விக்ரம் திருப்பிச் சொன்ன அதிர்ச்சியில், அங்கே திகைத்து நிற்க,
பின்னால் வந்த ரோஜா நகரும்படி, இனியாவின் கையை இடித்தாள். பின் சுய உணர்வு பெற்று ஒரு அசட்டுச் சிரிப்புடன் இனியா நகர,
அவள் சிரிப்பு இவனுக்கும் தொற்ற, சிரிப்புடன் ரோஜாவைப் பார்க்க, அவள் விக்ரமுடன் பேச்சை வளர்க்க முற்பட்டுக் கொண்டிருந்தாள்.
சற்று தூரம் சென்று திரும்பிப் பார்க்க, ரோஜாவோடு சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. அதுவரை மனதிற்குள் பூத்திருந்த இனம்புரியாத உணர்வு சட்டென்று வடிந்தது. ஏதோ கோபம் வந்து ஒட்டிக் கொள்ள, முறைப்புடன் திரும்பிக் கொண்டாள்.
அவள் மீது பார்வை வைத்தவாறு, ரோஜாவோடு பேசுவது போல் பாவனை செய்து கொண்டிருந்த விக்ரமுக்கு, அவளது பாவனை, முறைப்பு எல்லாம் சிரிப்பைத் தர, விரிந்த புன்னகையோடு, ரோஜாவிடம் விடைபெற்றான்.
நேராக அர்ஜுனிடம் இனியா செல்ல, அவள் முறைப்பைப் பார்த்து, “என்ன?” என்று கேட்க,
அவள் கண்ணால் பின்னால் காண்பிக்க, அர்ஜுன் பார்க்க, புன்னகையோடு விக்ரம் நகர்வதைக் கண்டான்.
“தல சிரித்தால் சூப்பராக இருக்கு இனியா…” எனச் சொல்லி அவளைக் காளியாக்கினான்.
இனியாவின் கோபத்திற்குக் காரணம் புரியாமல், “என்னாச்சு…?” என்று கேட்க,
“நம்மகிட்ட தல சிரித்துப் பேசி நீ பார்த்திருக்கியா?”
“ஓ…! அதான் விசயமா?” எனப் புன்னகைத்தவன், பின், “இதென்ன கொடுமையா இருக்கு? அவருக்குப் பிடித்தவருடன் பேசுவார், சிரிப்பார்….” என்று ஆரம்பிக்க,
“ஜால்ரா…” என்றவாறு நகர்ந்தாள்.
அதற்குள் விக்ரம் அழைக்க, அர்ஜுன் ஓடினான். இன்றைய படப்பிடிப்பு பற்றி விவரங்களைக் கேட்டான். பின் அங்கு அமர்ந்து படப்பிடிப்பைக் கவனிக்க ஆரம்பித்தான்.
அன்று டென்ஷன் குக்கான முன்னாள் நாயகி சீதாவுடன் ஜோடி சேர்க்கப்பட்டிருந்தாள் இனியா. தப்பு செய்து செமையாகத் திட்டு வாங்கினாள்.
“எல்லாம் தலயோட சதி…” எனப் பிரேக்கில் அர்ஜுனிடம் புலம்பினாள்.
“ஆரம்பித்து விட்டாயா?” என அர்ஜுன் சலிக்க, ரோஜாவும் கார்த்திக்கும் அருகில் வந்தனர்.
“என்ன?” என்று விசாரிக்க,
“என் அப்பா அம்மாவிடம் கூட இப்படித் திட்டு வாங்கியதில்லை….” என மீண்டும் குமுற,
“டேக் இட் ஈஸி. இட்ஸ் ஜஸ்ட் அ ஃபன்..” என்று கார்த்திக் தோளைத் தடவ, இனியா நெளிந்தாள்.
இவர்களின் பேச்சைத் தூரத்தில் இருந்து கவனித்த விக்ரம்,
அவர்கள் அருகே வந்து, “ ஏதாவது பிரச்சனையா…..?” என்று விசாரிக்க,
“ஒன்றும் இல்லையே….” என்றவாறு அர்ஜுன் அருகே வந்தாள் இனியா.
அவளை ஓர் பார்வை பார்த்து விட்டு, “தென், ஓ.கே. என்ஜாய் யுர் பிரேக் கய்ஸ்…” என்றான் விக்ரம்.
அனைவரும் நகர, “ஒரு நிமிடம் அர்ஜுன்…” என அழைக்க, கூடவே இனியாவும் நின்றாள்,
இதைக் கணக்கிட்டுத்தான் அர்ஜுனை அழைத்திருந்தான் விக்ரம் .
