“ஏன் இவ தான் படிக்கனுமா? மத்த யாருக்கும் படிக்கத் தெரியாதா?” என்றார் விசாலாட்சி.

அவரின் கேள்வியில் பெண்கள் அமைதியாகிவிட, அதுவரை யோசித்துக் கொண்டிருந்த சிவ தீர்த்தா சற்றும் யோசிக்காமல் கும்மிப் பாடலைப் படிக்கத் தொடங்கியிருந்தாள் முறைப்புடன்.

“பொன்னால பல்லாக்கு, பூவால அலங்காரம்..

முத்தால தாய் உனக்கு முத்தரசி பொங்கலிட்டோம்..

காடு கரை உழுதவனுக்கு கைரேகை மிச்சமடி..

காத்து படியளந்து பட்ட குறை தீர்த்திடம்மா..

தாயே கூட துணையிருந்து கொண்டனைக்க வேண்டுமம்மா

அம்மா பக்கத் துணையிருந்து பாதுக்காக்க வேணுமம்மா ”

என்று அவள் பாடிக் கொண்டிருக்கும் போதே, அந்த குரலைக் கேட்டு திரும்பியிருந்தான் ஆதிகேசவன்.

“என்னாச்சு ஆதி?” என்றான் பாண்டி.

“கும்மி பாட்டு படிக்கிறது யாரு?” என்றான் யோசனையுடன்.

“நம்ம சிவா பாப்பா தான். குரலே சொல்லிடுமே” என்றான் பாண்டி.

“அது யாரு?” என்றான் புரியாமல்.

அவனின் கேள்வியில் திகைத்தான் பாண்டி.

“என்ன ஆதி சொல்ற? சிவாவை யாருன்னு தெரியாதா உனக்கு?” என்றான் மீண்டும்.

“தெரியாததுனால தான கேட்குறேன்?” என்றான் ஆதி கேசவன் முறைப்புடன்.

“கிருஷ்ணன் சித்தப்பா பொண்ணு சிவ தீர்த்தா தான் பாட்டு படிக்கிறது” என்றான் பாண்டி.

“ஹோ” என்றவன் அவளின் முகத்தைப் பார்க்க முற்பட, பெண்கள் கூட்டத்தில் அவளின் இடைதாண்டிய ஜடை மட்டுமே அவன் கண்ணில் பட்டது.

“ஆதி கேசவன் ஒரு பொண்ணைத் தேடுறானா?” என்றான் பாண்டி அதிர்ச்சி மாறாமல்.

“குரல் நல்லா இருக்கேன்னு கேட்டது ஒரு குத்தமா? எப்பவும் ஒரு வயசான பாட்டி தான கும்மி பட்டு படிப்பாங்க. அதான் கேட்டேன்” என்றான் ஆதிகேசவன்.

“அந்த பாட்டி தான் சிவாவுக்கு ட்ரெயினிங் கொடுத்தது” என்று சிரித்தான் பாண்டி.

ஆதி கேசவன் பாண்டியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை என்னவோ அந்த குரலுக்கு சொந்தக்காரியை தேடியது. அப்போது தூரத்தில் விசாகனின் பார்வை ரசனையுடன் படிவதைக் கண்டு புருவம் நெரித்தவன், அவன் பார்வை செல்லும் திசையைப் பார்க்க, சரியாக அதே நேரம் பெண்கள் சிலர் விலக, அந்த இடைவெளியில் அவளின் முகம் தெரிந்தது ஆதி கேசவனுக்கு. நிலவாய் ஒளிர்ந்தவளின் முகம் அவன் அனுமதியின்றி, அவனறியாமல் மனதில் சென்று பதிந்து கொள்ள, சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டான்.

“இந்த பொண்ணை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?” என்று யோசித்தான். யோசித்தவனின் மூளைக்குள் பக்கத்துத் தோட்டத்தில் பார்த்த ஞாபகம் வர, அப்போது தான் தெளிந்தான். அவளைப் ஓரிரு முறை பார்த்திருக்கிறான். ஆனால் ஊன்றி கவனித்தது இல்லை. விசாகனையும் அவளையும் மாறி மாறி பார்த்தவனுக்கு மனதில் ஏதோ நெருடலாய் பட்டது.

கும்மி அடித்து முடித்திருக்க,

“சிவா இங்க இருக்குற எல்லா பொண்ணுங்க பார்வையும் ஆதி அண்ணா மேல தான் இருக்கு. என்னம்மா சைட் அடிக்கிராளுங்க” என்றாள் கவி.

