அரை மணிநேரத்திற்கு மேலாகியும் வெளியே சத்தமில்லாமல் இருக்க, போய்ட்டானா? இவன் தம்பி இவனோடு தன்னை இணைத்து பேசியிருக்கிறான், சொந்தபந்தங்கள் தெருவில் வசிப்பவர்கள் என அனைவருக்கும் தெரிந்து தன் பெயருக்கு கலங்கம் வந்துருக்கிறது என அனைத்தும் தெரிந்தாகிவிட்டது.

   ஆறுதல் சொன்னதும் இவன் வேலை முடிந்துவிட்டதா? இவனின் ஆறுதல் தனக்கு வந்த அவப்பெயரை மாற்றிடுமா? என மனதோடு வெம்பினாள் ஷிவன்யா.

    குருவிற்கு நிச்சயம் ஆகாமலிருந்திருந்தால் இதை ஒரு பொருட்டாகவே எடுத்திருக்கமாட்டாள் ஷிவன்யா. 

    ஒருமுறை பார்த்தால் ஓராயிரம் முறை பார்த்தைபோல் திருப்தியடைபவளுக்கு, இவன் இன்னொருவள் உடைமையானபோதும் மனதை விட்டு அகலாமல் இம்சை செய்துகொண்டிருக்க, எதற்கு இந்த திடீர் தரிசனம்? இந்நிகழ்வு எத்தனை நாளுக்கு வாட்டுமோ என மனதோடு வெம்பினாள் ஷிவன்யா. 

                                  2

    குருபிரசாத் வீட்டிற்கு வர.. சேதுராமன்.. “குரு. என மகனின் கைப்பிடிக்கப்போக, “எங்க அந்த பொறுக்கி.? என கண்களை சுழற்றியவன்..

    ஹாலில் அவன் விளையாடும் ஷட்டில் பேட்டை எடுத்துக்கொண்டு கோபத்தோடு நவீனறைக்கு செல்ல.. மகனை பொறுக்கி என்றதும் கோபமடைந்த புஷ்பா.  “வளர்ந்த பிள்ளையை அடிக்க கிளம்புற அளவுக்கு அப்படியென்ன கோபம் குரு.? என்றார் கோபமாக.

     “நகருங்க. என புஷ்பாவை விலக்கி நவீனறைக்குள் செல்ல அங்கே நவீன் இல்லை.  “இன்னும் பத்து நிமிஷத்துல நவீன் என் முன்ன வந்தாகனும். இல்ல.. நான் வீட்டைவிட்டு நிரந்தரமா வெளில போய்டுவேன். என்றான்.

     “இப்போ என்ன நடந்ததுனு இவ்வளோ பெரிய வார்த்தை பேசுற குரு? எனப் புஷ்பா பதற.. “என்னையும் ஷிவன்யாவையும் சேர்த்துவச்சி தப்பா பேசியிருக்கான். என்றான் ஆத்திரத்தோடு.

     “அச்சோ.. அப்படியில்ல குரு.. அவளுங்க மாத்தி சொல்லியிருக்காளுங்க, சாப்பாடு விசயம் எங்கப்பாகிட்ட பேசாம எதுக்கு எங்கண்ணன்கிட்ட பேசுறிங்கனு மட்டும்தான் நவீன் கேட்டானாம். அவதான் எதேதோ பேசி அவ பேரை அவளே கெடுத்துக்கிட்டாளாம். அவ வாயைப்பத்தி நமக்கு தெரியாதா என்ன? என்றார் மகனுக்கு ஆதரவாக.  

    “ஓ.. அப்படியா? நீங்க பக்கத்துல இருந்து பார்த்திங்களா? என குரு முறைக்க.. “உண்மையா இதான் நடந்ததாம் குரு, அவனே என்கிட்ட சொன்னான். என்றார் புஷ்பா.

