காந்தமாய் நீ.. காதலாய் நான்..

      அத்தியாயம் .. 10

     ஷிவன்யாவின் போடா என்ற சொல்லில் பதறிய தன்யா..“ஹே ஷிவா.. எனப் பதற.. தன்யாவை முறைத்தாள் ஷிவன்யா.

     ஷிவன்யாவின் மரியாதையற்ற பேச்சில் கோபம் வந்தபோதும்.. “லதாம்மாக்கு என்னாச்சு? சுதர்சனத்தால எதாவது பிரச்சனை வந்தா சொல்லனும்னு சொல்லிட்டுதான போனேன்? ஏன் சொல்லலை? என கத்தினான் உரிமையாக.

    ஷிவன்யா.. “இங்க யாரும் பச்ச குழந்தைங்க இல்ல, எங்க பிரச்சனையை நாங்க பார்த்துப்போம்.. நீங்க கிளம்பலாம். என்றாள் கட்டளையாக.

    ஷிவன்யாவின் பேச்சை புறக்கணித்து.. “அம்மாக்கு என்னாச்சும்மா? என கெஞ்சலாய் கேட்டான் தன்யாவிடம். 

    “ஒன்னும் ஆகல, எல்லாம் அபி பார்த்துக்கிட்டார்.. அம்மா சரியா தூங்கறதேயில்ல, இன்னைக்குத்தான் அசந்து தூங்கிட்டிருக்காங்க, சத்தம் வேண்டாமே ப்ளீஸ். என்றாள்.

   “ஊஃப்… தேங்க் காட்.. வீட்லதான் இருக்காங்களா. என நிம்மதியானவன்.. “தூங்கி எழட்டும், லதாம்மா எழுந்ததும் பார்த்துட்டு போறேன். என அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் குருபிரசாத்.

    “நீங்க இங்க இருக்குறது எங்களுக்கு இன்னும்தான் பிரச்சனையை அதிகப்படுத்தும்.. ப்ளீஸ் கிளம்புங்கண்ணா. என்றாள் தன்யா.

    ஷிவன்யா.. “யாரு.. யாருக்கு அண்ணன்? என தன்யாவை தீயாய் முறைக்க.. லதா வெளியே வந்தார்.

     “லதாம்மா.. என லதா அருகே செல்ல, “இங்க எதுக்கு தம்பி வந்திங்க? என்றார் இறுகிய முகத்தோடு.

    “என்னை அவாய்ட் பண்றிங்களா லதாம்மா? என்றான் வேதனையாக.

    “அந்த சூழல்ல நானிருக்கேன், நீங்க கிளம்புங்க தம்பி. என தலைகுனிந்தார் லதா.

     “லதாம்மா.. என்னாச்சு உங்களுக்கு? என்க.. ஷிவன்யா.. “முதல்ல இந்த லதாம்மானு சொல்றதை நிறுத்துறிங்க.. என்றாள் கோபமாக.

    ஷிவன்யாவை விடுத்து.. லதாவிடம்.. “எனக்கு விபரமறிஞ்ச நாள்லயிருந்து உங்களை மட்டும்தான லதாம்மானு கூப்பிடுவேன்.. கூப்பிடறது மட்டுமில்ல, உண்மையா அம்மாவாதான் நினைக்கிறேன்னு உங்களுக்கு தெரியும்தான லதாம்மா.?” என  

   “நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்.. அவளை உள்ள போக சொல்லுங்க.. என ஷிவன்யாவை முறைத்தவாறே சொல்லி..

     லதாவிடம்.. “எதுக்கு அரெஸ்ட் பண்ணாங்க? யாரால பிரச்சனை வந்த்து? கேஸ் ஃபைல் செய்துட்டாங்களா லதாம்மா? போலீ எதாவது டாரச்சர் கொடுத்தாங்களா? என்றான் கவலையாக.

    இவனின் அக்கறை எரிச்சலை கொடுக்க, ஷிவன்யா.. “அம்மா நீ உள்ள போ. என்றாள் கட்டளையாக.

    “ஏய்.. சின்னபொண்ணாச்சேனு அமைதியா இருக்கேன், ஓவரா பேசின.. அவ்வளோதான் பார்த்துக்க. என குரு மிரட்ட.. 

    “தம்பி.. நாங்க உசிரோட இருக்கனுமா வேணாமா? என்றார் வேதனையாக.