ரோஜா தயங்கி நிற்க, “நீங்கள் போங்கள், நான் அர்ஜுனுடன் வருகிறேன்…” என்றாள் இனியா.
“ஓ.கே.” என்று கார்த்திக்குடன் ரோஜா கிளம்பினாள்.
அர்ஜுன் என்னவென்று விக்ரமைப் பார்க்க, “உன் சிஷ்யைக்கிட்ட என்ன பிரச்சனை எனக் கேள்…”
“என்னடா?” என்று அர்ஜுன் கேட்க,
இனியா தயங்கிவாறு மௌனமாய் நின்றாள்.
கடுப்பான விக்ரம், “சொல்கிறாயா? இல்லையா?” எனக் காய்ந்தான்.
“ஏதோ சரியில்லை என்பதைக் கவனித்துத்தானே வந்தேன்… ஏன்
சொல்லவில்லை?”எனக் கோபப்பட்டான் விக்ரம்.
உடனே இனியாவும், “நான் ஒன்றும் சின்னக் குழந்தையல்ல, நானே சமாளித்துக் கொள்வேன் ஸார்…”
அதற்கு உடனே விக்ரம், “அதான் நீ மேனேஜ் செய்த லட்சணத்தைத்தான் பார்த்தேனே, அர்ஜுன் பின்னாடி ஒளிந்தாய்…”
“ஆமாம் இனியா, ஸார் சொல்வது தான் சரி, நீ தைரியமாகக் கையாண்டிருக்க வேண்டும்“ என வழக்கம் போல் விக்ரமிற்கு ஆமாம்சாமி போட்டான்.
“சான்ஸ் கிடைக்கிறப்ப, இந்த மாதிரி ஆளுங்களை வெளிப் படுத்திவிட வேண்டும் இனியா. அப்போது தான் பின்னாடி இந்த மாதிரி வேறு பெண்கள் கிட்ட நடக்கப் பயப்படுவான், புரியுதா?” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னான் விக்ரம்.
விக்ரம் சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல், அரைமனதாகத் தலையாட்டினாள்.
இனியாவை கூர்ந்து பார்த்து விட்டு, “ஒ.கே. நான் கிளம்புகிறேன்…” என்று தன் கம்பீர நடையுடன் நகர்ந்தான் விக்ரம்.
ஆர்ஜுன் ஏதோ பேச வர, இனியா கை எடுத்து கும்பிட்டு, “மூச்… வேண்டிய அளவு கேட்டாச்சு, வேண்டாம் அழுதுவிடுவேன்..” என வடிவேல் பாணியில் செய்தவள், “நீங்களும் ஆரம்பிக்காதீர்கள் பாஸ், பசிக்குது… வாங்க சாப்பிடப் போகலாம்“ என்றவாறு முன்னே நடக்க,
ஓர் உருவத்தின் மீது மோதுவது போல் போய், பின் சமாளித்து நின்றாள். பின் நிமர்ந்து பார்க்க,
அங்கு அக்னிப்பார்வையுடன் விக்ரம் நிற்க, ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
அர்ஜுனிடம் ஏதோ பேச வந்திருந்திருந்த விக்ரம், இனியாவின் விளையாட்டுதனத்தைக் கண்டு, அவள் மீது ஓரு கோபப் பார்வையைச் செலுத்திவிட்டு, சில விவரங்களை அர்ஜுனிடம் பேசி விட்டு நகர்ந்தான்.
“ஹா…ஹா… !” என்று அர்ஜுனின் சிரிப்புச் சத்தம் கேட்க,
இனியா திரும்பிப் பார்க்க, “எப்படிமா? இப்படி வாண்ட்டடா வண்டியில ஏறுகிறாய்?” எனக் கேலி செய்தான்.
“எல்லாம் என் நேரம்… கடுப்பைக் கிளப்பாமல் வாங்க, பசிக்குது…” என முன்னே நடந்தாள்.
இப்போது இனியா எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அர்ஜுன், ‘சமயம் பார்த்து இதைப் பற்றி பேசுவோம்…’ என முடிவு செய்து, அவளோடு நடந்தான்.
‘வழக்கமில்லாத வழக்கமாக நாம் கொஞ்சம் ஓவராக ரியாக்ட் செய்து விட்டோமோ? இந்த மாதிரி நிகழ்வுகள் பலவற்றைக் கடந்து போயிருக்கோமே, அப்போதெல்லாம் இப்படி நடந்து கொள்ளவில்லையே…’ எனத் தனக்குள்ளேயே சிந்தனை செய்தபடி விக்ரம் காரை ஓட்டினான்
பிரேக்கிற்குப் பின் மீதிக்காட்சிகள் படமாக்கப்பட்டன .