     தனக்கு பொண்ணு கொடுப்பதே பெரிய விசயம் என்பதுபோல் செளந்தர் பேசியது தற்போதுதான் நினைவு வர.. “இதை வச்சிதான் உங்கண்ணன் என்னை தப்பா பேசினாரா? நீங்கதான் உங்கண்ணன்கிட்ட குரு இப்படிப்பட்டவனு சொன்னிங்களா..?    

     “நான் போய் உன்னை தப்பா நினைப்பேனா குரு? என புஷ்பா தவிப்போடு கேட்க.. “பையன் தப்பு செய்தாலும் தெரியாது. பொண்ணு ஒழுங்கா படிக்கறாளானும் தெரியாது. உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் என்னை கன்வின்ஸ் பண்றது மட்டும்தான். என கடுப்பாக சொல்ல அங்கே நவீன் வந்தான்.

    மின்னலாய் நவீனிடம் சென்றவன் கன்னத்தில் அறைந்து, உதைக்க.. “அண்ணா மேல கை வைக்கிற வேலை வச்சிக்காதிங்க என நவீன் கோபத்தோடு தடுக்க, “கை வச்சா என்னடா செய்வ? என கண்மண்தெரியாமல் அடிக்க, முதல் அடி முகத்தில் என்பதால் உண்மையில் நவீனால் சுதாரிக்க முடியவில்லை.

    நவீன் கீழுதட்டில் ரத்தம் வரவும் அடிப்பதை நிறுத்தியவன்.. “தேடிப்போய் அவங்களை அசிங்கப்படுத்துற அளவுக்கு உன்னை என்னடா செய்தாங்க அவங்க.? என்றான் கோபத்தோடு.

     ஓ.. இதானா விசயம்? என்பதுபோல் நவீன் அலட்சியமாய் பார்க்க, “பொண்ணுங்ககிட்ட போய் உன் வீரத்தை காட்டியிருக்கியே? ஆம்பிளையாடா நீ? என மீண்டும் அடிக்கப்போக குறுக்கே வந்தார் புஷ்பா.

     “வேண்டாம் குரு. என்னைக்கானாலும் அண்ணன் தம்பி பாசம் விட்டுப்போகாது, அந்த சிறுக்கி பேச்சை கேட்டுட்டு நவீனை வெறுக்காத. என்றார் கெஞ்சலாக.

    பொய் அன்பு காட்டுறதை சாகற வரைக்கும் நிறுத்தமாட்டாங்க என மனதில் கடிந்தவன்.. இத்தனை நேரம் அமைதியாய் அமர்ந்திருந்த சேதுராமனிடம்.. “நீங்க இப்படி இருப்பிங்கனு நான் நினைச்சே பார்க்கலப்பா. என்று கண்கலங்க.. “குரு.. என சேதுராமன் தடுமாற.. 

   “அன்னைக்கு மால்ல மிருது பேரு வெளில வரக்கூடாதுனு அந்த தவி தவிச்சிங்களே.. உங்க பொண்ணுனா வலிக்கும்..  லதாம்மா பொண்ணுக்குனா வலிக்காது.. ஆமாவா ப்பா? என்றான் குற்றப்பார்வையோடு. 

     “அப்படியில்ல குரு ஷிவாவும் என் பொண்ணுமாதிரிதான்..  நானே நல்ல பையனா பார்க்கப்போறேன். என சேதுராமன் உறுதியோடு சொல்ல..

   “அவங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க யாரு? நீங்க சொல்ற மாப்பிள்ளையை கட்டிக்கனும்னு ஷிவாக்கு என்னயிருக்கு?என எரிச்சலோடு கேட்க.. சேதுராம் தலைகவிழ்ந்தார்.

     “யார் தயவுமில்லாம இத்தனை வருசம் உழைச்சி சாப்பிட்டவங்களுக்கு மாப்பிள்ளை பார்க்க தெரியாதா? எனக்கு தேவையானது.. ஷிவன்யா பேரையும், என் பேரையும் டேமேஜ் பண்ணின நவீனை எப்படி தண்டிக்கப்போறிங்கன்றதுதான்.. என்றான் கோபத்தோடு.     