“இதெல்லாம் வயசு கோளாறு கவி. பருவத்துல பன்னி கூட அழகாத் தெரியும்னு நீ கேள்விப்பட்டதில்லை” என்றாள் சிவ தீர்த்தா.

“அடிப்பாவி அவரைப் பார்த்தா அப்படி சொல்ற?” என்றாள்.

“பெரிய ஊர்ல இல்லாத ஆணழகன் பாரு? போவியா” என்றவள் எதார்த்தமாய் பார்த்து வைக்க, வேட்டி சட்டையில் ஆணழகனாய் கம்பீரமாய் நின்றவனின் தோற்றம் அவளை ஒன்றும் பாதிக்கவில்லை.

அவர்கள் கோவிலில் இருக்கும் போதே வானம் இருண்டு மேகம் கூடி மழை பொழிய தயாராய் இருந்தது. அது வருடா வருடம் நடக்கும் நிகழ்வு தான்.

“மழை ஊத்தப் போகுதுன்னு நினைக்கிறேன். சாமியை கும்பிட்டு சீக்கிரம் வீட்டுக்கு போவோம் வா” என்று கவிதாவை இழுத்துக் கொண்டு சென்றாள் சிவ தீர்த்தா.

கைகூப்பி மனமுருக வேண்டிக் கொண்டவளின் மனதில் இருந்த வேதனைகளை யார் அறிவார்? அந்த அழகான பெண்ணவளுக்குள் ஆழமான காயங்கள் உண்டு. அது வெளியே தெரியாத படி புன்னகையால் மறைத்துக் கொள்வாள் சிவ தீர்த்தா.

திருநீரு, குங்குமம் வாங்கிக் கொண்டு நிமிர்ந்தவள் கண்டது என்னவோ விசாகனைத் தான். அவன் “ஹாய்” என்பதைப் போல் கையசைக்க, அவளோ அவனை முறைத்துவிட்டு சென்றாள். இவை அனைத்தும் ஆதி கேசவனின் கண்ணில் தவறாமல் விழுந்து வைத்தது.

ஊர் மக்கள் எதிர்பார்த்ததைப் போல் அன்று இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்திருந்தது. அத்தனை நாள் மழை இன்றி வறண்டிருந்த பூமி அன்று நன்கு குளிர்ந்திருந்தது.

அந்த மழையும், அது தந்த இதமான காற்றும் சிவ தீர்த்தாவிற்கு சற்று இதமாக இருந்தது.

அதிகாலையில் எப்போதும் போல் விழிப்பு வர, எழுந்து கடகடவென்று வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.

“டேய் விக்கி வந்து பாலைக் குடி” என்று தம்பியை அழைக்க, அவனோ அரை குறை தூக்கத்துடன் எழுந்து வந்தான்.

“இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்க்கா” என்றான்.

“பசங்களோட சேர்ந்து ஓவரா ஆட்டம் போட்டா இப்படித்தான்” என்றவள், அவன் தலையில் கொட்ட,

“இப்பத்தான் இப்படி விளையாட முடியும்” என்றவன் கொட்டாவி விட,

“சரி சரி குடிச்சுட்டு போய் தூங்குறதுன்னா தூங்கு” என்றவள், தந்தையைத் தேட,

“அவரு காலையில வெள்ளன எழுந்து தோட்டத்துக்கு போயிட்டார் சிவா. மழை பேஞ்சதும் உழவு ஓட்டனும்ல. அந்த ட்ராக்டர் டிரைவர் பய வேற இப்பல்லாம் அடிக்கடி வராம மக்கர் பண்றான்” என்று காவேரி புலம்பிவிட்டு செல்ல, தந்தைக்கு சூடாக டீ போட்டு பிளாஸ்க்கில் ஊற்றிக் கொண்டு கிளம்பினாள் சிவா.

“குளிச்சிட்டு இந்த தாவணியை மாத்திட்டு போ சிவா” என்றார் காவேரி.

“வந்து குளிச்சிக்கிறேன்ம்மா” என்றவள் தூக்கிப் போட்ட கொண்டையுடன் கிளம்பியிருந்தாள்.

மழை பெய்ததில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்க, இலைகளின் மேலிருந்த மழைத் துளிகளின் மிச்சம் இன்னும் இலைகளுடன் முத்தமிட்டு உறவாடிக் கொண்டிருந்தது. மலர்ந்திருந்த பூக்களும் மழைத் துளிகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் உறவாடிக் கொண்டிருக்க, அவற்றை ரசித்தபடி சென்று கொண்டிருந்தாள்.

