அத்யாயம் 10:

இரவு நேரம் நெருங்க நெருங்க சிவ தீர்த்தாவின் இதயத்திற்குள் பெரும் போர்களமே மூண்டிருந்தது. இத்தனை வருடங்களாக வெறுத்து ஒதுக்கிய ஒரு குடும்பத்தை இன்று உடனடியாக அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அந்த குடும்பத்துடன் பெயருக்கு கூட அவளால் ஒன்றமுடியவில்லை. விதி அவளை அங்கு கொண்டு வந்து சேர்த்திருந்த விந்தையை எண்ணி நொந்து கொண்டாள்.

அதிலும் அன்று நடந்த கலவரத்தை எல்லாம் நினைத்துப் பார்த்தவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஆதி கேசவனுக்கு பெண் கொடுக்க இத்தனை போட்டி இருக்கையில் அவனை நிமிர்ந்து கூட பார்க்க  விருப்பப்படாத தன்னை அவனுடன் இணைத்து வைத்த விதியின் விளையாட்டை என்னவென்று சொல்லுவாள்?

அறைக்கு செல்லாமல் வெளியே காத்து வாங்கியபடி நடந்து கொண்டிருந்த மகனைப் பார்த்த ரேணுகாவிற்கு சூழ்நிலை புரிந்தது. ஆதியும் சட்டென்று யாருடனும் பழகிவிடும் ரகம் அல்ல.

“ஆதி இன்னும் எவ்வளவு நேரம் வெளியவே நடந்துகிட்டு இருக்க முடியும்?ரூம்க்கு போகலையா? சிவாவுக்கு நைட் சாப்பாடு?” என்றார் மகனிடம் வந்து.

“அது தான்மா எனக்கும் ஒன்னும் புரியலை. எத்தனை நாளைக்கு வெளியவே வாங்கிக் குடுக்க முடியும். சரி பிடிவாதத்தை கொஞ்சம் குறைப்பான்னு பார்த்தா, பிடிச்ச பிடியில, பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி அதே இடத்துல உட்கார்ந்திருக்கா. எனக்கு தான் மண்டை காயுது” என்றான் ஆதி.

“நான் போய் பேசுறேன் ஆதி. இல்லைன்னா உங்களுக்கு தனியா சமைச்சுக்கிறிங்களா?” என்றார் ரேணுகா.

“என்னம்மா இப்படி எல்லாம் பேசுறிங்க? இதென்ன புதுசா தனி சமையல் அப்படி இப்படின்னு பேசுறிங்க?” என்றான் ஆதி.

“வேற என்ன ஆதி பண்ண முடியும்?” என்றவர்,

“எதுக்கும் நான் போய் சிவாகிட்ட பேசிப் பார்க்குறேன்” என்றவர் சிவ தீர்த்தாவை தேடி சென்றார்.

ஆதி சொன்னது போல் அதே இடத்தில் தான் இன்னமும் இருந்தாள். ரேணுகாவை கண்டவளின் கண்களில் ஒரு மிரட்சி வந்து போனது. எங்கே அன்றைய இரவைப் பற்றி பேச வந்திருக்கிறாரோ என்ற பதற்றம் அவளுக்கு.

“என்னம்மா சிவா? ஏன் இப்படி ஒரே இடத்துல உட்கார்ந்திருக்க? கால் எல்லாம் மரத்துப் போய்டாதா?” என்றார் அக்கறையாய்.

 “இல்லைங்க, பரவாயில்லை” என்றாள் மெதுவாய். அவள் வாயில் இருந்து அத்தை என்றெல்லாம் அவ்வளவு சீக்கிரம் வராது என்று ரேணுகாவிற்கும் தெரியும்.

“சாப்பிடலையாமா சிவா?” என்றார்.

“இல்ல, பசியில்லை” என்றாள் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு.

“எத்தனை நாளைக்குமா சிவா வெளி சாப்பாடு சாப்பிட முடியும்? வேணும்னா நீயும் ஆதியும் தனியா சமைச்சுக்கிறிங்களா? நான் வேணும்னா இங்க மேலயே தனியா அதுக்கு ஏற்பாடு பண்ணித் தரட்டுமா?” என்றவரை அதிசயமாய் பார்த்து வைத்தாள்.

பின்னே திருமணம் முடிந்த அன்றே, மகனையும் மருமகளையும் தனிக் குடித்தனம் வைக்க ஐடியா சொல்கிறாரே என்ற எண்ணம் தான் அவளுக்கு.

“வந்த அன்னைக்கே குடும்பத்தை பிரிச்ச பேரெல்லாம் எனக்கு வேண்டாம்ங்க. அது சரியாவும் வராது” என்றாள் நீண்ட பேச்சாய்.

