்பி நேத்து வந்து பேசிட்டு போகவும் எல்லாம் சரியாகிடும்னு நம்புனேன். இவ என்னடான்னா இப்படி வந்து நிக்கிறா?” என்ற பேச்சிக்கும் மனதிற்குள் கவலை தான்.

எப்பொழுதும் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடும் ஆதி கேசவன் அன்று ஆறுமணி வரை உறங்கியிருக்க, விழிப்பு வந்தவன் சட்டென்று திரும்பி அவள் இருந்த இடத்தைப் பார்க்க, அவளோ அங்கு இல்லை.

“எங்க ஆளைக் காணோம்?” என்று பாத்ரூம் பக்கம் திரும்பிப் பார்க்க, அவள் அங்கு இருப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

வேகமாய் எழுந்து கீழே வந்தவன் ரேணுகாவிடம் கேட்கப் போக, அவரோ..

“சிவா எங்க ஆதி? இன்னும் தூங்கிட்டு இருக்காளா?” என்றார் மகனிடம்.

“கீழயும் வரலையா?” என்று எண்ணியவன்,

“ம்மா அவ மேலயும் இல்ல. இங்கயும் வரலையா?” என்றான் அவருக்கு மட்டும் கேட்கும்படியாக.

“இல்லையே ஆதி. கீழ வரலையே?” என்றார் ரேணுகா.

“கீழ வரலையா? இல்லை நீங்க பார்க்கலையா?” என்றான்.

“நான் பார்க்கலை ஆதி” என்றார்.

தலையில் கை வைத்தவனுக்கு காலையிலேயே எரிச்சலாய் வந்தது. ரேணுகாவின் முன் காட்ட மனமின்றி,

“எப்படியும் இங்க தான் எங்கையாவது போயிருப்பா. நான் போய் பார்த்துட்டு வர்றேன். நீங்க அதுவரைக்கும் தெரிஞ்ச மாதிரி எதுவும் காட்டிக்காதிங்கம்மா” என்றவன், அப்படியே கிளம்பியிருந்தான்.

“இதென்ன? ஆதி குளிக்காம எப்பவும் வெளிய போக மாட்டானே? இன்னைக்கு என்ன அப்படியே போறான்?” என்று விசாலாட்சி வர,

“இருந்திருந்து இவங்க கண்ணுலையா படனும்” என்று நொந்து போன ரேணுகா,

“அது சிவா அவங்க வீடு வரைக்கும் போயிருக்கு அத்தை. ஆதி கூப்பிட போறான்” என்றார்.

“இதென்ன கூத்தா இருக்கு? ஊர்ல இல்லாத மருமகளைக் கொண்டு வந்த மாதிரி அந்த பேச்சு பேசின நேத்து. இன்னைக்கு என்ன விடிஞ்சும் விடியாம அப்பன் வீட்டுக்கு போயிட்டாளா? சொல்லிட்டு போனாளா? இல்ல அதுவும் இல்லையா?” என்றார் விசாலாட்சி.

“அது என்கிட்ட சொல்லிட்டு தான் போனா அத்தை” என்று சமாளித்தவருக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.