என்ற அம்பிகையின் பாடல் ஊரைச் சுற்றிலும் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையில் இருக்கும் செல்வ செழிப்பான ஊர். விவசாயத்திற்கு பெயர் போன பூமி. அனைத்து வகையான காய்கறிகளும், மானாவாரி பயிர்களும் விளையும் அற்புதமான பூமி. சிறிய கிராமம் என்றும் சொல்ல முடியாது, அதே சமயம் பெரிய நகரம் என்றும் சொல்ல முடியாது.
ஊர்த் திருவிழாவின் மூன்றாம் நாள் அன்று. முளைப்பாரி அழைத்து, அம்மன் ஊர்வலத்துடன் அன்றைய திருவிழா நிறைவடைந்துவிடும்.
“இன்னும் சற்று நேரத்தில் அம்மன் ஊர்வலம் தொடங்கவிருப்பதால், அது சமயம் முளைப்பாரி எடுக்கும் பெண்கள் தயார் நிலையில் இருக்குமாறு விழா கமிட்டியாளர்கள் சார்பில் அறிவிக்கப்படுகிறது” என்று ஒலிபெருக்கி வாயிலாக வந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெண்கள் அனைவரும் பரபரப்புடன் காணப்பட்டனர்.
அவ்வூரின் பெரிய தனக்காரர் என்று அழைக்கப்படும் அண்ணாமலை வீடு. வீடு என்று சொல்வதைக் காட்டிலும் சிறிய அரண்மை என்று சொல்லும் அளவிற்கு அந்த காலத்து கலை நயத்துடன் இருந்தது அவ்வீடு.
“எல்லாரும் கிளம்பியாச்சா?” என்ற விசாலாட்சியின் கணீர் குரலில் ஆளுக்கொரு அறையில் இருந்து வெளியே வந்தனர்.
விசாலாட்சி -அந்த குடும்பத்தின் மூத்த தலைமுறை. அவருக்கு அண்ணாமலை என்ற மகனும், சுபத்ரா,மணிமேகலை என்ற மகளும் உள்ளனர்.
அண்ணாமலை -ரேணுகா தேவிக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ஆதி கேசவன், இளையவன் விசாகன். அண்ணாமலை தற்போது உயிருடன் இல்லை.
மணிமேகலைக்கு செல்வம் என்பவருடன் திருமணம் முடிந்து தாரணி என்ற ஒரு மகள் மட்டும் இருக்கிறாள். செல்வமும் இப்போது உயிருடன் இல்லை.
சுபத்ரா-மகாதேவன் தம்பதிக்கு அமிர்தா, ஜீவன் என்ற இரு பிள்ளைகள்.
“ரேணுகா எங்க ஆதிகேசவனை காணோம்?” என்றார்.
“அண்ணா அரிசி மில் வரைக்கும் போயிருக்காங்க பாட்டி” என்றான் விசாகன்.
“என்ன ரேணுகா? நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல? மூணு வருஷம் கழிச்சு திருவிழா நடக்குது. இப்போ அண்ணாமலை இடத்துல இருக்குறது ஆதி தான். அவன் தானே பொறுப்பா இருந்து நடத்திக் குடுக்கணும்?” என்ற விசாலாட்சியின் குரலில் அக்கரையும், அதட்டலும் சேர்ந்தே இருந்தது.
“என்னோட பொறுப்புல என்ன குறையைக் கண்டிங்க பாட்டி?” என்ற குரலில் அனைவரும் விதிர்விதிர்த்துத் திரும்பினர். கண்களில் தீட்சன்யத்துடன் நின்றிருந்தான்.
ஆதி கேசவன்-நிதானமும், கோபமும் மாறி மாறி பிரதிபலிக்கும் கண்களும், அறிவுக்கலையும்,கம்பீரமும் கொண்ட முகமும், ஆறடி உயரமும் கொண்ட ஆண்மகன். அவனிடமிருந்து வார்த்தையை வாங்குவதற்குள் வாழ்க்கை முடிந்து விடும் அளவிற்கு இறுக்கம் கொண்டவன். அவன் கண்ட கனவுகள் வேறு. பொறியியல் துறையில் தங்கம் வாங்கியவன், மேற்படிப்பையும் முடித்து பெரும் கனவுகளுடன் ஊர் திரும்பியவனை வரவேற்றது என்னவோ தந்தையின் இறப்பு செய்தி தான்.
குடும்பத்தின் தூணாய் இருந்த தந்தை இறந்துவிட, அனைத்து பொறுப்புகளும் இப்போது அவன் தலையில். குடும்பத் தொழில் முதல் விவசாயம் வரை அனைத்தும் அவன் பொறுப்பில் வர, முதலில் அனைத்திலும் அவனுக்கு சற்று சிரமமாய் இருந்தாலும், இதோ அனைத்தையும் கற்று வித்தகனாகி விட்டான்.
“குறையெல்லாம் இல்லை ஆதி. யாரும் ஒரு சொல்லு சொல்லிக்கூடாது இல்ல, அதான்” என்றார் விசாலாட்சி.
வேட்டி சட்டையில் கம்பீரமாய் இருந்த மகனை எப்பொதும் போல் ரசித்த ரேணுகா தேவி,
“மாமா அப்போ நாங்களும் உங்க கூடவே வர்றோம்” என்று அமிர்தாவும், தாரணியும் சொல்ல, அவர்களை முறைத்தவன்,
“நான் கிளம்ப சொன்னேன்” என்றான் ஒரே வார்த்தையில். அவ்வளவு தான் அனைவரும் கப்சிப் என்று அடங்கிவிட்டனர்.
