காரிகை கனவுகள் 04

தமிழினி தாய் வீட்டிற்கு வந்து முழுதாக ஒருநாள் முடிந்து போயிருக்க, அதுவரையும் அவள் வாய் திறந்து எதையும் அன்னையிடம் கூறவில்லை. சங்கரி விடாது அவளை நச்சரித்துக் கொண்டிருக்க, “ஒன்னும் இல்லம்மா” என்றுவிட்டாள்.

பெற்றவர் விடாமல் துருவியதில், பதில் எதுவும் கூறாமல் அவள் நகர்ந்துவிட, இனியாழுக்கும் அவளைக் கண்டு யோசனை தான்.

அவள் தனியே, “மாமாவோட ஏதாச்சும் சண்டையா அக்கா” என்றிருக்க,

“அட நீ வேற இனி. உன் மாமாவுக்கு சண்டை போட எல்லாம் வராது. நானா அவரை இழுத்துப் பிடிச்சு சண்டை கட்டினா தான் உண்டு. அவருக்கு இப்போ செல்வா கவலையே பெருசா இருக்கு. அதுல எதையெதையோ யோசிச்சுட்டு இருக்கார். அவரே புரிஞ்சிப்பாரு. நீ விடு” என்றாள் பெரியவள்.

செல்வாவின் திருமணம் நின்று போனது இதற்குள் இனியாழுக்கும் தெரிந்து இருக்க, “ம்ச்… பாவம் தமிழ் அவங்க. மாமாவுக்கும் தம்பியை நினைச்சு கஷ்டமா தானே இருக்கும்” என்ற தங்கையை நினைத்து தான் பாவமாக இருந்தது தமிழினிக்கு.

“அதெல்லாம் சரியாகிடும் இனியா. நாங்க இத்தனைப் பேர் இருக்கோம் இல்ல. பார்த்துக்கலாம். நீ போ. கிருஷ்ணாவை கொஞ்சம் பாரு. நான் ஒரு அரைமணி நேரம் படுத்துட்டு இருக்கேன். தலைவலிக்குது” என்றவள் தங்கையை அனுப்பி விட்டு கட்டிலில் சரிந்தாள்.

வெள்ளந்தியாக பேசிச் செல்லும் தங்கையை நினைத்து தான் கவலையாக இருந்தது அவளுக்கு.

செல்வாவின் அண்ணன் மனைவி தான் தமிழினி. அவள் கணவன் அருள்குமரன். அன்பான கணவன் தான். இதுவரையும் பெற்றவர்களை கூட பெரிதாக தேடாதபடி, தமிழினியைத் தாங்கி கொள்பவன் தான்.

ஆனால், அதற்காக கூட கணவன் கேட்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழினிக்கும் தன் கணவன் மீது பைத்தியம் என்றே சொல்லலாம். அவனுக்காகவே அவன் வீட்டில் இருக்கும் அத்தனை உறவுகளும் நிரம்ப பிடிக்கும் அவளுக்கு.

“அண்ணி அண்ணி” என்று அழைத்தபடி சுற்றி வரும் செல்வாவையும் பிடிக்கும். அவனது திருமணம் நின்று போனதில் அவளுக்கும் மிகுந்த வருத்தம் தான்.

எதையாவது செய்து, நடந்து போன நிகழ்வுகளை மாற்றிவிட வேண்டும் என்ற ஆவல் அவளுக்கும் இருந்தது. ஆனால், அதற்காக தன் தங்கையின் வாழ்வை கேட்க முடியாதே.

இனியாவின் வாழ்க்கை முறையையும், அவளது கனவுகளையும் தெளிவாக தெரிந்தவள் தமிழ். அவளின் படிப்பு அதைக் கொண்டு அவள் தீட்டியிருந்த திட்டங்கள் என்று அத்தனையும் அறிந்தவள் அவள். அவளே எப்படி அதையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்வாள்.

கணவன் அவளிடம் தன் விருப்பத்தை கூறியபோதே, “இது சரியா வராதுங்க” என்றுவிட்டாள்.

“ஏன் சரியா வராது? என் தம்பி இனியாவை நல்லா வச்சுக்க மாட்டானா?”

“அதெல்லாம் அடுத்த விஷயம். முதல் விஷயம் இனியாழ். அவளுக்கு இது பிடிக்காது. அவ படிப்பை முடிச்சு வேலைக்கு போகணும்னு அவளுக்கு ஆசை. இந்த கல்யாணமெல்லாம் அவ யோசிச்சே இருக்கமாட்டா”

“அவளுக்கு கல்யாணமே பண்ணாம இருப்பாங்களா மாமா. எப்படியும் ஒருநாள் கல்யாணம் பண்ணித்தானே ஆகணும். அது இப்போ நடக்கட்டுமே. நீ ஒருமுறை மாமாகிட்ட பேசிப்பாரு” என்று அருள் தீவிரமாக கூற,

“என்னால முடியாதுங்க. நான் அப்பாவை தர்மசங்கடத்துல மாட்டி வைக்கமாட்டேன்” என்று முடிவாக கூறிவிட்டாள் தமிழ்.

