அத்தியாயம் 45

இரவு அழைத்தாலும், வீட்டில் அனைவரும் இருப்பதால்,  ஒரு சில நிமிடங்களே பேச முடிந்தது. அதனால் திங்கள் இனியாவிற்கு விடுமுறை என்பதால் சற்று அதிகமாக அலுவலக நேரத்தில் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான் விக்ரம். 

செயலாளர்,  அவன் சிரிப்போடு பேசுவதைப் பார்த்து காதல் என நினைக்க,  அது தினமும் தொடராமல்,  திங்கள் மட்டுமே நடக்க, 

காதல்… கீதல்… என அலுவலக காஸிப் பேசலாமா? வேண்டாமா? எனக் குழம்பிப் போனாள்.

தன் இயல்பு மாறியதை இனியாவிடம் பகிர்ந்து சிரித்தான்.

“நானும் தான் மாறிப் போனேன்,  வீட்டில் எதையும் மறைத்தது இல்லை,  இப்போது பல சென்சார்கள் வந்து விட்டது….” எனக் குறைபட்டாள்.

“வருத்தப்படாதே இனியா,  ம்ம்…  இப்போதைக்கு நான் உன் நண்பர் வட்டத்திற்குள் வந்ததாகச் சொல்லி விடு….” 

“சரியாக வருமா?” 

“சரியாக வரும்,  பின் மெல்ல நேரம் பார்த்து விசயத்தைச் சொல்லி விடலாம்….” எனத் தைரியமூட்டினான்.

இனியாவும்,  தன் வீட்டிற்குத் தெரியாமல் பார்ப்பது,  பேசுவது சரியில்லை என்பதால்,  இந்த விசயத்தை வீட்டில் பேசுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குத் தகுந்த வாய்ப்பாக,  அவளை ஒரு விருது வழங்கும் விழாவிற்குத் தொகுப்பாளினியாக அழைக்க,  விக்ரமிடம் இதைப் பற்றி அபிப்பிராயம் கேட்க, 

“உன்னால் முடியும். கட்டயாமாகச் செய்…” என்று விக்ரம் ஊக்கப்படுத்தினான்.

மேலும் அவள் தயங்க,  தான் உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தான்.

இதைப் பயன்படுத்தி,  தனக்கு விருது வழங்கும் விழாவைத் தொகுப்பதற்கு வாய்ப்பு வந்திருப்பதாகவும்,  தல அதை கட்டாயமாகச்  செய்ய சொன்னதாகவும்,  மேலும் அவரே உதவுவதாகவும் கூறினாள் .

கவிதாவும் கார்த்திகேயனும் ஒரு அர்த்தமுள்ள பார்வையைப் பரிமாறிக் கொண்டனர். 

போனில் பேசுவது,  வாரயிறுதியில் சந்திப்பது என அவர்கள் காதல் வளர்ந்தது. ஆனால் அலுவலகத்தில் எப்போதும் போல் இருந்தனர்.

இதற்கிடையில் ரோஜாவின் நடன நிகழ்ச்சி ஹிட் அடிக்க,   ரோஜா – கௌதம் ஜோடி மிகவும் பேசப்பட்டது. மிகவும் வைரலானார்கள்.

அதைத் தக்க வைப்பதற்கு மிகவும் பாடுபட்டனர். இனியா ரோஜாவைக் கூப்பிட்டு, “சூப்பர் அக்கா,  கலக்குகிறீர்கள்” என்று பயங்கரமாகப் பாராட்டினாள்.

மேலும் நான்கு வாரம் செல்ல,  நடன நிகழ்ச்சித் தொகுப்பாளினி அந்த வாரம் வராமல் போக,  இனியாவிற்கு அந்த வாய்ப்பு வந்தது.

ஏற்கனவே,  அந்த இயக்குனருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டதால்,  கடந்த இரண்டு வாரங்களாக,  நடன நிகழ்ச்சியை அர்ஜுன் தான் இயக்கிக் கொண்டிருந்தான். அவன் மூலமே அந்த வாய்ப்பு வந்திருந்தது.