    “குரு நவீன் லதாம்மா வீட்டுக்கு போனது எனக்கு தெரியாது, நடந்து முடிஞ்சதுக்கப்புறம் பேசினா இன்னும்தான் தப்பா பேசுவாங்க, அது ஷிவாவோட கல்யாண வாழ்க்கையை பாதிக்கும்னுதான் வேற வழியில்லாம அமைதியா இருந்துட்டேன், இனி அவங்க விசயத்துல தலையிட்டா மால் பக்கமே வரக்கூடாதுனு நவீனை மிரட்டியிருக்கேன், இனி அப்படி நடக்கமாட்டான். என்றார் சேதுராமன்.        

     “இனி அப்படி நடக்கமாட்டான்றது அப்புறம் பார்க்கலாம்.. முதல்ல நடந்த விசயத்துக்கு ஷிவா குடும்பத்துல இருக்க அத்தனை பேர்க்கிட்டயும் இவனை மன்னிப்பு கேட்க சொல்லுங்க. என்றான் நவீனை முறைத்தபடி.   

     “ஏன்? நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்? என் தங்கச்சியை கையை புடிச்சி முறுக்கினாளே.. அதுக்கு அவ மன்னிப்பு கேட்டாளா? என்றான் திமிறாக.

     “அவ.. இவன்ன.. செருப்பு பிஞ்சிடும். என குரு.. கோபத்தோடு எச்சரிக்க.. 

     “அப்பா.. உங்க முன்னாடியே என்னை இந்த அடி அடிக்கிறார், வேலைக்காரிக்கு மரியாதை கொடுக்கனும்னு அசிங்கமா திட்டுறார், எல்லாம் கேட்டுட்டு நீங்களும் அமைதியா இருக்கிங்க. இனி இந்த வீட்டுல என்னால இருக்க முடியாது. சொத்தை பிரிச்சி கொடுங்க. என் வழியை நான் பார்த்துக்கிறேன். என்றான் நவீன். 

    அண்ணன் மகளை திருமணம் செய்ய மாட்டேன் என குரு சொல்லியிருக்க, வில்லங்கமாய் எவளாவது வந்துவிட்டால் நம் நிலைமை என்னாவது என யோசித்த புஷ்பா.. “குரு கல்யாணம் முடியாம சொத்து பிரிக்க கூடாதுங்க. என்றார். 

     உழைக்கும் அளவிற்கு உடல் நலமோடு இருக்கும்போதே பிள்ளைகள் சொத்து பிரிப்பதைப்பற்றி பேசுவதை கேட்பதுபோல் வேறொரு துன்பம் ஒரு தந்தைக்கு இருக்காது என்று வேதனையடைந்த சேதுராமன் தலையை பிடித்தபடி தளர்வாய் சோபாவில் அமர.. “அப்பா.. எங்கம்மா வீடு லதாம்மா வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளிதான இருக்கு? அந்த வீட்டு சாவியை கொடுங்க. என்றான் குருபிரசாத். 

      “அச்சோ.. இவன் சென்றுவிட்டால் கணவனை சமாளிக்க தன்னால் முடியாதே எனப்பதறிய புஷ்பா.. “இப்போ என்ன ஆச்சுனு இப்படி பட்டுபட்டுனு முடிவெடுக்குற குரு? உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியுமா? என கண்ணீர் வடித்தார்.   

     “ஷிவன்யாதான் உங்களுக்கு ஆகாதவ, நானும் அப்படியா சித்தி? என்றான் இவனும் பொய் பாசத்தோடு.

     “என்ன குரு இப்படி கேட்குற? என புஷ்பா குரலிறங்க.. 

     “நானும் நவீனும் உங்களுக்கு ஒன்னுதான்றது உண்மைனா, என்கிட்டயும் ஷிவன்யாகிட்டயும் நவீன் மன்னிப்பு கேட்டாகனும். இது நடக்குற வரைக்கும் இந்த வீட்டு பக்கம் நான் வரப்போறதில்ல. என தனதறைக்கு சென்று பத்து நிமிடத்தில் ஒரு பிரீப்கேஸோடு வந்தவன்.. “அப்பா சாவி கொடுக்குறிங்களா? இல்ல பூட்டை உடைச்சிட்டு வேற வாங்கிக்கவா? என்றான் முடிவாக.

