Advertisement

அத்தியாயம் 5

  பத்து நாள் கடந்திருக்க , அன்று கார் பார்க்கிங்கில், போர்ஸே கார் நின்று கொண்டிருந்தது. 

அது இனியாவுடைய கனவுக் கார் , அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அப்போது காமிராமேன் வசந்த் வர ,” என்னைக் காருடன் வைத்து போட்டோ எடு…” என்றபடி பல போஸ்கள் கொடுக்க , ஒவ்வொன்றுக்கும் அவளைக் கேலி செய்தபடி , போட்டோ எடுத்தான் .

உடனே பொங்கிய இனியா , “ஓரு நாள் நான் இதே மாதிரி கார் வாங்குவேன்…” என்று வசனம் பேச ,

“நீ வாங்கிற அஞ்சு, பத்து சம்பளத்திற்கு இதெல்லாம் தேவையா?” எனக் கவுண்டமணி ஸ்டைலில் வசந்த் கலாய்க்க ,

 இனியா ரோஷத்துடன் , “மீண்டும் அண்ணாமலை ஸ்டைலில் சபதம் போட முயல” , 

“ஆள விடு சாமி, எனக்கு வேலையிருக்கு “ எனச் சிரித்தபடி ஓட ,

அவன் போன பாதையைப்  பார்த்துக் கொண்டே, “வசந்த்..” எனப் பல்லைக் கடித்தபடி நிற்க , 

“ஹலோ… ! எனக் குரல் கேட்க , இனியா திரும்பினாள்.  

“என்ன? “என்று இனியா பார்க்க , கையில் சாவியை ஆட்டியபடி விக்ரம் நின்றிருந்தான். 

“உங்க காரா ஸார்?… சூப்பர் ஸார் …, எனக்கு இந்த கார் மிகவும் பிடிக்கும்…” என்று எப்போதும் போல் படபடவென்று பேசினாள் இனியா .

ஏற்கனவே கேண்டீனில்,  இனியா தன்னைப் பற்றி விசாரித்ததைக் கேட்டிருக்க , இன்று தன் கார் முன் பார்த்தவன் கடுப்பாக ,

அவளை ஒரு ஏளனப் பார்வையோடு,” மூவ்..” என்றான்  .

 கன்னத்தில் அடி வாங்கியது போல் உணர்ந்தாள். சட்டென்று கண்கள் கலங்க , உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் இனியா.

  இந்த மாதிரி நிகழ்வுகளைச் சந்தித்ததில்லை என்பதால் குழம்பிப் போனாள் . பின் தன்னைச் சமன்படுத்துவதற்காக ,  அங்கிருந்த ஆபிஸ் பூங்காவில் அமர்ந்தாள். 

எதற்காக அப்படிப் பார்த்தான் என்று புரியாவிட்டாலும் , தன்னைக் கேவலமாக எண்ணுகிறான் என்று மட்டும் புரிந்தது.

 சற்று மனம் தெளிந்தவுடன் ஒரு பக்கம் விக்ரம் மீது கோபம் வந்தது , மறுபக்கம் தான் ஒன்றும் பேசாமல் வந்ததை நினைத்து வருந்தினாள்.

“ஒரு நாள் மாட்டுவ மவனே அன்று வைத்துக் கொள்கிறேன்” என அவளுடைய இயல்பான குணம் தலை தூக்க , சபதம் எடுத்துக் கொண்டாள் . 

இந்த அவமானத்தை யாரிடமும் சொல்லப் பிரியப்படவில்லை . சொன்னாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதும் புரிந்தது . “நாமே பார்த்துக் கொள்ளலாம்” என முடிவு செய்த பின், சற்று சமாதானமாகி உள்ளே சென்றாள். ஆனாலும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை . சோர்வாக உணர்ந்தாள் .

டீம் மக்கள்  கவனித்துக் கேட்க ,” தலைவலி….” எனச் சமாளித்தாள்.

இனியா மிகுந்த எரிச்சலுடன் , முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வீட்டிற்கு வந்தாள் . 

கவிதா கவனித்து அருகே வர , “அம்மா..” என்றவாறு  மடியில் சாய்ந்தாள் . 