அந்த வாரம்,  விக்ரம் சந்திக்கலாம் என அழைக்க,  அவள் மறுத்து, தனக்கு வேலை இருப்பதாகத் தெரிவிக்க, 

“நீ ஏன் ஒத்துக்கொண்டாய்? நாம் பார்க்க முடியாதல்லவா?” என விக்ரம் கோபப்பட,

“சாந்தி…. சாந்தி… ,  உங்கள் பேச்செல்லாம் கேட்க முடியாதுப்பா, கிடைக்கிற நல்ல வாய்ப்பெல்லாம் பயன்படுத்தி, சட்டுபுட்டென்று மேலே வர வேண்டும் என்று எங்க தல சொல்லியிருக்கிறார்” என்று அவன் வார்த்தை வைத்தே அவனுக்கு ஆப்பு வைக்க, 

அவளது விருப்பத்தைப் புரிந்து கொண்ட விக்ரம்,   சிரித்தபடி விட்டுக் கொடுத்தான்.

இப்படியாக முட்டலும்,  மோதலும்,  கொஞ்சலுமாக அவர்கள் காதல் வளர்ந்தது.

அத்தியாயம் 46

சனி இரவு படப்பிடிப்பில்,  அர்ஜுன், இனியா, ரோஜா என எல்லோரும் இருக்க, 

பழைய சமையல் நிகழ்ச்சி நாட்கள் திரும்பியது போல் அரட்டை அடித்துக் கொண்டு,  பங்கேற்றார்கள்.

இனியாவும் அவள் ஸ்டைலில் காமெடி கலந்து நன்றாகவே ஆங்கர் செய்ய.,,. , செட்டில் பாராட்டும் கிடைத்தது.

அர்ஜுன் தன் காலரைத் தூக்கி விட,   என்னவென்று இனியா கேட்க, “பல பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது” என்றும், “நீ என் தேர்வென்றும்….” என்று கூற,

“நன்றி பாஸ் என்றும் உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்….” என இனியா உணர்ச்சிவசப்பட, 

அர்ஜுன் அவள் தோளைத் தட்டிச் சிரித்தான்.

அந்நேரம் சரியாக விக்ரம் செட்டிற்குள் “அர்ஜுன்.…” என்றவாறு நுழைய, 

அர்ஜுன்,  இனியா இருவரும் வியந்து திரும்ப,  கிடைத்த நொடியில்,  இனியாவைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தான். யாரும் பார்க்காத வண்ணம் ஓர் அர்த்தமுள்ள பார்வையைச் செலுத்தினான்.

விக்ரமின் வரவிற்கான காரணத்தைப் புரிந்த இனியா,  பூரித்துப் போனாள்.

செட் பரபரப்பாக, விக்ரம், டான்ஸ் டீமை ஊக்கப்படுத்த வந்ததாகக் கூறி,  நிகழ்ச்சி நன்றாக இருப்பதாகப் பாராட்டினான். அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

அவன் சிறிது நேரம் இருந்து படப்பிடிப்பைப் பார்ப்பதாகக் கூற, ரோஜா,  கௌதம் நடனம் அரங்கேற்றப்பட்டது,  அதன்பின் இனியாவின் ஆங்கிரிங்கையும் பார்த்தான்.

ரோஜாவையும்,  கௌதமையும் தனியாக அழைத்து அவர்களின் உழைப்பையும்,  அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டினான். 

நடன இயக்குனர்களுக்கும் தனிப் பாராட்டுதலைத் தெரிவித்தான்.

பின் இனியாவைப் பார்க்க,  அவள் அருகில் போக,  அதைக் கவனித்து வேகமாக அர்ஜுனும் இனணந்து கொண்டான். 

இனியாவையும் பாராட்டி விட்டு,  வழக்கம் போல் அந்த டீமிற்குப் பார்ட்டியை அறிவித்தான்.

அர்ஜுன் வேகமாக, “இனியாவும், அனுவும் உண்டல்லவா?”

விக்ரம் தலை அசைத்துச் சென்றான். 

பின்பு அனைவரும் சந்தோஷ மனநிலையிலே படப்பிடிப்பைத் தொடர்ந்தனர்.

படப்பிடிப்பு நிறைவடைகிற வேளையில் பரத் வந்தான்,  அப்போது கௌதமும்,  ரோஜாவும் அடுத்த நாளுக்கான காரியங்களை உறுதி செய்து கொண்டிருந்தனர்.

ரோஜா பரத்தைப் பார்த்தவுடன்,  உடனே  எல்லோருக்கும் ‘பாய்’ சொல்லிக் கிளம்பினாள்.

