காரிகை கனவுகள் 05

தனது அறையில் இருந்த ஜன்னல் திண்டில் அமர்ந்தபடி தூரத்தில் தெரிந்த எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் திவ்யஜோதி. அவள் செய்த தவறின் அளவு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு பிடிபட, இழப்பின் வலியும் இப்போது தான் புரிய தொடங்கி இருந்தது.

காலையில் எழிலரசியிடம் நன்றாக வாங்கிக்கொண்ட லீலாவதி நேரே ரேகாவின் வீட்டிற்குத் தான் வந்திருந்தார். ரேகாவும், அவரும் பேசிக் கொண்டதை முழுமையாக கேட்டுக்கொண்டு தான் நின்றாள் திவ்யா.

அதுவும் செல்வாவிற்கு பெண் பார்த்துவிட்டதாக அவர் கூறியதைக் கேட்டபிறகு, இயல்பாக இருப்பது போல் நடிக்கக்கூட முடியவில்லை அவளால்.

ஏற்கனவே, “செல்வாவை இழந்துவிட்டோம்” என்று தவிப்பில் இருந்தவள், இப்போது மொத்தமாக முடங்கியிருந்தாள். அவளையும் மீறி அவள் கண்களில் கண்ணீர் வடிந்தபடியே இருந்தது. அங்கிருந்தவர்களை நிமிர்ந்து பார்க்கும் திராணி இல்லாமல், அறைக்குள் வந்து ஒளிந்து கொண்டிருந்தாள்.

காலையில் இருந்து ரேகாவும் கண்ணீருடன் தான் அமர்ந்திருந்தார். ஏற்கனவே மகளை பார்க்கும் நேரமெல்லாம், அமையவிருந்த நல்ல வாழ்க்கையை கெடுத்துக் கொண்டாளே என்று கண்ணீர் விடுபவர் தான்.

இப்போது லீலா வந்து செல்லவும், செல்வாவிற்கு பெண் பார்த்து முடிவு செய்து விட்டது தெரியவர, இதற்குமேல் தன் பெண்ணின் வாழ்க்கை என்னவாகுமோ என்ற பதைப்பு தொடங்கிவிட்டது அவருக்கு.

அதுவும் காலையில் கண்ணீருடன் சென்று அறையில் அடைந்து கொண்ட மகளை நினைத்தும் மனம் அல்லாடியது. என்ன செய்வது என்று ஒன்றும் புரியாதவராக, பூஜை அறையை வெறித்தபடி அமர்ந்துவிட்டார் ரேகா.

திவ்யஜோதி மதிய உணவுக்கும் வெளியில் வராமல் இருந்து கொள்ள, மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது. அதற்குமேல் மகளை தனித்துவிட மனதில்லாமல், ரேகா அவளை சாப்பிட அழைக்க, “பசியில்லைம்மா” என்றாள் மகள்.

மகளின் தலையில் கையை வைத்தவர், “எல்லாம் நீயே இழுத்து விட்டது திவ்யா. இப்போ அழுது எதுவும் ஆகப் போறது இல்ல. எழுந்து முகம் கழுவிட்டு வா” என, மகள் அவரை கட்டிக்கொண்டு அழுது தீர்த்துவிட்டாள்.

“சாரிம்மா” என்று அவள் புலம்ப, ரேகாவின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.

“வேண்டாம் திவ்யா. அழாத.” என்று ரேகா மகளைத் தேற்ற,

“முடியலம்மா. நான் செல்வாவை மிஸ் பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன்மா.” என்று இன்னும் அழுதவள், “ஆனா, என்னால இதை சரிசெய்ய முடியும்மா. நான் செல்வாக்கிட்ட பேசறேன். அவர்கிட்ட மன்னிப்பு கேட்கறேன். என்னால செல்வாவை விட முடியாதும்மா. நான் அவர்கிட்ட பேசறேன். நிச்சயமா செல்வா என்னை விடமாட்டார்” என்று புலம்பத் தொடங்கிவிட்டாள்.