அப்போது சீதா, “சாரிம்மா, கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டேன்…“ எனக் கூற,
பின் அங்கு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.
கார்த்திக்கின் மீது அர்ஜுன் பார்வையை வைக்க, “தேவையில்லாமல் தேரை இழுத்து விடக்கூடாது” என்று அவனும் கவனமாகவே இருந்தான். நல்லபடியாகப் படப்பிடிப்பும் முடிந்தது .
அடுத்த படப்பிடிப்பு தேதியும், போட்டிக்கான சமையல் பொருளும் அறிவிக்கப்பட்டது.
படப்பிடிப்பு முடிந்து கிளம்பும் பொழுது டீம் செட் ஆன திருப்தியும், சந்தோஷமும் அனைவருக்கும் இருந்தது.
அர்ஜூன் எபிஸோட்டை ரெடி செய்து விட்டு, ரஷ்யை விக்ரமிடம் போட்டுக் காட்ட, விக்ரமிற்கு முழு திருப்தி.
ஷோ ஆரம்பித்தது முதல் விக்ரம், இனியாவையே பார்க்க,
“பருப்புகளில் இத்தனை வகையா…?” என இனியா வாயைப் பிளக்க,
பின், ‘வதக்க, தாளிக்க, பொறிக்க…’ என எதற்கும் வித்தியாசம் தெரியாமல், மாற்றி மாற்றிச் செய்து சீதாவிடம் வாங்கிக் கட்டியிருந்தாள்.
திருதிருவென முழிப்பதும், அசடு வழிவதும், பாவமாக முகத்தை வைப்பதும் என அதகளப்படுத்தியிருந்தாள்.
“ஸார், நீங்கள் இனியாவைத் தேர்ந்தெடுத்த போது கூட இவ்வளவு நன்றாக வரும் என்று நினைக்கவில்லை. யுர் சாய்ஸ் இஸ் பெஸ்ட்…” எனப் பாராட்டினான்.
சின்ன புன்னகையோடு விக்ரம் அதை ஏற்றுக் கொண்டான். பின், “என்னுடைய தேர்வை விட, இந்த நிகழ்ச்சியில் உங்கள் உழைப்பு அசாதாரணமானது அர்ஜுன். மொத்தம் எட்டு கேமிராக்கள், முதல் ஆறு கேமிராக்கள் பங்கேற்பாளர்களுடைய மேஜையில், மற்றொன்று பொருட்கள் இருக்கும் இடத்தில், மற்றொன்று நீதிபதிகளிடம் என்று அழகாகப் பிரித்து வைத்து,
கிட்டதட்ட ஒவ்வொரு கேமிராவிலும் எட்டு மணி நேர பதிவுகள், அவை அனைத்தையும் பார்த்து, அதில் பெஸ்ட் மொமன்டஸைத் தேர்ந்தெடுத்து, அதைச் சரியாகக் கோர்த்து, ஒரு மணி நேர நிகழ்ச்சியாகச் சுருக்கி, சுவராஸ்யமாக வழங்கியுள்ளீர்கள்.
ஐ லவ் இட், குட் ஜாப் அர்ஜுன்…”
“இது நாம் டிஸ்கஷனில் பல கட்டமாகப் பேசி முடிவு செய்து தானே ஸார்….”
“பேப்பரில் எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து விடலாம் அர்ஜூன், அதைச் சரியாக நிகழ்த்த வேண்டுமே..? அது எவ்வளவு பெரிய சவால் என்று எனக்கு நன்றாகத் தெரியும், வெரி குட்…” என்று மனமாற பாராட்டினான்.
“எனக்கு முழு திருப்தி அர்ஜுன், அடுத்த எபிஸோடுகளை ஆரம்பித்து விடுங்கள்.”
அர்ஜுன் வானில் பறந்தான்.
அத்தியாயம் 16
விக்ரம் புதிய சேனல் வேலை தொடர்பாக, பெங்களூர் மற்றும் டெல்லி சென்றிருந்தான்.
அடுத்த எபிஸோட்டில் இனியா ரோஜாவோடு ஜோடி சேர, “ஒரு நல்ல நட்பு தொடங்கியது. ரோஜா சிரித்த முகத்தோடு, கேலியோடு இனியாவை அழகாக வழி நடத்தினாள்.