ஸ்கூட்டியை நிறுத்தியவள், கூடையுடன் இறங்கி வரப்பில் நடந்து செல்ல, தூரத்தில் கிருஷ்ணன் சோர்வுடன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

வேக எட்டுக்கள் வைத்து அவர் அருகில் சென்றவள்,

“என்னாச்சுப்பா? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிங்க? உடம்புக்கு எதுவும் முடியலையா?” என்றாள் பதட்டமாக.

“அதெல்லாம் ஒன்னுமில்லைடா. கொஞ்சம் படபடன்னு வருது” என்றார்.

 அவரின் நெஞ்சை வேகமாய் நீவி விட்டவள், தண்ணீரை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கிக் குடித்த பின்பு தான் அவருக்கு கொஞ்சம் தேவலாம் போல் இருந்தது.

“உங்களை யாரு இவ்வளவு சீக்கிரம் வர சொன்னா? என்னையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல” என்றாள் கோபமாய்.

“நீயே எப்பவாவது தானம்மா வீட்ல இருக்க? இந்த நேரத்துலயும் இங்க வந்து வேலை செஞ்சு கஷ்ட்டப்படுனுமா?” என்றார் கிருஷ்ணன்.

“அப்பா” என்று பல்லைக் கடித்தவள், அப்போது தான் கவனித்தாள் ட்ராக்டர் மட்டும் நின்று கொண்டிருப்பதை.

“இன்னும் உழுக ஆரம்பிக்கலையாப்பா?” என்றாள் சந்தேகமாய்.

“டிரைவர் வந்தான்மா. அப்பறம் முக்கியமான வேலை இருக்குன்னு போய்ட்டான்” என்றார் அவளின் முகம் பார்க்காமல்.

அவளுக்கு புரிந்து போனது, என்ன நடந்திருக்கும் என்று?. சட்டென்று பார்வையை நகர்த்தி பக்கத்து தோட்டத்தைப் பார்க்க, அவன் அங்கே தான் உழுது கொண்டிருந்தான். விசாலாட்சியோ அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தார்.

இவர்கள் தோட்டத்திற்கும் அவர்கள் தோட்டத்திற்கும் இடையில் இருப்பது ஒரு வரப்பு தான்.

“அவனை முறைச்சு என்னாக போகுது சிவா? நாம என்னைக்கோ ஒரு நாள் அவனுக்கு வேலை தர்றோம். அவங்க தினப்படி அவனுக்கு வேலை தர்றவங்க. அவன் அவங்க சொல்றதைக் கேட்குறது தான நியாயம்?” என்றார்.

அதுக்காக அவங்க வாழ மத்தவங்க சாகனுமாப்பா?” என்றாள் கோபம்  குறையாத குரலில்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பக்கத்து தோட்டத்து வண்டிப்பாதை வழியாக வந்து நின்றது அந்த தார் ஜீப். அதிலிருந்து லாவகமாய் இறங்கியவனைப் பார்த்த விசாலாட்சி வேகமாய் எழுந்து வந்தார்.

“என்ன ஆதி இங்க வந்திருக்க?” என்றார் கேள்வியாய்.

“வயசான காலத்துல வீட்ல ரெஸ்ட் எடுக்காம எதுக்கு இவ்வளவு சீக்கிரம் இங்க வந்திருக்கிங்க?” என்றான்.

“உழவு ஓட்ட வேண்டாமா? நீ மில்லுக்கும் தோப்புக்கும் போயிடுற. இங்க தோட்டத்தை யார் பாக்குறது?” என்றார் விசாலாட்சி.

“நான் பார்த்துக்கிறேன் பாட்டி, நீங்க கிளம்புங்க” என்றான் ஆதி. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, உழுது கொண்டிருந்த டிரைவர் இறங்கி வர,

“என்ன காளி? எதுக்கு வேலையை விட்டுட்டு வர்ற?” என்றார் விசாலாட்சி அதட்டும் குரலில்.

“டீசல் தீர்ந்து போச்சுங்கம்மா” என்றான் அவன்.