    “என்ன சொல்றிங்க லதாம்மா? நான் இங்க வந்தா நீங்க உசிரோட இருக்கமாட்டிங்களா? என்றான் வேதனையாக.

    இவனோடு இணைத்து பேசியதை அன்னை சொல்லிடுவாங்களோ, அதனால் பரிதாபம் கொண்டு, மன்னிப்பு வேண்டி, தனக்கு மாப்பிள்ளை பார்க்க கிளம்பிடுவானோ? யாருக்கு வேண்டும் இவனின் பரிதாபம்? எப்படியாவது இவனை அனுப்பியாக வேண்டும்.. இனி எப்பொழுதும் இங்கு வராதபடி பேசி அனுப்பவேண்டும் என முடிவெடுத்தவள்..

    “எங்கக்கா கல்யாணத்துக்கு எங்கம்மா உங்களை அழைச்சாங்கதானே? ஏன் வரல? என்றாள் அவனின் கண்பார்த்து.

     என்னை துரத்தனும்ங்கிறதுக்காக எப்போ நடந்ததை இப்போ இழுக்குறா.. இவளுக்கு எதுக்கு என்மேல இவ்வளோ கோபம்? என்ன செய்துட்டேன் இவளை? என நினைத்தபடி ஷிவன்யாவை முறைக்க.. 

    அவனின் முறைப்பை அலட்சியப்படுத்தியவள்.. “லதாம்மா முக்கியம்ன்றதுக்காக, அவங்க பிள்ளைங்களும் முக்கியமா இருக்கனும்னு அவசியமில்லதான்.. அதனால எங்கக்கா கல்யாணத்துக்கு வராததை கூட விட்டுடறேன்..

     உங்களுக்கு நிச்சயம் ஆனதுதானே? அதுக்கு ஏன் கூப்பிடல? உங்க லதா…ம்மாவை. என நக்கலோடு ராகமிழுத்தாள் குற்றப்பார்வையோடு.

    இவகிட்ட எப்படி சொல்லி புரிய வைக்கிறது என குரு தடுமாற.. “அம்மான்ற மரியாதை மனசுல இருந்திருந்தா உங்க நிச்சயத்துக்கு சொல்லியிருப்பிங்க.. வேலைக்காரின்ற பிம்பம் மனசுல ஸ்ட்ராங்கா இருக்கப்போய்தான சொல்லலை? அப்புறம் எதுக்கு லதாம்மா லதாம்மானு நடிச்சிகிட்டு? என்றாள் கடுப்பாக.

    இவகிட்ட ஆர்க்யூ பண்ண இது நேரமில்லை என.. “ஓ.கே நான் சொல்லாதது தப்புதான். என ஒப்புக்கொண்டவன்.. லதாவிடம்.. “அதுக்காக உங்களுக்கு ஒரு பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லமாட்டிங்களா லதாம்மா. என்றான் உரிமையாக.

     நவீன் பேசியதை எடுத்துரைத்தால் குருவின் செயல்கள் எப்படியிருக்கும் என தெரியாது. ஆனால் நிச்சயம் தன் மகளுக்காக எதாவது செய்ய நினைப்பான், குரு இங்கு வந்தால் ஷிவன்யாவோடு இணைத்து பேசியது மேலும் வலுவாகும். 

    கணவனை இழந்து வாழ்வின் மிகக்கடினமான காலத்தின்போது தோள்கொடுத்த உயிர்தோழியை நினைத்து கண்கலங்கியவர்.. குருவிற்கு நிச்சயமாகியிருக்கும் நிலையில், பாக்கியம் மகனின் திருமணம் தன்னால் நின்றதாக இருக்க வேண்டாம்.. 

    ஷிவன்யா மனதிலும் வேறொருவன் இருக்க, நவீன் பேசியதை குருவிடம் எடுத்துரைத்தால் மேலும் மனமுடைவாள் என தன் மகளின் நலனையும் கருத்தில் கொண்டு..        

     சுதர்சனம் மிரட்டியதையும், அதற்கு ஷிவன்யாவின் வாதத்தையும் விளக்கி.. “அவன்தான் அரிசியை மாத்தி வைக்க ஏற்பாடு செய்துருக்கான். என்னை கூட்டிட்டு போனதும் தன்யா அபிக்கு கால் பண்ணி சொல்லியிருக்கா, மருமகன் ஒரு மணி நேரத்துல லாயரோட ஸ்டேஷன் வந்துட்டார்.

