“ஸாரி, ஸாரி சார்…” என இனியா சொல்ல, விக்ரமை எதிர்பார்க்காததால் மற்ற அனைவரும் சிலை போல் திகைத்து நின்றனர்.
இந்தக் காட்சியால் விக்ரம் அதிர்ந்தான். அர்ஜுன், இனியாவின் நட்பை நன்கு அறிந்திருந்தான். அதனால் டென்ஷன் இல்லை.
ஆனால், “வசந்த்தோடு இருக்கும் நட்பு, எந்த வகை?” என்பதில் குழம்பினான். பெரிய வியாபார சாம்ராஜ்ஜியம் நடத்துபவன் என்பதால், அதிர்வைக் காட்டாமல் நன்கு சமாளித்தான்.
சாதாரணமாக இதையெல்லாம் கண்டுக்க மாட்டான், ஃபன் என விட்டு விடுவான். ஆனால் அவனுக்கு விடை உடனே தெரிய வேண்டி இருந்தது. அதனால், “என்ன நடக்கிறது அர்ஜுன்? ”எனக் கேட்டான்.
உடனே இனியா இடையில், “சார், ஒன்றும் இல்லை சின்ன ஃபன்…” என்றாள்.
“ஆர் யூ அர்ஜுன்? ”
“ஏன் நடுவில் புகுந்து பேசி, திட்டு வாங்குகிறாள்?” எனப் புரியாமல் பார்த்தான் வசந்த்.
அர்ஜுன் வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவானா? இரண்டு மாதம் முன்பு போட்ட சண்டையில் ஆரம்பித்து , இப்போது கேட்ட மன்னிப்பு வரை சபீனா போட்டு விளக்கினான்.
இப்போது வசந்த், நெஞ்சைப் பிடித்து நின்றான்.
அனைத்தையும் கேட்ட விக்ரம், “ படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஐந்து மணிக்கு என்னை கேபினில் வந்து பார் இனியா…”என ஆணையிட்டுச் சென்றான்.
“இப்படியா எல்லாத்தையும் உளறுவாய்? யோசிக்க மாட்டாயா அர்ஜுன்?” என்று வசந்த் திட்டினான்.
அதற்கு அர்ஜுன், “என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை, விக்ரம் ஸார் கேட்டால் அனைத்தையும் சொல்லி விடுகிறேன் அபிராமி… அபிராமி…” என்று குணா கமல் பாணியில் பேச,
கடுப்பான வசந்த், “ யார் இந்த அபிராமி எனக் கவனி அனு” என்று போட்டுக் கொடுத்தான்.
அனு ஏற்கனவே அவன் மீது கோபத்தில் இருக்க, வசந்த் பேசியதைக் கேட்டு, கண்ணால் எரித்தாள்.
“கவனம் அனு, தல கேட்டால் முதல்இரவில் நடந்ததைக் கூட சொல்வார் நம்ம பாஸ்…” என இனியா கடுப்படிக்க ,
“ச்சீ…, ஸார் அப்படியெல்லாம் கேட்கமாட்டார்…” என்று அர்ஜுன் சொல்ல,
மேலும் சூடான இனியா, “ஜாக்கிரதை அனு, இப்போது கூட நான் சொல்ல மாட்டேன் என்று சொல்லவில்லை. தல கேட்கமாட்டார் என்று தான் சொல்கிறார்…” என விளக்க,
கோபத்தில் அனு வெளிநடப்பு செய்ய, “உண்மையைத் தானே சொன்னேன், ஏன் கோபப்படுகிறாள்?” என இனியாவிடம் விளக்கம் கேட்க,
“ஐயோ பாஸ்…” எனத் தலையில் கை வைத்தாள்.
“அப்புறம் சொல்கிறோம், இப்போது அனுவைப் போய் சமாதானப்படுத்து…” என வசந்த் அனுப்பி வைத்தான்.
“என்ன இனியா செய்யப் போகிறாய்?” என்று வசந்த் கவலையுடன் கேட்க,
உள்ளுக்குள் பயம் இருந்த போதும், வெளியே, “எவ்வளவோ பார்த்துட்டோம், இதைப் பார்க்க மாட்டோமா…?” என்று வீர வசனம் பேச,
“தெரியும் தெரியும்… பாடி ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்..” என திரும்பிக் கலாய்த்தான்.
