Advertisement

அத்தியாயம் 8

அடுத்த வாரத்தில் ஒரு நாள் , சாருமதி மேடம் படியில் இறங்கும் பொழுது , கால் புரண்டு விட , கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  மூன்று மாதம் கட்டாயம் ஓய்வு தேவையாக  இருக்க , அவர் விடுப்பு எடுத்தார் .

“இனி விக்ரம் ஸாரை அடிக்கடி பார்க்கலாம்.” என்றான் அர்ஜுன் . 

“என்ன? “என்று அனுவும் , இனியாவும் பார்க்க , 

“இரண்டு மூன்று புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிற்குத் தயாராக இருப்பதால், சாருமதி மேடத்திற்குப் பதிலாக விக்ரம் ஸார் பொறுப்பேற்றுக்குக் கொள்வார் என ஒரு டாக் ஓடுகிறது…” என்றான் அர்ஜுன் .

ஏன் பாஸ்?  விக்ரம் ஸார் தான் இந்த சேனல் முதலாளி .  அவர் ஏன் கிரியேடீவ் கெட்டாக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்? வேறு யாரையாவது நியமிக்கலாமே?” என இனியா மிகப் பெரிய சந்தேகத்தைதக் கேட்க ,

‘கிரியேடீவ் சைடில் வேலை செய்ய , விக்ரம் ஸாருக்கு ரொம்ப விருப்பம் , அதான் அவரே இறங்கி விடுவார் . பிஸியாக இருந்தால் மட்டுமே , தவிர்ப்பார். மேலும் ஒரு விதத்தில் நிகழ்ச்சியின் தரத்தையும் தீர்மானிப்பதற்காகத் தான் ”

“ஓ…!” என்று முடித்துக் கொண்டாள் இனியா .

அனைவரும் எதிர்பார்த்த மாதிரி விக்ரம் பொறுப்பேற்றுக் கொண்டான் . புதிய நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பினால் , சேனலே பயங்கர பிஸியாக இருந்தது. 

ஒரு வாரம் சென்றிருக்க விக்ரம் இவர்களின் படப்பிடிப்பு தளத்திற்கு வர , அவன் கண்கள் இனியாவை தேடியது , அறையின் ஓரத்தில் மேஜையில் தலை வைத்துப் படுத்திருந்தாள். 

யாரும் பார்ப்பதற்கு முன் பார்வையைத் திருப்பியவன் , பின் அர்ஜுனிடம் , படப்பிடிப்பு நிலவரத்தைக் கேட்டுக் கொண்டு நகர்ந்தான்.

சிறிது நேரம் கழித்து விக்ரமிற்கு ஏனோ மனம் உந்த , மீண்டும் அதே தளத்திற்குச் சென்றான் , அவர்கள் இருந்த அறையைக் கடக்கும் பொழுது  உள்ளே பார்த்தான். 

இனியா சற்று சோர்வுடன் , ஆனால் மெல்லிய புன்னகையுடன் கையில் காபியுடன் இருக்க , அவள் அருகில்  உதவியாளர் ராஜேஷ் இருந்தான் , அந்த இடமே ஒரே கேலியும் கிண்டலுமாக இருந்தது. 

அங்கிருந்த சூழ்நிலை பார்த்து என்ன நடந்திற்கும் என யூகித்துக் கொண்டான் . பின் அங்கு இருந்து நகர்ந்தான் விக்ரம் .

“எங்களுக்கு தலைவலி வந்தபோது காபி கொண்டு வந்தாயா?  இனியாவிற்கு மட்டும் என்ன  ஸ்பெஷல் கவனிப்பு?” என அர்ஜுன்  ராஜேஷிடம் வம்பு செய்ய , 

“ராஜேஷ் என்ன சொல்வது…” என்று தெரியாமல் சிரித்து வைக்க,

அவனைக் காப்பாற்றும் விதமாக உள்ளே புகுந்த வசந்த் ,” நீ போனவாரம் அனுக்கு உடம்பு சரியில்லாத போது பயங்கரமாகக் கவனித்தாயே…. , நாங்கள் ஏதாவது கேட்டோமா?” எனக் கலாய்க்க , 

இனியா ஹைபை செய்தாள் . அந்த இடமே கலகலத்தது .