     வாந்தி, மயக்கம், உயிர்சேதம் ஏதும் இல்லைன்றதால  எஃப்பையார் ஃபைல் பண்ணல, ஃபோர்டிகோலயும், பின்கட்டுலயும் ஷிவன்யா கேமரா வச்சிருந்ததால நம்ம மேல எந்த தப்பும் இல்லனு அப்போவே தெளிவா நிரூபிச்சாச்சு. அன்னைக்கு சாயங்காலமே வீட்டுக்கு வந்துட்டேன், இப்போ எந்த பிரச்சனையும் இல்ல தம்பி. நான் நல்லாதான் இருக்கேன். நீங்க கிளம்புங்க. என்றார் தன்மையாக.

   பிரச்சனை பெரிதாகவில்லை என நிம்மதியடைந்தவன்.. “ஏன் லதாம்மா என்னை கிளப்புறதுலயே குறியா இருக்கிங்க? ஒரு டீ காபி கூட குடுக்க மாட்டிங்களா? என்றான் உரிமையாக.

    “தம்பி.. வயசு பிள்ளைங்க இருக்கிற இடம், நம்ம நல்லவிதமா பழகுனாலும் பார்க்கிறவங்க கண்ணுக்கு தப்பாதான் தெரியும். உங்களுக்கு கல்யாணமாகப்போகுது. எதுக்கு தேவையில்லாத பிரச்சனை.? என மீண்டும் பொறுமையாகவே எடுத்துரைத்தார்.

    குருவிற்கு கல்யாணமாகப் போகுது என்ற லதாவின் சொல்லை தாளமுடியாமல் விருட்டென தனதறைக்குள் புகுந்துகொண்டாள் ஷிவன்யா.  

    குரு.. “யார் என்ன சொல்லிடுவாங்க? என கோபம் கொள்ள.. அதற்குமேல் பொறுக்க முடியாமல்.. “உங்க தம்பி ஒருத்தன் போதாதா? உங்க லதாம்மா பொண்ணு உயிரோட இருக்கனும்னா தயவு செய்து இனி இங்க வராதிங்க. என வெடித்தாள் தன்யா. 

    “நவீனா? இங்க வந்தானா? என்ன சொன்னான்? என தன்யாவிடம் அதிர்ச்சியோடு வினவ.. “வேணாம் தனு. என லதா கண்கலங்க..  லதாம்மா அரஸ்ட் செய்ததை வைத்து ஏளனமாக எதையோ சொல்லியிருக்கிறான் என கணித்தவன்.. 

    “அவனெல்லாம் ஒரு ஆளா லதாம்மா? அவன் பேச்சுக்கெல்லாம் எதுக்கு இவ்வளோ முக்கியத்துவம் கொடுக்கிறிங்க? என தேற்ற..

   “ஏன்னா.. அவன் எங்கம்மாவை மட்டும் பேசல.. எனும்போதே மின்னலென அறையிலிருந்து வெளிவந்த ஷிவன்யா தன்யாவை தனதறைக்கு இழுத்து சென்று கதவடைக்க.. தற்போதுதான் எதோ பெரிதாய் நடந்திருக்கிறது என்றுணர்ந்தவன்..  

   “என்ன நடந்ததுனு முழுசா சொல்றவரைக்கும் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன். என்றான் பிடிவாதமாக.  

     “என்மேல கொஞ்சமாவது அபிப்பிராயம் இருந்தா தயவு செய்து கிளம்புங்க தம்பி.. என லதா கெஞ்சலாக சொல்ல..

    தன்னால் எதற்கு சிரமம் என்றும் நினைக்கிறார்கள், முக்கியமாக நவீனிற்கும் சித்திக்கும் பயந்து தன்னிடம் சொல்ல மறுக்கிறார்கள்.. என லதாவைப் பற்றி நன்றாக அறிந்தவனாதலால், சொல்லாமல் நகரமாட்டேன் என்ற தோரணையில் இன்னும் பிடிவாதமாக சோபாவில் அமர்ந்தான்.      

    லதா செய்வதறியாது தவிக்க.. குருவிற்கு சேதுராமனிமிருந்து அழைப்பு வந்தது. “ம்.. சொல்லுங்கப்பா. என்றான்.

    “எங்க இருக்க குரு?

    “இங்க லதாம்மா வீட்டுலப்பா.

    “லதா வீட்டுல இருக்குதா? என்றார் பதட்டமாக.