“அப்போ நான் சமைக்கிறதை சாப்பிடலாமே?” என்றவர் அவள் பார்த்த பார்வையில்,

“வேணும்னா சாப்பாட்டு செலவுக்கு உன் புருஷனை தனியா பணம் குடுக்க சொல்லிடுறேன்மா. வெளிய வாங்கினாலும் பணம் குடுத்து தான வாங்குவான்” என்றார் ரேணுகா.

அவரின் முயற்சி அவளுக்கும் புரியாமல் இல்லை. அவருக்கு தன்னிடம் வந்து இப்படி கெஞ்ச வேண்டும் என்ற அவசியமும் இல்லையே? என்று எண்ணியவள்,

“உங்க சாப்பாட்டையே சாப்பிட்டுக்கிறேன். எனக்காக உங்க பையனும் மெனக்கெட வேண்டாம். வீட்ல இரண்டு உலையும் வைக்க வேண்டாம்” என்றாள் மெதுவாய்.

“நிஜமா தான் சொல்றியா சிவா. உனக்கு இதுல வருத்தம் ஒன்னுமில்லையே?” என்றார்.

“நான் வருத்தப்படுறதால எதுவும் மாறப் போறது இல்லையே?” என்றாள்.

“காலம் எல்லாத்தையும் ஆத்தும் சிவா. இந்த வீட்ல இருக்குற மத்தவங்களுக்காக பார்க்க வேண்டாம். எனக்காக பாருடா. அதுக்காக நான் உன்னை இப்படித்தான் இருக்கணும்னு சொல்லலை. கட்டாயத்துல எதுவும் நடக்கக் கூடாது. இது வரைக்கும் நடந்தது எல்லாம் போகட்டும். இது வரைக்கும் நீ கிருஷ்ணன் மகள்.ஆனா இனி ஆதியோட மனைவி. அதை மட்டும் மறந்துடாதமா.உனக்கு ஒண்ணுன்னா நாங்க இருக்கோம்” என்றார் ரேணுகா.

“எனக்கு ஒண்ணுன்னு வந்தப்போ நீங்க யாரும் கூட இல்லைங்க. இன்னைக்கு உங்க மகன் தாலி கட்டினதால மட்டும் புதுசா உறவு வந்துடாது? நான் பிறந்து இத்தனை வருசத்துல எங்க போனிங்க எல்லாரும். இதோ இன்னைக்கு வந்து நின்னாரே உங்க அண்ணன், தாய்மாமான்னு உரிமையா? அப்படி பேருக்கு கூட எனக்கெல்லாம் யாரும் வந்து நிற்கலைங்க” என்றவள்,

“இதெல்லாம் எதுக்கு உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன் நான்? ஆறுமாச கைக்குழந்தை மேல வராத பாசமும், இரக்கமுமா  இப்ப உங்களுக்கு வந்துடப் போகுது? இல்ல இந்த குடும்பத்துகிட்ட அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? உலகத்துலையே கொடுமையான  விஷயம் என்ன தெரியுமாங்க? அவமானப்படுத்தப்பட்ட வீட்ல திங்கிற மானங்கெட்ட சோறு தான். அதையே நான் பழகிக்கிறேன்” என்றாள் பட்டென்று.

அவளின் பேச்சில் ரேணுகா தான் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். சிவாவிற்கும் அவரை அப்படி பேச வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. ஆனால் இத்தனை வருடங்களாக மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் வலி நிறைந்த வார்த்தைகளாக வெளிவந்து கொண்டிருந்தது. அதிலும் எதிரில் இருப்பவரை காயப்படுத்தியே ஆவேன் என்ற நோக்கத்துடன்.

அவரின் அதிர்ந்த முகத்தை பார்த்த பிறகு தான் பேசிய பேச்சின் வீரியம் புரிந்தது அவளுக்கு. ஏனோ தன்னை அன்புடன் பார்த்துக் கொண்ட அவரை அப்படி பேசியதில் அவளுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

“இல்ல..அது..” என்று தயங்கிவள்,

“உங்களைப் பேசணும்னு நான் பேசலை. அது என்னவோ தெரியலை பட்டுன்னு பேசிட்டேன். இப்படி பேசிடுவேனோன்னு பயந்து தான் நான் அமைதியாவே இருக்கேன். உங்களைக் காயப்படுத்தனும்னு நான் பேசலை” என்று உடனே தணிந்து பேசியவளைக் கண்டு ரேணுகாவிற்கு இரக்கம் தான் வந்தது.