கவிதா விசாரிக்க , இனியா நடந்தவற்றைக் கூறினாள்.

இனியவை நிமிர்த்தி எதிரே உட்கார வைத்து , அவள் கைகளைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு ,  “குட்டிம்மா , இப்போது தான் நீ நிஜ உலகத்தில் அடி எடுத்து வைத்துள்ளாய் , இனி இது மாதிரி பல நபர்களைச் சந்திக்ககூடும் , சிலர் அவர்களது மன அழுத்தங்களை நம்மிடம் காண்பிப்பர் , சிலர் நமது உழைப்பைத் திருட முயலவர் , நமது புகழை மறைக்க முயலவர் , சிலர் நமக்கு கேட்காமலே உதவுவர் , சிலர் நமது முன்னேற்றத்திற்குத் துணை நிற்பர் , நீ தான் அனைவரையும் கண்டு கொண்டு சரியான முறையில் கையாள வேண்டும் “எனக் கவிதா அவளுக்குத் தன்மையாக எடுத்துச் சொன்னார் 

“அதே போல ஒரு நிகழ்வில் யாரையும் எடை போடாதே , இரண்டு மூன்று முறை கவனித்து விட்டு முடிவு எடு . உன்னுடைய குணத்திற்கு ஒத்து வர மாட்டார்கள் உறுதியாகத் தெரிந்தால்  இரண்டு அடி தள்ளி நின்று விடு இனியா . 

அப்புறம் முக்கியமாக உன் வீர சாகஸங்களைக் காட்ட முயற்சி செய்யாதே , பக்குவமாக நடந்து கொள் . அனுபவங்களைப் பாடமாக்கிக் கொள் ,” என்றார் .

அம்மாவிடம் பேசிய பிறகு , இனியா தெளிந்தாள் .

தேங்யூமா…” என்று முத்தமிட்டு விட்டு அறைக்குச் சென்றாள்.

அப்போது , இவை அனைத்தையும் கவனித்தவாறு நின்றிருந்த கார்த்திகேயன் , கவிதாவைப் பார்த்து மெல்லிய புன்னகை சிந்தி , கட்டை விரலை உயர்த்தினார்.

“நான் சரியாகத்தான் பேசினேன், நம்மாளு போய் வம்பு பண்ணாமல் இருக்கனும் . பார்ப்போம்..” என்று சிரித்தார் கவிதா.

அத்தியாம் 6

சென்னை போட்ஹவுஸில் இருந்தது அந்த மிகவும் பிரமாண்டமான வீடு , மெயின் கேட்டில் இருந்து அரை கிலோமீட்டராவது உள்ளே சென்றால் தான் வெள்ளை மாளிகை உங்களை வரவேற்கும் . அங்கு வேகமாக நுழைந்தான்  விக்ரம் . 

வெளியில் செல்லும் முனைப்பில் இருந்த அவன் அம்மா மாலினி  , இவனைக் கண்டவுடன் , “என்னப்பா சீக்கிரம்…?” என்றவாறு, உள்ளே  திரும்பி “செல்வம்…” என்று அழைத்தார். 

அவர் வர , “தம்பி வந்து விட்டான்… என்ன வேண்டும் என்று கேட்டு கவனியுங்கள்…” என்றார். பின் விக்ரமிடம் , “அம்மாவிற்கு மீட்டிங் இருக்குதடா ,” எனத் தயங்க , 

“சரி ம்மா , நான் பார்த்துக்கொள்கிறேன்..” என்று கையாட்டினான்.  

“என்ன வேண்டும் ஸார்?” என்று செல்வம் வினவ , 

“மசாலா டீ போடுங்கள் ,  நான் சற்று நேரத்தில் வருகிறேன்..” என்று மாடிப்படி ஏறினான் . இடையில் நின்றபடி, “அப்பா இருக்கிறாரா?” எனக் கேட்டான்.

“அப்பா , டில்லி போயிருக்கார் தம்பி “

“ஓ..! , சரி” என்று மாடி ஏறினான் .  எல்லோரும் பிஸி என நினைத்தபடி ,கடகடவென்று குளித்து விட்டு கீழே வந்தான் , 

செல்வம் டீயோடு நிற்க , அதை வாங்கிக்  கொண்டு தோட்டத்திற்குச் சென்றான். கண்ணை மூடியவாறு ஏகாந்தமாகப் பருகினான். கண்ணை மூடிய பொழுது , மின்னல் மாதிரி இனியாவின் கலங்கிய முகம் வந்து போக . மனதில் ஏதோ உறுத்த , குழம்பினான் .