இனியாவும் உற்சாகமாக எல்லா வேலைகளையும் செய்தாள். தப்பு செய்யும் பொழுது, தன்னையறியாமல் கண் சிமிட்டுவது, நாக்கைத் துருத்துவது எனப் பல சேட்டைகள் செய்திருந்தாள்.
அது ஒரு குழந்தைகளிடம் இருக்கும் கியூட்னஸைக் கொடுத்திருந்தது.
நிகழ்ச்சியில் பார்க்கும் பொழுது, அது ஒரு அழகைத் தந்திருந்தது..
மீண்டும் கிரியேடிவ் கெட் என்ற முறையில் டெல்லியில் இருந்த அவனுக்கு ரஷ் அனுப்பப்பட்டது. ரஷ்ஷைப் பார்த்த பின் அவனால் வெகு நேரம் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த எபிஸோட் மிகவும் நன்றாக வந்திருப்பதாகத் தோன்றியது.
பலமுறை இனியா வரும் காட்சிகளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தான். இனியாவைப் பார்த்த பின் ஒரு துள்ளல் மனநிலைக்கு மாறினான்.
விக்ரம் அன்று காலை பிராட்காஸ்ட் மந்தரியைச் சந்தித்திருந்தான்.
அந்நேரம் அவன் தாத்தா, அது குறித்து பேச அழைக்க, “எஸ் தாத்தா….” எனத் துள்ளளோடு பேச ஆரம்பித்தான்.
“என்னடா போன காரியம் வெற்றியோ? சந்தோஷமாக இருக்கிறாய்….” என வினவ,
“நோ தாத்தா , டெல்லி என்றாள் சும்மாவா? லாபி நடந்து கொண்டிருக்கிறது….”
“பின்ன எப்படிடா ஹேப்பி மூடு?” எனத் தாத்தா இழுக்க,
“தாத்தா எங்களோடு புது நிகழ்ச்சி ஒன்று நன்றாக வந்திருக்கிறது. அதனால்தான் இந்த ஹேப்பி மூடு…” என்று சிரித்தான்.
“ஓ….! , அப்ப சரி, ஏதாவது உதவி வேண்டுமா?”
“நோ தாத்தா, நான் பார்த்துக்கிறேன்.”
“ஓ.கே….” என்று போனை வைத்தார்.
மகனும், மருமகளும் பிஸியாக இருப்பதால் பேரனைக் கவனிப்பதைத் தன் பொறுப்பாக்கிக் கொண்டார்.
அர்ஜுனை அழைத்துப் பாராட்டினான். பின் இனியாவை நினைத்தவாறு புன்னகையோடு உறங்கினான்.
அத்தியாயம் 17
ஹாலில் அனைவரும் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது….
“இரவு படப்பிடிப்பு எப்படி இருக்கு இனியாம்மா…?” என்று கார்த்திகேயன் கேட்க,
“பயம் ஒன்றும் வேண்டாம் அப்பா, ஒன்றும் பிரச்சனை இல்லை, நன்றாகப் போகிறது….“
“இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது…”
“சமையல் நிகழ்ச்சி எப்படிப் போகிறது? எனக் கவிதா கேட்க,
உடனே இனியா, “அம்மா, அதை ஏன் கேட்கிறீர்கள்..?” என அழாத குறையாக ஆரம்பித்து, “சீதாம்மா என்னைத் திட்டின திட்டு இருக்குதே…. கண்ணில் இரத்தம் வராத குறை…” என ஆதங்கப்பட,
அங்கு சிரிப்பு கிளம்பியது.
அதைக் கண்டு கடுப்பான இனியா, “நீங்கள் எல்லாம் என்ன மேக்? பொண்ணு திட்டு வாங்கிடுச்சேன்னு வருத்தப்படாமல் சிரிக்கிறீர்கள்…” எனச் செல்ல கோபத்துடன் கையில் இருந்த குஷனை காவியா மீது எறிந்தாள்.
உடனே காவியா, “எங்களால் செய்ய முடியாததை ஒரு ஜீவன் செய்தது எனக் கேட்டால் சந்தோஷம் வராதா….?” எனக் கூறியபடி தன் மீது வந்த அடுத்த குஷனை சரியாகக் கேட்ச் செய்தாள்.
மீண்டும் சிரிப்பு அலை தோன்றியது.
உடனே இனியா, அனைவரையும் கோபமாகப் பார்த்து, “ நான் இந்தச் சபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்….” என்று கூறியபடி நடக்க, இனியாவின் கையைப் பிடித்துக் கார்த்திகேயன் அமரவைத்தார்.