கவனித்தவரைச் சுமூக சூழ்நிலை நிலவுவதாகத் தெரியவில்லையே..? எனக் கவலை அடைந்தாள் இனியா.  பின் நாளை பேச வேண்டும்…. என முடிவு செய்தாள்.

மறுநாள் படப்பிடிப்பில், இனியா இடைவேளையில் ரோஜாவுடன் பேச, “ஒன்றும் பிரச்சனை இல்லை,  இந்தத்துறை புரியாததால்,   வரும் குழப்பம். நான் பார்த்துக் கொள்ளகிறேன்” எனச் சமாளித்தாள். 

இனியாவும் அரைமனதாகச் சரியென்றாள்.

திங்கள் காலை 11 மணிவாக்கில் விக்ரமை இனியா அழைக்க, 

“ விக்ரம் போனை எடுத்தவுடன், என்ன செய்யுறீங்க விக்ரம்?”

“திங்கள் காலை என்ன செய்வார்கள்? ,வேலை பார்க்கிறேன்…” எனக் கெத்துக் காட்டினான்.

அவன் வம்பைப் புரிந்து கொண்டவள், “ஓ….! ஸார்,  ரொம்ப பிஸி போல…., நான் அப்புறம் பேசுகிறேன்…” எனப் போனை வைக்கப் போக, 

“உனக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தியாகி விட்டது, போனை

 வைக்காதே, பேசு…” 

முதலில் முழித்தவள்,  பின் புரிந்து கொண்டு, “தல கலக்குகிறீர்கள்….” என வியக்க,

“எல்லாம் சகவாச தோஷம்….” எனச் சிரித்தான்.

“நீங்க ‘ஜெம்’ என நினைத்துப் பயந்து கொண்டிருந்தேன், நல்ல வேளை தப்பித்தேன்பா….” என வாரினாள்.

“என் அந்தஸ்திற்கு எல்லோரிடமும் இப்படிச் சகஜமாக இருக்க முடியாது, அப்புறம் நிறைய தொல்லைகளைச் சந்திக்க வேண்டியதாகி விடும். மேலும் நெருக்கமாகனவர்களிடம் தானே எந்த தடையும் இல்லாமல் இயல்பாக இருக்க முடியும்…” 

விக்ரமின் பேச்சில் இருக்கும் உண்மையைப் புரிந்து, “ஆமாம்…” என இனியாவும் ஒத்துக் கொண்டாள். பின், நீங்கள் இப்படிக் கலகலவென இருப்பது தான் நன்றாக உள்ளது.

பின் விக்ரம்,  பேச்சு சீரியஸாகச் செல்வதை உணர்ந்து, “ என்ன உன் பாஸ்,  பாசமலர்,  நான் உன்னைப் பார்த்தவுடன்,  வேகமாகப் பாதுகாப்பிற்கு ஓடி வருகிறான்….” என ஓட்ட,

 

“ஹா..ஹா..” எனச் சிரித்தபடி, “இதே டெக்னிக்கை வைத்து தானே நீங்கள் என்னுடன் பேசியது…. என்னைப் பற்றிய விசயங்களைப் போட்டு வாங்கியது எல்லாம்….” என்று இனியா கேலி செய்ய,

“வாவ்….!,  இனியா எப்படித் தெரியும்? முன்னமே கண்டு பிடித்துவிட்டாயா?” என ஆர்வமுடன் கேட்க,

“முன்பு தெரியாது, ஏதோ நெருடியது…. ஆனால் புரியவில்லை. இப்போதுதான் சமீபத்தில், புள்ளிகளை இனணத்தேன்,  யுரேகா….” 

“ ஜில்லு,  நீ இவ்வளவு புத்திசாலியாக இருந்திருக்க வேண்டாம்…” எனச் சிரித்தான்.

“தேங்க் யூ,தேங்க்யூ….. கூடவே பொறந்தது….” என ரஜினி ஸ்டைலில் சொல்ல,

விக்ரம் சிரித்தபடி, “ஏதோ குழந்தை மூளையைக் கசக்கிக் கண்டுபிடித்திருக்கிறதே, போனால் போகுது எனப் பாராட்டினால், முடியலை….. வலிக்குது…..” என அவனும் கலாய்த்தான்.

இதற்கிடையில் செயலாளர் பலமுறை வந்து எட்டிப் பார்க்க, “ஜில்லு நேரமாகிவிட்டது வைக்கிறேன்….”