அடுத்தடுத்த நாட்களில் இனியா பிஸியானாள் . தொடர்ந்து படப்பிடிப்பு இருந்தது , ஒரே நல்ல விசயம் , குழந்தைகள் நிகழ்ச்சி என்பதாலும் , பிரபலங்கள் யாரும் இல்லாததாலும்  காலையிலே படப்பிடிப்பு இருந்தது , அவளும் அலுவலக வேலைக்குச் செல்வது போல் சுகமாக வந்து போய்க் கொண்டிருந்தாள்

இவள் ஷோ ஒளிபரப்பான முதல் நாள் , அவள்  குடும்பமே டிவி முன்னால் குழுமியிருந்தனர்.  அனைவரும் ரசித்துப் பார்த்தனர் . இனியா குழந்தைகளிடம் மொக்கை வாங்கும்போது , காவியா ஓட்டித் தள்ளினாள் .

இனியா சிணுங்கியபடி , அப்பாவைப் பார்க்க ,   

“உன்னுடைய கனவு, ஆசை அதற்கு நீ போட்ட உழைப்பு எல்லாம் உன் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது நன்றாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள் குட்டிம்மா….. “என்றார் கார்த்திகேயன்.

 உடனே வேகமாக வந்து அப்பாவைக் கட்டிக் கொண்டாள்.

“சாதித்து விட்டாய் குட்டிம்மா , ரொம்ப சந்தோஷம்..” என்று கவிதா  நெத்தியில் முத்தமிட்டார்.

காவியா சிரித்தபடி இருக்க ,

உடனே இனியா , “ நாளைக்கு என் தோழிகள் கேட்டார்கள் என  ஆட்டோகிராப் வாங்க வருவ தானே…. , அப்போது கவனிச்சுக்கிறேன்..” எனக்  கெத்துக் காட்டினாள் . ஆக மொத்தம் அவள் வீ.ஜே. பயணம் இனிதே தொடங்கியது .

 திங்கள் முதல் வெள்ளி வரை ‘செல்லமே’ ஷோ  ஒளிபரப்பாகியது . குடும்பத்தோடு பார்க்கும் நிகழ்ச்சி எனப் பெயர் பெற்றது . 

இனியாவிற்கும் நல்ல ரீச் கிடைத்தது.

அத்தியாயம் 9 

இரண்டு மாதங்கள் சென்றிருக்க , இவர்களது நிகழ்ச்சி பெரும் வெற்றியைப் பெற்றது .

 விக்ரம் அர்ஜுனை அழைத்து , “சனி இரவு  ஹோட்டல் ‘தாஜ்ஜில்’ ,  ‘செல்லமே’ வெற்றி விழா கொண்டாட்டம் “ என அறிவித்தான்.

இனியா பார்ட்டி விஷயத்தைப் பெற்றோரிடம்  தயங்கியபடி கூற , 

அவர்களும் இந்தத் துறையில் இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்தே இருந்தனர். 

ஆதலால் இனியாவிடம் , “உன் எல்லைகள் உனக்கு தெரியும் என நம்புகிறோம். கலந்து கொள்… . ஆனால் கவனமாக இரு..” என எச்சரித்து அனுமதித்தனர் .

“எஸ் , கட்டாயமாக அம்மா .  நிச்சயமாகக் கவனமாக இருப்பேன்” .

பின் “திரும்புவதற்கு என்ன பிளான் ? அப்பாவைப் பிக்கப் பண்ண அனுப்பட்டுமா ? என்று கவிதா கேட்க,

 “வேண்டாம் அம்மா,  வசந்த் டிராப் பண்ணுவான்” 

“ஓ.கே. கவனமாக இருக்க வேண்டும்.…” என மீண்டும் எச்சரிக்கை செய்து விட்டு நகர்ந்தார்.