“நான் இதை எதிர்பார்த்து இருக்கணும் தமிழ். என்ன இருந்தாலும், செல்வா என் தம்பி தானே?” என்று அருள் பேசிவிட,

“செல்வா என்னைக்கும் எனக்கும் தம்பி தான். நான் அவரை பிரிச்சுப் பார்த்ததே இல்ல. ஆனா, இது இனியாழ் வாழ்க்கை. இதை அவதான் முடிவு பண்ணனும். நான் அவளை கட்டாயப்படுத்த முடியாது”

“அதையாவது கேட்டு பார்க்கலாம் தானே”

“அவ விருப்பம் என்னனு தான் நானே சொல்றேனே. நிச்சயமா தெரிஞ்ச ஒரு விஷயத்தை எதுக்காக நான் அவகிட்ட கேட்கணும்? அப்படியே நீங்க கேட்டாலும் கூட, அவ மறுத்துப் பேசுவாளா? நமக்காக, அப்பா அம்மாக்காகன்னு யோசிப்பா. அதுவும் ஒருவிதத்துல கட்டாயம் தானே. உங்களுக்கு இதுதான் வேணுமா? அவளுக்கு நீங்க இதைத்தான் செய்ய போறீங்களா.” என்று சண்டையிட்டாள் தமிழினி.

“நீ செல்வாவை யோசிக்க மாட்ட இல்ல தமிழ்.”

“நான் ரெண்டு பேரையும் யோசிச்சு தான் பேசறேன்ங்க. உங்களுக்குதான் புரியல. பொறுமையா யோசிங்க” என்றவளைப் பார்த்து வெற்றுப் புன்னகை சிந்தியவன், அவளிடம் அதற்குமேல் எதையும் பேசாமல் கிளம்பியிருந்தான்.

அடுத்த இரண்டு நாட்களும் இதுவே தொடர, “நான் அம்மா வீட்டுக்கு போகணும். இனியாழ் ஊர்ல இருந்து வந்திருக்கா. ஒரு ரெண்டு நாளைக்கு அவளோட இருந்துட்டு வரேன்.” என்று மனைவியைக் கணவன் ஆவலாக பார்க்க, மனைவி மறுப்பாக தலையசைத்தாள்.

அதில் கோபம் கொண்டவன் மனைவியை அழைத்து வந்து அவளது தாய் வீட்டில் விட்டு கிளம்பியிருந்தான். இதோ வந்து ஓர்நாள் முடிந்து இருக்க, இதுவரையும் ஒரு முறை கூட மனைவியை அழைக்கவில்லை அவன். மணிக்கு ஒருமுறை அலைபேசியில் அழைப்பவன், நாள் முழுவதும் அழைக்கவே இல்லை என்பது அவளை சுணங்கச் செய்தாலும், தமிழினி அவள் நிலையில் இருந்து மாறவில்லை.

மேலும் இரண்டு நாட்கள் இப்படியே கழிந்திருக்க, மனைவியிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்ட அருள்குமரன் தனது மாமனார் தணிகாச்சலத்தை சந்திக்க வந்திருந்தான். மனிதர் வயலில் இருக்க, அங்கேயே வைத்து அவரைப் பிடித்திருந்தான் அருள்.

அவனையும் குற்றம் சொல்லிவிட முடியாது. எப்படியாவது தம்பியின் வாழ்வை சீர்படுத்தி ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன்.

நேற்று இரவில் அழைத்த அவன் தங்கை, அவனிடம் சில விஷயங்களை கூறியிருக்க, அதுவேறு அவனை நிலையில்லாமல் அலைய வைத்தது.

ஓடிப்போனவள் வீடு வந்து சேர்ந்துவிட்டதாக தங்கை கூறியிருக்க, தங்கையின் புகுந்த வீட்டை நினைத்து ஆத்திரம் தான். ஆனாலும், தங்கையின் வாழ்வை எண்ணி நிதானத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறான் அருள்.

இதுவே அவன் ஊரில் வைத்து நடந்திருந்தால், மொத்த குடும்பத்தையும் இழுத்து வந்து பஞ்சாயத்தில் நிறுத்தி இருப்பான். தன் தங்கையின் முகத்திற்காக என்று அவன் பொறுத்திருக்க, ‘அவளை கூட்டிட்டு வந்து அங்கேயே வைப்பாங்களா’ என்று இன்னும் ஆத்திரம்.