ஒரு நிமிடம, “செவ்வாய், புதன் இரவு விளம்பர ஷூட்டிங் இருக்கிறது” என்ற விவரம் கூறினாள்.

“ஓ.கே…. கவனம்” எனப் போனை வைத்தான்.

பின்,  ராம்குமாரை அழைத்து விளம்பரக் கம்பெனி விவரம் எல்லாம் கேட்டுக் கொண்டான். கவனமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி விட்டு,  தன் வேலையைத் தொடங்கினான் .

அத்தியாயம் 47

புதன் மாலை இனியாவை அழைத்து, “அவசர வேலையாகப் பெங்களூர் செல்கிறேன் இனியா,  வேலை முடிவதைப் பொறுத்து சனி இல்லை ஞாயிறு சென்னை வருவேன். அங்கு இருக்கும் வேலையை பொறுத்து, நேரம் கிடைக்கும் பொழுது பேசலாம்….” 

“ஓ.கே. ஞாயிறு பார்க்கலாம் விக்ரம்”

இனியாவிற்கும் படப்பிடிப்பு மேலும் இரண்டு நாள் நீடித்தது . இருவருக்கும் பேசுவதற்குப் பொதுவான நேரம் கிடைக்காமல் போக சாட்டிங் மட்டும் செய்து கொண்டிருந்தார்கள்.

“ஞாயிறு தான் வருவதே சிரமம்…” என விக்ரம் தெரிவிக்க, சற்றுச் சோர்ந்தாள்.

இரண்டு மூன்று வாரமாக, நால்வர் அணி வெளியே செல்ல பிளான் செய்து,  இனியா தலயைச் சந்திப்பதற்காகத் தட்டிக் கழித்திருந்தாள். 

விக்ரம் வந்துவிட்டால் நிறைய வாரங்கள் தள்ளிப் போய்விடும், அப்புறம் இவர்களைச் சமாளிப்பது கடினம்… என யோசித்து, இந்த வாரம் அனைவரையும் கிளப்பி விட்டாள்.

இதை விக்ரமிடம் தெரிவிக்க, “எனக்கே டஃப் ஃபைட் கொடுப்பாய் போல…., பயங்கர ஸ்ட்டர்ஜி….” எனக் கேலி செய்தான்.

“எதைச் செய்தாலும் பிளான் பண்ணிச் செய்யனும்….” என வடிவேலு மாதிரி மிம்க் செய்ய, 

ஹோட்டல் வரவேற்பறையில் நின்று பேசிக் கொண்டிருந்தவன் , வாய் விட்டுச் சிரிக்க,  அங்கு இருந்த அனைவரும் அவனின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்க்க,  அவன் “சாரி” என்று கையை உயர்த்தியபடி கார் பார்க்கிங்கிற்குச் சென்றான்.

விக்ரம் நடந்ததைச் சொல்ல, “எல்லோரும் சைட் அடிக்கும்படி யார் உங்களை அங்கு நின்று பேசச் சொன்னது? முதலில் அறைக்குப் போங்கள்….” எனக் கட்டளையிட்டாள்.

இனியாவின் பொறாமையை ரசித்தபடி, “ஒரு பார்ட்டிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேனா……,  நீ அழைத்ததும் அப்படியே போனை எடுத்தேனா….” என இழுக்க, 

“என்னது பார்ட்டியா?” என இனியா காய,

அவன் சிரிக்க, “எங்கே இருந்தாலும் ஜில்லு உங்கள் எதிரில் இருக்கிறாள் என ஞாபகம் வைத்துக்கொள்ளங்கள்….” என முடித்தாள்.

“அப்படியே ஆகட்டும்….” எனப் பணிய, இப்படியாக பார்ட்டி நடக்கும் ஹோட்டலை அடையும் வரை சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவன் வாழ்வில் இனியா இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாகவும் , சுவாரசியமாகவும் இருக்கும் என இந்த நிமிடத்தில் நிச்சயமாக உணர்ந்தான்.

“ஜில்லு,  பார்ட்டிக்குப் போகவே பிடிக்கவில்லை, உன்னோடு பேசிக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது, மிஸ் யூ பேடுலி ஜில்லு….”

இனியாவும் முதல்முறையாக, “மீ டூ விக்ரம்….” என மெலிதாக முணங்க,

“உன் பொறாமைப் பொங்கலிலே தெரிந்தது….” எனச் சிரித்தான்.