கேண்டீனில் அனு, அர்ஜுனின் தவறை விளக்க, யோசிக்காமல் பேசியதை நினைத்து மிகவும் வருந்தினான்.
பின் இனியாவிடம் வந்து மன்னிப்பு கேட்டான், “நான் கூட வருகிறேன்” என்றான் அர்ஜுன்.
“விடுங்க பாஸ், நான் பார்த்துக் கொள்கிறேன்”
“ஸாரி இனியா, விக்ரம் ஸார் கொடுத்த வாய்ப்பு, அதனால் அவர் திறமைக்குக் கிடைத்த மரியாதை, புகழ், மேலும் விக்ரம் ஸார் மீது உள்ள அபிமானம், எல்லாம் சேர்ந்து உளற வைத்து விடுகிறது. இல்லையென்றால் நிச்சயம் உன்னை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்…” என்றாள் அனு.
“தெரியும் அனு, நம்ம பாஸ் தானே…, விடு, டெக் இட்ஈஸி…” என்றாள். “ஆனாலும் கொஞ்சம் கவனம்….” என்று குறும்பாகச் சிரிக்க,
அனு இரண்டு அடி போட்டாள்.
பின் அர்ஜுன் கிளம்ப, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
அத்தியாயம் 26
மாலை ஐந்து மணிக்கு விக்ரமைக் காணச் சென்றாள். இவளைக் கண்டவுடன் செயலாளர், அறைக்குள் செல்ல அனுமதித்தாள்.
அறைக் கதவைத் தட்டியபின், உள்ளே நுழைய, இவள் வருவதைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அந்தப் பார்வை அவளை ஏதோ செய்தது. இப்படி யாராவது பார்த்தால் ஒரு அசௌகரியம் வர வேண்டும் இல்லையென்றால் கோபம் வர வேண்டும். இரண்டும் இல்லாமல் வேறு ஓர் உணர்வு ஏற்படுவதை உணர்ந்தாள்.
அதற்குள் விக்ரம் மேஜைக்கு அருகே வந்துவிட, ‘பின்னர் இதைப் பற்றி ஆராய்வோம்’ என ஒதுக்கி வைத்து விட்டு, விக்ரமை நேராகப் பார்த்தாள்.
விக்ரம் இருக்கையைக் காண்பிக்க, அதில் அமர்ந்தாள்.
ஏதும் பேசாமல் அவன், இனியாவை ஆழ்ந்து பார்க்க, உள்ளுக்குள் படபடத்தாள்.
இதைத் தவிர்க்கும் பொருட்டு, “ஸார், வரச் சொன்னீர்கள்…” என்று இழுக்க,
இதைக் கேட்டவுடன் , இனியாவைக் கூர்மையாகப் பார்க்க, “ஸாரி ஸார்…” என்றாள். (மனதில் பார்வையாலே நினைத்ததைச் சாதிக்கிறார் எனக் குமுறினாள்)
“இந்த ஸாரி எதற்கு? மோதியதற்கா? இல்லை என்னைத் தப்பாகப் பேசியதற்கா?”
உடனே இனியா, “ஸார், ஏற்கனவே மோதியதிற்குக் கேட்டாகி விட்டது . ஒரே விசயத்திற்கு இரண்டு தடவை சொல்ல முடியாது” என்றாள் வேகமாக.
இதைக் கேட்டவுடன், விக்ரம் கண்ணில் குறும்பு கூத்தாடியது . “அப்படியா?”
“ஐயோ இந்த மாடுலேஷனிலே , இரண்டாம் தடவை கேட்க வைத்து விடுவார் போல இருக்கே…, இனியா உஷாராகு, டாப்பிக்கை மாத்து…”
“உடனே உங்கள் எண்ணத்தை, ஜட்ஜ்மெண்ட்டை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, ஸாரி ஸார்…” என்றாள்.
அவளின் அவசரத்திலே எண்ணத்தைப் புரிந்து கொண்டவன், சூழ்நிலை இதத்தை மாற்ற விரும்பாது, சிரித்தபடியே விட்டுக் கொடுத்தான்.