அனைவரும் ஹோட்டலில் குழுமியிருக்க , புளூ ஜீனஸும் , சிகப்பு  ஃப்ளாஸி பனியனும் இனியா அணிந்திருந்தாள் .  

ரொம்ப அல்டரா மார்டனாகவும் இல்லாமல் அதற்காக கட்டு பெட்டியாகவும் இல்லாமல் அந்த இடத்திற்குப் பொருத்தமாய் இருந்தாள். அழகாக இருந்தாள் .

 விக்ரம் வழக்கம் போல் தன் வேக நடையுடன் உள்ளே வந்தான் . “ஹேவ் ஃபன் கய்ஸ் , யு டிஸர்வ் திஸ்…” என்று பாராட்டி விட்டு  , 

ஹோட்டல் மேலாளரிடம்  நன்றாகக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்திவிட்டு , இனியாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டுக் கிளம்பினான்.

 வழக்கம் போல் அர்ஜுன்  , தன் P.R.O வேலையை ஆரம்பிக்க , “நாம்  ஜாலியாக இருக்க வேண்டுமென்பதற்காக   , விக்ரம் ஸார் எப்பவுமே விஷ் பண்ணிவிட்டு , உடனே கிளம்பிடுவார்”.

“ஓ …! பரவாயில்லை , ‘தல’க்கு இவ்வளவு இங்கிதம் தெரியுமா? என இனியா நினைத்தாள் . ஆனால் அதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் அர்ஜுனிடம் , “அவர் ஸடேட்ஸ்க்கு நம்ம கூட பார்ட்டி பண்ணுவாரா ?” என முணங்கினாள்.

“அப்படியெயன்றால் அவர் இன்று வர வேண்டிய அவசியமே இல்லை…” என அர்ஜுன் எதிர்வாதம் செய்தான். 

இனியாவும் வேண்டுமென்றே புறம்  பேசுபவள் கிடையாது .   ஆகையினால் அதில் இருந்த உண்மையை உணர்ந்து அமைதியானாள்.

பார்ட்டியும் ஆட்டம் பாட்டமெனக் களைகட்டியது. இரவு 12 மணிக்கு அனைவரும் கிளம்பினர் . 

இரவு நேரத்தில் பெண்கள் தனியாகச் செல்ல வேண்டாம் என்று அர்ஜுன் அனுவை அழைத்துச் செல்வது என்றும் , வசந்த்துடன் இனியா கிளம்புவது என்றும் முடிவாகி இருந்தது . 

திட்டம் போட்டதே அர்ஜுன் என்பதால் , அவன் குஷியாக அனுவைக் கூட்டிக்கொண்டு முன்னே கிளம்பி விட்டான்.

 வண்டி எடுப்பதற்காக  வசந்த் பார்க்கிங் ஏரியாவுக்குச் சென்றிருக்க , ஹோட்டல் ரிசப்ஷனில் போனைப் பார்த்துக் கொண்டு இனியா காத்திருந்தாள்.  

அப்போது  அதே ஹோட்டலில் நடந்த தொழிலதிபர் பார்ட்டியை முடித்துக் கொண்டு வந்த விக்ரம், இனியா அமர்ந்திருப்பதைக் கண்டான். 

அளன் மனம் உந்த , அவள் அருகில் வந்து ,”இனியா…” என்று அழைக்க , 

அவன் அருகில் வருவதை உணராது போனில் இருந்தவள் , அருகே குரல் கேட்டுத் திடுக்கிட்டு , அவனை கண்டவுடன் சற்றுத் தடுமாறி நின்றாள்.

அவளை உஷ்ணப் பார்வைப் பார்த்தான்  விக்ரம் . 

என்னவென்று தெரியாமல் இனியா முழிக்க ,” ராத்திரி 12 மணிக்குத் தனியா உட்கார்ந்து இருக்க.. , சுத்தி என்ன நடக்குது? என்று பார்க்காமல் செல்லைப்  பார்த்திட்டிருக்க…?” எனக் காய்ந்தான்.