இதற்குமேல் அந்த பெண்ணால், தன் தம்பிக்கோ, தங்கைக்கோ எந்த சிக்கலும் வரக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டான் அண்ணன்.

இதுவரை தங்கையின் கணவர் அவனிடம் ஒருவார்த்தைக்கூட பேசவில்லை என்பதும் மனதின் ஓரம் இருக்க, நேற்றிரவு தங்கையிடமும் அவனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தான். அவளும் அதுதான் சரி என்றிருக்க, முடிவெடுத்தவனாக மாமனாரைத் தேடி வந்திருந்தான் அருள்.

தணிகாசலம் மருமகனை மரியாதையாக வரவேற்று அமர வைத்து, இளநீர் கொண்டு வந்து கொடுத்து, அதன்பின்பே ‘என்ன விஷயம்’ என்பது போல் அவன் முகம் பார்த்தார்.

அவரின் பார்வையில், “ஏன் வீட்டுக்கு வரலன்னு கேட்கறீங்களா மாமா?” என,

“என்னவோ பேசணும்னு வந்திருக்கீங்க மருமகனே. இல்லன்னா, என்னை இங்கே பிடிச்சு இருப்பீங்களா” என்று மென்மையாக சிரித்தவர், “சொல்லுங்க மாப்பிள்ளை” என்றுவிட,

வீட்டில் நடந்து கொண்டிருக்கும் அத்தனை விஷயங்களையும் ஒன்றுவிடாமல் அவரிடம் கூறிவிட்டான் அருள். ஆதி முதல் அந்தம் வரை அத்தனையும் கேட்டுக் கொண்டவர், “அது சரியா வராதே மாப்பிள்ளை. கல்யாணம் வேண்டாம்னு முறிச்சதுக்கு பிறகு, ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருக்கிறது சரியில்லையே. நீங்க தம்பியை இங்கே அழைச்சுக்க வேண்டியது தானே. இங்கே நாமெல்லாம் இருக்கோமே. இங்கேயே நம்ம வழியில ஏதாவது ஒரு வரன் பார்த்து முடிச்சுடுவோம். சூட்டோட இதெல்லாம் முடிச்சுடனும் மாப்பிளை” என்றார் அப்பாவியாக.

“நானும் அந்த விஷயமா தான் மாமா உங்ககிட்ட வந்தேன்… உங்களுக்கு எங்க குடும்பத்தை பத்தி நல்லா தெரியும். அதோட எங்க மேல உங்களுக்கு இருக்க பாசமும் எனக்கு தெரியும். அந்த உரிமையில கேட்கிறேன். இனியாழை என் தம்பிக்கு கொடுங்க மாமா” என்றுவிட்டவன் அவர் கைகளை பிடித்துக் கொண்டான்.

“மாப்பிளை” என்றவர் பேச்சு வராமல் நிற்க,

“நம்ம வீட்டுக்கும் நான் மூத்த மகன் தான் மாமா. நிச்சயமா இனியாழுக்கும் நான் நல்லது தான் நினைக்கிறேன். வெளியே யாருக்கும் நீங்க கட்டிக் கொடுத்தாலும், அத்தனையும் மகனா நின்னு நான் செய்வேன்தான். ஆனா, வெளியே கொடுக்கறதுக்கு என் தம்பிக்கு கொடுங்க ன்னு தான் கேட்கிறேன்” என்று பதில் பேச முடியாதபடி பேசினான் அருள்.

“எனக்கு உங்களைத் தெரியாதா மாப்பிள்ளை. நீங்க சொன்னாலும், சொல்லாட்டாலும் நீங்க எனக்கு மகன் தான். ஒருநாளும் நீங்க வேறன்னு நினைக்க விட்டதே இல்லை என்னை.” என்று நெகிழ்ந்தாலும், “சின்னவ என்ன நினைக்கிறான்னு தெரியணும் இல்ல மாப்பிள்ளை. வாழப்போறது அவ தானே. நாம பேசி ஒன்னும் செய்ய முடியாதே.” என்றார் தணிகாச்சலம்.

“கண்டிப்பா மாமா. இனியாழை கேட்காம எதுவும் முடிவெடுக்க வேண்டாம். ஆனா, அவகிட்ட எனக்காக நீங்க ஒருவார்த்தை பேசிப் பாருங்களேன். இனியாழ் நிச்சயமா நம்ம பேச்சை மறுக்கமாட்டா மாமா” என்றான் மருமகன்.

தணிகாச்சலத்திற்கு அவன் பேச்சு சரியாகப்பட, அன்று இரவே மகளிடம் பேசுவதாக வாக்கு கொடுத்தார் அவர்.