விக்ரம் புதிய சேனல் காரணமாக மீண்டும் பெங்களூர் பயணம் மேற்கொண்டிருந்தான்.
‘ருசிக்க ரசிக்க’ அடுத்தடுத்த வாரங்கள் ஓளிபரப்பாக, டி.ஆர். பி எகிறிக் கொண்டிருந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்தத்தடுத்த எபிஷோட்டிற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
அன்றைய படப்பிடிப்பில் ரோஜா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் .
இனியா அருகே வந்ததும் கட்டிக் கொண்டாள். தனக்குச் சேனலில் ஆரம்பிக்கும் புதிய நடன நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்துள்ளதாகச் சொன்னாள்.
“எனக்கு நடனம் மிகவும் பிடிக்கும். அதுவும் இந்த சேனலில் வாய்ப்பு என்றால் எங்கோ போய்விடுவேன்… என் இத்தனை வருட உழைப்பிற்குப், போராட்டத்திற்குப் பலன் கிடைக்கப் போகிறது“ என்று ஆர்ப்பரித்தாள்.
“சூப்பர் அக்கா…” என உற்சாகப்படுத்தினாள் இனியா.
“நீ…?” எனக் கேள்வி எழுப்ப,
“அக்கா, நடனத்திற்கும் எனக்கும் ரொம்ப தூரம்…” என்று தூரத்தில் அழுத்தத்தைக் கொடுக்க,
“எப்படி இனியா, மீட்டர் கணக்கிலா…?” என்று நகைக்க,
“ஏக்கர் கணக்கில்…” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல,
ரோஜா வாய் விட்டுச் சத்தமாகச் சிரிக்க, தளத்தில் இருந்த சில பேர் திரும்பிப் பார்க்க, ரோஜா சிரிப்பை அடக்கினாள்.
“உன் கூட இருந்தால்,மனசே லேசாகி விடுகிறது இனியா“
“ரெடி, ரெடி…” என அர்ஜுனின் குரல் கேட்க, அவரவர் இடத்திற்குச் சென்று நின்றனர்.
அடுத்தடுத்த வாரங்களில், இனியா ஷோ டாப்பர் ஆனாள்.
சோஷியல் மீடியா முழுவதும் அவள் குறும்புகள், சேட்டைகள்,முகபாவங்கள் என டிரண்ட்டானது. மீம்ஸ்கள் பறந்தன.
மொத்தத்தில் வைரலானாள். இனியா ஆர்மி கூட உருவாகியது.
இனியா வெளியே செல்லும் போது கவனிக்கப்பட்டாள் . மொத்தத்தில் ஒரு ஸ்டாரானாள்.
ஞாயிறு காலை உணவின் போது காவியா,“அக்கா, காலேஜில் எல்லோரும் உன் விசிறி ஆகிவிட்டார்கள். இப்போது எனக்குத் தனி மரியாதை தான். உன் ஆட்டோகிராப் வேண்டும் எனக் கேட்கிறார்கள்…” எனப் பெருமை பட்டாள்.
இனியா சிரித்தபடி இல்லாத காலரைத் தூக்க, இடையில் கவிதா, “உன்னிடம் பேச வேண்டும் குட்டிம்மா, சாப்பிட்ட பின் பேசலாம்…”
சிறிது நேரத்தில் அனைவரும் ஹாலில் கூட, “நீ இப்போது எப்படி உணருகிறாய் ?” எனக் கவிதா கேட்டார்.
“தெரியவில்லை அம்மா, ஒரு நேரம் பயங்கர சந்தோஷமாக இருக்கு, மற்றொரு நேரம் இந்தத் திடீர் புகழ் பயமாகவும் இருக்கிறது.”
“இந்த உணர்வு சரி தான். இதை எப்படிக் கையாளப் போகிறாய்? என்ன யோசித்திருக்கிறாய்?”
“ஒன்றும் யோசிக்கவில்லை அம்மா, ஜஸ்ட் என்ஜாயிங்க தி மொமெண்ட்…”
“அது ஓ.கே. குட்டிம்மா, ஆனாலும் நீ அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். இந்தச் சூழ்நிலை, உனக்கு நண்பர்களை,துரோகிகளை, விரோதிகளை அடையாளம் காட்டும். பல அதிர்ச்சிகளைக் கொடுக்கும். இந்த அதிர்ச்சிகளை எப்படிக் கையாளவது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்..”