    “குரு.. நீ வீட்டை விட்டு போனா பார்க்குறவங்க என்னடா நினைப்பாங்க? நான் நவீன்கிட்ட பேசுறேன்.. நீ உள்ள போ. என்றார் மன்றாடலாக.

     “நான் வீட்டை விட்டு போறதுக்கு காரணம் நவீன் மட்டுமில்லப்பா. நீங்களும்தான். என்றான் குரு.

     சேது.. “நானா? உழைக்கிறதைத் தவிர நான் வேற என்ன தப்பு பண்ணினேன்? என்றார் அதிர்ச்சியோடு.

     “என் சம்மதப்பட்ட விசயம் என்கிட்ட சொல்லாம விட்டதே பெரிய தப்புப்பா.. அதைவிட பெரிய தப்பு பாதிக்கப்பட்டவங்களை அம்போனு விட்டது. எனக்கு உங்ககிட்ட சரிக்கு சமமா ஆர்கியூ பண்ணவும் பிடிக்கல.. அட்வைஸ் பண்ணவும் பிடிக்கல. 

    மொத்த குடும்பமும் சுயநலமா யோசிக்கும்போது,  என்னால இனி இங்க இருக்க முடியாது. எனக்கு தனிமை தேவை.. எங்கம்மா வீட்டு சாவியை கொடுங்க. என இம்முறை உரிமையாகவும், பிடிவாதமாகவும் கேட்டான்.  

    குருவிடம் நான் மறைத்திருக்க கூடாது என சேதுவிற்கு தற்போதுதான் ஞானம் பிறக்க.. “இந்த ஒருமுறை.. எனும்போதே..

     “இப்போ கூட நவீனை மன்னிப்பு கேட்க சொல்றேனு உங்களால சொல்ல முடியலையேப்பா? இவங்களை விட நீங்கதான்ப்பா சுயநலத்தின் உச்சம். என கோபத்தோடு வீட்டை விட்டு வெளியேறினான் குருபிரசாத்.  

     “அடப்பாவி.. ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டா என்னாகிடுவ? என நவீனை அவனறைக்கு இழுத்து சென்ற புஷ்பா.. “அந்த முட்டைக்கன்னி வேலைக்கு வரும்போதே, மூக்கும் முழியுமா இருக்காளே, குருவை வளைச்சிப் போட்டுடுவாளோனு பயந்துட்டிருந்தேன்.. 

      படாத பாடுபட்டு ஜீவிதாவை கட்டிக்க சம்மதிக்க வச்சி, காரியம் கை கூடும்போது இப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்துட்டு வந்துட்டியேடா.. என தனக்குத்தானே தலையில் அடித்துக்கொண்டு..

     “இப்போ அந்த லதா வீட்டுக்கு பக்கத்துலயே குடிபோக கிளம்பிட்டானே.. இனி என்னடா செய்யிறது? அவளேது குருவுக்கு பொண்டாட்டி ஆகிட்டா நாம நடுத்தெருவுலதான் நிக்கனும்..

     நீ என்ன செய்வியோ.. யார் கால்ல விழுவியோ.. எனக்கு தெரியாது.. இன்னும் இரண்டு நாள்ல குரு வீட்டுக்கு வந்தாகனும். என கட்டளையிட்டார் நவீனுக்கு.    

    “அவகிட்டல்லாம் என்னால மன்னிப்பு கேட்க முடியாதும்மா.. இத்தனை அடி வாங்கினதுக்கப்புறம் அண்ணன்கிட்ட மன்னிப்பு கேட்குறதுக்கே வாய்ப்பில்ல.. அவகிட்ட கேட்க சான்சே இல்ல.. என உறுதியாய் மறுத்தான் நவின்.