 சட்டென்று கண் விழிக்க , அவன் தாத்தா நடைபயிற்சி முடித்து , அவன் அருகில் அமர்ந்தார்.

“என்னடா இந்நேரம்?  வந்திருக்கிறாய்”   ,

 “இரவு ஒரு பார்ட்டி இருக்கு தாத்தா , அதான் கொஞ்சம் ரெப்ஃரஷ் பண்ணிட்டுப் போலாம் என வந்தேன்”  

பின் பேச்சு , வியாபாரத்தை நோக்கி நகர்ந்தது  . 

சிறிது நேரம் சென்ற பின் , “என்னடா ராஜா , முகமே சரியில்லை” எனக் கேட்டபடி உற்றுப் பார்த்தார்.

 “ஒன்றுமில்லை..” என்று மழுப்பினான்.

 மீண்டும் அமைதியாக அவனைப் பார்க்க ,” தேவையில்லாமல்  காலையில் ஒருவரைத் திட்டிவிட்டேனோ என்று தோன்றுகிறது தாத்தா. அதான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது” 

“ஓ!  சரி பார்த்துக்கலாம் ராஜா . கொஞ்சம் அந்த நபரைக் கவனி , சரியா , தவறா என்பதைக் கண்டுகொள் . ஆனால் தவறு என்று உறுதியாகத் தெரிந்தால் , வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதை சரி செய்து விடு…”  

“ஓ.கே. தாத்தா..”  என்று பார்ட்டிக்குத் தயாராகச் சென்றான்.

விக்ரம் உள்ளே செல்ல , தாத்தா யோசனையோடு அவனைப் பார்வையால் தொடர்ந்தார் .

அத்தியாயம் 7

ஒரு வாரம் சென்றிருக்க ,  நிகழ்ச்சிக்கான குழந்தைகள் தேர்வு முடிந்து இருந்தது , படப்பிடிப்புக்குச் செட் ரெடி ஆகிக் கொண்டிருந்தது . 

டீம் மெம்பர்ஸ் அனைவரும் செட்டைப் பார்த்தவாறு , கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டு கலகலத்தனர். 

அப்பொழுது விக்ரம்  , வேகமாக வர ,

அதுவரை கலகலத்துக் கொண்டிருந்த இனியா ,  அவனைத் தீப்பார்வை பார்த்து விட்டு மெல்ல பின்தங்கினாள். 

“செட்டைப் பார்த்தீங்களா?  எல்லாம் ஓ.கேயா? இல்லை, ஏதாவது மாற்றங்கள்..?” என்று விக்ரம் கேட்க ,

 “இனியா சொல்லு…” என அர்ஜுன் முன்னிலைப்படுத்த , 

இனி தயங்கினால் நன்றாக இருக்காது எனப் புரிய , உடனே விரைப்பாக , “உங்கள் பட்ஜெட் அனுமதித்தால் , சின்ன பிளே ஏரியா செட் பண்ணலாம் , குழந்தைகளை விளையாட விட்டு சூட் பண்ணினால் இயற்கையாக இருக்கும்” என்றாள் 

இடை புகுந்த அனு , “அதை டைட்டில்  அல்லது  இறுதிப் பகுதியில் பயன்படுத்திக் கொள்ளலாம்..” 

 “ம்….  மற்ற டிபார்ட்மென்டோடு கலந்து பேசி விட்டுச் சொல்கிறேன். பார்க்கலாம்… .”என்றவாறு இனியாவை சுவாரசியமாகப் பார்த்தபடி நகர்ந்தான்.

“கலக்கிட்ட , சூப்பர் அனு.. “ என்று அர்ஜுன்  அனுவைப் பாராட்டினான் . 