இனியா சிணுங்கியபடி, “ரியலி மிஸ்ஸிங் யூ….” எனக் குரல் கம்ம பேசினாள்.

“என்னைத் தூண்டாதே இனியா….. உடனே உன்னைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது….” எனக் கொஞ்சினான். 

இந்தப் பிரிவு,  அவர்களிடையே நெருக்கத்தைக் கூட்டியது . மேலும் அவர்களின் அன்பை உறுதி செய்தது.

அத்தியாயம் 48

அடுத்த வாரம்,  செவ்வாயன்று தான் விக்ரமால் சென்னை வர முடிந்தது. மேலும்,  ஒரு வாரமாக பெங்களூரில் இருந்ததால் , இங்கும் வேலைப்பளு அதிகமாகவே இருந்தது.

இனியாவிற்கும் விருது வழங்கும் விழா இருந்ததால், அதற்கான முன்தயாரிப்பில்,  பரபரப்பாகவும், டென்ஷனாகவும் இருந்தாள். 

“ஹலோ.., ஹாய்…” என அவர்கள் பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருந்தது.

இனியா வீட்டில் அனைவரையும் படுத்திக்கொண்டிருந்தாள்.

விக்ரமை வியாழன் இரவு பிடித்துக்கொண்டாள். வீடியோ காலில் வரச் செய்து, முழுவதுமாகப் படித்துக் காட்டினாள். விக்ரம் சில மாற்றங்கள் செய்தான், 

பின் மீண்டும் அவள் தொகுத்துக் காட்ட , “ஓ.கே… குட்…”

இனியா நம்பிக்கையில்லாமல், “நன்றாக இருக்கிறது அல்லவா?” என்று பலதடவை கேட்க,

“நான் என்று சும்மா சொல்லிருக்கிறேன்.…. நிஜமாகவே உன் தயாரிப்பு நன்றாக இருக்கிறது ஜில்லு,  டென்ஷன் ஆகாம பேசு , அதுவே போதும்….  சூப்பராக இருக்கும்….” என வாழ்த்தினான்.

“புரியுது…. , ஆனால் முதல் தடவை, பெரிய மேடை, நிறைய கூட்டம், அதனால் ஏதும் தப்பாகி விடக்கூடாதே….” எனத் தன் பயத்தைக் கூறினாள்.

மேலும், “எனக்குத் துணையாக யாராவது விழாவுக்கு வந்தால் தைரியமாக இருக்கும், ஆனால் வழியில்லை…” எனப் புலம்பினாள். 

விக்ரம் மீண்டும் தைரியமூட்ட,  ஒருவாறு மனம் தேறிப் போனை வைத்தாள்.

மெல்ல பால்கனியை எட்டிப் பார்த்த காவியா,  இவள் கச்சேரியைப் பார்த்து மெல்லப் பம்மினாள். 

உள்ளே வந்த இனியா, “காவியா….” என ஆரம்பிக்க,“போதும், நான் தாங்க மாட்டேன், விட்டு விடு…..” எனத் ‘தல’ பட்டபாட்டைப் பார்த்துப் பெரிய கும்பிடாகப் போட்டாள்.

வெள்ளி மாலை…,

பெற்றோர் மற்றும் நண்பர்களும் வாழ்த்த, இனியா ஒருவாறு தன்னைத் தைரியபடுத்திக் கொண்டாள்.

விக்ரமிடமிருந்து போனை எதிர்பார்த்திருக்க, அவனிடமிருந்து வாழ்த்துச் செய்தி மட்டுமே வந்திருந்தது.

“ஏன் இனியா போனை முறைத்துக் கொண்டிருக்கிறாய்…?” எனக் காவியா கேட்க, 

“தல போன் செய்யாமல் மெஸேஜ் மட்டும் அனுப்பியுள்ளார்…” எனப் புகார் வாசித்தாள்.

“பாவம், அவருக்கு என்ன வேலையோ…?” எனக் கவிதா இழுக்க , 

இனியா ஏதோ பேச வர, அதற்குள் இடைப் புகுந்த காவியா, “அம்மா,  நேற்று தல இவகிட்ட வசமாக மாட்டியாச்சு,  காதிலிருந்து இரத்தம் வரும் வரை ஆற்றினாள்..” 