“மனதில் இருந்து சொல்கிறாயா? இல்லை…” என இழுத்தான்.
அவள் இயல்பான துடுக்குத்தனம் வெளிப்பட, “அதான் உங்கள் சீடனிடம் முழு பொழிப்புரையும் கேட்டீர்களே… , அப்புறம் என்ன சந்தேகம்?” என விக்ரம் எல்லை தாண்டியதைக் கோடிட்டாள்.
அவன் கண்ணில் சுவாரசியம் கூடியது, மனதில் அவன் தவறைச் சுட்டிக் காட்டிய விதம் பிடித்திருந்தது.
“அது அர்ஜுனின் ஜட்ஜ்மெண்ட்க்கு, நீ கேட்ட மன்னிப்பு. நான் கேட்பது, என்னைத் தப்பாக நினைத்தாய் அல்லவா? அந்த எண்ணம் மாறிவிட்டதா?”
“நிச்சயமாக ஸார், என்னுடைய இன்றைய வெற்றிக்கு, புகழுக்கு முழு காரணம் நீங்கள் தானே…. அதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். தேங்கு யூ சோ மச் ஸார்…”
“ஓ.கே. குட், தென், எப்படிச் சமாளிக்கிறாய் இனியா?”
‘ம்ம்… ஆரம்பித்து விட்டார்…, ஆதியும் அந்தமும் புரியாமல் பேசுவதற்கு…’ என மனதில் நினைத்தவள், “ ஸார்…” என இழுக்க,
“இந்த வெற்றி, திடீர் புகழ் மற்றும் இதனால் ஏற்படுகிற பிளஸ் மற்றும் மைனஸை எப்படி எதிர் கொள்கிறாய்?” எனக் கேட்டேன்.
ரொம்ப அசால்ட்டாக, “ஓ…! அதுவா ஸார்? , எல்லாம் கவிதா, கார்த்திகேயன் புண்ணியத்தில் தான்…” என வேண்டுமென்றே சொன்னாள்.
“என்னடா சோதனை? யார் இந்த புது நபர்கள்?” என்று குழம்பினான். “இவளை லவ் பண்ண வைப்பதற்குள், நான் ஒரு வழியாகி விடுவேன் போல…” என நினைத்தான்.
எதிரே இருந்த இனியா குஷியானாள். “எப்ப பார்த்தாலும் நீங்கள் இப்படித்தானே தலையும் வாலும் புரியாமல் பேசிக் கடுப்பேத்துவீர்கள். இன்று அனுபவி ராஜா அனுபவி…” என்று மனதிற்குள் கும்மாளமிட்டாள்.
“ஓ…!யார் இவர்கள்?”
“எல்லாம் என் தயாரிப்பாளர்கள் தான் ஸார்”
சற்றே பதட்டமானான். ஆனால் வெளியே காண்பிக்காமல், “ எனக்கு இந்த தயாரிப்பாளர்களைத் தெரியவில்லையே…, எங்கு இருக்கிறார்கள்?”
குஷியான இனியா, “எனக்கு தெரிந்தவர்கள் தான் ஸார்…”
கடுப்பான விக்ரம், “ஒழுங்காக விவரம் சொல், எங்காவது போய் மாட்டிக் கொள்ளப் போகிறாய்., இந்த அர்ஜுன் என்ன செய்கிறான்…?” என்று கோபப்பட்டான்.
விசயம் வேறு மாதிரி போவதை உணர்ந்து, “ஸார், அது என் அம்மா, அப்பா…” என்று குறும்பாகச் சிரித்தாள்.
“இனியா, உன்னை….” என்று முறைத்தபடி ரிலாக்ஸாக இருக்கையில் சாய்ந்தான்.
“ஸார்…” என மீண்டும் அசடு வழிந்தாள்.
“மேலே சொல்” என்பது போல் பார்த்தான்.
“அம்மா, அப்பா இரண்டு வாரங்களுக்கு முன்னே, என்னிடம், “இந்த புகழ், வெற்றி எல்லாம் நிரந்தரமானது இல்லை, இனிமேல் தான் இதைத் தக்க வைத்துக் கொள்ள கவனமாக உழைக்க வேண்டும். உன் திறமையை மெருகேற்ற வேண்டும்” என்றனர்.