அதுவரை அங்கு நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தவள், நக்கல் சிரிப்புடன்,

“என்ன காளி அண்ணா, வேலைக்கு கூப்பிட்டது நாங்க, நீங்க சேவகம் செய்றது அங்கையா? ஏன் அம்பது ஏக்கர் இருந்தா தான் உழுக வருவிங்களா?” என்றாள் நக்கலாய்.

“அப்படி எல்லாம் இல்ல சிவா பாப்பா, நாளைக்கு வந்து கண்டிப்பா உழவு ஓட்டிக் குடுத்துடுறேன்” என்றான் காளி பாவமாய்.

“அதுக்கு அவசியமே இல்லை. நீங்க ஒருத்தர் தான் டிரைவரா என்ன? இல்ல, எங்களுக்கு உழவு ஒட்டவே தெரியாதா?. இனி நீங்க இங்க வேலைக்கு வரத் தேவையில்லை. உங்க விசுவாசத்தை அங்கயே காட்டுங்க” என்றவள்,

“அப்பா ட்ராக்டர் சாவி குடுங்க” என்றாள்.

“வேண்டாம்மா சிவா. நீ வீட்டுக்கு போ, நாளைக்கு ஆள் வச்சு ஓட்டிக்கலாம்” என்றார்.

“என்ன வேண்டாம்? வாடகை கட்டுபடி ஆகலைன்னு தான லோன் போட்டு ட்ராக்டர் வாங்குனிங்க. இப்ப இதை வாங்கியும் பிரயோஜனம் இல்லாம நிக்கனுமா? இன்னைக்கு அடிக்கிற வெயில்ல, நாளைக்கு பூமி வறண்டு போயிடும். இல்ல, இன்னைக்கும் மழை வந்தா நாளைக்கு சுத்தமா உழவு ஓட்ட முடியாது. குடுங்க சாவியை” என்றாள்.

காளியோ டீசலை நிரப்பிக் கொண்டு மீண்டும் உழுக சென்று விட, அவள் பேசிய அனைத்தும் தப்பாமால் ஆதி கேசவனின் காதுகளில் விழுந்திருந்தது.

அங்கு நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல் அவன் நிற்க, விசாலாட்சிக்குத் தான் கொஞ்சம் உள்ளுக்குள் உதறல். இது போன்ற செயல்களை எல்லாம் ஆதி விரும்ப மாட்டான் என்று அவருக்குத் தெரியும். அதனால் தான் இத்தனை நாட்களில் அவனை இந்த தோட்டத்துப் பக்கம் மட்டும் அதிகம் வரவிடாமல் வைத்திருந்தார். அவனுக்கு அதற்கு நேரமும் இல்லை.

இறுகிப் போய் நின்றவனின் தோற்றத்தை வைத்து அவரால் எதையும் கணிக்க முடியவில்லை.

“இந்த டீயை சூடா குடிங்கப்பா” என்று அவருக்கு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தவள், ட்ராக்டர் சாவியை வாங்கிக் கொண்டு, ட்ராக்டரில் ஏறினாள்.

அவள் ஏறிய லாவகத்திலேயே தெரிந்து போனது, அவளுக்கு நன்றாக ஓட்ட வரும் என்று. விசாலாட்சியை முறைத்தபடி, அவள் உழுகத் தயாரானாள். அவள் லாவகத்துடன் ஓட்டி, ஒரு நேர்த்தியுடன் உழுது கொண்டிருக்க, அதைப் பார்த்த ஆதி கேசவனின் கண்களில் ஒரு மெச்சுதல். கூடவே சிறு வியப்பும் கூட. ஆனால் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“அம்மாடி நீ வாம்மா, மெது மெதுவா நான் ஓட்டிக்கிறேன்” என்றார் கிருஷ்ணன்.

“நான் பார்த்துக்கிறேன். நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கப்பா” என்றவள், வேலையை கருத்தாய் செய்து கொண்டிருக்க, அதைப் பார்த்த கிருஷ்ணனின் கண்ணில் கண்ணீர் படலம். மகள் பார்த்துவிடும் முன் துடைத்துக் கொண்டார்.

“சரியான திமிர் பிடிச்சவ ஆதி. எவ்வளவு பட்டாலும் இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றார் விசாலாட்சி.

“அது என் கூடவே பிறந்தது” என்பதைப் போல் இருந்தது சிவ தீர்த்தாவின் பார்வை.

கைகளைக் கட்டிக் கொண்டு நெடுமரமாய் நிமிர்ந்து நின்றவனின் பார்வையும் அவளை சளைக்காமல் பார்த்து வைத்தது.