இனியா பாவமாகப் பார்க்க, “முதலில் நான் சொல்வதைக் கவனமாகக் கேள். உன்னை பார்த்துச் சிலர் பொறாமைப்படுவார்கள், சிலர் கேலி செய்வார்கள் , சிலர் மகிழ்வார்கள். இவை அனைத்தையும் சரியாக அவர்கள் மனநிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.”
இனியா குழப்பமாகப் பார்க்க, “உதாரணத்திற்கு ஒருத்தர் இந்தச் சின்னத்திரையில் பல வருடங்களாக, எல்லாத் திறமைகளோடு உழைத்தும் அவர் நினைத்த உயரத்தை அடைந்திருக்க மாட்டார் . ஆனால் உனக்கு உன்னுடைய ப்ளஸ்க்கு ஏற்றாற்போல் நிகழ்ச்சி மிக விரைவில் அமைந்து, அதன் மூலம் புகழும் அடைந்துவிட்டாய். அப்போது அதற்கான விளைவுகள் இருக்கத்தானே செய்யும்…?”
இனியா தெளிவடையாமல் பார்க்க, காவியா இடைபுகுந்து, “மணிரத்னம் படத்தில் அறிமுகமான ஹீரோவிற்கும், சிறிய இயக்குனர்,சிறிய படத்தில் அறிமுகமான ஹீரோவிற்கும் இடையில் இருக்கும் போராட்டம், ஏற்றத் தாழ்வுகள்,நடைமுறைச் சிக்கல்களைத்தான் அம்மா சொல்கிறார்”
“சூப்பர் காவியா, டக்கென்று பிடித்துவிட்டாய்…” எனக் கார்த்திகேயன் பாராட்டினார்.
இனியா நார்மலாக இருந்திருந்தால், “நான் தான் டாப்…” எனச் சண்டைக்கு வந்திருப்பாள். அவள் இருந்த குழப்பத்தில் அமைதியாக இருந்தாள்.
மேலும் கவிதா, “இதை எப்படிப் பக்குவமாகக் கையாள வேண்டும் என யோசி இனியா…”
இனியா முழிக்க, கார்த்திகேயன் அருகில் வந்து அவள் கைபிடித்து, “ஒவ்வொரு விசயத்தையும், அவர்கள் பார்வையில் அணுகினால், பாதி டென்ஷன் குறைந்து விடும் குட்டிம்மா”.
“மேலும் புகழ் ஒரு போதை, அதை தலைக்குள் ஏற்றாமல் பார்த்துக் கொள்” என்றார் கவிதா.
காவியா நடுவில் புகுந்து, “ நான் ஒரு பஞ்ச் சொல்லட்டுமா?”
கவிதா ஆமோதிக்க, “ எல்லா புகழும் இறைவனுக்கே என ரஹ்மான் ஸாரைப் பின்பற்று இனியா…”
இனியாவும், “அப்படியே ஆகட்டும் குருவே..” என்று வாய் பொத்திக் குனிந்தாள்.
“வாழ்க வளமுடன்” என்று காவியா கைகளைத் தூக்கி ஆசிர்வதிக்க… என இருவரும் கலகலத்தனர்.
“விளையாட்டு போதும்….” என்று இருவரையும் கண்டித்த கவிதா, முக்கியமான விசயம் இனியா… , “கவனமாகக் கேள்…” என ஆரம்பித்தார்.
“தொழில் முறை போட்டி பொறாமைகள் எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால்…..” என்று கவிதா இழுக்க,
“என்னம்மா?”
“இந்தத் துறையை நீ தேர்ந்தெடுக்கும் போது பேசியது தான், சமூக அழுத்தங்களை எப்படி கையாளப் போகிறாய்….?”
“என்னம்மா பயமுறுத்துகிறீர்கள்?”
கொஞ்சம் யோசி இனியா, “இப்போது உன்னுடைய புகைப்படங்கள் இணையம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. இதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மேலும் உன்னைப் பற்றி எப்படிபட்ட கருத்துக்களையும், அசிங்கங்களையும் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு, இணைய வழியாக அவர்கள் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டலாம். அவர்கள் வக்கிரங்களை வெளிப்படுத்தலாம்…..“
இனியா அதிர்ந்து பார்க்க,
“இது தான் எதார்த்தம். இது மாதிரி நடக்கவும் வாய்ப்பு இருக்கு. அப்படி நேர்ந்தால்,,.. அதைத் மன தைரியத்துடன் கையாள உன்னை தயார் படுத்திக் கொள், பக்குவப்படுத்திக் கொள்” என்று கவிதா நீண்ட உரையாற்றினார்.