“வேண்டாம் திவ்யா. இப்போ நீ அங்கே போக வேண்டாம். அவனுக்கு வேற பேசி முடிச்சுட்டதா, உன் சித்தி சொல்றா. இந்த நேரத்துல நீ அங்கே போக வேண்டாம்.” என்று ரேகா மகளுக்கு அறிவுரை கூற,

“இல்லம்மா… ப்ளீஸ். ஒரே ஒரு முறை நான் செல்வாக்கிட்ட பேசிட்டு வரேன். நான் போன்…” என்று வார்த்தையை அரைகுறையாக விட்டுவிட்டவள் அலைபேசியைத் தேடி எடுத்து செல்வாவுக்கு அழைத்துவிட்டாள்.

அவனது அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூற, “தூங்கிட்டு இருப்பாங்கம்மா. நான் பார்க்கிறேன். பார்த்துட்டு வரேன்” என்றவள் அன்னை மேற்கொண்டு எதுவும் பேசும்முன் அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

‘கடவுளே… என் குழந்தையை ஏன் இப்படி கண்ணீர் விட வைக்கிற’ என்று ரேகா தலையில் அடித்துக்கொண்டு கதறியபடியே, மடிந்து அமர்ந்துவிட்டார்.

திவ்யஜோதி வீட்டில் இருந்து கிளம்பியவள், இரண்டு வீடு தள்ளி இருக்கும் எழிலின் வீட்டை அடைய, வீட்டின் கதவு மூடி இருந்தது.

செல்வா இரவுநேரப் பணி முடித்து வந்தவன் அப்போதுதான் உறங்கி எழுந்து இருந்தான். மீண்டும் மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும் என்று அவன் தயாராகிக் கொண்டிருக்க, எழில் பூஜை பொருட்களுக்கு குங்குமம் இட்டுக் கொண்டிருந்தாள்.

திவ்யா வீட்டின் கதவை தட்டிய சத்தத்தில் எழில் வந்து கதவைத் திறந்தவள், திவ்யாவை அங்கே எதிர்பார்க்கவில்லை.

திவ்யா அவளின் அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல், “சித்தி செல்வா எங்கே? நான் பார்க்கணும்” என்று வீட்டிற்குள் வர முயல, திவ்யாவின் இடது கையைப் பிடித்து இழுத்து அவளை வெளியே தள்ளி விட்டாள் எழில்.

தடுமாறி நின்ற திவ்யா, “சித்தி ப்ளீஸ்” என்று கத்த,

“வெளியே போ” என்றாள் ஒரே முடிவாக.

“சித்தி நான் ஒருமுறை செல்வாக்கிட்ட பேசணும்” என்று திவ்யா அடமாக நிற்க,

“என் தம்பி பேரை சொன்ன… உன் கழுத்தை நெறிச்சு கொன்னுடுவேன் திவ்யா. உன்னால அவன் பட்ட அசிங்கமெல்லாம் போதும். நீ வெளியே போ. உன்னை உள்ளே விட மாட்டேன்” என்றுவிட்டாள் எழில்.

“நான் செல்வாவை பார்க்காம போகமாட்டேன் சித்தி. செல்வா… செல்வா” என்று திவ்யா நின்ற இடத்தில் இருந்தே கத்த,

“சும்மா வாசல்ல நின்னு அசிங்கம் பண்ணாத திவ்யா. உன்னால ஏற்கனவே நிறைய அசிங்கப்பட்டுட்டோம். மரியாதையா வெளியே போயிடு” என்று எச்சரித்தாள் எழில்.

“நான் செல்வாவை பார்த்தே ஆகணும் சித்தி.” என்று அழுத்தமாக கூறியவள், “நீங்க யார் எனக்கு அனுமதி கொடுக்க? நான் ஏன் உங்ககிட்ட கெஞ்சனும்? நான் போவேன்” என்று மீண்டும் உள்ளே நுழைய பார்க்க,

“அக்கா” என்று வீட்டிற்குள் இருந்து வந்தான் செல்வா.