கார்த்திகேயன்,  கவிதா இருவரும் சிரிக்க, இனியாவிற்குச் சற்று டென்ஷன் குறைந்து, இலகு மனநிலை உருவானது.

இனியாவும், “உன்னை வந்து பேசிக் கொள்கிறேன்…” என்று கிளம்பினாள். மனதிற்குள் “விக்ரம் உனக்கு இருக்கு….” என அவனை வறுத்தெடுத்தாள்.

பின் கடைசி நேர ஒத்திகையில் பிஸியானாள். ஹால் வந்தவுடன், டிரஸ், அலங்காரம் எனப் பரபரப்பானாள்.

பிஸ்தா பச்சையில் வேலைப்பாடுகள் மிக்க சோளி அணிந்திருந்தாள். அதற்கேற்றவாறு அணிகலன்கள்,  மேக்கப் என மிகவும் அழகாக ரெடியாகி, கன்னம் குழி விழச் சிரித்தபடி வலம் வந்தாள். தான் அழகு எனக் கர்வமில்லாமல் இயல்பாக இருந்தது, நிறைய பேரைக் கவர்ந்தது.

விழா ஆரம்பிக்க சில நிமிடங்களே இருக்க, பிரபலங்கள் வர ஆரம்பித்தனர்.

இனியா, மேடையில் தயாராக இருக்க,  தன் விறுவிறு நடையில் ஆண்மையின் இலக்கணமாக, புன்னகையுடன் விக்ரம் உள்ளே நுழைந்தான்.

சில நொடிகள், அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவன் மீதே நிலைத்தது.

அதில் இனியாவும் அடக்கம். கிடைத்த நொடியில்,  வழக்கம் போல் இனியாவைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தான்.

அவனின் இந்தச் செய்கையும்,  வருகையும் அவளுக்கு யானை பலத்தைத் தர, அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

அவனை வி.ஐ.பிகள் சுற்றிக் கொள்ள, அவன் பிஸியானான்.

 

விழா ஆரம்பிக்க,  இனியா நன்றாகத் தொகுத்து வழங்கினாள் , இடைஇடையே காமெடி கலந்து கட்டினாள்,  மேடையில் நடக்கும் விசயத்தை வைத்து, அதையும் பேச்சில் சேர்த்து, சுவாரசியமாக நிகழ்ச்சியைக் கொண்டு போனாள். 

நிகழ்ச்சி முடிவில் நிறைய பேர் அவளைப் பாராட்டினார்கள். அனைவரிடமும் நன்றி தெரிவித்து, விடைபெற்றாள்.

காரில் அமர்ந்து போனைப் பார்க்க,  விக்ரம் மிகவும் பாராட்டிப் பதிவிட்டிருந்தான். இனியாவிற்கும் மிகுந்த மனநிறைவை கொடுத்தது.

வீட்டில் எதிர்பார்ப்போடு அனைவரும் காத்திருக்க, நன்றாகச் செய்ததாக அம்மாவைக் கட்டிக் கொண்டாள். 

“நீ நன்றாகச் செய்வாய் எனத் தெரியும்டா….” என அவளை அணைத்து,  கார்த்திகேயன் பரிசு கொடுத்தார்.

இனியா ஆவலுடன் பிரிக்க, அழகிய உடை இருந்தது.

“நன்றி அப்பா….” என்றாள். பின், “விழாவில் சாப்பிட்டு விட்டேன் அம்மா….. செம டயர்ட் தூங்கப் போகிறேன்…..” 

“இரு,  இரு, எல்லோர் கண்ணும் உன் மேலதான் இருந்திருக்கும்….” எனச் சுத்திப் போட்டார் கவிதா.

அறையில்  காவியா, “தல பேசினாரா?” 

“தல பேசுவது என்ன…. விழாவிற்கே வந்தார்….” எனப் பெருமையாக அறிவித்தாள்.

இதைக் கேட்ட காவியா, “என்னமோ நடக்குது…. , மர்மமாய் இருக்குது….” எனப் பாட, இனியா முறைக்க….,

“பாட்டுத் தானே பாடினேன்,  இது ஒரு குற்றமா?” என்றபடி நமட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

அவள்மீது தலையணையை தூக்கி ஏறிந்து விட்டு, “நான் தூங்கப் போகிறேன்…..” எனக் குப்புறப்படுத்துக் கொண்டாள்.