“எதுவும் பிரச்சனையா ஆதி?” என்றார் மகாதேவன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா” என்றான்.
ஆதி சொன்னபிறகு அங்கு மறுபேச்சே இல்லை. அவர்கள் அனைவரும் கிளம்பிச் செல்ல, விசாகனை முறைத்திருந்தான் ஆதி கேசவன்.
“அண்ணா” என்று எச்சில் கூட்டி விழுங்கினான் விசாகன்.
“என்ன பண்ணி வச்சிருக்கன்னு புரியுதா விசாகா?” என்றான் ஆதி. முகத்தில் கோபமில்லை. ஆனால் குரலில் அழுத்தமும், கோபமும் இருந்தது.
“சாரிண்ணா! அவனுங்க இப்படி பண்ணுவானுகன்னு தெரியாது” என்றான் தலை குனிந்தபடி.
“பழக்க வழக்கத்துல கூட ஒரு தரம் இருக்கணும். ப்ரெண்ட்ஸ திருவிழாக்கு கூப்பிடுறது முக்கியமில்லை. அவங்க எப்படி பட்டவங்கன்றது தான் முக்கியம். இன்னைக்கு ஊர் பொண்ணுங்களை வம்பிழுத்தது மட்டும் வெளிய தெரிஞ்சிருந்தா என்ன நடந்திருக்கும்? உன்னோட பேரும், இந்த வீட்டோட பேரும் சேர்ந்து கெட்டுப் போயிருக்கும். நான் பார்க்கப் போய் சரியா போச்சு? இல்லைன்னா அந்த பொண்ணுங்க நிலைமையை யோசிச்சு பார்த்தியா? இப்படி ஒரு கேடுகெட்ட பிரண்ட்ஷிப் உனக்குத் தேவையா?” என்றான் கடுமையாய்.
“ஹோ, சாருக்கு அது ஜாலியோ? ஏன் ஜாலிக்கு அவங்க வீட்டு பொண்ணை நாம போய் கிண்டல் பண்ணா சும்மா இருப்பாங்களா? இல்ல நம்ம வீட்டுப் பொண்ணை கிண்டல் பண்ணா நாம தான் சும்மா இருப்போமா?” என்றான் ஆதி கேசவன்.
“சாரிண்ணா” என்றான் விசாகன்.
“சாரியை வச்சு என்ன பண்ண முடியும்? கம்ளைன்ட் பண்ணிட்டேன். உள்ள வச்சு ரெண்டு தட்டு தட்டுனாத்தான் புத்தி வரும்” என்றான் ஆதி கோபமாய்.
“அண்ணா பிளீஸ் கம்ப்ளைன்ட் எல்லாம் வேண்டாம்” என்றான் விசாகன்.
“இது வேணும், வேணாம்னு சொல்ற இடத்துல நீ இல்லை விசாகா. இனி அவங்களோட உன்னை நான் சேர்ந்த மாதிரி பார்க்கக் கூடாது,புரியுதா” என்றான் அழுத்தமாய்.
ஆதியின் குரலில் விசாகனின் தலை தன்னால் ‘சரி’ என்று ஆடியது.
ஊர் திருவிழாவிற்கு விசாகன் அவன் நண்பர்களை அழைத்திருக்க, அவர்களுடன் வந்த நண்பர்கள்,ஊரில் சில பெண்களை கலாட்டா செய்ய, விஷயம் ஆதி கேசவன் காதுகளுக்கு சென்றிருந்தது. அவர்களை கண்டித்து, பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துவிட்டு, விசாகனின் பெயர் எந்த இடத்திலும் வெளிவராமல் பிரச்சனையை முடித்திருந்தான் ஆதி. திருவிழா கூட்டம் என்பதால் விஷயம் வெளியே தெரியும் முன் அனைத்தையும் முடித்திருந்தான்.
“சிவா..சிவா” என்று கத்தியபடி வந்த கவிதாவின் குரலில்,
“இதோ வந்துட்டேன் கவி” என்றபடி வெளியே வந்தவளைப் பார்த்த கவிதா பிரமிப்புடன் அப்படியே நின்றுவிட்டாள். வீட்டின் முற்றத்தில் இருந்த கிருஷ்ணனும் மகளின் அழகில் ஒரு நிமிடம் மெய் மறந்திருந்தார்.
அன்று தான் முதன் முதலில் தாவணி அணிந்திருந்தாள். மஞ்சள் நிறத்தில் அகலக் கரையிட்ட மெரூன் வண்ண பட்டுப் பாவடையும்,அதே நிறத்தில் ஜாக்கெட்டும், கரையின் நிறத்தில் தாவணியும் அணிந்திருக்க, அது அவளின் பால் வண்ண மேனிக்கு பொருத்தமாய் இருந்தது. ப்ரென்ச் பிளாட் எடுத்து பின்னிய கூந்தல் இடையைத் தாண்டி நீண்டிருக்க, காதுகளில் தொங்கிய குடை ஜிமிக்கியும், கைகளை நிறைத்திருந்த கண்ணாடி வளையல்களும் அவளைப் பேரழகியாய் காட்டிக் கொண்டிருந்தது.
இத்தனை அழகையும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் அவளுக்கு தன்மானமும், சுயமரியாதையும் அதிகம். வளவளவென்று பேசாத குணம், பேசினால் பேச்சில் இருக்கும் அழுத்தம் என்று இவையனைத்தையும் குணங்களாய் கொண்ட அவளுக்கு வயது என்னவோ பதினெட்டு தான் முடிந்திருந்தது. அவள் தான் சிவா என்று அழைக்கப்படும் சிவ தீர்த்தா.