“இந்த வெற்றி பல உண்மைகளை, பொய்களைப் போட்டு உடைக்கும். அதைக்கொண்டு உன்னைப் பக்குவப்படுத்திக் கொள் என்று பெரிய கதாகாலட்சேபமே முடிந்து விட்டது…” என முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு அனைத்தையும் சொன்னாள்.
விக்ரம் புன்னகைத்தபடி, “ஆம், அவர்கள் சொன்னது நூறு சதவிதம் சரி, இதைத்தான் உன்னிடம் பேச வேண்டும்” என அழைத்தேன்.
தன்னைத் திட்ட அழைத்திருக்கிறான் என நினைக்க, அவரோ நமக்கு உதவ, வழிகாட்ட அழைத்திருக்கிறார்… என நெகிழ்ந்தாள்.
“மிகவும் நன்றி ஸார். உங்களுடைய எண்ணம் புரியாமல் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டு விட்டேன்…” என்று வருந்தினாள்.
“பரவாயில்லை இனியா…., எந்த உதவி வேண்டுமென்றாலும் கேள் . முடிந்தால் செய்கிறேன்….”
“நிச்சயமாக, நன்றி ஸார். வருகிறேன்…” எனக் கிளம்பினாள்.
விக்ரம் மனதே இல்லாமல் அனுப்பி வைத்தான்.
விக்ரம் கேபின் கண்ணாடி வழியாக வெளியே பார்க்க, வசந்த் வெளியே காத்திருக்க, இனியா அவனிடம் ஏதோ படம் காட்டிக் கொண்டிருந்தாள்.
மேலோட்டமாகப் பார்த்தால் விளையாட்டுத்தனமாகத் தெரிந்தாலும், எல்லா விசயங்களில் ஒரு பார்வையும், கருத்தும் இருக்கிறது, அதே போல் வாழ்க்கையை அணுகுவதற்கான பக்குவமும் இனியாவிடம் இருப்பதையும் புரிந்து கொண்டான்.
அவன் கோடு தாண்டியதைச் சுட்டிக் காட்டியது, தயாரிப்பாளர் கதை சொல்லி வம்பு செய்தது என அனைத்தையும் ரசித்தான்.
பல நேரம், தள்ளி இருக்கும்போது ஏற்படும் ஈர்ப்பு, அருகே வர வர குறைந்து விடும். அதற்கு நேர்மாறாக இனியா மிகவும் ஈர்த்தாள்.
‘நம்மாளு சூப்பர்தான்…’ என நினைத்துச் சிரித்தான். பின் தன் வேலையைத் தொடர்ந்தான்.
“என்னாச்சு இனியா?” என்று வசந்த் அக்கறையுடன் கேட்க,
“நீ எங்கே இங்கே?”
“முழுசா வருவியா? இல்லை ஆம்புலன்ஸ் கூப்பிடணுமா “ எனப் பார்க்க வந்தேன்….”
“கதை விடாத, செயலாளருடன் கடலை போடத்தானே வந்தாய்?” எனக் கலாய்த்தாள்.
இனியா பேசுவதை வைத்துப் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை எனப் புரிந்து கொண்டான்.
அவளைக் கூர்ந்து பார்க்க, “சில பல திட்டுகள், அறிவுரைகள்தான்…”
“சரி வா, வீட்டில் டிராப் செய்கிறேன்…” எனச் சொல்ல, இருவரும் கிளம்பினர்.
காரில் செல்லும் போதே அனு போன் அடிக்க, “வழக்கம் போல ஸாரி தான்… அப்புறம் சில திட்டுகள், கொண்டு வாழ்க்கையில் ஏறிக்கொண்டு இருக்கிறாய், கவனமாக இரு என்று சில அறிவுரைகள்தான். வேறு ஒன்றும் இல்லை…”
அதற்குள் அர்ஜுன், “விக்ரம் ஸார் கிரேட்…” என்று புகழ் பாட,
கடுப்பான இனியா, “போனை வைக்கிறேன்…” எனக் கட் செய்தாள்.