    லதாம்மாவை அரஸ்ட் செய்ததால் தந்தை பதறுகிறார் என.. “ஆமாம்ப்பா.. என்றவன், சுதர்சனத்தால் வந்த பிரச்சனையையும், அதை ஷிவன்யா எத்தனை தைரியமாக கையாண்டிருக்கிறாள் என்பதையும் பெருமையாக சொல்லி முடித்தவன்..

    “இன்னும் எதோ பெரிய விசயம் நடந்திருக்குப்பா, ஆனா என்கிட்ட சொல்லமாட்டுக்கிறாங்க, அது என்னனு அவங்களா சொல்ற வரைக்கும் இங்கதான் இருக்கப்போறேன்ப்பா. என இணைப்பை துண்டித்தான்.  

     குருவின் பிடிவாதம் அறிந்து, இதற்குமேல் மறைக்க முடியாதென மகனிற்கு அழைக்க.. குரு அழைப்பை ஏற்க.. அனைத்தும் சேதுராமன் வேதனையோடு சொல்லி முடிக்க.. குருவின் முகபாவனையிலேயே தன் மகளை இணைத்து பேசியதைதான் சொல்கிறார் என்றுணர்ந்த லதாவின் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்தது. 

    “உங்களுக்கு அன்னைக்கே தெரியுமாப்பா? என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.  

    “குரு.. என சேதுராமன் தடுமாற, இணைப்பை துண்டித்தவன்.. “மூனு லேடிஸ் இருந்தும் அவன் பல்லு அத்தனையும் உடைச்சி விடாம எதுக்கு லதாம்மா அழுதுட்டு இருக்கிங்க? என அதட்டி, ஷிவன்யா அறையருகே செல்ல, இவன் வரும் அரவம் கேட்டதும் கதவை தாழிட்டாள் ஷிவன்யா.

     “கதவை திற ஷிவா.. நீ எதுக்கு ஓடி ஒளியனும்? எனும்போதே இடையிட்டவள்.. “யாரை பார்த்தும் நான் ஒளியல, எனக்கு உங்களை பார்க்கவோ உங்க பரிதாபமோ தேவையில்ல.. தயவு செய்து கிளம்புங்க. என்றாள் கோபமாக.    

    சற்று நேரம் குரு அமைதியாக நின்றிருக்க.. “நவீன் ஷிவன்யாவை மட்டும் பேசல, தன்யாவையும் தெருவுல வச்சி ரொம்ப அசிங்கமா பேசியிருக்கான்.. என அதையும் விளக்கி.. “உங்களால முடிஞ்சா இனி இப்படி ஆகாதமாதிரி நவீனை அடக்கி வைங்க தம்பி.. மத்தபடி உங்க உதவி தேவையில்லை.

     தன்யா நிச்சயத்துல எல்லாரும் இதையே பேசினதால ஷிவா ரொம்பவும் நொந்துபோயிருக்கா, ஆறுதல்ன்ற பேர்ல அதையே திரும்ப பேசி அவளை ரணப்படுத்தாம கிளம்புங்க.. என்றார் லதா.  

    தன்னோடு இணைத்துப் பேசியிருக்க, தாம் இங்கு இருப்பது அதை நிரூபிப்பதுபோலாகும் என்பதால்தான் தன்னை கிளப்புவதில் குறியாய் இருக்கிறார்கள். இந்த நேரம் வாதம் செய்து லாபமில்லை, அவனால் ஏற்பட்ட கலங்கம் போக்க வழி செய்ய வேண்டும் என்றுணர்ந்து விருட்டென வெளியேறினான் குருபிரசாத்.   

     நவீனால் இத்தனை பிரச்சனை வந்தபோதும் குரு முகம் வாடி வெளியேறியது அத்தனை வேதனை கொடுத்தது லதாவிற்கு.   

    குருவோடு இப்படி பிரச்சனைகளையெல்லாம் லதா எதிர்பார்த்ததேயில்லை, குருவின் திருமணம் வரையாவது அவனிற்கு சமைத்து போடவேண்டும், உண்மை அன்போடு குருவை கவனிக்க ஆள் வந்துவிட்டால் அதற்குமேல் அவன் கவலை தன்னை வருந்தச்செய்யாது என நினைத்திருந்தவர் லதா.  

    ஆனால் தற்போது தன் வாயாலே இனி இங்கு வரவேணாம் என சொல்லும் நிலை வந்ததை எண்ணி தளர்ந்து அமர்ந்துவிட்டார்.