“இனியா நடப்பது என்ன? “என்று கிறகிக்க முயன்று கொண்டிருக்க ,

 “சரி வா , நான் டிராப் பண்ணுகிறேன்” என்றான் விக்ரம் .   

ஏற்கெனவே விக்ரம் திட்டியதில் கடுப்பாகியிருந்த இனியா , உடனே , “ வேண்டாம் ஸார் , நான் உட்கார்ந்தால் உங்கள் கார் அழுக்காகிவிடும்..…” என்று திரும்பிக் கொடுத்தாள் . 

முதலில் புரியாத பார்வை பார்த்தவன் , உடனே விசயத்தை கிரகித்துக் கொண்டான் . 

முகத்தில் ஒரு சுவாரஸ்யம் கூட , “ஸ்மார்ட் ஆன்சர்” என்றான்.

உடனே இனியா ,” நான் எப்போதும் ஸ்மார்ட் தான் என்றாள் , 

பின் அவனை மாதிரியே , “தென் ,  தேங்குயூ ஸார் . நான் வசந்த்தோடு போய் கொள்கிறேன். “

“தென் , ஓ.கே.” என்று தோளை குலுக்கும் போதே அவன் சிரிக்க , அவளும் கண்ணில் குறும்போடு , கெத்தாக பார்க்க  , 

அதற்குள் வசந்த் போனில் வாசலுக்கு வரும்படி அழைக்க , தல எதுவும் பேசுவதற்கு முன் வேகமாக  ஒரு தலையசைப்புடன்  நகர்ந்தாள். 

அவள் மூச்சிறைக்க வருவதைக் கண்டு , என்ன வென்று விசாரிக்க , அவள் பேசியதை மறைத்து மற்றபடி நடந்ததைக் கூறினாள். 

வசந்த் ஆச்சர்யமாகி , “நம்ம விக்ரம் ஸாரா…? டிராப் பண்ணுகிறேன் என்று சொன்னார்…?” எனத் திரும்பத் திரும்பக் கேட்டான்.

“ஆமாம்…” என்று தலையாட்டியபடி , “இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்குது…” என்பது போல்  பார்த்தாள். 

“எனக்கு தெரிந்து இது தான் முதல் முறை… ஸார் டிராப் பண்றேன் கேட்டது…”  

“ஓ…! , ஒருவேளை தனியாக இருக்கிறேன்…” என்று கேட்டிருப்பார் , 

“அப்படியே என்றாலும் ஏதாவது ஏற்பாடு தான் செய்வார், டிராப் எனக் கேட்டதெல்லாம் ஆச்சரியம் தான். “

பின் வசந்த் குறும்பாக “உன் ரசிகர் பட்டாளம் ராஜேஷில் ஆரம்பித்து விக்ரம் ஸார் வரை நீளுது போ…” என வழக்கம் போல கலாய்க்க ,

“நானே திட்டு வாங்கிட்டு வந்திருக்கேன் . இதில் அவர் எனக்கு ரசிகர் தான் போ… . கடுப்பைக் கிளப்பாமல்  , வண்டியை ரோட்டைப் பார்த்து ஓட்டு” 

ஆனாலும் “என்னிடம் மட்டும் ஏன்?” என  மனதில் எழுந்த கேள்வியை இனியாவால் தவிர்க்க முடியவில்லை. 

அதே நேரம் விக்ரம் மனதிலும் இதே கேள்வி தான் ஓடியது. 

“நாம் யாரிடமும் இப்படி கேட்டதில்லையே..! , ஒரு வேளை அவளைத் தேவையில்லாமல் பேசியதால் வந்த குற்றவுணர்வால் இருக்குமோ?” என நினைத்தான்.

 பின் “அழுதாளே…. பாவப்பட்ட என்று நினைத்தால்… சரியான கில்லாடி தான் . நேரம் கிடைத்தவுடன் சரியான பதிலடி கொடுத்து விட்டாள்..” என நினைத்தான் .

Advertisement