பின் அம்மன்றத்தின் சபாநாயகராக இருந்து, “போதும், இந்த விசயத்திற்கான நேரம் முடிந்தது….” என்று காவியா பக்கம் பார்வையைத் திருப்ப,
“மீ எஸ்கேப்…” என்று அவள் நகர, இனியா அவளை இழுத்து உட்கார வைத்தாள்.
“உன் செமஸ்டர் மார்க் என்னாச்சு காவியா?”
“இந்த வாரத்தில் வரும் என நினைக்கிறேன்ப்பா….”
“ஓ.கே.”. என்றுவிட்டு, வேறு கதைகள் பேசினர். பின், சபை கலைந்தது.
அடுத்த எபிஸோட்டில் இனியா பாடகருடன் ஜோடி சேர, அதுவும் கலைகட்டியது, அவர் பாடியவாறு சமைக்க, இவளை ராகங்களில் கேள்வி கேட்க, பாடச் சொல்லி டார்ச்சர் செய்ய,
பின் இவள் பாடி, செட்டே விழுந்து அடித்து ஓடி என அனைவரும் நல்ல கம்ஃபர்ட் ஜோனில் இருந்தனர்.
வார நாட்களில் ‘செல்லமே’ ஷுட்டிங், வார இறுதி இரவுகளில் சமையல் நிகழ்ச்சி என நேரம் இறக்கை கட்டி பறந்தது.
அத்தியாயம் 18
இரண்டு வாரங்கள் கழித்து , அன்று தான் விக்ரம் சென்னை வந்திருந்தான்.
காலையில் இருந்தே, “இனியாவைக் காணப் போகிறோம்” என மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.
அவனுக்கே இது புது உணர்வாக இருந்தது, இது பிடித்தும் இருந்தது. எத்தனையோ பெண்களைக் கடந்து வந்திருக்கிறான். யாரும் இனியாவைப் போல் பாதித்தது இல்லை என்பது புரிந்தது .
தன்னை அறியாமல் விசில் அடித்துக் கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்க,
விசில் சத்தம் கேட்டு, தாத்தா அறைக்கு வந்தார். “என்னடா, முகத்தில் 1000 வாட் வெளிச்சம்?”
“அப்படி ஒன்றும் இல்லையே தாத்தா…..”
“எனக்குத் தெரியாதா? என்ன விசயம்?” என மீண்டும் துருவ,
“ஒரு வேளை, ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு வந்ததாக இருக்கும்….” என மழுப்பினான்.
அவனை அழ்ந்த பார்க்க, ” வரேன், தாத்தா…” எனச் சிரித்தபடி நழுவினான்.
ஆபிஸ் வந்தவுடன் வேளைகள் இழுத்துக் கொண்டன. மதியம் ‘செல்லமே’ படப்பிடிப்பு தளத்திற்கு போக நினைத்திருக்க, இன்று படப்பிடிப்பு இல்லை என்பதை அறிந்து கொண்டான். சற்று ஏமாற்றமாக உணர்ந்தான். பின் மற்ற வேளைகளை முடித்து விட்டுக் கிளம்பினான்.
மறுநாள் செல்லமே படப்பிடிப்புக்குச் செல்ல, அங்கு அனைவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரமைப் பார்த்ததும் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின் தலயை சந்தித்தவுடன் மனம் படபடக்க, அவனைக் கண் இமைக்காமல் பார்த்தவாறு திகைத்து நின்றாள். இனியாவிற்கு இந்த உணர்வு புதிதாக இருந்தது. சற்று யோசிக்க வேண்டி இருந்தது.
அவளைப் பார்க்க ஆசைப்பட்டதும், பார்த்தவுடன் மனதில் ஏற்பட்ட பரவசமும் ஏதேதோ செய்ய, அதற்கான எதிர்வினை அவளிடம் இல்லாத போது எங்கோ தோற்றது போல் உணர்ந்தான்.
மேலும் அவன் பேச முயல, அப்போது இனியா அருகில் இருந்த குட்டி ஒன்று உச்சா போக வேண்டுமென்று அழைக்க, தன்னுடைய படபடப்பை, தவிப்பை மறைப்பதற்கு அந்தக் குழந்தையுடன் வேகமாக நகர்ந்தாள்.
இதைக் கண்டவுடன் விக்ரம் மிகவும் கோபமானான். பின் சிறிது நேரம் அனைவரையும் நலம் விசாரித்து விட்டுக் கிளம்பினான்.