“செல்வா” என்று இரண்டு பெண்களுமே ஒரு நொடி அதிர்ச்சியடைந்து நிற்க, எழிலுக்கு எங்கே மீண்டும் தம்பி இவளை வலையில் விழுந்துவிடுவானோ என்ற அச்சம் சற்று அதிகமாகவே இருந்தது.

ஆனால், செல்வா எதுவும் என்னை பாதிக்கவில்லை என்பதுபோல், அழுத்தமாக அவர்களை நெருங்க, “செல்வா” என்று அவனை நெருங்கினாள் திவ்யா.

ஒரு விரலை உயர்த்தி தன் உதட்டின் மீது வைத்து, அழுத்தமாக அவளைப் பார்த்தான் செல்வா.

திவ்யா அவனின் பார்வையில் அசையாமல் நின்றுவிட, “நீயே துரத்திடு.” என்று எழிலிடம் கூறிவிட்டு, வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டான் அவன்.

எழில் தம்பி நகரும் வரை அமைதியாக நின்றவள், இப்போது திவ்யாவை நக்கலாக பார்த்து வைத்தாள்.

மேலும், “என்ன தைரியம் உனக்கு? இந்த வயசுல என்ன பேச்சு பேசற? கல்யாண மண்டபம் வரைக்கும் வரவச்சு, ஓடிப்போய் அவனை அசிங்கப்படுத்திட்டு, இப்போ செல்வா செல்வான்னு வந்து நிற்பியா நீ?”

“அவனா இருக்கவும் உன்னை உயிரோட விட்டுட்டுப் போறான். நானா இருந்தேன். உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் இருப்பேன். ஒழுங்கா இங்கே இருந்து போயிடு” என்றாள்.

திவ்யா அவள் பேசியதை கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாமல், “சித்தி என்னால செல்வா இல்லாம வாழ முடியாது. அவருக்கு பெண் பார்க்கிற வேலையை நிறுத்திடுங்க. நான் செல்வாக்கிட்டே பேசிக்கறேன்” என, அதற்குமேல் பொறுமையில்லாமல் தன் மொத்த கோபத்தையும் திரட்டி, திவ்யாவின் கன்னத்தில் அறைந்துவிட்டாள் எழில்.

“சாகடிச்சுடுவேன் உன்னை. இன்னும் என் தம்பி வாழ்க்கையை நாசம் பண்ணலாம்னு திட்டமா? அடி வாங்கி சாகாம ஓடிடு” என்றாள் கோபத்துடன்.

“என்னால முடியாது சித்தி” என்றவளை வந்த ஆத்திரத்தில் எழில் கன்னம் கன்னமாக அறைய, அதற்குள் லீலா அங்கு வந்துவிட்டார்.

“எழில் எழில்” என்று கத்தியபடி ஓடிவந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டவர், “எதுக்காக இப்போ அவளை அடிச்ச? நீ யார் அவளை அடிக்க?” என்று எழிலிடம் பாய,

“இன்னும் கொஞ்சநேரம் இங்கே இருந்தா, அவளை அடிச்சே கொன்னுடுவேன். ஒழுங்கா கூட்டிட்டு போயிடுங்க” என்ற எழில் வீட்டிற்குள் சென்று கதவை மூடிவிட்டாள்.

லீலாவதி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு திவ்யாவை அங்கிருந்து அழைத்துச் சென்றவர், ரேகாவிடம் நடந்தது அத்தனையையும் கூறிவிட, ரேகா, “உனக்கு இதெல்லாம் தேவையா திவ்யா?” என்று தான் அழுதார்.

“நீங்க சும்மா இருங்கக்கா” என்று அவரை அடக்கிய லீலாவதி, தன் கணவர் பாண்டிக்கு அழைத்து விஷயத்தை கூறிவிட்டார். அதோடு நிற்காமல், அந்த வீட்டின் மற்ற இரண்டு மருமகள்களையும் அழைத்து அவர்களுக்கும் நடந்த விஷயங்களை கூறிவிட, “அதெப்படி அவ திவ்யாவை அடிக்கலாம்?” என்றனர் அவர்களும்.