“இனியா…” என்று வசந்த் அழைக்க , 

தலையின் பார்வையைப் பற்றிய யோசனையில் இருந்தவள் , “என்னாச்சு வசந்த்?” எனக் கேட்க , 

“அர்ஜுன் உன்னைக் கண்டுக்கவில்லை பார்” என்று வம்பு செய்ய, 

இனியா உடனே , “நாம் இருப்பது தெரிவதே பெரிய விசயம் வசந்த்…” என நக்கலடிக்க , 

வசந்த் “ஹைபை” செய்தான். 

 அர்ஜுன் வெட்கச் சிரிப்புடன், “ஸார் பார்க்கலாம் என்றால் ஓ.கே. ஆன மாதிரி தான்” 

பின்  கான்செப்ட் பற்றி , என்ன என்ன  சுற்றுகள்?  வீஜேயோட பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பேச்சுப் போனது . பின் அனைவரும் கலைந்தனர்.

மறுவாரம் பரபரப்பாகச் சென்றது , செட்டில் பிளே ஏரியாவும் ரெடியாக இருந்தது . படப்பிடிப்பு ஆரம்பித்திருந்தது , 

முதல் சுற்று  _   திறமைகளை வெளிப்படுத்துதல் 

ஒரே திறமையைச் சோதிக்காமல் , குழந்தைகள் விரும்பியவாறு கதை , கவிதை சொல்வது  ஏதேனும் தலைப்பில் பேசுவது , பாட்டு , நடனம் , மிம்கிரி , ஜோக் சொல்வது என்று முடிவு செய்யபட்டிருந்தது.

இரண்டாம் சுற்று _  மாறுவேடப் போட்டி 

மூன்றாம் சுற்று _   இனியா குழந்தைகளை எடக்குமடக்காகக் கேள்வி கேட்க வேண்டும் , அதற்கு அவர்களின் பதில்கள் காமெடியாக இருக்கும்படி பிளான் செய்யப்பட்டது . 

“இனியா குழந்தைகளோடு குழந்தையாக இணைந்து, தன்னை சில நேரம் கீழாக இறக்கி நடந்து , சில சமயம் சரிசமமாகப் போட்டி போட்டு , சில சமயம் குழந்தைகளிடம் மொக்கை வாங்கி…” என நிகழ்ச்சியை நன்றாகக் கொண்டு சென்றாள்.  

நிகழ்ச்சியின் பேர் மட்டும் முடிவாகாமலே இருந்தது . முதல் எபிசோட் விக்ரமிற்கும் , சாருமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது . 

இன்று விக்ரமோடு இறுதி  டிஸ்கஸன் ,  டீம்  முழுவதும் ஆர்வமோடு காத்திருந்தார்கள்.

விக்ரம் , சாருமதி மேடத்துடன்  உள்ளே நுழைந்தான் , “ குட் , எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” எனப் பாராட்டினான் . 

எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது .

” தென் , தலைப்பை முடிவு செய்து விட்டீர்களா?” 

“சுட்டி குட்டீஸ் ,  செல்லமே , கண்மணிகளே எனச் சில சாய்ஸ் யோசித்துள்ளோம்…” என்றார் சாருமதி.

“செல்லமே என்று இருக்கட்டும்.….” என விக்ரம் இறுதி முடிவு  எடுத்தான்.

சாருமதி மேடத்திடம் , “புரோமோஸ் ஆரம்பித்து விடுங்கள் . எத்தனை எபிஸோடுகள் முன்னமே வேண்டும் என்பதை முடிவு செய்துவிடுங்கள்” என்று அடுத்தடுத்த கட்டளைகளைப் பிறப்பித்தான் .

அடுத்து நடக்க வேண்டியவைகளைப்  பற்றி பேசியபடி , இனியா மீது யாரும் அறியாத வண்ணம் ஒரு தீர்க்கமானப் பார்வைச் செலுத்தி விட்டு நகர்ந்தான். 

அவன் பார்வை , சில நொடிகளே அவள் மீது படிந்து சென்றது , அவளுக்கே அவன் தன்னைப் பார்த்தானா? இல்லையா? எனச் சந்தேகபட்டு , குழம்பும்படி இருந்தது .

 “வா இனியா போகலாம் “ என அனு அழைக்க , சுயநினைவு பெற்றவள் , யோசனையை கைவிட்டு அவளுடன் கிளம்பினாள் .

தொடரும்…

Advertisement