உடனே கார்த்திகேயன், “நீ தைரியமாக இரு, நாங்கள் எப்பொழுதும் உனக்கு துணையாக இருப்போம்”
“நன்றி அப்பா, நன்றி அம்மா” என்று கட்டிக் கொண்டாள்.
மனம் தெளிவானாள் இனியா. எதையும் எதிர்நோக்க தயாரானாள். சபை கலைய, இனியாவும், காவியாவும் தங்கள் அறைக்குச் சென்றனர் .
கவிதாவும், கார்த்திகேயனும் மட்டும் இருக்க, “சரியான விசயத்தை, சரியான நேரத்தில் பேசினாய் கவிதா, குட்” என்று பாராட்ட,
“இல்லைங்க, கல்லூரியில் இந்த மாதிரி பிரச்சினைகள் பலவற்றைக் காண்கிறோம். பெற்றோர், சொந்தங்கள், நண்பர்கள் சொல்கிறார்கள் என்று படிப்பைப் பற்றிய புரிதல் இல்லாமல் எடுத்து விட்டு, அதைச் சரியாகப் படிக்க முடியாமல், பின் அதனால் வரும் விளைவுகளைச் சமாளிக்க முடியாமல் விரக்தி, மன அழுத்தம் போன்றவற்றில் சிக்கித் தவிக்கிறார்கள். அதனால் தான் இனியா மீடியா துறைக்கு வர வேண்டும் என்று சொன்ன போது அவ்வளவு யோசித்தேன்….அதனால் தான் இன்று மீண்டும் ஒருமுறை பேசித் தெளிவு படுத்தினேன் .
“நீ சொல்வது சரி தான்” எனக் கார்த்திகேயனும் ஆமோதித்தார்.
காதல் வைபோகமே…. நாள் 8.1
அத்தியாயம் 25
அன்றைய படப்பிடிப்பின் போது கார்த்திக் வந்து, ”நீ ஓவர் நைட்டில் ஒபாமாகிவிட்டாய்” எனப் பொறாமையோடு பேசினான் .
“நீ ரொம்ப லக்கி…” எனப் பாடகர் வந்து பெருமூச்சு விட்டார்.
“ரொம்ப சந்தோஷம் இனியம்மா…” என ராஜேஷ் தேடி வந்து
பாராட்டினார்.
சின்னத்திரை நடிகை மதி கூட இனியாவிடம், “மாய்ந்து மாய்ந்து சமைப்பது நாங்கள், ஆனா நீ ஈஸியா பெயர் வாங்கி விட்டாய்…” எனப் புலம்பினாள்.
பெற்றோரின் வழிகாட்டுதலால், அவள் அனைத்தையும் சின்னச் சிரிப்போடு கடந்தாள்.
“இதே மாதிரி நல்ல நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து செய்து, இதைத் தக்க வைத்துக்கொள்… “ என்றாள் ரோஜா.
“ஓ.கே… , நன்றி அக்கா. ஏதாவது ஆலோசனை தேவைப்பட்டால் உங்களைக் கேட்கிறேன்…”
இந்த வெற்றி, இனியாவிற்கு நண்பர்களை, நலம் விரும்பிகளைக் கண்டு கொள்ள உதவியது. அனுபவங்கள் பாடங்களாகின.
இரண்டு வாரங்கள் சென்றிருக்க, அன்று ‘செல்லமே’ படப்பிடிப்புத் தளத்தில், அனைவரும் கூடி இருந்தனர். இனியாவே பேச்சைத் தொடங்கினாள்.
“ஸாரி பாஸ், உங்களோட ஜட்ஜ்மெண்ட் சரி…” என ஒத்து கொள்கிறேன்.
“விடு இனியா , உனக்குப் புரிந்துவிட்டது அல்லவா, அது போதும்…” என்றான் அர்ஜுன்.
“இல்லை பாஸ், இது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது , ஆனால் நான் என் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்…” என விடாப்பிடியாகப் பேசினாள்.
“செண்ட்டிமெண்ட் தாங்கவில்லை, இரண்டு பேரும் ஃப்ரீயா விடுங்க…” என வசந்த் தீர்ப்பு சொல்ல, பிறகு பேச்சு வேறு விசயங்களுக்குச் சென்றது. கிளம்பும் போது, “அக்கா, அக்கா…” என வசந்த் ஓட்ட,
கடுப்பான இனியா, அவனை அடிக்க துரத்த, எதிரே வந்த விக்ரம் மீது மோதி நின்றாள்.